Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 60

அபிகாயிலும் தாவீதும்

அபிகாயிலும் தாவீதும்

தாவீதைச் சந்திக்க வருகிற அந்த அழகிய பெண் யார் என்று தெரியுமா? அவள் பெயர் அபிகாயில். நல்ல புத்திசாலி, தாவீது ஒரு கெட்ட காரியத்தைச் செய்வதிலிருந்து அவரைத் தடுத்து நிறுத்தியவள். அதைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், தாவீதுக்கு என்ன நடக்கிறதென்று நாம் பார்க்கலாம்.

சவுலிடமிருந்து தாவீது தப்பி ஓடிய பின்பு, ஒரு குகைக்குள் ஒளிந்து கொள்கிறார். அவருடைய அண்ணன்மாரும் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அங்கே அவரிடம் போய்ச் சேர்ந்து கொள்கிறார்கள். மொத்தமாக ஏறக்குறைய 400 பேர் இப்போது அவரோடு இருக்கிறார்கள். தாவீது அவர்களுடைய தலைவராகிறார். பின்பு தாவீது மோவாபின் ராஜாவிடம் சென்று: ‘எனக்கு என்ன நடக்குமோ தெரியவில்லை, அதுவரை என் அப்பா அம்மா தயவுசெய்து உம்மோடு தங்கியிருக்கட்டும்’ என்கிறார். பிறகு தாவீதும் அவருடைய ஆட்களும் மலைகளில் ஒளிந்து கொள்கிறார்கள்.

இதற்குப் பின்புதான் அபிகாயிலை தாவீது சந்திக்கிறார். அவளுடைய கணவன் நாபால் பெரிய பணக்காரன், நிறைய நிலங்களுக்குச் சொந்தக்காரன். அவனுக்கு 3,000 செம்மறியாடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருக்கின்றன. ஆனால் அவன் மகா கஞ்சன். அவனுடைய மனைவி அபிகாயில் ரொம்ப அழகானவள். அதுமட்டுமல்ல, எதை எதை எப்போது செய்ய வேண்டுமென்று நன்றாக அறிந்திருப்பவள். ஒருமுறை தன் குடும்பம் அழியாதபடி காப்பாற்றுகிறாள். எப்படி? நாம் பார்க்கலாம்.

தாவீதும் அவருடைய ஆட்களும் நாபாலுக்குத் தயவு காட்டியிருக்கிறார்கள். அவனுடைய செம்மறியாடுகளைப் பாதுகாக்க உதவி செய்திருக்கிறார்கள். அதனால் தங்களுக்கு ஒரு உதவி செய்யும்படி கேட்டு தாவீது தன்னுடைய ஆட்களில் சிலரை நாபாலிடம் அனுப்புகிறார். நாபாலும் அவனுடைய உதவியாளர்களும் செம்மறியாடுகளின் மயிரைக் கத்தரித்துக் கொண்டிருக்கையில் தாவீதின் ஆட்கள் வருகிறார்கள். அன்று ஏதோவொரு பெரிய விருந்து நடைபெறவிருப்பதால் ஏகப்பட்ட நல்ல உணவுப் பண்டங்களை நாபால் வைத்திருக்கிறான். எனவே தாவீதின் ஆட்கள் அவனிடம்: ‘நாங்கள் உமக்கு தயவு காட்டியிருக்கிறோம். உம்முடைய செம்மறியாடுகள் ஒன்றையும் நாங்கள் திருடவில்லை. அவற்றைப் பாதுகாக்கவே உதவி செய்திருக்கிறோம். அதனால் தயவுசெய்து எங்களுக்குக் கொஞ்சம் உணவு தாரும்’ என்று கேட்கிறார்கள்.

அதற்கு நாபால்: ‘உங்களைப் போன்ற ஆட்களுக்கு சாப்பிட நான் எதுவும் கொடுக்க மாட்டேன்’ என்கிறான். அதுமட்டுமல்ல, படுமட்டமாக பேசுகிறான், தாவீதைப் பற்றி கெட்ட கெட்ட வார்த்தைகளைச் சொல்கிறான். அவன் பேசியதையெல்லாம் அவர்கள் தாவீதிடம் வந்து சொல்கிறார்கள், அப்போது அவருக்குப் பயங்கர கோபம் வந்துவிடுகிறது. ‘உங்கள் பட்டயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று தன் ஆட்களுக்குக் கட்டளையிடுகிறார். அவர் சொன்னபடியே அவர்கள் நாபாலையும் அவன் ஆட்களையும் கொல்வதற்கு புறப்படுகிறார்கள்.

நாபால் பேசிய இழிவான வார்த்தைகளைக் கேட்ட நாபாலின் ஆட்களில் ஒருவன், நடந்ததை அபிகாயிலிடம் சொல்கிறான். உடனடியாக அபிகாயில் சில உணவுப் பண்டங்களைத் தயார் செய்து, அவற்றை சில கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு புறப்படுகிறாள். வழியில் தாவீதைச் சந்தித்ததுமே, தன் கழுதை மீதிருந்து இறங்கி, குனிந்து வணங்கி: ‘தயவுசெய்து என் கணவர் நாபாலை பொருட்படுத்த வேண்டாம். அவர் ஒரு முட்டாள், முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறார். இதோ உங்களுக்கு ஒரு பரிசு. தயவுசெய்து இதை ஏற்றுக்கொண்டு, நடந்துவிட்ட காரியங்களுக்காக எங்களை மன்னியும்’ என்கிறாள்.

அதற்கு தாவீது: ‘நீ புத்திசாலிப் பெண், நாபால் அற்பமாக நடந்ததற்காக அவனைக் கொல்ல நினைத்தேன், அதைச் செய்யாதபடி நீ என்னைத் தடுத்து நிறுத்தினாய். இப்போது சமாதானத்தோடு உன் வீட்டுக்குப் போ’ என்று சொல்கிறார். பிற்பாடு நாபால் இறந்ததும் அபிகாயிலை தாவீது மனைவியாக ஆக்கிக்கொள்கிறார்.