Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 34

புது விதமான உணவு

புது விதமான உணவு

தரையிலிருந்து அந்த மக்கள் எதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உன்னால் சொல்ல முடியுமா? அது உறைந்த பனியைப் போல் இருக்கிறது. வெள்ளை நிறத்தில், மெல்லியதாய் பஞ்சு போல இருக்கிறது. ஆனால் அது உறைந்த பனி அல்ல; சாப்பிடுவதற்கான ஓர் உணவுப்பொருள் அது.

இஸ்ரவேலர் எகிப்தை விட்டு வெளியேறி ஏறக்குறைய ஒரு மாதம்தான் ஆகிறது. அவர்கள் வனாந்தரத்தில் இருக்கிறார்கள். இங்கு சாப்பாட்டுக்குத் தேவையான எதுவுமே விளையாது. அதனால் அவர்கள் முறுமுறுக்கிறார்கள். ‘யெகோவா எங்களை எகிப்திலேயே கொன்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும். அங்கேயாவது எங்களுக்கு இஷ்டப்பட்டதெல்லாம் சாப்பிடக் கிடைத்தது’ என்று குறைபட்டுக் கொள்கிறார்கள்.

எனவே, ‘வானத்திலிருந்து உணவு கீழே பொழியும்படி நான் செய்யப் போகிறேன்’ என்று யெகோவா சொல்கிறார், சொன்னபடியே நடக்கிறது. மறுநாள் காலை, தரையில் விழுந்து கிடக்கிற இந்த வெள்ளை நிற பொருளை இஸ்ரவேலர் பார்க்கிறார்கள், ‘இது என்ன?’ என்று ஒருவரையொருவர் கேட்டுக்கொள்கிறார்கள்.

‘சாப்பிடுவதற்காக யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிற உணவுதான் இது’ என்று மோசே சொல்கிறார். அந்த ஜனங்கள் அதை மன்னா என்று அழைக்கிறார்கள். தேனினால் செய்யப்பட்ட மெல்லிய அப்பத்தைப் போன்ற ருசி அதற்கு இருக்கிறது.

‘போதிய அளவு மட்டுமே ஒவ்வொருவரும் அதை எடுக்க வேண்டும்’ என்று ஜனங்களிடம் மோசே சொல்கிறார். அதனால் தினமும் காலையில் அவர்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள். பின்பு, சூரிய வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்போது தரையில் மீந்திருக்கிற அந்த மன்னா உருகிப் போகிறது.

‘ஒருவரும் அடுத்த நாளுக்காக கொஞ்சங்கூட அந்த மன்னாவை சேர்த்து வைக்கக் கூடாது’ என்று மோசே சொல்கிறார். ஆனால் அந்த ஜனங்களில் சிலர் மோசே சொன்னபடி செய்யவில்லை. என்ன நடக்கிறதென்று உனக்குத் தெரியுமா? அவர்கள் சேர்த்து வைத்திருக்கிற மன்னா முழுவதும் அடுத்த நாள் காலை புழுப் புழுத்து, நாற்றமெடுக்கிறது!

ஆனால் வாரத்தில் ஒருநாள் மட்டும், அதாவது வாரத்தின் ஆறாவது நாள் மட்டும், இரண்டு மடங்கு மன்னாவை எடுத்து வைத்துக் கொள்ளும்படி யெகோவா சொல்கிறார். ஏனென்றால் ஏழாம் நாள் மன்னாவை யெகோவா விழ வைக்க மாட்டார். அப்படி அவர்கள் ஏழாம் நாளுக்காக மன்னாவை சேர்த்து வைத்தபோது அது புழு பிடிக்கவில்லை, நாற்றமும் அடிக்கவில்லை! இது மற்றொரு அற்புதம்!

இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருக்கிற அத்தனை ஆண்டுகளும் அவர்களுக்கு யெகோவா மன்னாவை உணவாக அளித்து காக்கிறார்