Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விவாகரத்தைக் குறித்தும், பிள்ளைகளின் பேரில் அன்பைக் குறித்தும் பாடங்கள்

விவாகரத்தைக் குறித்தும், பிள்ளைகளின் பேரில் அன்பைக் குறித்தும் பாடங்கள்

அதிகாரம் 95

விவாகரத்தைக் குறித்தும், பிள்ளைகளின் பேரில் அன்பைக் குறித்தும் பாடங்கள்

இயேசுவும் அவருடைய சீஷர்களும், பொ. ச. 33-ம் ஆண்டின் பஸ்காவுக்கு ஆஜராயிருப்பதற்கு, எருசலேமுக்கு செல்லும் வழியில் இருக்கின்றனர். அவர்கள் யோர்தான் நதியைக் கடந்து பெரேயா மாவட்டத்துக்குள் போகும் வழியாய் செல்கின்றனர். ஒரு சில வாரங்களுக்கு முன்பு இயேசு பெரேயாவில் இருந்தார், ஆனால் அவருடைய நண்பனான லாசரு நோயுற்று இருந்ததினால் அவர் யூதேயாவுக்கு வரவழைக்கப்பட்டார். பெரேயாவில் இருந்த போது, இயேசு விவாகரத்தைப் பற்றி பரிசேயர்களிடம் பேசினார், இப்போது மறுபடியும் அந்த விஷயத்தைப் பற்றி கேட்கின்றனர்.

விவாகரத்தைப் பற்றி பரிசேயர்களுக்குள் வித்தியாசமான எண்ணங்கள் இருக்கின்றன. ‘ஒரு பெண்ணிடத்தில் உள்ள இலச்சையான காரியத்தினிமித்தம்’ அவள் விவாகரத்து செய்யப்படலாம் என்று மோசே சொன்னார். சிலர் இது கற்பின்மையைப் பற்றி மட்டும் தான் குறிப்பிடுகிறது என்று நம்புகின்றனர். ஆனால் மற்றவர்கள் “இலச்சையான காரியம்” என்பது மிகச் சிறிய குற்றங்களையும் உட்படுத்துகிறது என்று கருதுகின்றனர். ஆகையால், இயேசுவை சோதிப்பதற்கு பரிசேயர்கள் இவ்வாறு கேட்கின்றனர்: “புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளி விடுவது நியாயமா?” இயேசு என்ன சொன்னாலும் அது மாறான எண்ணத்தை உடைய பரிசேயர்களோடு அவரை கஷ்டத்துக்குள் உட்படுத்தும் என்று அவர்கள் உறுதியாய் நம்புகின்றனர்.

இயேசு கேள்வியை மிகத் திறமையாக கையாளுகிறார், எந்த மானிட அபிப்பிராயத்தையும் ஆதரிக்காமல் விவாகத்தின் ஆரம்ப திட்டஅமைப்பை குறிப்பிட்டு பேசுகிறார். “ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”

கடவுளுடைய ஆதிநோக்கம் விவாக தம்பதிகள் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும், விவாகரத்து செய்யக்கூடாது என்பதே என்று இயேசு காண்பிக்கிறார். “அப்படியென்றால், தள்ளுதற் சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார்” என்று பரிசேயர்கள் பிரதிபலிக்கின்றனர்.

“உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை” என்று இயேசு பதிலளிக்கிறார். ஆம், ஏதேன் தோட்டத்தில் விவாகத்துக்கு உண்மையான தராதரத்தை கடவுள் ஏற்படுத்திய போது, அவர் விவாகரத்துக்கான எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

இயேசு பரிசேயர்களிடம் தொடர்ந்து சொல்கிறார்: “எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ் செய்ததினிமித்தமேயன்றி, [கிரேக்க மொழியில் போர்னியா] அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான்.” கடவுளால் அங்கீகரிக்கப்படும் விவாகரத்துக்கான ஒரே அடிப்படை, வினைமையான பாலுறவு ஒழுக்கயீனமான போர்னியா என்று இயேசு இதன் மூலம் காட்டுகிறார்.

விவாகரத்துக்கான இந்த ஒரே அடிப்படையைத் தவிர, விவாகம் ஒரு நிரந்தரமான இணைப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாய், சீஷர்கள் இவ்வாறு சொல்வதற்கு உந்தப்படுகின்றனர்: “மனைவியைப் பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல.” விவாகம் செய்து கொள்வதற்கு ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒருவர், விவாக பந்தத்தின் நிரந்தரமான தன்மையைப் பற்றி கவனத்தோடு சிந்திக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை!

தொடர்ந்து இயேசு தனித்திருப்பதைப் பற்றி பேசுகிறார். சில பையன்கள் அண்ணகர்களாகப் பிறக்கின்றனர், பால் சம்பந்தமாக வளர்ச்சி இல்லாததால் விவாகம் செய்து கொள்வதற்கு தகுதியற்றவர்களாய் இருக்கின்றனர். பால் சம்பந்தமான ஆற்றலை கொடூரமாக கெடுப்பதன் மூலம் மற்றவர்கள் மனிதர்களால் அண்ணகர்களாக ஆக்கப்படுகின்றனர். இறுதியில் சிலர் பரலோக ராஜ்யத்துக்கு சம்பந்தப்பட்ட காரியங்களில் தங்களை அதிக முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதற்கு விவாகம் செய்து கொள்வதற்கான விருப்பத்தையும், பால் சம்பந்தமான உறவுகளை அனுபவிப்பதையும் அடக்கி வைக்கின்றனர். “இதை [தனித்திருப்பதை] ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன்” என்று இயேசு முடிக்கிறார்.

ஜனங்கள் இப்போது தங்கள் இளம் பிள்ளைகளை இயேசுவிடத்தில் கொண்டுவர ஆரம்பிக்கின்றனர். ஆனால் சீஷர்கள் பிள்ளைகளை திட்டி, அவர்களை அனுப்பி விட முயற்சி செய்கின்றனர், தேவையற்ற அழுத்தத்திலிருந்து இயேசுவை பாதுகாப்பதற்கு அவர்கள் இவ்வாறு செய்தனர் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் இயேசு சொல்கிறார்: “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோக ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப் போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இயேசு இங்கு என்னே சிறந்த பாடங்களை கொடுக்கிறார்! கடவுளுடைய ராஜ்யத்தை பெற்றுக்கொள்வதற்கு, இளம் பிள்ளைகளின் மனத்தாழ்மையையும், கற்பிக்கப்படத்தக்க தன்மையையும் நாம் பின்பற்ற வேண்டும். ஆனால் விசேஷமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவழிப்பது எவ்வளவு முக்கியமானதாயிருக்கிறது என்பதையும் இயேசுவின் உதாரணம் சிறப்பித்துக் காட்டுகிறது. இயேசு இப்போது சிறு பிள்ளைகளை தன் கைகளில் எடுத்துக்கொண்டு, அவர்களை ஆசீர்வதிப்பதன் மூலம் தம் அன்பை காண்பிக்கிறார். மத்தேயு 19:1–15; உபாகமம் 24:1; லூக்கா 16:18; மாற்கு 10:1–16; லூக்கா 18:15–17.

▪ விவாகரத்தைப் பற்றி பரிசேயர்கள் என்ன வித்தியாசமான எண்ணங்களைக் கொண்டிருக்கின்றனர், ஆகையால் அவர்கள் இயேசுவை எவ்வாறு சோதிக்கின்றனர்?

▪ அவரை சோதிப்பதற்கு பரிசேயர்கள் எடுத்த முயற்சியை இயேசு எவ்வாறு கையாளுகிறார், விவாகரத்துக்கான ஒரே காரணம் என்று எதை குறிப்பிடுகிறார்?

▪ விவாகம் பண்ணுகிறது நல்லதல்ல என்று இயேசுவின் சீஷர்கள் ஏன் சொல்கின்றனர், இயேசு என்ன சிபாரிசு செய்கிறார்?

▪ இளம் பிள்ளைகளோடு அவர் கொண்ட தொடர்புகளின் மூலம் இயேசு நமக்கு எதைக் கற்பிக்கிறார்?