Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 69

பலம்படைத்த ஒருவருக்கு ஒரு சிறுமி உதவுகிறாள்

பலம்படைத்த ஒருவருக்கு ஒரு சிறுமி உதவுகிறாள்

இந்தச் சிறுமி என்ன சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று உனக்குத் தெரியுமா? யெகோவாவின் தீர்க்கதரிசியான எலிசாவைப் பற்றியும் யெகோவாவுடைய உதவியுடன் அவர் செய்துவருகிற அதிசயமான காரியங்களைப் பற்றியும் அந்தப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணுக்கு யெகோவாவைப் பற்றித் தெரியாது, ஏனென்றால் அவள் இஸ்ரவேல் நாட்டுப் பெண் அல்ல. அப்படியானால், இந்தச் சிறுமி ஏன் அந்தப் பெண்ணின் வீட்டில் இருக்கிறாள்? நாம் பார்க்கலாம்.

அந்தப் பெண் சீரியாவைச் சேர்ந்தவள். அவளுடைய கணவர் நாகமான் சீரியா நாட்டு படைத்தலைவன். சீரியர்கள் இந்த இஸ்ரவேல் நாட்டுச் சிறுமியைச் சிறைபிடித்து, நாகமானின் வீட்டில் கொண்டுவந்து விடுகிறார்கள். அங்கே அவருடைய மனைவிக்கு அவள் வேலைக்காரி ஆகிறாள்.

நாகமானுக்கு குஷ்டரோகம் என்ற ஒரு மோசமான வியாதி இருக்கிறது. இந்த வியாதி வந்தால் உடலிலுள்ள சதை அழுகிப்போய் விடும். அதனால் இந்தச் சிறுமி நாகமானின் மனைவியைப் பார்த்து: ‘என் எஜமானர் இஸ்ரவேலில் இருக்கிற யெகோவாவின் தீர்க்கதரிசியிடம் போனால் நல்லது. குஷ்டரோகத்தை அவர் சுகப்படுத்துவார்’ என்று சொல்கிறாள். இந்தச் சிறுமி சொன்ன விஷயத்தை அவள் தன் கணவனிடம் சொல்கிறாள்.

சுகமாக வேண்டுமென்று நாகமான் துடியாய் துடிக்கிறார், அதனால் இஸ்ரவேலுக்குப் போக தீர்மானிக்கிறார். அங்கு போய்ச் சேர்ந்ததும் எலிசாவின் வீட்டுக்குப் போகிறார். எலிசா தன் ஊழியக்காரனை நாகமானிடம் அனுப்பி, யோர்தான் நதியில் ஏழு முறை குளிக்கும்படி அவரிடம் சொல்கிறார். நாகமானுக்கு பயங்கர கோபம் வந்துவிடுகிறது, ‘இஸ்ரவேலிலுள்ள எந்த நதியையும்விட எங்கள் நாட்டிலுள்ள நதிகள் எவ்வளவோ மேல்!’ என்று சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்.

ஆனால் அவருடைய வேலைக்காரரில் ஒருவன் அவரிடம் வந்து, ‘ஐயா, உம்மிடம் எலிசா கடினமான ஏதோவொன்றைச் செய்யச் சொல்லியிருந்தால் நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா, இப்போது அவர் உம்மை வெறுமனே குளிக்கத்தானே சொன்னார், நீர் அப்படி செய்து பார்த்தால்தான் என்ன?’ என்று சொல்கிறான். அதனால் நாகமான் தன் ஊழியக்காரன் சொல்வதைக் கேட்டு, யோர்தான் நதிக்குப் போய் ஏழு முறை முங்கி எழுகிறார். அப்படிச் செய்ததுமே அட, அவருடைய உடல் எவ்வளவு கட்டுறுதியாகவும் ஆரோக்கியமாகவும் ஆகிவிடுகிறது!

நாகமானுக்கு ஒரே சந்தோஷம். அவர் திரும்ப எலிசாவிடம் போய்: ‘இஸ்ரவேலின் கடவுள்தான் பூமி முழுவதிலும் ஒரே உண்மையான கடவுள் என்று இப்போது எனக்கு நன்றாய் தெரிகிறது. அதனால் தயவுசெய்து இந்தப் பரிசை வாங்கிக்கொள்ளும்’ என்கிறார். ஆனால் எலிசா: ‘வேண்டாம், அதை நான் வாங்கிக்கொள்ள மாட்டேன்’ என்கிறார். அந்தப் பரிசை வாங்கிக்கொள்வது தவறு என்பது எலிசாவுக்குத் தெரியும், ஏனென்றால் நாகமானை சுகப்படுத்தியவர் யெகோவாவே. ஆனால் அந்தப் பரிசு தனக்கு வேண்டுமென்று எலிசாவின் ஊழியக்காரன் கேயாசி ஆசைப்படுகிறான்.

அதற்காக அவன் என்ன செய்கிறான் தெரியுமா? நாகமான் திரும்பிப் போகும்போது, அவருக்குப் பின்னாலேயே ஓடுகிறான். ‘எலிசாவைப் பார்க்க இப்போதுதான் சில நண்பர்கள் வந்திருக்கிறார்கள், அவர்களுக்குக் கொடுக்க உம்முடைய பரிசு பொருட்கள் சிலவற்றைத் தருமாறு எலிசா என்னிடம் சொல்லி அனுப்பினார்’ என்கிறான். நிச்சயமாகவே இது ஒரு பொய். ஆனால் அது பொய் என்பது நாகமானுக்குத் தெரியாது; அதனால் அந்தப் பொருட்களில் சிலவற்றை கேயாசிக்குக் கொடுக்கிறார்.

கேயாசி திரும்பி வந்ததும் அவன் செய்திருப்பதை எலிசா அறிந்து கொள்கிறார். அதை யெகோவா அவருக்குச் சொல்லியிருந்தார். எனவே கேயாசியைப் பார்த்து: ‘நீ இந்தக் கெட்ட காரியத்தைச் செய்தபடியால், நாகமானின் குஷ்டம் உன்மேல் வரும்’ என்று எலிசா சொல்கிறார். உடனடியாக கேயாசிக்கு குஷ்டரோகம் பிடித்துக்கொள்கிறது!

இந்தச் சம்பவங்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? முதலாவதாக, அந்தச் சிறுமியைப் போல் நாமும் யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டும். அப்படிப் பேசினால் நல்ல பலன்கள் கிடைக்கும். இரண்டாவதாக, நாகமான் ஆரம்பத்தில் இருந்ததைப் போல் நாம் பெருமைபிடித்தவர்களாக இருக்கக் கூடாது, கடவுளுடைய ஊழியர்களுக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். மூன்றாவதாக, கேயாசியைப் போல் நாம் பொய் சொல்லக் கூடாது. பைபிளைப் படிப்பதால் இப்படிப் பல காரியங்களை நாம் கற்றுக்கொள்கிறோம் அல்லவா?