Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யோவான் விசுவாசத்தில் குறைவுபட்டானா?

யோவான் விசுவாசத்தில் குறைவுபட்டானா?

அதிகாரம் 38

யோவான் விசுவாசத்தில் குறைவுபட்டானா?

இப்பொழுது ஏறக்குறைய ஓர் ஆண்டு காலம் சிறைச்சாலையிலிருந்த முழுக்காட்டுபவனான யோவானுக்கு, நாயீன் ஊரில் விதவையின் குமாரன் உயிர்த்தெழுப்பப்பட்டதைப் பற்றிய செய்தி கிடைக்கிறது. ஆனால் இதன் உட்பொருளைக் குறித்து, இயேசுவினிடமிருந்தே நேர்முகமாய்க் கேட்டறிய யோவான் விரும்புகிறான், ஆகவே: “வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா?” என்று விசாரிக்கத் தன் சீஷரில் இருவரை அனுப்புகிறான்.

முக்கியமாய், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தான் இயேசுவை முழுக்காட்டினபோது, யோவான், கடவுளுடைய ஆவி இயேசுவின்மேல் இறங்கினதைக் கண்டும் அவரை அங்கீகரித்ததாகச் சொன்ன கடவுளின் குரலைக் கேட்டுமிருந்ததால், இந்தக் கேள்வி ஒருவேளை விநோதமாய்த் தோன்றலாம். யோவான் தன் விசுவாசத்தில் பலவீனமடைந்துவிட்டானென்ற முடிவுக்குச் சிலர் வரும்படி யோவானின் கேள்வி ஒருவேளை செய்விக்கலாம். ஆனால் அப்படி இல்லை. யோவான் சந்தேகிக்கத் தொடங்கியிருந்தால், இந்தச் சந்தர்ப்பத்தில் தாம் செய்வதுபோல் இயேசு அவனைப் பற்றி அவ்வளவு உயர்வாய்ப் பேசியிருக்கமாட்டார். அப்படியானால், யோவான் ஏன் இந்தக் கேள்வி கேட்கிறான்?

தாம் மேசியா என்ற உண்மையின் உறுதியை இயேசுவினிடமிருந்தே பெற யோவான் வெறுமென விரும்பியிருக்கலாம். சிறைச்சாலையில் வாடிவதங்கிக் கொண்டிருக்கையில் இது யோவானுக்கு மிகப் பலமூட்டும். ஆனால் அதைப் பார்க்கிலும் அதிகம் யோவானுடைய கேள்விக்கு இருந்ததாகத் தெரிகிறது. மேசியா நிறைவேற்றுவாரென முன்னறிவித்துள்ள எல்லா காரியங்களையும் நிறைவேற்றி முடிக்கப் பின்வருவோரான மற்றொருவர் வரவேண்டுமா என்றறிய அவன் விரும்புவதுபோல் தெரிகிறது.

யோவான் அறிமுகப்பட்டிருக்கும் பைபிள் தீர்க்கதரிசனங்களின்படி, கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்டவர் அரசராக, விடுதலைசெய்பவராக இருக்கவேண்டும். எனினும், இயேசு முழுக்காட்டப்பட்டுப் பல மாதங்களுக்குப் பின்னும், யோவான் இன்னும் கைதியாக வைக்கப்பட்டிருக்கிறான். ஆகையால் யோவான் இயேசுவைப் பின்வருமாறு கேட்பதாகத் தெரிகிறது: ‘வெளிப்படையான வல்லமையில் கடவுளுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க இருப்பவர் நீர்தானா, அல்லது மேசியாவின் மகிமை சம்பந்தப்பட்ட எல்லா தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற பின்வருபவரான வேறொருவருக்காக நாங்கள் காத்திருக்கவேண்டுமா?’

‘நிச்சயமாக வரவிருந்தவர் நானே!’ என்று யோவானின் சீஷருக்குச் சொல்வதற்குப் பதில், இயேசு அந்த மணிநேரத்தில்தானே எல்லா வகை நோய்களையும் உடல்நலிவுகளையும் கொண்ட பல ஆட்களைச் சுகப்படுத்துவதனால் கவனிக்கத்தக்கக் காட்சியை அளிக்கிறார். பின்பு அந்தச் சீஷரிடம் பின்வருமாறு சொல்லுகிறார்: “நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.”

வேறு வார்த்தைகளில் சொல்ல, இயேசு தாம் செய்துகொண்டிருப்பதைப் பார்க்கிலும் அதிகத்தைச் செய்யும்படியான எதிர்பார்ப்பை, யோவானைத்தானே விடுதலைசெய்வதைப் போன்றதை, யோவானின் கேள்வி மறைமுகமாய்க் குறிப்பிட்டிருக்கும் என்றாலும், இயேசு தாம் நடப்பிக்கிற இந்த எல்லா அற்புதங்களைப் பார்க்கிலும் அதிகத்தை எதிர்பார்க்கவேண்டாமென யோவானுக்குச் சொல்லுகிறார்.

யோவானின் சீஷர்கள் திரும்பிச் செல்கையில், இயேசு ஜனக்கூட்டத்தைப் பார்த்து, மல்கியா 3:1-ல் முன்னறிவிக்கப்பட்டுள்ள யெகோவாவின் “தூதனும்” மல்கியா 4:5, 6-ல் முன்னறிவித்துள்ள தீர்க்கதரிசியாகிய எலியாவும் யோவானே என்று அவர்களுக்குச் சொல்லுகிறார். இவ்வாறு யோவான் தனக்கு முன்வாழ்ந்த எந்தத் தீர்க்கதரிசிக்கும் சமமாயிருப்பதாக அவனை உயர்வாய்ப் பாராட்டி, பின்வருமாறு விளக்குகிறார்: “ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம்பண்ணப்படுகிறது [இலக்காகத் தொடரப்படுகிறது].”

பரலோக ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் யோவானைப் பார்க்கிலும் பெரியவனாயிருப்பதால், யோவான் பரலோக ராஜ்யத்தில் இரான் என்று இயேசு இங்கே காட்டுகிறார். யோவான் இயேசுவுக்கு வழியை ஆயத்தஞ் செய்தான், ஆனால் கிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தில் தம்முடன் துணை-அரசர்களாக இருக்கும்படி தம் சீஷர்களுடன் உடன்படிக்கையை, அல்லது ஒப்பந்தத்தை முத்திரையிடுவதற்கு முன்னால் அவனுடைய மரணம் ஏற்படுகிறது. இதனால் யோவான் பரலோக ராஜ்யத்தில் இரான் என்று இயேசு சொல்லுகிறார். அதற்குப்பதில் யோவான் கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பிரஜையாக இருப்பான். லூக்கா 7:18–30; மத்தேயு 11:2–15.

▪ வரப்போகிறவர் இயேசுதானா அல்லது வேறொருவர் வர எதிர்பார்க்கவேண்டுமாவென யோவான் ஏன் கேட்கிறான்?

▪ என்ன தீர்க்கதரிசனங்களை யோவான் நிறைவேற்றினானென இயேசு சொல்லுகிறார்?

▪ முழுக்காட்டுபவனான யோவான் ஏன் பரலோகத்தில் இயேசுவுடன் இரான்?