Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 67

யெகோவா மீது யோசபாத் நம்பிக்கை வைக்கிறார்

யெகோவா மீது யோசபாத் நம்பிக்கை வைக்கிறார்

இந்தப் படத்திலுள்ள ஆட்கள் யார், இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? உனக்குத் தெரியுமா? இவர்கள் போருக்குச் செல்கிறார்கள், முன் வரிசையில் செல்பவர்கள் பாட்டுப் பாடுகிறார்கள். ஆனால்: ‘அந்தப் பாடகர்கள் ஏன் ஈட்டிகளையும் பட்டயங்களையும் கொண்டு போகவில்லை, போர் செய்ய இதெல்லாம் வேண்டாமா?’ என்று நீ ஒருவேளை கேட்கலாம். இதற்கான பதிலை இப்போது பார்க்கலாம்.

யோசபாத் இஸ்ரவேலின் இரண்டு கோத்திர ராஜ்யத்தின் ராஜா. 10 கோத்திர வடக்கு ராஜ்யத்தில் ஆகாப் ராஜாவும் யேசபேலும் இருக்கிற அதே காலத்தில் இவர் வாழ்கிறார். ஆனால் யோசபாத் ஒரு நல்ல ராஜா, அவருடைய அப்பா ஆசாவும் ஒரு நல்ல ராஜாவாக இருந்தார். அதனால் இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தின் ஜனங்கள் பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.

ஆனால் இப்போது ஒரு சம்பவம் நடக்கிறது, ஜனங்கள் ரொம்ப பயந்துவிடுகிறார்கள். சில தூதுவர்கள் யோசபாத்திடம் வந்து: ‘மோவாப், அம்மோன், சேயீர் மலை நாடுகளிலிருந்து ஒரு பெரிய படை உம்மைத் தாக்குவதற்காக வந்துகொண்டிருக்கிறது’ என்று அறிவிக்கிறார்கள். அதனால் இஸ்ரவேலர் பலர் யெகோவாவின் உதவிக்காக எருசலேமில் கூடி, ஆலயத்திற்குச் செல்கிறார்கள். அங்கே யோசபாத் ஜெபிக்கிறார்: ‘எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்தப் பெரிய படைக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவியருளும்.’

இந்த ஜெபத்தை யெகோவா கேட்கிறார். பிறகு, தம்முடைய ஊழியரில் ஒருவரை இவ்வாறு அறிவிக்கச் சொல்கிறார்: ‘இந்த யுத்தம் உங்களுடையதல்ல, இது தேவனுடையதே. நீங்கள் போர் செய்ய வேண்டியதில்லை. வெறுமென நின்று, யெகோவா உங்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதை மட்டும் பாருங்கள்.’

மறுநாள் காலை யோசபாத் ஜனங்களைப் பார்த்து: ‘யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள்!’ என்று சொல்கிறார். பிறகு தன் படையின் முன் வரிசையில் பாடகர்களை நிற்க வைக்கிறார். அணிவகுத்துச் செல்லும்போது அவர்கள் யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுகிறார்கள். யுத்த களத்திற்கு அருகே சென்றபோது என்ன நடக்கிறது தெரியுமா? எதிரிகளின் படைவீரர்கள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளும்படி யெகோவா செய்கிறார். இதனால் இஸ்ரவேலர் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தபோது ஒரு படைவீரன்கூட உயிரோடு இருக்கவில்லை!

யெகோவா மீது யோசபாத் நம்பிக்கை வைத்தது ஞானமான காரியம் அல்லவா? அவர் மீது நம்பிக்கை வைப்போமானால் நாமும் ஞானமுள்ளவர்களாக இருப்போம்.