Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ராத்தல்களைப் பற்றிய உவமை

ராத்தல்களைப் பற்றிய உவமை

அதிகாரம் 100

ராத்தல்களைப் பற்றிய உவமை

இயேசு இன்னும் சகேயுவின் வீட்டிலேயே இருக்கிறார், எருசலேமுக்கு செல்லும் வழியில் அவர் இங்கு தங்கியிருக்கிறார். அவர்கள் எருசலேமுக்கு சென்ற பின், அவர் தாம் மேசியா என்று அறிவித்து தம் ராஜ்யத்தை ஏற்படுத்துவார் என்று அவருடைய சீஷர்கள் நம்புகின்றனர். இந்த எண்ணத்தை திருத்துவதற்கும், ராஜ்யம் வருவதற்கு இன்னும் அதிக காலம் செல்லும் என்பதைக் காண்பிப்பதற்கும் இயேசு ஓர் உவமையை கொடுக்கிறார்.

“பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வரும்படி தூர தேசத்துக்குப் போகப் புறப்பட்டான் என்று அவர் சொல்கிறார்.” அந்தப் “பிரபு” இயேசு, அந்தத் “தூர தேசம்” பரலோகம். இயேசு அங்கு போய் சேரும் போது, அவருடைய தகப்பன் ராஜ அதிகாரத்தை அவருக்கு கொடுப்பார்.

என்றபோதிலும், புறப்படுவதற்கு முன் பிரபு தம் பத்து ஊழியக்காரரை அழைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளி ராத்தலை கொடுத்து இவ்வாறு சொல்கிறார்: “நான் திரும்பி வருமளவும் இதைக்கொண்டு வியாபாரம் பண்ணுங்கள்.” பத்து ஊழியக்காரர்கள் முதல் நிறைவேற்றத்தில் இயேசுவின் ஆரம்ப கால சீஷர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். பெரிதாக்கப்பட்ட பொருத்தத்தில், பரலோக ராஜ்யத்தில் அவரோடு இருக்கப் போகும் சுதந்தரவாளிகள் எல்லாரையும் அவர்கள் படமாகக் குறிப்பிடுகின்றனர்.

வெள்ளி ராத்தல்கள் என்பது மதிப்புமிக்க பணம்; ஒவ்வொன்றும் ஒரு விவசாய வேலையாளின் மூன்று மாத ஊதியத்துக்கு சமமானது. ஆனால் ராத்தல்கள் எதை பிரதிநிதித்துவம் செய்கின்றன? அவற்றைக்கொண்டு என்னவிதமான வியாபாரத்தை ஊழியக்காரர்கள் செய்ய வேண்டும்?

ஆவியினால் பிறப்பிக்கப்பட்ட சீஷர்கள் வாக்குப்பண்ணப்பட்ட ராஜ்யத்தில் இயேசு ராஜாவாக வரும் வரையில், பரலோக ராஜ்யத்திற்கு இன்னும் அதிகமான சுதந்தரவாளிகளை உண்டாக்குவதில் உபயோகப்படுத்தக்கூடிய ஆஸ்திகளை ராத்தல்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றன. உயிர்த்தெழுந்து தம் சீஷர்களுக்கு காட்சியளித்த பின்பு, மேலுமதிக சீஷர்களை உண்டுபண்ணுவதற்கு பரலோக ராஜ்ய வகுப்போடு கூட்டுவதற்கு அடையாளப்பூர்வமான ராத்தல்களை அவர் அவர்களுக்குக் கொடுத்தார்.

இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, [பிரபுவை] இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.” அவருடைய சீஷர்கள் உட்படாத இஸ்ரவேலர்கள் அல்லது யூதர்கள் தான் அந்த ஊரார். இயேசு பரலோகத்துக்குப் புறப்பட்டுச் சென்ற பின்பு, இந்த யூதர்கள் அவருடைய சீஷர்களை துன்புறுத்தியதன் மூலம் அவர் அவர்களுடைய ராஜாவாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்பதை அறிவித்தனர். இந்த விதத்தில் அவர்கள் ஸ்தானாபதிகளை அனுப்பிய ஊரார் போல நடந்து கொண்டனர்.

பத்து ஊழியக்காரரும் தங்கள் ராத்தல்களை எவ்வாறு உபயோகிக்கின்றனர்? இயேசு விளக்குகிறார்: “அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வந்த போது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம் பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்து வரச் சொன்னான். அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்து ராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான். எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான். அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்து ராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான். அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.”

பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளிலிருந்து இன்று வரையாக உள்ள அப்போஸ்தலர்களோடு சேர்ந்த சீஷர்களின் வகுப்பை அல்லது தொகுதியை பத்து ராத்தல்களை உடைய ஊழியக்காரன் படமாகக் குறிப்பிடுகிறான். ஐந்து ராத்தல்களை பெற்ற ஊழியக்காரனும் அதே காலப்பகுதியில் இருந்த ஒரு தொகுதியை பிரதிநிதித்துவம் செய்கிறான், அவர்கள் தங்கள் வாய்ப்புகள் மற்றும் திறமைகளுக்கு ஏற்றபடி தங்கள் ராஜாவின் ஆஸ்திகளை பூமியில் அதிகரிக்கின்றனர். இரண்டு தொகுதிகளும் வைராக்கியத்தோடு நற்செய்தியை பிரசங்கிக்கின்றனர், அதன் விளைவாக சரியான இருதயமுள்ள அநேக ஆட்கள் கிறிஸ்தவர்களாக ஆகின்றனர். ஊழியக்காரரில் ஒன்பது பேர் வெற்றிகரமான வியாபாரத்தை நடத்தி தங்கள் செல்வத்தை அதிகரித்தனர்.

இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான். அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே, பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக் கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும் போது, அதை வட்டியோடே வரப்பற்றிக் கொள்வேனே என்று சொல்லி; சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்து ராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.”

பொல்லாத ஊழியக்காரனுக்கு அடையாளப்பூர்வமான ராத்தலை இழப்பது, பரலோக ராஜ்யத்தில் ஓர் இடத்தை இழப்பதை அர்த்தப்படுத்துகிறது. ஆம், பத்துப் பட்டணங்கள் அல்லது ஐந்து பட்டணங்களுக்கு மேல் ஆளுவதைப் போன்ற அந்தச் சிலாக்கியத்தை அவன் இழந்துவிடுகிறான். அந்த ஊழியக்காரன் அவன் செய்கிற எந்தக் கெட்ட காரியத்துக்காகவும் பொல்லாதவன் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் மாறாக, தன் எஜமானின் ராஜ்யத்தின் செல்வத்தை அதிகரிப்பதற்கு வேலைசெய்யத் தவறுவதற்காகவே அப்படி அழைக்கப்படுகிறான்.

பொல்லாத ஊழியக்காரனின் ராத்தல் முதலாம் ஊழியக்காரனுக்கு கொடுக்கப்பட்டபோது, மறுப்பு தெரிவிக்கப்படுகிறது: “ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே.” என்றபோதிலும் இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: “உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும் . . . அன்றியும் தங்கள் மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டு வந்து, எனக்கு முன்பாக வெட்டிப் போடுங்கள் என்று சொன்னான் என்றார்.” லூக்கா 19:11–27; மத்தேயு 28:19, 20.

▪ ராத்தலைப் பற்றிய உவமையை இயேசு சொல்வதற்கு எது தூண்டுகிறது?

▪ பிரபு யார், அவன் செல்லும் தேசம் என்ன?

▪ ஊழியக்காரர்கள் யார், ராத்தல்களினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுவது என்ன?

▪ ஊரார் யார், அவர்கள் தங்கள் பகையை எவ்வாறு காட்டுகின்றனர்?

▪ ஓர் ஊழியக்காரன் ஏன் பொல்லாதவன் என்று அழைக்கப்படுகிறான், அவன் தன் ராத்தலை இழப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?