Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வழியை ஆயத்தப்படுத்துகிறவர் பிறக்கிறார்

வழியை ஆயத்தப்படுத்துகிறவர் பிறக்கிறார்

அதிகாரம் 3

வழியை ஆயத்தப்படுத்துகிறவர் பிறக்கிறார்

எலிசபெத்து குழந்தையைப் பெற்றெடுக்க ஏறக்குறைய காலமாகிவிட்டது. கடந்த மூன்று மாதங்களாக மரியாள் அவளுடன் தங்கியிருந்தாள். ஆனால் இப்பொழுது மரியாள் அவளுக்கு பிரியாவிடை வாழ்த்துச் சொல்லி, நாசரேத்துக்கு வீடு திரும்பிச் செல்வதற்கான நீண்ட பயணத்தை ஆரம்பிக்க நேரமாகிவிட்டது. ஏறக்குறைய ஆறு மாதங்களுக்குள் அவளுக்கும் ஒரு குழந்தை பிறக்கும்.

மரியாள் சென்ற பின்பு சீக்கிரத்தில் எலிசபெத்து பிள்ளை பெறுகிறாள். பிள்ளை பெறுதல் வெற்றிகரமானதாக முடிவதும், எலிசபெத்தும் குழந்தையும் நல்ல ஆரோக்கியத்தில் இருப்பதும் அங்கு எவ்வளவு சந்தோஷம் அளிக்கிறது! எலிசபெத்து தன் சிறு குழந்தையை அயலகத்தாருக்கும், உறவினர்களுக்கும் காண்பிக்கையில், அவளோடு சேர்ந்து எல்லாரும் சந்தோஷப்படுகிறார்கள்.

பிறந்து எட்டாவது நாளில், கடவுளுடைய சட்டத்தின்படி, இஸ்ரவேலிலுள்ள ஆண்குழந்தை விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சிக்காக நண்பர்களும் உறவினர்களும் விஜயம் செய்கின்றனர். பிள்ளை அதன் தகப்பனுடைய பெயரின்படி சகரியா என்று பெயரிடப்பட வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் எலிசபெத்து “அப்படியல்ல, யோவான் என்று பேரிட வேண்டும்” என்று சொல்கிறாள். காபிரியேல் தூதன் பிள்ளைக்கு அந்தப் பெயர் தான் கொடுக்கவேண்டும் என்று சொன்னார் என்பதை நினைவுகூருங்கள்.

என்றபோதிலும் அவர்களுடைய நண்பர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்: “உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே.” பிறகு, சைகை மொழியை உபயோகித்து, குழந்தைக்கு என்ன பெயரிட வேண்டும் என்று விரும்புகிறார் என்று தகப்பனிடம் கேட்கிறார்கள். எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி சகரியா எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில்: “இவன் பேர் யோவான்” என்று எழுதுகிறார்.

அதோடு சகரியாவின் பேச்சு அற்புதமான விதமாய் திரும்பவும் கிடைக்கிறது. எலிசபெத்து, ஒரு பிள்ளையை பெறுவாள் என்ற தேவதூதனின் அறிவிப்பை நம்பாதபோது பேசும் திறமையை இழந்தார் என்பதை நீங்கள் நினைவுகூரலாம். ஆம், சகரியா பேசும்போது சுற்றுப்புறத்தில் வாழ்ந்த எல்லாரும் வியப்படைந்து “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ?” என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொள்கிறார்கள்.

சகரியா இப்பொழுது பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறார், மகிழ்ச்சியில் திளைக்கிறார்: “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] ஸ்தோத்திரம் உண்டாவதாக. . . . தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, . . . தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார்.” இந்த “இரட்சணியக் கொம்பு” உண்மையில், இன்னும் பிறவாத ஆண்டவராகிய இயேசு. சகரியா சொல்கிறார், அவர் மூலமாய் கடவுள் “உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்ய கட்டளையிடுவார்.”

பிறகு சகரியா தன் மகன் யோவானைக் குறித்து முன்னறிவிக்கிறார்: “நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம் பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். அந்தகாரத்திலும் மரணஇருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.”

இந்தக் காலத்துக்குள் வெளிப்படையாக இன்னும் திருமணமாகாத ஒரு பெண்ணாக இருக்கும் மரியாள், நாசரேத்தில் தன் வீட்டுக்கு வந்து சேருகிறாள். அவள் கர்ப்பிணியாக இருக்கிறாள் என்பது வெளிப்படையாக ஆகும் போது என்ன நேரிடும்? லூக்கா 1:56–80; லேவியராகமம் 12:2, 3.

▪ இயேசுவைவிட யோவான் எவ்வளவு மூத்தவராயிருக்கிறார்?

யோவான் எட்டு நாள் குழந்தையாயிக்கும்போது என்ன காரியங்கள் நிகழ்கின்றன?

▪ கடவுள் எவ்வாறு தம் கவனத்தை தம் ஜனங்களிடமாக திருப்பியிருக்கிறார்?

▪ யோவான் என்ன வேலை செய்வார் என்று முன்னறிவிக்கப்படுகிறது?