Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 71

கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் ஒரு பரதீஸ்

கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் ஒரு பரதீஸ்

பரதீஸின் படம்தான் இது; தம்முடைய தீர்க்கதரிசியான ஏசாயாவுக்குக் கடவுள் ஒருவேளை இதைப் போன்ற ஒரு பரதீஸையே காண்பித்திருக்கலாம். யோனா வாழ்ந்த கொஞ்ச காலத்திற்குப் பின் வாழ்ந்தவரே ஏசாயா.

பரதீஸ் என்பதற்கு “தோட்டம்” அல்லது “பூங்கா” என்று அர்த்தம். நாம் ஏற்கெனவே இந்தப் புத்தகத்தில் பார்த்திருக்கிற ஒன்றை இது உனக்கு ஞாபகப்படுத்துகிறதா? ஆதாம் ஏவாளுக்காக யெகோவா தேவன் உண்டாக்கிய அந்த அழகிய தோட்டத்தைப் போலவே இது இருக்கிறது அல்லவா? முழு பூமியும் இதே போல பரதீஸாக என்றாவது மாறுமா?

கடவுளுடைய ஜனங்கள் வாழப்போகிற ஒரு புதிய பரதீஸைப் பற்றி எழுதும்படி ஏசாயா தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்னார். அவர் சொன்னதாவது: ‘ஓநாய்களும் ஆட்டுக்குட்டிகளும் சமாதானமாய் சேர்ந்து வாழும். கன்றுக்குட்டிகளும் சிங்கக்குட்டிகளும் கூடி மேயும். சிறு பிள்ளைகள் அவற்றைக் கவனித்துக் கொள்வார்கள். ஒரு குழந்தை விஷப் பாம்பு ஒன்றின் பக்கத்தில் விளையாடும், ஆனாலும் அந்தப் பாம்பு எந்தத் தீங்கும் செய்யாது.’

‘இப்படி ஒருபோதும் நடக்கவே நடக்காது, இந்தப் பூமியில் எப்போதுமே பிரச்சினை இருந்திருக்கிறது, இனியும் இருக்கத்தான் போகிறது’ என்று பலர் சொல்வார்கள். ஆனால் இதை யோசித்துப் பார்: ஆதாம் ஏவாளுக்கு கடவுள் எப்படிப்பட்ட வீட்டைக் கொடுத்தார்?

ஆதாம் ஏவாளை கடவுள் ஒரு பரதீஸில் குடிவைத்தார். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால்தான் அந்த அழகிய வீட்டை இழந்தார்கள், வயதாகி செத்துப் போனார்கள். ஆதாம் ஏவாள் எதையெல்லாம் இழந்தார்களோ அதையெல்லாம் தம்மை நேசிக்கிற ஜனங்களுக்கு திரும்பத் தரப் போவதாக கடவுள் வாக்குக் கொடுக்கிறார்.

வரப்போகிற அந்தப் புதிய பரதீஸில் எதுவுமே தீங்கோ அழிவோ உண்டாக்காது. அங்கே முழு சமாதானம் இருக்கும். எல்லா மக்களும் சுகமாக, சந்தோஷமாக வாழ்வார்கள். கடவுள் ஆரம்பத்தில் விரும்பியபடியே எல்லாம் இருக்கும். இதை அவர் எப்படிச் செய்யப் போகிறார் என்பதை பிறகு நாம் படிப்போம்.