Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 56

சவுல்​—⁠இஸ்ரவேலின் முதல் ராஜா

சவுல்​—⁠இஸ்ரவேலின் முதல் ராஜா

சாமுவேல் அந்த ஆளின் தலையில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருப்பதைப் பார். ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அடையாளமாக இப்படிச் செய்வது வழக்கம். இந்த எண்ணெய்யை சவுலின் தலையில் ஊற்றும்படி யெகோவா சொல்கிறார். இது வாசனைமிக்க ஒரு விசேஷ எண்ணெய்.

ஒரு ராஜாவாக இருக்க தனக்குத் தகுதி இல்லை என சவுல் நினைக்கிறார். ‘நான் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன், இது இஸ்ரவேலிலேயே மிகச் சிறிய கோத்திரம். அப்படியிருக்கும்போது நான்தான் ராஜா என்று எப்படிச் சொல்கிறீர்?’ என்று சாமுவேலிடம் கேட்கிறார். சவுல் தன்னை ஒரு பெரிய ஆள் போலவும் முக்கியமான ஆள் போலவும் காட்டிக் கொள்ளாததால் யெகோவாவுக்கு அவரைப் பிடித்திருக்கிறது. அதனால்தான் அவரை ராஜாவாக தேர்ந்தெடுக்கிறார்.

என்றாலும், சவுல் ஓர் ஏழை அல்ல, சாதாரண ஓர் ஆளும் அல்ல. அவர் ஒரு பணக்கார குடும்பத்திலிருந்து வருகிறார். பார்ப்பதற்கு மிக அழகாகவும் உயரமாகவும் இருக்கிறார். இஸ்ரவேலில் உள்ள எல்லோரையும்விட ஓர் அடியாவது உயரமாக இருக்கிறார்! அதுமட்டுமல்ல, படுவேகமாக ஓடுகிறவராகவும் அதிபலசாலியாகவும் இருக்கிறார். சவுலை ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்ததற்கு ஜனங்கள் சந்தோஷப்படுகிறார்கள். ‘ராஜா நீடூழி வாழ்க’ என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

இஸ்ரவேலின் எதிரிகள் இன்னமும் பலத்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இஸ்ரவேலருக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சவுல் ராஜாவாக்கப்பட்டதும் சீக்கிரத்திலேயே அவர்களுக்கு விரோதமாக அம்மோனியர் போர் செய்ய வருகிறார்கள். ஆனால் சவுல் ஒரு பெரிய படையைத் திரட்டி, அம்மோனியரைத் தோற்கடிக்கிறார். இதனால் சவுல் ராஜாவாக இருப்பதைக் குறித்து ஜனங்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

ஆண்டுகள் செல்லச் செல்ல, சவுல் அநேக எதிரிகளைத் தோற்கடித்து இஸ்ரவேலருக்கு வெற்றிகளைத் தேடித் தருகிறார். சவுலுக்கு யோனத்தான் என்ற ஒரு மகனும் இருக்கிறார், அவர் படு தைரியசாலி. இஸ்ரவேலர் பல போர்களில் வெற்றிபெற அவர் உதவுகிறார். பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு இன்னும் பயங்கர எதிரிகளாக இருக்கிறார்கள். ஒருநாள் ஆயிரம் ஆயிரமான பெலிஸ்தர் போர் செய்ய வருகிறார்கள்.

அப்போது, யெகோவாவுக்குப் பலி செலுத்த, அதாவது காணிக்கைச் செலுத்த தான் வரும்வரை சவுலைக் காத்திருக்கும்படி சாமுவேல் சொல்கிறார். ஆனால் சாமுவேல் வருவதற்குத் தாமதமாகிறது. பெலிஸ்தர் எங்கே போரைத் தொடங்கி விடுவார்களோ என்று சவுல் பயப்படுகிறார், எனவே துணிந்து அந்தப் பலியைத் தானே செலுத்துகிறார். அதன் பின், சாமுவேல் வந்துசேர்ந்தபோது நடந்ததை அறிகிறார்; கடவுளுக்கு சவுல் கீழ்ப்படியாமல் போனதாக சொல்கிறார். அதனால் ‘இஸ்ரவேல் மீது அரசாள யெகோவா வேறொரு ஆளை ராஜாவாக தேர்ந்தெடுப்பார்’ என்றும் சொல்கிறார்.

பிற்பாடு சவுல் மறுபடியும் கீழ்ப்படியாமல் போகிறார். ஆகவே சாமுவேல் அவரிடம்: ‘மிகச் சிறந்த செம்மறியாட்டை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்துவதைவிட அவருக்குக் கீழ்ப்படிவதே மேலானது. நீ யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் யெகோவா இனி உன்னை இஸ்ரவேலில் ராஜாவாக வைத்திருக்கப் போவதில்லை’ என்று சொல்கிறார்.

இதிலிருந்து நாம் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். எப்பொழுதும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருப்பதுதான் மிக முக்கியம். அதோடு, சவுலைப் போல ஆரம்பத்தில் நல்ல ஆளாக இருக்கும் ஒருவர், பிற்பாடு கெட்டவராக மாறிவிடக்கூடும் என்றும் இது காட்டுகிறது. கெட்டவர்களாய் ஆக நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம் தானே?