Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 104

இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் செல்கிறார்

இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் செல்கிறார்

நாட்கள் செல்லச் செல்ல, தம்மை பின்பற்றுகிறவர்களுக்குப் பல முறை இயேசு காட்சியளிக்கிறார். ஒருமுறை அவருடைய சீஷர்களில் ஏறக்குறைய 500 பேருக்கு காட்சியளிக்கிறார். அப்போது அவர்களிடம் எதைப் பற்றி பேசுகிறார் என்று தெரியுமா? கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியே பேசுகிறார். இந்த ராஜ்யத்தைப் பற்றி சொல்லித் தருவதற்காகவே இயேசுவை இந்தப் பூமிக்கு யெகோவா அனுப்பினார். உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகும்கூட தொடர்ந்து அவர் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்.

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன என்று உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அந்த ராஜ்யம் பரலோகத்தில் இருக்கிற கடவுளுடைய உண்மையான அரசாங்கம். அதில் ராஜாவாக இருப்பதற்கு இயேசுவைத்தான் கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பசியுள்ளவர்களுக்கு இயேசு உணவளித்தார், நோயுற்றவர்களைச் சுகப்படுத்தினார், செத்துப் போனவர்களையும் உயிர்த்தெழுப்பினார்! இதையெல்லாம் செய்வதன் மூலம் தாம் எப்பேர்ப்பட்ட நல்ல ராஜாவாக இருப்பார் என்பதை அவர் காட்டினார்.

அப்படியானால், இயேசு பரலோகத்திலிருந்து ஆயிரம் வருடம் ஆட்சி செய்யும்போது பூமி எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்? முழு பூமியும் ஓர் அழகிய பரதீஸாக மாறியிருக்கும். அப்போது யுத்தங்களோ தீய செயல்களோ, நோயோ இருக்காது. மரணம்கூட இருக்காது. இது நிஜம். ஏனென்றால் இந்தப் பூமி ஒரு பரதீஸாக மாறி, அதில் மனிதர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காகவே கடவுள் அதைப் படைத்தார். அதனால்தான் தொடக்கத்தில் ஏதேன் தோட்டத்தை அவர் உண்டாக்கினார். ஆகவே, என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறாரோ அதையெல்லாம் இயேசு செய்து முடிப்பார்.

இப்போது இயேசு பரலோகத்துக்குத் திரும்பிப் போகும் சமயம் வருகிறது. 40 நாட்களாக இயேசு தமது சீஷர்களுக்குக் காட்சியளிக்கிறார். எனவே, அவர் உயிரோடிருக்கிறார் என்பதில் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் சீஷர்களை விட்டுப்போவதற்கு முன் அவர்களைப் பார்த்து: ‘நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளும் வரை எருசலேமிலேயே தங்கியிருங்கள்’ என்று சொல்கிறார். பரிசுத்த ஆவி என்பது கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி. வீசும் காற்றைப் போன்றது அது. கடவுளுடைய விருப்பத்தின்படி செய்ய இயேசுவின் சீஷர்களுக்கு அது உதவி செய்யும். கடைசியாக: ‘பூமியின் கடைசி எல்லை வரைக்கும் நீங்கள் என்னைப் பற்றி சாட்சி கொடுக்க வேண்டும்’ என்கிறார்.

இயேசு இதைச் சொல்லி முடித்ததும் ஆச்சரியமான ஒரு காரியம் நடக்கிறது. நீ இங்கே பார்க்கிறபடி, அவர் பரலோகத்துக்குப் போகத் தொடங்குகிறார். அப்படி அவர் போகப் போக ஒரு மேகம் அவரை மறைத்து விடுகிறது. அதன் பிறகு சீஷர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. இயேசு பரலோகத்துக்குப் போய்விடுகிறார், பூமியிலிருக்கும் தமது சீஷர்கள் மீது அங்கிருந்தே ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறார்.