Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யோவான் வழியை ஆயத்தப்படுத்துகிறான்

யோவான் வழியை ஆயத்தப்படுத்துகிறான்

அதிகாரம் 11

யோவான் வழியை ஆயத்தப்படுத்துகிறான்

இயேசு 12 வயது பிள்ளையாக இருக்கையில் ஆலயத்திலிருந்த போதகர்களை கேள்வி கேட்ட சமயத்திலிருந்து பதினேழு வருடங்கள் கடந்துவிட்டன. பொ.ச. 29-ன் வசந்த காலம், யோர்தான் நதியை சுற்றி இருந்த தேசமெங்கும் பிரசங்கித்துக்கொண்டிருந்த இயேசுவின் உறவினனாகிய யோவானைக் குறித்து எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

யோவான் உண்மையிலேயே தோற்றத்தின் மூலமும் பேச்சின் மூலமும் பிறர் மனதில் பதிந்துவிடும் தன்மையுள்ளவனாக இருக்கிறான். அவனுடைய உடை ஒட்டகமயிராலானது, அரையில் வார்க்கச்சை அணிந்திருக்கிறான், வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாக இருக்கிறது. அவனுடைய செய்தி? “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது.”

இந்தச் செய்தி கேட்பவர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தியாக இருக்கிறது. அநேகர் மனந்திரும்ப வேண்டிய அவசியத்தை உணருகின்றனர், அதாவது தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொண்டு தங்களுடைய கடந்த கால வாழ்க்கை முறையை விரும்பப்படாததாக நிராகரித்துவிட வேண்டிய அவசியத்தை உணருகின்றனர். எனவே யோர்தானை சுற்றியிருக்கும் பிராந்தியங்களிலிருந்தும், எருசலேமிலிருந்துங்கூட ஏராளமான ஜனங்கள் யோவானிடம் வருகிறார்கள். யோர்தான் நதியின் தண்ணீரில் அவன் அவர்களை முழுக்காட்டுகிறான். ஏன்?

கடவுளுடைய நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு விரோதமாக செய்த பாவங்கள் சம்பந்தமாக தங்களுடைய இருதயப்பூர்வமான மனந்திரும்புதலுக்கு அடையாளமாக அல்லது அவற்றை ஒப்புக்கொள்வதற்கு அடையாளமாக யோவான் ஜனங்களை முழுக்காட்டுகிறான். இப்படியாக பரிசேயரிலும் சதுசேயரிலும் சிலர் யோர்தானுக்கு வந்தபோது, யோவான் அவர்களை கண்டனம் செய்கிறான். “விரியன் பாம்புக் குட்டிகளே,” என்று அழைத்து, “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத் தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்” என்றான்.

யோவான் எல்லாருடைய கவனத்தையும் பெறுவதினால், யூதர்கள் அவனிடம் ஆசாரியரையும் லேவியரையும் அனுப்புகிறார்கள். அவர்கள் கேட்கிறார்கள்: “நீர் யார்?”

“நான் கிறிஸ்து அல்ல” என்று யோவான் அறிக்கையிடுகிறான்.

பின்னை யார்? நீர் எலியாவா?” என்று கேட்கிறார்கள்.

“நான் அவன் அல்ல” என்று பதிலளிக்கிறான்.

“நீர் தீர்க்கதரிசியானவரா?”

“அல்ல.”

எனவே அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று வற்புறுத்துகிறார்கள்.

யோவான் விளக்குகிறான்: “கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] வழியைச் செவ்வை பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்.”

“நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர்” என்று அவர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள்.

“நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கிறேன்,” “நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். அவர் எனக்குப் பின்”வருபவர் என்று பதிலளிக்கிறார்.

ஜனங்கள் சரியான இருதய நிலையோடு ராஜாவாக போகும் மேசியாவை ஏற்றுக்கொள்வதற்கு யோவான் வழியை ஆயத்தப்படுத்துகிறான். இவரைக் குறித்து யோவான் இவ்வாறு சொல்லுகிறான்: “எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல.” உண்மையில், யோவான் இதையுங்கூட சொல்லுகிறான்: “எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர்.”

இப்படியாக, “பரலோக ராஜ்யம் சமீபித்துவிட்டது” என்ற யோவானின் செய்தி, யெகோவாவின் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் ஊழியம் சீக்கிரத்தில் துவங்கும் என்பதற்கு ஒரு பொது அறிவிப்பாக சேவிக்கிறது. யோவான் 1:6-8, 15-28; மத்தேயு 3:1-12; லூக்கா 3:1-18; அப்போஸ்தலர் 19:4.

▪ யோவான் எப்படிப்பட்ட மனிதன்?

▪ யோவான் ஏன் ஜனங்களை முழுக்காட்டுகிறான்?

▪ ராஜ்யம் சமீபித்துவிட்டது என்று யோவான் ஏன் சொல்ல முடிந்தது?