Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 110

தீமோத்தேயு​—⁠பவுலின் புது உதவியாளர்

தீமோத்தேயு​—⁠பவுலின் புது உதவியாளர்

இங்கே அப்போஸ்தலனாகிய பவுலுடன் இருக்கிற இளைஞனின் பெயர் தீமோத்தேயு. அவர் தன் குடும்பத்துடன் லீஸ்திராவில் வாழ்கிறார். அவருடைய அம்மா பெயர் ஐனிக்கேயாள், அவருடைய பாட்டி பெயர் லோவிசாள்.

லீஸ்திராவுக்கு பவுல் மூன்றாவது தடவையாக வந்திருக்கிறார். ஏறக்குறைய ஒரு வருஷத்துக்கு முன் பவுலும் பர்னபாவும் பிரசங்க ஊழியம் செய்வதற்காக இங்கே வந்திருந்தார்கள். இப்போது பவுல் தன் நண்பன் சீலாவுடன் திரும்பவும் வந்திருக்கிறார்.

தீமோத்தேயுவிடம் பவுல் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா? ‘சீலாவோடும் என்னோடும் வருவதற்கு உனக்கு விருப்பமா? ரொம்ப தூரத்திலுள்ள இடங்களுக்குப் போய் பிரசங்கிக்க நீயும் வந்தால் நல்லது’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

‘ஓ, எனக்கு விருப்பமிருக்கிறது’ என்று தீமோத்தேயு பதிலளிக்கிறார். அதனால் சீக்கிரத்திலேயே தீமோத்தேயு தன் குடும்பத்தை விட்டு பவுலுடனும் சீலாவுடனும் போகிறார். இவர்களுடைய பயணத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், பவுலுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று நாம் பார்க்கலாம். தமஸ்குவுக்குப் போகிற வழியில் இயேசு அவருக்குத் தோன்றி இப்போது ஏறக்குறைய 17 வருஷங்கள் ஆகியிருக்கின்றன.

இயேசுவின் சீஷர்களைத் துன்பப்படுத்த பவுல் தமஸ்குவுக்கு வந்தார் இல்லையா, ஆனால் இப்போது அவரே ஒரு சீஷராக இருக்கிறார்! பிற்பாடு, இயேசுவைப் பற்றி அவர் பிரசங்கிப்பதை விரும்பாத சில எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள். ஆனால் சீஷர்கள் அவரை ஒரு கூடையில் வைத்து அந்தப் பட்டணத்து மதிலுக்கு வெளியே இறக்கி விட்டு தப்ப வைத்து விடுகிறார்கள்.

அதன் பிறகு பவுல், அந்தியோகியாவுக்குப் போய் பிரசங்கிக்கிறார். இங்குதான் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் முதன்முதலில் வழங்கப்பட்டது. பின்னர், தொலைதூர நாடுகளுக்குச் சென்று பிரசங்கிப்பதற்காக பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலிருந்து அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் பிரசங்கிக்கிற பட்டணங்களில் ஒன்று லீஸ்திரா, தீமோத்தேயுவின் வீடு இருக்கிற இடம்.

ஏறக்குறைய ஒரு வருஷத்துக்குப் பிறகு, பவுல் மறுபடியும் இங்கே லீஸ்திராவுக்கு வந்திருக்கிறார். இப்போது தீமோத்தேயு, பவுல், சீலா மூவருமாக சேர்ந்து எங்கே போகிறார்களென்று உனக்குத் தெரியுமா? இந்த வரைப்படத்தைப் பார், எந்தெந்த இடங்களுக்கு அவர்கள் போகிறார்களென்று நாம் தெரிந்துகொள்ளலாம்.

முதலாவது, அருகிலுள்ள இக்கோனியாவுக்கு போகிறார்கள், பிறகு இரண்டாவது பட்டணமான அந்தியோகியாவுக்குப் போகிறார்கள். அதன் பின், துரோவா வரையில் பயணப்படுகிறார்கள், பிறகு பிலிப்பி, தெசலோனிக்கே, பெரோயா ஆகிய இடங்களுக்குப் போகிறார்கள். இந்த வரைபடத்தில் அத்தேனே பட்டணம் எங்கிருக்கிறது என்று தெரிகிறதா? பவுல் அங்கே பிரசங்கிக்கிறார். அதன் பிறகு அவர்கள் கொரிந்து பட்டணத்திற்கு செல்கிறார்கள், அங்கே தங்கி ஒன்றரை ஆண்டுகள் பிரசங்கிக்கிறார்கள். கடைசியாக, எபேசுவில் கொஞ்ச நாள் தங்கியிருக்கிறார்கள். பின்பு செசரியாவுக்கு படகில் சென்று, அந்தியோகியாவுக்கு மறுபடியும் வருகிறார்கள். அங்கே பவுல் தங்குகிறார்.

அதனால் தீமோத்தேயு, “நற்செய்தியைப்” பிரசங்கிப்பதற்கும் பல கிறிஸ்தவ சபைகளை உருவாக்குவதற்கும் பவுலுக்கு உதவி செய்கிறார்; இதற்காக பல நூற்றுக்கணக்கான மைல் தூரம் பயணம் செய்கிறார். வளர்ந்த பிறகு நீயும் தீமோத்தேயுவைப் போல கடவுளுடைய உண்மையுள்ள ஊழியக்காரனாக/ஊழியக்காரியாக இருப்பாயா?