Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 65

ராஜ்யம் பிரிக்கப்படுகிறது

ராஜ்யம் பிரிக்கப்படுகிறது

எதற்காக இந்த நபர் தன்னுடைய மேலங்கியை துண்டு துண்டாக கிழித்துக் கொண்டிருக்கிறார் என்று உனக்குத் தெரியுமா? யெகோவாதான் இப்படிச் செய்யச் சொன்னார். இவர் கடவுளுடைய ஒரு தீர்க்கதரிசி, பெயர் அகியா. தீர்க்கதரிசி என்றால் யார் என்று தெரியுமா? என்ன நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்த நபர்தான் தீர்க்கதரிசி; அதைக் கடவுளே அவருக்குத் தெரியப்படுத்துகிறார்.

அகியா இங்கே யெரொபெயாமிடம் பேசிக் கொண்டிருக்கிறார். யார் இந்த யெரொபெயாம்? கட்டிடங்கள் சிலவற்றைக் கட்டும் பொறுப்பை இவரிடம்தான் சாலொமோன் ஒப்படைத்திருந்தார். வரும் வழியிலே யெரொபெயாமை அகியா சந்திக்கிறார். அப்போது அகியா விசித்திரமான ஒரு காரியத்தைச் செய்கிறார். தான் போட்டிருக்கும் புதிய மேலங்கியைக் கழற்றி அதை 12 துண்டுகளாகக் கிழிக்கிறார். பிறகு யெரொபெயாமிடம்: ‘10 துண்டுகளை உனக்காக எடுத்துக்கொள்’ என்று சொல்கிறார். யெரொபெயாமுக்கு ஏன் 10 துண்டுகளை அகியா கொடுக்கிறார் என்று உனக்குத் தெரியுமா?

ராஜ்யத்தை சாலொமோனிடமிருந்து யெகோவா எடுத்து விடப்போகிறார் என்று அகியா விளக்குகிறார். அதில் யெரொபெயாமுக்கு 10 கோத்திரங்களை அவர் கொடுக்கப் போவதாகவும் சொல்கிறார். அப்படியானால், சாலொமோனின் மகன் ரெகொபெயாமுக்கு மீதி இரண்டு கோத்திரங்கள்தான் இருக்கும்.

யெரொபெயாமுக்கு அகியா சொன்ன அந்த விஷயத்தை சாலொமோன் கேள்விப்பட்டதும் அவருக்கு அதிக கோபம் வந்துவிடுகிறது. யெரொபெயாமைக் கொல்ல முயற்சி செய்கிறார். ஆனால் யெரொபெயாம் எகிப்துக்கு ஓடிப்போகிறார். சிறிது காலத்திற்குப் பின்பு சாலொமோன் இறந்துவிடுகிறார். அவர் 40 ஆண்டுகள் ராஜாவாக இருந்தார், இப்போது அவருடைய மகன் ரெகொபெயாம் ராஜாவாக ஆக்கப்படுகிறார். எகிப்திலிருந்த யெரொபெயாமுக்கு சாலொமோன் இறந்த விஷயம் தெரிந்ததும் இஸ்ரவேலுக்குத் திரும்பி வருகிறார்.

ரெகொபெயாம் ஒரு நல்ல ராஜாவாக இல்லை. தன் அப்பா சாலொமோனைவிட, ஜனங்களிடம் அவன் கொடூரமாக நடந்துகொள்கிறான். யெரொபெயாமும் வேறு சில முக்கிய ஆட்களும் ரெகொபெயாமிடம் போய், ஜனங்களைப் பரிவுடன் நடத்துமாறு சொல்கிறார்கள். ஆனால் ரெகொபெயாம் அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை. மாறாக, அவன் இன்னும் பயங்கர கொடூரனாகிறான். எனவே ஜனங்கள் யெரொபெயாமை 10 கோத்திரங்களின் ராஜாவாக அமர்த்துகிறார்கள். ஆனால் பென்யமீன், யூதா ஆகிய இரண்டு கோத்திரத்தார் ரெகொபெயாமை தங்கள் ராஜாவாக வைத்துக் கொள்கிறார்கள்.

தன்னுடைய 10 கோத்திரத்து ஜனங்கள் யெகோவாவை வணங்க எருசலேமிலுள்ள ஆலயத்திற்குச் செல்வதை யெரொபெயாம் விரும்பவில்லை. அதனால் அவர் இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைச் செய்து, அவற்றை வணங்கும்படி சொல்கிறார். சீக்கிரத்தில் அந்தத் தேசமெங்கும் குற்றச்செயலும் வன்முறையும் பரவுகிறது.

இரண்டு கோத்திர ராஜ்யத்திலும்கூட பிரச்சினை எழும்புகிறது. ரெகொபெயாம் ராஜாவாகி ஐந்து ஆண்டுகள் ஆவதற்குள், எகிப்து நாட்டு ராஜா எருசலேமுடன் போர் செய்ய வருகிறான். யெகோவாவின் ஆலயத்திலிருந்து பல அருமையான பொருட்களை எடுத்துக்கொண்டு போய் விடுகிறான். எனவே, கொஞ்ச காலத்திற்கு மட்டும்தான் அந்த ஆலயம் ஆரம்பத்திலிருந்ததைப் போல் இருந்தது.