Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யோவான் சிறுகுகிறார் இயேசு பெருகுகிறார்

யோவான் சிறுகுகிறார் இயேசு பெருகுகிறார்

அதிகாரம் 18

யோவான் சிறுகுகிறார் இயேசு பெருகுகிறார்

இயேசுவும் அவருடைய சீஷர்களும் பொ. ச. 30-ன் வசந்த கால பஸ்காவைத் தொடர்ந்து எருசலேமை விட்டு புறப்படுகிறார்கள். ஆகிலும், கலிலேயாவிலுள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பாமல், யூதேயாவுக்குச் சென்று அங்கு முழுக்காட்டுதல் கொடுக்கிறார்கள். இதே வேலையை முழுக்காட்டுபவனாகிய யோவான், ஓராண்டு காலமாக செய்து வருகிறான், அவனோடு தொடர்பு கொண்டிருக்கும் சீஷர்கள் இன்னும் அவனுக்கு இருக்கிறார்கள்.

உண்மையில், இயேசு தாமே முழுக்காட்டுதல் கொடுக்கவில்லை, ஆனால் அவருடைய சீஷர்கள் அவருடைய வழிநடத்துதலின் கீழ் அப்படிச் செய்கிறார்கள். அவர்கள் கொடுத்த முழுக்காட்டுதலும் யோவான் கொடுத்ததைப் போன்று அதே விதமான அர்த்தத்தையுடையதாக இருந்தது, கடவுளுடைய நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு விரோதமாக ஒரு யூதன் செய்யும் பாவங்களிலிருந்து மனந்திரும்புதலுக்கு ஓர் அடையாளமாக இருந்தது. என்றபோதிலும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, தம்முடைய சீஷர்கள் வித்தியாசமான அர்த்தத்தை கொண்டிருக்கும் ஒரு முழுக்காட்டுதலை கொடுக்கும்படி இயேசு கட்டளையிடுகிறார். இன்று கிறிஸ்தவ முழுக்காட்டுதலானது, ஒருவர் யெகோவா தேவனை சேவிக்க தான் செய்த ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக இருக்கிறது.

என்றபோதிலும், இயேசுவின் ஊழியத்தின் இந்த ஆரம்ப பகுதியில், அவரும் யோவானும் தனித்தனியே வேலை செய்து வந்தபோதிலும், மனந்திரும்பிய ஆட்களுக்குப் போதித்து முழுக்காட்டுதல் கொடுக்கிறார்கள். ஆனால் யோவானின் சீஷர்கள் பொறாமையடைந்து இயேசுவைப் பற்றி அவனிடம் குறைகூறுகிறார்கள்: “ரபீ, . . . இதோ அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள்.”

பொறாமையடைவதற்குப் பதிலாக, யோவான் இயேசுவின் வெற்றியில் மகிழ்ச்சியடைகிறான். தனது சீஷர்களும் அதில் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிறான். அவன் பின்வருமாறு ஞாபகப்படுத்துகிறான்: “நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.” பின்பு அவன் ஓர் அழகான உதாரணத்தை உபயோகிக்கிறான்: “மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று.”

மணவாளனின் நண்பனாக யோவான், தன்னுடைய சீஷர்களை ஆறு மாதங்களுக்கு முன்பே இயேசுவிடம் அறிமுகம் செய்தபோது, அவன் மகிழ்ந்தான். அவர்களில் சிலர் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாலான கிறிஸ்துவின் பரலோக மணவாட்டி வகுப்பின் எதிர்கால அங்கத்தினர்களானார்கள். இப்பொழுது தன்னிடமிருக்கும் சீஷர்களும்கூட இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று யோவான் விரும்பினான். ஏனெனில் கிறிஸ்துவின் வெற்றிகரமான ஊழியத்திற்கு ஆயத்தம் செய்வதே அவனுடைய நோக்கமாக இருந்தது. யோவான் ஸ்நானன் விளக்கும் வண்ணம்: “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.”

ஆரம்பத்தில் யோவான் ஸ்நானனின் சீஷனாகவும், இப்பொழுது இயேசுவின் புதிய சீஷனாகவும் இருக்கும் யோவான், இயேசுவின் ஆரம்பத்தையும் மானிட இரட்சிப்பில் அவருடைய முக்கிய பங்கையும் குறித்து பின்வருமாறு எழுதுகிறான்: “உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; . . . பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன் மேல் நிலைநிற்கும்.”

இதைத் தொடர்ந்து சிறிது காலத்திற்குப் பின், யோவான் ஸ்நானன் தன்னுடைய சொந்த நடவடிக்கை சிறுகுவதைப் பற்றி பேசிய பின்பு, ஏரோது ராஜாவால் கைது செய்யப்படுகிறான். ஏரோது, தன்னுடைய சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டபோது, யோவான் அவனுடைய செயல்கள் சரியில்லை என்று பொதுப்படையாக வெளிப்படுத்தினதற்காக, ஏரோது அவனை சிறையில் போடுகிறான். யோவான் கைது செய்யப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டபோது இயேசு தம்முடைய சீஷர்களோடு யூதோயாவை விட்டு கலிலேயாவிற்குச் செல்கிறார். யோவான் 3:22-4:3; அப்போஸ்தலர் 19:4; மத்தேயு 28:19; 2 கொரிந்தியர் 11:2; மாற்கு 1:14; 6:17-20.

▪ இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு முன் அவருடைய வழிநடத்துதலின் கீழ் நடப்பிக்கப்பட்ட முழுக்காட்டுதல் எதை அடையாளப்படுத்துகிறது? அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின் கொடுக்கப்பட்ட முழுக்காட்டுதல் எதை அடையாளப்படுத்துகிறது?

▪ யோவான் தன்னுடைய சீஷர்களின் குறைகூறுதல் பொருத்தமில்லாதது என்று எவ்வாறு காட்டுகிறான்?

▪ யோவான் ஏன் சிறையில் போடப்படுகிறான்?