Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாக்குப்பண்ணப்பட்ட பிள்ளை

வாக்குப்பண்ணப்பட்ட பிள்ளை

அதிகாரம் 6

வாக்குப்பண்ணப்பட்ட பிள்ளை

நாசரேத்துக்கு திரும்பிப் போவதற்கு பதிலாக யோசேப்பும் மரியாளும் பெத்லகேமிலேயே தங்கிவிடுகின்றனர். இயேசு எட்டு நாள் குழந்தையாக இருந்தபோது, மோசேக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டத்திற்கு இணங்க அவருக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. ஓர் ஆண் குழந்தைக்கு எட்டாம் நாளிலே பெயர் வைப்பதும் ஒரு பழக்கமாக இருந்துவந்தது. எனவே காபிரியேல் தூதன் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி அவர்கள் தங்கள் பிள்ளைக்கு இயேசு என்று பெயரிடுகிறார்கள்.

ஒரு மாதத்துக்கு மேல் கடந்து விடுகிறது, இயேசு 40 நாள் குழந்தை. இந்தச் சமயத்தில் அவருடைய பெற்றோர் அவரை எங்கே கொண்டு செல்கிறார்கள்? அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தூரத்தில் மட்டுமே இருந்த எருசலேம் ஆலயத்துக்கு. மோசேக்கு கொடுத்த கடவுளுடைய சட்டத்தின்படி, ஒரு மகனைப் பெற்றெடுத்து 40 நாட்களுக்குப் பின்பு ஒரு தாய் ஆலயத்தில் ஒரு சுத்திகரிப்பு பலியை செலுத்த வேண்டும் என்று தேவைப்படுத்தியது.

அதைத்தான் மரியாள் செய்கிறாள். அவளுடைய பலியாக இரண்டு சிறிய பறவைகளை கொண்டுவருகிறாள். இது யோசேப்பு மரியாளின் பொருளாதார நிலையை ஓரளவுக்கு வெளிப்படுத்துகிறது. மோசேயின் நியாயப்பிரமாணம், பறவைகளைவிட அதிக மதிப்புவாய்ந்த ஓர் ஆட்டுக்குட்டியை பலிசெலுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது. ஆனால் அந்தத் தாய் இதற்கு சக்தியற்றவளாக இருந்தால், இரண்டு காட்டுப் புறாக்கள் அல்லது இரண்டு புறாக்குஞ்சுகள் போதுமானது.

ஆலயத்தில் வயதான ஒருவர் இயேசுவைத் தன் கரங்களில் ஏந்திக்கொள்கிறார். அவர் பெயர் சிமியோன். யெகோவா வாக்களித்த கிறிஸ்து, அல்லது மேசியாவைக் காண்பதற்கு முன்பு அவர் மரிப்பதில்லை என்று கடவுள் அவருக்கு வெளிப்படுத்தியிருந்தார். இந்தக் குறிப்பிட்ட நாளில் சிமியோன் தேவாலயத்திற்கு வந்தபோது, யோசேப்பும் மரியாளும் ஏந்திக்கொண்டிருந்த அந்தக் குழந்தையினிடமாக அவர் பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்படுகிறார்.

சிமியோன் இயேசுவைத் தன் கரங்களில் ஏந்தியவராய்க் கடவுளுக்கு நன்றி சொல்கிறார்: “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போக விடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.”

இதைக் கேட்ட யோசேப்பும் மரியாளும் ஆச்சரியப்படுகிறார்கள். பின்பு சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து மரியாளிடம், அவளுடைய குமாரன் “இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், . . . இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்,” என்றும் துயரம் ஒரு கூர்மையான பட்டயம் போல அவளுடைய ஆத்துமாவை உருவிப்போகும் என்றும் சொல்கிறார்.

இந்தச் சம்பவத்தின்போது 84 வயது தீர்க்கதரிசினியாகிய அன்னாளும் அங்கே இருக்கிறாள். உண்மையில், அவள் ஆலயத்துக்குப் போவதில் ஒருபோதும் தவறுவதில்லை. அந்த நேரத்திலே அவள் அருகாமையில் வந்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, செவிகொடுக்கும் யாவரிடமும் இயேசுவைக் குறித்து பேசுகிறாள்.

தேவாலயத்திலே நடக்கும் இந்தச் சம்பவங்கள் யோசேப்பையும் மரியாளையும் எந்தளவுக்கு மகிழ்விக்கிறது! நிச்சயமாகவே, அந்தக் குழந்தை கடவுளால் வாக்களிக்கப்பட்டவர் என்பதை இவை அனைத்தும் அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. லூக்கா 2:21-38; லேவியராகமம் 12:1-8.

▪ ஓர் இஸ்ரவேல் ஆண்குழந்தைக்கு எப்பொழுது பெயரிடுவது வழக்கமாக இருந்தது?

▪ தன் மகன் 40 நாள் குழந்தையாக இருக்கும்போது ஓர் இஸ்ரவேல் தாயிடமிருந்து தேவைப்பட்டது என்ன? இந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட்டது எவ்வாறு மரியாளின் பொருளாதார நிலையை வெளிப்படுத்தினது?

▪ இந்தச் சந்தர்ப்பத்தில் யார் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டது? இதை அவர்கள் எவ்வாறு காண்பிக்கிறார்கள்?