Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 99

மேல் மாடியிலுள்ள ஓர் அறையில்

மேல் மாடியிலுள்ள ஓர் அறையில்

இரண்டு நாட்கள் கடந்து விடுகின்றன, இப்போது வியாழக்கிழமை இரவு நேரம். இயேசுவும் அவருடைய 12 அப்போஸ்தலர்களும் பஸ்கா உணவைச் சாப்பிட மேல் மாடியில் இந்தப் பெரிய அறைக்கு வந்திருக்கிறார்கள். அதோ, அங்கிருந்து வெளியே போய்க் கொண்டிருக்கிறவன் யூதாஸ் காரியோத்து. இயேசுவை எப்படிப் பிடிக்கலாமென்று ஆசாரியர்களிடம் சொல்வதற்கு அவன் போய்க் கொண்டிருக்கிறான்.

அதற்கு முந்தின நாள்தான் யூதாஸ் அவர்களிடம் சென்று: ‘இயேசுவைப் பிடிப்பதற்கு நான் உங்களுக்கு உதவி செய்தால் எனக்கு என்ன கொடுப்பீர்கள்?’ என்று கேட்டான். அதற்கு அவர்கள்: ‘முப்பது வெள்ளிக் காசுகள்’ என்றார்கள். அதனால் இயேசு இருக்கும் இடத்திற்கு அந்த ஆட்களை அழைத்து வருவதற்காகத்தான் இப்போது போய்க் கொண்டிருக்கிறான். எவ்வளவு மோசமான செயல் அல்லவா?

பஸ்கா உணவைச் சாப்பிட்டு முடித்த பின், மற்றொரு விசேஷித்த உணவை இயேசு கொடுக்கிறார். ஒரு அப்பத்தை எடுத்து அதை அப்போஸ்தலர்களிடம் கொடுத்து: ‘இதைச் சாப்பிடுங்கள், ஏனென்றால் இது உங்களுக்காக நான் கொடுக்கப் போகிற என் உடலைக் குறிக்கிறது’ என்கிறார். பிறகு, ஒரு பாத்திரத்தில் திராட்ச ரசத்தைக் கொடுத்து: ‘இதைக் குடியுங்கள், இது, உங்களுக்காக நான் சிந்தப் போகிற என் இரத்தத்தைக் குறிக்கிறது’ என்கிறார். பைபிள் இதை ‘கர்த்தருடைய இராப்போஜனம்’ என்று அழைக்கிறது.

இஸ்ரவேலர் பஸ்காவை ஏன் சாப்பிட்டார்கள்? கடவுளுடைய தூதன் எகிப்தியரின் வீடுகளிலுள்ள முதல் பிள்ளைகளைக் கொன்றபோது தங்கள் வீடுகளை அவர் கடந்து போனதை நினைத்துப் பார்ப்பதற்காக இஸ்ரவேலர் அந்தப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். ஆனால் இப்போது, சீஷர்கள் தம்மை ஞாபகத்தில் வைக்க வேண்டுமென்று இயேசு விரும்புகிறார். அதுமட்டுமல்ல, அவர்களுக்காக எப்படித் தம்முடைய உயிரைக் கொடுத்தார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டுமென்றும் விரும்புகிறார், அதனால்தான் ஒவ்வொரு வருடமும் அதைக் கொண்டாடும்படி சொல்கிறார்.

இயேசு இராப்போஜனத்தை முடித்த பிறகு, அப்போஸ்தலர்களைத் தைரியமாக இருக்கச் சொல்கிறார், விசுவாசத்தில் உறுதியாகவும் இருக்கச் சொல்கிறார். கடைசியில், அவர்கள் கடவுளுக்குத் துதிப் பாடல்கள் பாடிவிட்டு அங்கிருந்து போகிறார்கள். இப்போது ரொம்ப நேரம் ஆகிவிட்டது. ஒருவேளை நள்ளிரவுகூட தாண்டியிருக்கலாம். இந்த நேரத்தில் அவர்கள் எங்கே போகிறார்கள்? நாம் பார்க்கலாம்.