Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 55

ஒரு குட்டிப் பையன் கடவுளுக்குச் சேவை செய்கிறான்

ஒரு குட்டிப் பையன் கடவுளுக்குச் சேவை செய்கிறான்

இந்தக் குட்டிப் பையன் அழகாக இருக்கிறான் இல்லையா? இவனுடைய பெயர் சாமுவேல். சாமுவேலின் தலை மீது கை வைத்திருப்பவர் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் ஏலி. பக்கத்தில் இருப்பவர்கள் சாமுவேலின் அப்பா எல்க்கானாவும் அம்மா அன்னாளும். இவர்கள் சாமுவேலை ஏலியிடம் அழைத்து வருகிறார்கள்.

சாமுவேலுக்கு சுமார் நான்கு அல்லது ஐந்து வயதுதான் ஆகிறது. என்றாலும் இனி அவன் இங்கே யெகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்தில் ஏலியுடனும் மற்ற ஆசாரியர்களுடனும்தான் வசிக்கப் போகிறான். இங்கே யெகோவாவுக்குச் சேவை செய்யப் போகிறான். ஆனால் இவ்வளவு சிறியவனாக இருக்கிற சாமுவேலை எல்க்கானாவும் அன்னாளும் ஏன் அங்கு விட வேண்டும்? நாம் பார்க்கலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் அன்னாள் மிகவும் கவலையாக இருந்தாள். காரணம் என்ன தெரியுமா? அவளுக்கு குழந்தை பாக்கியமே இல்லை. தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று அவள் ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டாள். ஒருநாள் யெகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சென்று: ‘யெகோவாவே, என்னை மறந்துவிடாதேயும்! நீர் எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் கொடுத்தால் வாழ்நாளெல்லாம் உமக்குச் சேவை செய்ய அவனை உமக்குக் கொடுத்து விடுவேன், இது சத்தியம்’ என்று ஜெபித்தாள்.

அன்னாளின் ஜெபத்திற்கு யெகோவா பதிலளித்தார். பல மாதங்களுக்குப் பின் அவள் சாமுவேலைப் பெற்றெடுத்தாள். அன்னாள் தன் குட்டி மகன் மீது உயிரையே வைத்திருந்தாள். சின்னஞ்சிறு வயதிலேயே யெகோவாவைப் பற்றி அவனுக்குச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள். ஒருநாள் அவள் தன் கணவரைப் பார்த்து: ‘சாமுவேல் தாய்ப்பாலை மறந்ததுமே ஆசரிப்புக் கூடாரத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்ய அவனை அங்கு கொண்டுபோய் விட்டுவிடுவேன்’ என்று சொன்னாள்.

அன்னாளும் எல்க்கானாவும் அதைச் செய்வதையே இந்தப் படத்தில் பார்க்கிறோம். அவர்கள் சாமுவேலுக்கு மிக அருமையாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்; அதனால்தான் யெகோவாவின் கூடாரத்தில் சேவை செய்வதில் அவன் சந்தோஷப்படுகிறான். ஒவ்வொரு வருடமும் அன்னாளும் எல்க்கானாவும் இந்த விசேஷ கூடாரத்தில் யெகோவாவை வணங்குவதற்காகவும், தங்கள் குட்டிப் பையனைப் பார்ப்பதற்காகவும் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் சாமுவேலுக்காக தான் தைத்த கையில்லாத மேல் அங்கியை அன்னாள் கொண்டு வருகிறாள்.

வருடங்கள் பல கடந்து செல்கின்றன. யெகோவாவின் ஆசரிப்புக் கூடாரத்தில் சாமுவேல் தொடர்ந்து சேவை செய்து வருகிறான். யெகோவாவுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது, ஜனங்களுக்கும் அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால் பிரதான ஆசாரியன் ஏலியின் மகன்களான ஓப்னியும் பினெகாசும் எதற்கும் உதவாதவர்களாக இருக்கிறார்கள். பல கெட்ட காரியங்களை செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, மற்றவர்களும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி செய்கிறார்கள். ஆசாரியர் பதவியிலிருந்து ஏலி அவர்களை நீக்கிப்போட வேண்டும். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

ஆசரிப்புக் கூடாரத்தில் நடந்துகொண்டிருக்கிற கெட்ட காரியங்களை இளைஞனான சாமுவேல் பார்க்கிறார்; அதைப் பார்த்து யெகோவாவுக்கு சேவை செய்வதை அவன் விட்டுவிடுவதில்லை. அப்போது வெகு சில ஆட்கள்தான் யெகோவா தேவனை உண்மையில் நேசிக்கிறார்கள்; ஆகவே மனிதர்களிடம் பேசுவதையே யெகோவா ரொம்ப நாட்களுக்கு நிறுத்தி விட்டிருந்தார். ஆனால் சாமுவேல் கொஞ்சம் பெரியவனாக ஆகும்போது ஒரு சம்பவம் நடக்கிறது.

ஆசரிப்புக் கூடாரத்தில் சாமுவேல் தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்பொழுது யாரோ கூப்பிடுவது போன்ற குரலைக் கேட்டு விழித்துவிடுகிறான். அவன்: ‘இதோ வருகிறேன்’ என்று பதிலளித்து ஏலியிடம் ஓடுகிறான். பிறகு ஏலியைப் பார்த்து ‘நீர் என்னை கூப்பிட்டீரே, இதோ நான் வந்திருக்கிறேன்’ என்று சொல்கிறான்.

ஆனால் ஏலி: ‘நான் உன்னைக் கூப்பிடவில்லை; நீ போய்ப் படுத்துக்கொள்’ என்று சொல்கிறார். உடனே சாமுவேல் போய்ப் படுத்துக்கொள்கிறான்.

பின்பு மறுபடியும்: ‘சாமுவேல்!’ என்று கூப்பிடும் சத்தம் கேட்கிறது. எனவே சாமுவேல் மறுபடியும் எழுந்து ஏலியிடம் ஓடுகிறான். ‘நீர் என்னைக் கூப்பிட்டீர், இதோ நான் வந்திருக்கிறேன்’ என்று சொல்கிறான். ஆனால் ஏலி: ‘என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. போ, போய்ப் படுத்துக்கொள்’ என்று சொல்கிறார். அதனால் சாமுவேலும் திரும்பப் போய்ப் படுத்துக் கொள்கிறான்.

மூன்றாவது தடவையாக ‘சாமுவேல்!’ என்று கூப்பிடும் சத்தத்தைக் கேட்கிறான். மறுபடியும் சாமுவேல் ஏலியிடம் ஓடுகிறான். ‘இதோ நான் வந்திருக்கிறேன், இந்தத் தடவை கட்டாயமாக நீர்தான் என்னைக் கூப்பிட்டிருக்க வேண்டும்’ என்று சொல்கிறான். இதைக் கேட்டவுடன், யெகோவாவே அவனைக் கூப்பிட்டிருக்க வேண்டுமென்பது ஏலிக்குப் புரிகிறது. ஆகவே அவர் சாமுவேலிடம்: ‘திரும்பவும் போய்ப் படுத்துக்கொள், கூப்பிடும் சத்தத்தை மீண்டும் கேட்டால்: “யெகோவாவே பேசும், உம்முடைய அடியேன் கேட்கிறேன்” என்று நீ சொல்ல வேண்டும்’ என்றார்.

யெகோவா மறுபடியும் கூப்பிடுகையில் சாமுவேல் அவ்வாறே சொல்கிறான். அப்பொழுது ஏலியையும் அவருடைய மகன்களையும் தண்டிக்கப் போவதாக அவனிடம் யெகோவா சொல்கிறார். அவர் சொன்னபடியே ஓப்னியும் பினெகாசும் பெலிஸ்தருடன் நடந்த போரில் செத்துப் போகிறார்கள். இதைக் கேள்விப்பட்டபோது ஏலி கீழே விழுகிறார், அப்போது கழுத்து முறிந்து அவரும் செத்துப் போகிறார். இவ்வாறு யெகோவாவின் வார்த்தை உண்மையாகிறது.

சாமுவேல் வளர்ந்து, இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி ஆகிறார். அவர் வயதானவராக ஆகும்போது ஜனங்கள் அவரிடம்: ‘எங்கள் மீது ஆட்சி செய்ய ஒரு ராஜாவை தேர்ந்தெடும்’ என்று கேட்கிறார்கள். யெகோவாதான் அவர்களுடைய ராஜா என்பதால் சாமுவேல் அதைச் செய்ய விரும்பவில்லை. என்றாலும், ஜனங்கள் கேட்டுக் கொண்டபடியே அவர்களுக்காக ஒரு ராஜாவை தேர்ந்தெடுக்கும்படி யெகோவா அவரிடம் சொல்கிறார்.