Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வேண்டுமென்றே பரிசேயர்கள் காட்டிய அவநம்பிக்கை

வேண்டுமென்றே பரிசேயர்கள் காட்டிய அவநம்பிக்கை

அதிகாரம் 71

வேண்டுமென்றே பரிசேயர்கள் காட்டிய அவநம்பிக்கை

ஒரு சமயம் குருடனாக இருந்த அந்தப் பிச்சைக்காரனின் பெற்றோர்கள், பரிசேயர்களுக்கு முன்பு அழைக்கப்படுகையில் பயப்படுகின்றனர். யாராவது இயேசுவின் பேரில் விசுவாசத்தை வெளிக்காட்டினால் ஜெப ஆலயத்திலிருந்து புறம்பாக்கப்படுவார்கள் என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். சமுதாயத்தில் இருக்கும் மற்றவர்களோடு அப்பேர்ப்பட்ட கூட்டுறவைத் துண்டித்துக் கொள்வது, விசேஷமாக ஓர் ஏழை குடும்பத்தின் மேல் மிகப்பெரிய துன்பத்தைக் கொண்டுவரும். ஆகையால் அவனுடைய பெற்றோர்கள் கவனமாய் இருக்கின்றனர்.

“உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா?” என்று பரிசேயர்கள் கேட்கின்றனர். “இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான்?”

“இவன் எங்கள் குமாரன் தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும்” என்று பெற்றோர்கள் உறுதிசெய்கின்றனர். “இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது. இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது.” நடந்த எல்லாவற்றையும் அவர்களுடைய மகன் நிச்சயமாக சொல்லியிருப்பான், ஆனால் பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையாய் சொல்கின்றனர்: “இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான்.”

ஆகையால் பரிசேயர்கள் அந்த மனிதனை மறுபடியும் அழைக்கின்றனர். இயேசுவுக்கு எதிராக குற்றஞ்சாட்டுவதற்கு ஆதாரத்தை தாங்கள் சேகரித்திருக்கின்றனர் என்று குறிப்பிடுவதன் மூலம் அவனை பயமுறுத்த அவர்கள் இம்முறை முயற்சி செய்கின்றனர். “நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று அவர்கள் அதிகாரத்துடன் சொல்கின்றனர்.

ஒரு சமயம் குருடனாயிருந்த மனிதன் அவர்களுடைய குற்றச்சாட்டை மறுக்காமல், சொல்கிறான்: “அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்று தான் எனக்குத் தெரியும்.”

அவனுடைய அத்தாட்சியில் ஒரு குறையை கண்டுபிடிக்க முயற்சி செய்பவர்களாய், பரிசேயர்கள் மறுபடியும் கேட்கின்றனர்: “உனக்கு என்ன செய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான்?”

“முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற் போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன?” என்று அவன் குறைகூறுகிறான். கேலியாக அவன் கேட்கிறான்: “அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ?”

இந்தப் பதில் பரிசேயர்களை அதிக கோபமடையச் செய்கிறது: “நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம்” என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

தாழ்மையான பிச்சைக்காரன் ஆச்சரியத்தை வெளிக்காட்டுபவனாய் பிரதிபலிக்கிறான்: “அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம்.” இதிலிருந்து என்ன முடிவுக்கு வரவேண்டும்? உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதத்தைப் பிச்சைக்காரன் குறிப்பிட்டுக் காட்டுகிறான்: “பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். பிறவிக் குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானது முதல் கேள்விபட்டதில்லையே.” ஆக, முடிவு தெளிவாக இருக்க வேண்டும்: “அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்ய மாட்டாரே.”

அப்பேர்ப்பட்ட நேரடியான தெளிவான தர்க்கத்துக்கு பரிசேயர்களிடம் பதில் இல்லை. அவர்களால் உண்மையை எதிர்ப்பட முடியவில்லை, ஆகையால் அவர்கள் அந்த மனிதனை திட்டுகின்றனர்: “முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ?” அப்போது அந்த மனிதனை வெளியே தள்ளுகின்றனர், ஜெப ஆலயத்திலிருந்து அவனை புறம்பாக்குகின்றனர்.

அவர்கள் என்ன செய்திருக்கின்றனர் என்பதைப் பற்றி இயேசு அறிந்த போது, அந்த மனிதனைக் கண்டுபிடித்து, சொல்கிறார்: “நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா?”

அதற்குப் பதிலளிப்பவனாய், ஒரு சமயம் குருடனாயிருந்த பிச்சைக்காரன் கேட்கிறான்: “ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார்?”

“உன்னுடனே பேசுகிறவர் அவர் தான்” என்று இயேசு பதிலளிக்கிறார்.

உடனே அந்த மனிதன் இயேசுவின் முன் பணிந்து, சொல்கிறான்: “ஆண்டவரே, விசுவாசிக்கிறேன்.”

இயேசு அடுத்து விளக்குகிறார்: “காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன்.”

அப்போது, கேட்டுக் கொண்டிருந்த பரிசேயர்கள்: “நாங்களும் குருடரோ?” என்று கேட்கின்றனர். அவர்கள் மனதின் பிரகாரமாய் குருடராய் இருக்கின்றனர் என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டால், இயேசுவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சாக்குப்போக்கு இருந்திருக்கும். இயேசு அவர்களிடம் சொல்கிறபடி: “நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது.” என்றபோதிலும் அவர்கள் கடின இருதயமுள்ளவர்களாய், தாங்கள் குருடராயில்லை என்றும் தங்களுக்கு ஆவிக்குரிய அறிவொளி தேவையில்லை என்றும் அழுத்தமாகக் கூறுகின்றனர். ஆகையால் இயேசு சொல்கிறார்: “நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது.” யோவான் 9:19–41.

▪ ஒரு சமயம் குருடனாயிருந்த பிச்சைக்காரனின் பெற்றோர் பரிசேயர்களுக்கு முன்பாக அழைக்கப்படுகையில் ஏன் பயப்படுகின்றனர், ஆகையால் அவர்கள் எவ்வாறு கவனமாக பதிலளிக்கின்றனர்?

▪ ஒரு சமயம் குருடனாயிருந்த மனிதனை பரிசேயர்கள் எவ்வாறு பயமுறுத்த முயற்சி செய்கின்றனர்?

▪ அந்த மனிதனின் நேர்மையான என்ன தர்க்கம் பரிசேயர்களை கோபமூட்டுகிறது?

▪ இயேசுவுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்பதில் பரிசேயர்கள் ஏன் சாக்குப்போக்கு இன்றி இருக்கின்றனர்?