Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 92

மரித்தோரை இயேசு உயிர்த்தெழுப்புகிறார்

மரித்தோரை இயேசு உயிர்த்தெழுப்புகிறார்

இங்கே நீ பார்க்கிற இந்தச் சிறு பெண்ணுக்கு 12 வயது. இயேசு அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார், அவளுடைய அம்மாவும் அப்பாவும் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய முகத்தில் ஏன் இத்தனை சந்தோஷம் என்று உனக்குத் தெரியுமா? நாம் பார்க்கலாம்.

இந்தப் பெண்ணின் அப்பா பெயர் யவீரு, இவர் முக்கியமான ஓர் ஆள். அவருடைய மகளுக்கு ஒருநாள் உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது, அவள் படுத்த படுக்கையாகி விடுகிறாள். கொஞ்சம்கூட உடம்பு தேறாமல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறாள். தங்கள் குட்டிப் பெண் செத்துப் போவதைப் போல் இருப்பதால் யவீருவும் அவருடைய மனைவியும் மிகவும் கவலைப்படுகிறார்கள். அவள் அவர்களுடைய ஒரே மகள். அதனால் இயேசுவைத் தேடிச் செல்கிறார் யவீரு. இயேசு செய்து வருகிற அற்புதங்களைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.

இயேசுவை யவீரு கண்டுபிடிக்கும்போது அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. ஆனால் யவீரு அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து சென்று இயேசுவின் பாதத்தில் விழுகிறார். ‘என்னுடைய மகளின் உடல்நிலை ரொம்பவும் மோசமாகி விட்டது, தயவுசெய்து என் வீட்டிற்கு வந்து அவளைச் சுகமாக்குங்கள்’ என்று கெஞ்சுகிறார். இயேசுவும் அதற்குச் சம்மதிக்கிறார்.

யவீருவின் வீட்டிற்கு அவர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறபோது இயேசுவின் பக்கத்தில் வருவதற்காக கூட்டம் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. அப்போது திடீரென்று இயேசு நிற்கிறார். ‘என்னைத் தொட்டது யார்?’ என்று கேட்கிறார். தம்மிடமிருந்து சக்தி வெளியேறியதை அவரால் உணர முடிந்தது. அதனால் யாரோ ஒருவர் தம்மை தொட்டிருக்கிறார்களென்று அவருக்குத் தெரிகிறது. ஆனால் யார் தொட்டது? 12 வருஷங்களாக மிகவும் வியாதிப்பட்டிருந்த ஒரு பெண்தான் அவரைத் தொட்டது. கூட்டத்திற்குள் நுழைந்து வந்து இயேசுவின் உடைகளைத் தொட்டதும் அவள் பூரண சுகமடைந்து விட்டாள்!

இதைப் பார்த்த யவீருவுக்கு சற்று தெம்பு வருகிறது, ஒருவரைச் சுகப்படுத்துவது இயேசுவுக்கு எவ்வளவு எளிது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அப்போது ஒருவன் ஒரு செய்தியைச் சொல்ல அங்கு வருகிறான். ‘இயேசுவை இனி தொந்தரவு செய்ய வேண்டாம், உம்முடைய மகள் இறந்து விட்டாள்’ என்று யவீருவிடம் அவன் சொல்கிறான். இதைக் கேட்டதும் இயேசு யவீருவைப் பார்த்து: ‘கவலைப்படாதே, அவள் சுகமடைவாள்’ என்று சொல்கிறார்.

கடைசியாக, அவர்கள் யவீருவின் வீட்டுக்குப் போய்ச் சேருகிறார்கள், அங்கு ஜனங்கள் ரொம்பவும் கவலைப்பட்டு அழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயேசு: ‘அழாதேயுங்கள், பிள்ளை மரித்துப் போகவில்லை, அவள் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறாள்’ என்று சொல்கிறார். ஆனால் அவர்கள் ஏளனமாகச் சிரித்து, இயேசுவைக் கேலி செய்கிறார்கள். ஏனென்றால் அவள் மரித்துவிட்டாள் என்று அவர்களுக்குத் தெரியும்.

அப்போது இயேசு அந்தப் பெண்ணின் அப்பா அம்மாவையும் அப்போஸ்தலரில் மூவரையும் அவள் வைக்கப்பட்டிருக்கிற அறைக்குள் அழைத்துச் செல்கிறார். உள்ளே சென்றதும், அவளுடைய கையைப் பிடித்து: ‘எழுந்திரு!’ என்று சொல்கிறார். இங்கே நீ பார்க்கிறபடி, உடனே அவள் உயிரடைந்து எழுந்து நடக்கிறாள்! அதனால்தான் அவளுடைய அம்மா அப்பா அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இந்தச் சிறு பெண்ணை மட்டுமல்ல, இன்னும் சிலரையும் இயேசு உயிர்த்தெழுப்பியிருக்கிறார். நாயீன் பட்டணத்தில் வாழ்கிற ஒரு விதவையின் மகனைத்தான் அவர் முதன்முதலில் உயிர்த்தெழுப்பினார் என்று பைபிள் சொல்கிறது. பிற்பாடு, மரியாள் மற்றும் மார்த்தாளின் சகோதரன் லாசருவையும் உயிர்த்தெழுப்பினார். கடவுளுடைய ராஜ்யத்தில் அவர் ராஜாவாக ஆட்சி செய்யும்போது இறந்துபோன ஏராளமானோரை மீண்டும் உயிருக்குக் கொண்டு வருவார். இதற்காக நாம் சந்தோஷப்படலாம் அல்லவா?