Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 100

தோட்டத்தில் இயேசு

தோட்டத்தில் இயேசு

மேல் மாடியிலுள்ள அந்த அறையிலிருந்து கிளம்பி, இயேசுவும் அப்போஸ்தலர்களும் கெத்செமனே தோட்டத்துக்குப் போகிறார்கள். ஏற்கெனவே அவர்கள் பல முறை அங்கு போயிருக்கிறார்கள். ஆனால் இப்போது விழித்திருந்து ஜெபம் பண்ணும்படி அவர்களிடம் இயேசு சொல்கிறார். பிறகு கொஞ்ச தூரம் போய் முகங்குப்புற விழுந்து ஜெபம் செய்கிறார்.

அதன் பின்பு, அப்போஸ்தலர்கள் இருக்கிற இடத்திற்குத் திரும்பி வருகிறார். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறாய்? அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் தூங்காமல் விழித்திருக்க வேண்டுமென்று மூன்று முறை இயேசு சொல்கிறார், ஆனால் ஒவ்வொரு முறையும் திரும்பி வருகையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதைத்தான் பார்க்கிறார். கடைசியாக திரும்பி வந்தபோது: ‘இப்படிப்பட்ட ஒரு சமயத்தில் உங்களால் எப்படித் தூங்க முடிகிறது? எதிரிகள் வந்து என்னைப் பிடித்துக்கொண்டு போகிற நேரம் வந்துவிட்டது!’ என்று சொல்கிறார்.

அவர் அப்படிச் சொல்லி முடிப்பதற்குள் ஒரு பெரிய கூட்டம் வருகிற சத்தம் கேட்கிறது. இதோ பார்! அந்த ஆட்கள் வாள்களுடனும் தடிகளுடனும் வந்து கொண்டிருக்கிறார்கள்! வெளிச்சத்திற்காக தீவட்டிகளைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிட்டே வந்ததும் அந்தக் கூட்டத்திலிருந்து யாரோ ஒருவன் நேராக இயேசுவை நோக்கி வருகிறான். இங்கே நீ பார்க்கிறபடி, அவன் அவரை முத்தமிடுகிறான். அவன் வேறு யாருமல்ல, யூதாஸ் காரியோத்துதான்! ஆனால் அவன் ஏன் இயேசுவை முத்தமிடுகிறான்?

‘யூதாஸ், முத்தத்தினாலா நீ என்னைக் காட்டிக் கொடுக்கிறாய்?’ என்று இயேசு கேட்கிறார். ஆம், அந்த முத்தம் ஓர் அடையாளமாய் இருந்தது. யூதாஸுடன் இருக்கிற ஆட்களுக்கு இயேசுவை காட்டிக் கொடுத்தது. யூதாஸ் முத்தமிட்டதும் இயேசுவின் எதிரிகள் அவரைப் பிடிக்க முன்னால் வருகிறார்கள். அதைத் தடுக்க பேதுரு சண்டை போட தயாராகிவிட்டார். தான் எடுத்து வந்திருந்த வாளை உருவி பக்கத்தில் நின்றிருக்கிற ஆளைத் தாக்குகிறார். ஆனால் அந்த வாள் அவனுடைய தலையை வெட்டுவதற்குப் பதிலாக அவனுடைய வலது காதை வெட்டி விடுகிறது. என்றாலும், இயேசு அவனுடைய காதைத் தொட்டு அதைச் சுகப்படுத்துகிறார்.

பிறகு இயேசு பேதுருவைப் பார்த்து: ‘உன் வாளைத் திரும்ப அதன் உறைக்குள் போடு. என்னைக் காப்பாற்றுவதற்கு ஆயிரக்கணக்கான தூதர்களை அனுப்புமாறு என் பிதாவை நான் கேட்க முடியாதென்றா நினைக்கிறாய்?’ என்கிறார். ஆம், அவரால் கேட்க முடியும்! ஆனால் தூதர்களை அனுப்புமாறு கடவுளிடம் இயேசு கேட்கவில்லை, ஏனென்றால் எதிரிகள் தம்மைப் பிடித்துக்கொள்ளும் சமயம் வந்துவிட்டதென்று அவர் அறிந்திருந்தார். அதனால் அவர்கள் தம்மை கூட்டிக்கொண்டு போக அனுமதிக்கிறார். இயேசுவுக்கு இப்போது என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.