Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பம்”

“வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பம்”

அதிகாரம் 54

“வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பம்”

அந்த நாளுக்கு முந்தின நாள் உண்மையில் முக்கிய நிகழ்ச்சிகள் பல சம்பவித்த நாளாக இருந்தது. இயேசு அற்புதமாக ஆயிரக்கணக்கானோரைப் போஷித்துப் பின்னர் ஜனங்கள் அவரை ராஜாவாக்க செய்த முயற்சியிலிருந்து தப்பினார். அந்த இரவில் அவர் கொந்தளிப்பான கலிலேயாக் கடலின் மேல் நடந்து வந்தார்; புயற்காற்றினால் அலைகழிக்கப்பட்ட தண்ணீரில் நடந்து வருகையில் அமிழ்ந்து போக ஆரம்பித்த பேதுருவைக் காப்பாற்றினார்; கப்பற்சேதத்திலிருந்து தம்முடைய சீஷர்களைக் காப்பாற்ற அலைகளை அடக்கினார்.

கலிலேயாக் கடலின் வடகிழக்கில் அற்புதமாக இயேசுவினால் போஷிக்கப்பட்ட மக்கள், அவரைக் கப்பர்நகூமுக்கு அருகே கண்டு “நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர்?” என்று கேட்டார்கள். அவர்களைக் கடிந்துகொள்பவராய், இயேசு மற்றொரு இலவச சாப்பாட்டை எதிர்பார்த்துத்தானே அவர்கள் அவரைத் தேடிக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார். அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பிக்கும்படியாக அவர் அவர்களைத் துரிதப்படுத்துகிறார். ஆகவே ஜனங்கள் அவரைக் கேட்கிறார்கள்: “தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும்.”

இயேசு, மிக உயர்ந்த மதிப்புள்ள ஒரே ஒரு கிரியையைப் பற்றி குறிப்பிடுகிறார். “அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது” என்று அவர் விளக்குகிறார்.

என்றபோதிலும், இயேசு நடப்பித்திருந்த எல்லா அற்புதங்களின் மத்தியிலும் ஜனங்கள் இயேசுவில் விசுவாசம் வைப்பதில்லை. நம்பமுடியாதபடி அவர் செய்த எல்லா மகத்தான காரியங்களுக்கு பின்பும்கூட, அவிசுவாசத்தோடு அவர்கள் கேட்கிறார்கள்: “அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே.”

அவர்கள் அடையாளத்தைக் கேட்டதற்குப் பதிலளிப்பவராய், இயேசு அற்புதமான ஏற்பாடுகளின் ஊற்றுமூலத்தைக் குறித்து தெளிவுபடுத்தி அவர் சொல்கிறார்: “வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் . . . வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம்.”

“ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும்,” என்று ஜனங்கள் சொல்கிறார்கள்.

“ஜீவ அப்பம் நானே” என்று இயேசு விளக்குகிறார். “என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன். அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவது . . . என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது.”

“நான் வானத்திலிருந்து வந்த அப்பம்” என்பதாக அவர் சொன்னதன் காரணமாக யூதர்கள் இதைக் கேட்டபோது முறுமுறுக்க ஆரம்பித்தார்கள். மனித பெற்றோரின் ஒரு மகன் என்பதற்கும் மேலாக அவரில் அவர்கள் எதையும் காணாததால், நாசரேத்தூரார் செய்தவிதமாகவே அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்: “இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான்.”

“உங்களுக்குள்ளே முறுமுறுக்க வேண்டாம்” என்று இயேசு அவர்களுக்குப் பதிலளிக்கிறார். “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். எல்லாரும் தேவனாலே [யெகோவாவினாலே NW] போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

தொடர்ந்து பேசுபவராய் இயேசு மறுபடியுமாகச் சொல்கிறார்: “ஜீவ அப்பம் நானே. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்.” ஆம், கடவுள் அனுப்பின இயேசுவில் விசுவாசத்தை அப்பியாசிப்பதன் மூலம் மக்கள் நித்திய ஜீவனைக்கொண்டிருக்க முடியும். எந்த மன்னாவும் அல்லது இதுபோன்ற வேறு எந்த அப்பமும் அதை அளிக்கமுடியாது!

வானத்திலிருந்திறங்கின அப்பத்தைப் பற்றிய சம்பாஷணை, இயேசுவை ஜனங்கள் கப்பர்நகூமுக்கு அருகே கண்டதைத் தொடர்ந்து ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் அது தொடர்ந்து பின்னால் இயேசு கப்பர்நகூமில் ஒரு ஜெப ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தபோது உச்சக்கட்டத்தை எட்டியது. யோவான் 6:25–51, 59; சங்கீதம் 78:24; ஏசாயா 54:13; மத்தேயு 13:55–57.

▪ வானத்திலிருந்திறங்கிய அப்பத்தைப் பற்றிய இயேசுவின் சம்பாஷணைக்கு முன் என்ன சம்பவங்கள் நடந்திருந்தன?

▪ அப்போதுதானே இயேசு செய்து முடித்திருந்த காரியத்தைப் பார்க்கும்போது, அடையாளத்துக்கான அவர்களின் வேண்டுகோள் ஏன் அத்தனை பொருத்தமற்றதாக இருக்கிறது?

▪ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பம் என்ற இயேசுவின் உரிமைப்பாராட்டலைக் கேட்டு யூதர்கள் ஏன் முறுமுறுக்கிறார்கள்?

▪ வானத்திலிருந்து வந்த அப்பத்தைப் பற்றிய சம்பாஷணை எங்கே நடைபெற்றது?