Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 75

பாபிலோனில் நான்கு இளைஞர்கள்

பாபிலோனில் நான்கு இளைஞர்கள்

இஸ்ரவேலில் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தவர்களை ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டு போகிறான். பின்பு அவர்களில் அழகும் புத்திசாலியுமான இளைஞர்களைத் தேர்ந்தெடுக்கிறான். அவர்களில் நான்கு பேரைத்தான் நீ இங்கு பார்க்கிறாய். ஒருவர் பெயர் தானியேல், மற்ற மூன்று பேரை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்று பாபிலோனியர் அழைக்கிறார்கள்.

இந்த இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து அரண்மனை வேலையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று நேபுகாத்நேச்சார் திட்டமிடுகிறான். அப்படி மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுத்த பிறகு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு திறமைசாலிகளை மட்டும் உதவியாளர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்வான். பயிற்சி கொடுக்கப்படும் சமயத்தில், அவர்கள் நல்ல பலமாகவும் சுகமாகவும் இருக்க வேண்டுமென்றும் அவன் விரும்புகிறான். அதனால், தனக்கும் தன் குடும்பத்துக்கும் கொடுக்கப்படுகிற அதே கொழுப்புமிக்க உணவும் திராட்ச ரசமும் அவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமென்று கட்டளையிடுகிறான்.

இளைஞனாகிய தானியேலைப் பார். நேபுகாத்நேச்சாரின் தலைமை வேலைக்காரன் அஸ்பேனாசிடம் அவர் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று தெரியுமா? ‘ராஜாவின் மேசையிலிருந்து வரும் கொழுப்புமிக்க பதார்த்தங்களை நான் சாப்பிட மாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டதும் அஸ்பேனாசுக்குக் கவலையாகி விடுகிறது. ‘நீங்கள் அவற்றைச் சாப்பிட வேண்டும், குடிக்க வேண்டும் என்பது ராஜாவின் உத்தரவு, மற்ற இளைஞர்களைப் போல் நீங்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் ராஜா என்னைக் கொன்றே போட்டுவிடுவார்’ என்று சொல்கிறான்.

எனவே, தானியேல் என்ன செய்கிறார் தெரியுமா? தன்னையும் தன் மூன்று நண்பர்களையும் கவனித்துக் கொள்வதற்காக அஸ்பேனாஸ் நியமித்திருந்த பாதுகாவலனிடம் போய், ‘10 நாட்கள் எங்களைச் சோதித்துப் பாரும். சாப்பிட சில காய்கறிகளையும் குடிக்க தண்ணீரையும் மட்டும் எங்களுக்குக் கொடும், பிறகு ராஜாவின் உணவைச் சாப்பிட்டு வருகிற மற்ற இளைஞரோடு எங்களை ஒப்பிட்டு யார் ஆரோக்கியமாகத் தெரிகிறார்களென்று பாரும்’ என்று சொல்கிறார்.

அதற்கு அந்தப் பாதுகாவலனும் ஒப்புக்கொள்கிறான். 10 நாட்களுக்குப் பிறகு தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் மற்ற எல்லா இளைஞர்களைவிட நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அதனால், ராஜாவின் உணவுக்குப் பதிலாக அவர்கள் தொடர்ந்து காய்கறிகளையே சாப்பிடுவதற்கு அந்தப் பாதுகாவலன் அனுமதிக்கிறான்.

மூன்று வருஷங்கள் முடிந்ததுமே, அந்த எல்லா இளைஞரும் நேபுகாத்நேச்சாரிடம் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் எல்லோரிடமும் அவன் பேசிப் பார்க்கிறான்; கடைசியில், தானியேலும் அவருடைய மூன்று நண்பர்களும்தான் மற்ற எல்லோரையும்விட அதிக திறமைசாலிகளாக இருப்பதைக் காண்கிறான். அதனால் அரண்மனையில் வேலை செய்ய அவர்களை நியமிக்கிறான். தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அரசவை பூசாரிகளையோ ஞானிகளையோவிட 10 மடங்கு அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள். ராஜா கேள்விகள் கேட்கும்போதும் சரி, கடினமான பிரச்சினைகளைத் தீர்க்கச் சொல்லும்போதும் சரி, அவர்கள் இப்படித்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள்.