Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 70

யோனாவும் பெரிய மீனும்

யோனாவும் பெரிய மீனும்

தண்ணீருக்குள் இருக்கிற அந்த நபரைப் பார். ஒரு பெரிய ஆபத்தில் மாட்டியிருக்கிறார் இல்லையா? அந்த மீன் அவரை விழுங்கிவிடப் போகிறது! அந்த நபர் யார் என்று உனக்குத் தெரியுமா? அவருடைய பெயர் யோனா. இவ்வளவு பெரிய ஆபத்தில் அவர் எப்படி மாட்டிக் கொண்டார் என்பதை இப்போது பார்க்கலாம்.

யெகோவாவின் ஒரு தீர்க்கதரிசிதான் யோனா. எலியா தீர்க்கதரிசி இறந்து கொஞ்ச காலத்திற்குப் பின் யெகோவா யோனாவிடம்: ‘நினிவே என்ற ஒரு பெரிய நகரத்திற்குப் போ. அங்கே இருக்கிற ஜனங்கள் மிக மோசமான காரியங்களைச் செய்து வருகிறார்கள், அதைப் பற்றி நீ அவர்களிடம் பேச வேண்டும்’ என்று சொல்கிறார்.

ஆனால் யோனாவுக்கு அங்கு போக இஷ்டமே இல்லை. அதனால் நினிவேக்கு எதிர் திசையில் போகும் ஒரு படகில் ஏறிக்கொள்கிறார். யோனா இப்படி ஓடிப்போவது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. எனவே பயங்கரமான ஒரு புயலை அவர் உண்டாக்குகிறார். அந்தப் படகு மூழ்கிப் போய்விடும் அளவுக்குப் புயல் கடுமையாக வீசுகிறது. என்ன நடக்குமோ என்று அந்தப் படகோட்டிகள் பயந்து நடுங்குகிறார்கள், உதவிக்காக தங்கள் கடவுட்களை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்.

கடைசியாக யோனா அவர்களைப் பார்த்து: ‘வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கடவுளான யெகோவாவை வணங்குகிறவன் நான். அவர் என்னிடம் சொன்னதைச் செய்யாமல் இப்போது நான் ஓடி வந்திருக்கிறேன்’ என்று சொல்கிறார். அதற்கு அந்தப் படகோட்டிகள்: ‘இந்தப் புயலை நிறுத்த நாங்கள் உன்னை என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்கிறார்கள்.

‘என்னைக் கடலுக்குள் எறிந்து விடுங்கள், கடல் மறுபடியும் அமைதியாகி விடும்’ என்று சொல்கிறார். அப்படிச் செய்ய அவர்களுக்கு மனம் வரவில்லை, ஆனால் புயல் இன்னும் கடுமையானதால் கடைசியில் அவர்கள் யோனாவைக் கடலுக்குள் வீசி விடுகிறார்கள். புயல் உடனே நின்று விடுகிறது, கடலும் அமைதியாகி விடுகிறது.

யோனா தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டு போகையில், ஒரு பெரிய மீன் அவரை விழுங்கி விடுகிறது. ஆனால் அவர் சாவதில்லை. மூன்று நாட்களுக்கு அந்த மீனின் வயிற்றுக்குள் இருக்கிறார். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நினிவேக்குப் போகாததற்காக யோனா மிகவும் வருந்துகிறார். அதனால் அவர் என்ன செய்கிறார் தெரியுமா?

உதவிக்காக யெகோவாவை நோக்கி ஜெபிக்கிறார். அப்போது அந்த மீன் யோனாவை கரையில் கக்கிப்போடும்படி யெகோவா செய்கிறார். அதன் பிறகு யோனா நினிவேக்குப் போகிறார். யெகோவா நம்மிடம் எதைச் செய்ய சொல்கிறாரோ அதைச் செய்வது எவ்வளவு முக்கியம் என்று இது நமக்குக் கற்பிக்கிறது இல்லையா?

பைபிள் புத்தகமான யோனா.