Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 46

எரிகோவின் மதில்கள்

எரிகோவின் மதில்கள்

எரிகோவின் இந்த மதில்கள் ஏன் இப்படி நொறுங்கி விழுகின்றன? ஒரு பெரிய அணுகுண்டு போடப்பட்டிருப்பது போல் அல்லவா தெரிகிறது! ஆனால் அந்தக் காலத்தில் அணுகுண்டுகளோ பீரங்கிகளோ கிடையாது. அப்படியானால், இது யெகோவா செய்த மற்றொரு அற்புதமே! இது எப்படி நடந்ததென்று இப்போது நாம் பார்க்கலாம்.

யோசுவாவிடம் யெகோவா என்ன சொல்கிறார் என்பதைக் கவனமாகக் கேள்: ‘நீயும் உன்னுடைய போர் வீரர்களும் அந்தப் பட்டணத்தைச் சுற்றி அணிவகுத்துச் செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு தடவையென அதைச் சுற்றி வர வேண்டும்; அப்படியே ஆறு நாட்களுக்குச் செய்ய வேண்டும். உடன்படிக்கைப் பெட்டியை உங்களுடன் சுமந்து செல்ல வேண்டும். அந்தப் பெட்டிக்கு முன்னால் ஏழு ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதியவாறு நடந்து செல்ல வேண்டும்.

‘ஏழாவது நாளிலோ நீங்கள் அந்தப் பட்டணத்தைச் சுற்றி ஏழு தடவை நடந்து செல்ல வேண்டும். பின்பு எக்காளங்களை நீண்ட முழக்கத்தோடு ஊதுங்கள், அச்சமயத்தில் எல்லோரும் போர் முழுக்கமிட வேண்டும். அப்போது அந்த மதில்களெல்லாம் இடிந்து விழும்!’

யெகோவா சொன்னபடி யோசுவாவும் அந்த ஜனங்களும் செய்கிறார்கள். அவர்கள் அணிவகுத்து செல்கையில், எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். யாரும் ஒரு வார்த்தைகூட பேசுகிறதில்லை. எக்காள முழக்கமும் காலடி சத்தமும் மட்டுமே கேட்கிறது. கடவுளுடைய ஜனங்களின் எதிரிகள் கட்டாயம் பயந்து போயிருப்பார்கள். ஜன்னலிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிற அந்தச் சிவப்பு நிற கயிறை உன்னால் பார்க்க முடிகிறதா? அது யாருடைய வீட்டு ஜன்னல் தெரியுமா? ஆம், அது ராகாபுடைய வீட்டு ஜன்னல், அந்த இரண்டு வேவுகாரர்கள் சொன்னபடியே அவள் செய்திருக்கிறாள். வெளியில் நடப்பதையெல்லாம் அவளும் அவளுடைய குடும்பத்தாரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக, ஏழாவது நாளில் கடவுளுடைய ஜனங்கள் அந்தப் பட்டணத்தைச் சுற்றி ஏழு தடவை நடந்த பின்பு, எக்காளங்கள் முழங்குகின்றன. போர் வீரர்கள் உரக்க கத்துகிறார்கள், உடனே அந்த மதில்கள் பொலபொலவென்று நொறுங்கி விழுகின்றன. அப்போது யோசுவா: ‘பட்டணத்திலுள்ள எல்லோரையும் கொன்று, எல்லாவற்றையும் எரித்துப் போடுங்கள். வெள்ளி, பொன், செம்பு, இரும்பு ஆகியவற்றை மாத்திரம் பத்திரப்படுத்தி யெகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்தின் பொக்கிஷத்திற்குக் கொடுங்கள்’ என்று சொல்கிறார்.

பின்னர் அந்த இரண்டு வேவுகாரர்களிடம்: ‘ராகாபின் வீட்டுக்குள் போய், அவளையும் அவளுடைய குடும்பத்தார் எல்லோரையும் வெளியே அழைத்து வாருங்கள்’ என்று சொல்கிறார். ஆம், ராகாபும் அவளுடைய குடும்பத்தாரும் அந்த வேவுகாரர்கள் வாக்குக் கொடுத்திருந்தபடியே காப்பாற்றப்படுகிறார்கள்.