Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 103

பூட்டப்பட்ட அறைக்குள்

பூட்டப்பட்ட அறைக்குள்

பேதுருவும் யோவானும் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறையை விட்டுப்போன பிறகு, மரியாள் அங்கே தனியாக இருக்கிறாள். அவள் அழ ஆரம்பிக்கிறாள். பிறகு குனிந்து கல்லறைக்குள் எட்டிப் பார்க்கிறாள், இதைத்தான் முந்தின படத்தில் நாம் பார்த்தோம். அங்கே இரண்டு தேவதூதர்கள் இருக்கிறார்கள்! அவளைப் பார்த்து: ‘நீ ஏன் அழுகிறாய்?’ என்று கேட்கிறார்கள்.

அதற்கு மரியாள்: ‘அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் தெரியவில்லை’ என்கிறாள். அப்படிச் சொல்லிவிட்டு திரும்பும்போது ஒருவரைப் பார்க்கிறாள். ‘நீ யாரைத் தேடுகிறாய்?’ என்று அவர் கேட்கிறார்.

அவர் ஒரு தோட்டக்காரர் என மரியாள் நினைத்துக் கொள்கிறாள். எனவே அவர்தான் இயேசுவின் உடலை எடுத்துக்கொண்டு போயிருக்க வேண்டும் என்றும் நினைக்கிறாள். அதனால் அவரைப் பார்த்து: ‘நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்திருக்கிறீர் என்பதை எனக்குச் சொல்லும்’ என்று கேட்கிறாள். ஆனால் உண்மையில், அவர் இயேசுவே. அவர் வித்தியாசமான உடலை ஏற்றிருந்ததால் மரியாளுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவளைப் பெயர் சொல்லி கூப்பிடுகிறபோது, அவர்தான் இயேசு என்பதை சட்டென்று அவள் கண்டுகொள்கிறாள். உடனே ஓடிப்போய் சீஷர்களிடம்: ‘நான் கர்த்தரைப் பார்த்தேன்!’ என்று சொல்கிறாள்.

அந்நாள் பிற்பகலில், இரண்டு சீஷர்கள் எம்மாவு என்ற கிராமத்துக்கு நடந்து போய்க் கொண்டிருக்கிறபோது ஒரு நபர் அவர்களுடன் சேர்ந்துகொள்கிறார், இயேசு கொல்லப்பட்டிருந்ததால் அந்தச் சீஷர்கள் ரொம்பவும் சோகமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நடந்து கொண்டிருக்கையில் அந்த நபர் பைபிளிலிருந்து நிறைய விஷயங்களை விளக்கிக் காட்டுகிறார். அவற்றையெல்லாம் கேட்க அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. கடைசியில், சாப்பிடுவதற்காக பயணத்தைச் சற்று நிறுத்திய போதுதான் அந்த நபர் இயேசு என்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. உடனே அங்கிருந்து இயேசு மறைந்து போகிறார். இந்த இரண்டு சீஷர்களும் இயேசுவைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் சொல்வதற்காக எருசலேமுக்கு அவசர அவசரமாக போகிறார்கள்.

இது நடந்து கொண்டிருக்கிற அதே சமயத்தில் பேதுருவுக்கும் இயேசு காட்சியளிக்கிறார். மற்றவர்கள் அதைக் கேள்விப்பட்டதும் மிகவும் பரபரப்படைகிறார்கள். அப்போது இந்த இரண்டு சீஷர்களும் எருசலேமுக்குப் போய் அப்போஸ்தலர்களைப் பார்க்கிறார்கள். வரும் வழியில் இயேசு எப்படித் தங்களுக்கும் காட்சி அளித்தார் என்பதை அவர்களிடம் சொல்கிறார்கள். இதைப் பற்றி அவர்கள் சொல்லச் சொல்ல ஒரு ஆச்சரியமான காரியம் நடக்கிறது, அது என்னவென்று உனக்குத் தெரியுமா?

இந்தப் படத்தைப் பார். அந்தக் கதவு பூட்டப்பட்டிருக்கிற போதிலும் இயேசு அங்கே அந்த அறைக்குள் தோன்றுகிறார். அந்தச் சீஷர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! இது பரவசமூட்டும் ஒரு நாள் அல்லவா? இதுவரை இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு எத்தனை தடவை காட்சியளித்தார் என்று உன்னால் எண்ண முடியுமா? ஐந்து தடவை என்று சரியாக எண்ணினாயா?

இயேசு தோன்றுகிறபோது அப்போஸ்தலன் தோமா அவர்களுடன் இல்லை. அதனால் சீஷர்கள் அவரிடம்: ‘நாங்கள் கர்த்தரைப் பார்த்தோம்!’ என்று சொன்னபோது தோமா அதை நம்பவில்லை. இயேசுவை தானே நேரில் பார்த்தால்தான் நம்ப முடியுமென்று சொல்கிறார். எட்டு நாட்களுக்குப் பிறகு, சீஷர்கள் மறுபடியும் கதவைப் பூட்டிக்கொண்டு ஒரு அறையில் இருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் தோமா அவர்களுடன் இருக்கிறார். அப்போது திடீரென்று இயேசு அந்த அறைக்குள் தோன்றுகிறார். இந்த முறை தோமா நம்புகிறார்.