Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 45

யோர்தான் நதியைக் கடந்து செல்லுதல்

யோர்தான் நதியைக் கடந்து செல்லுதல்

இதோ பார்! இஸ்ரவேலர் யோர்தான் நதியைக் கடக்கிறார்கள்! ஆனால் தண்ணீரைக் காணோமே? வருடத்தின் அந்தப் பருவத்தில் அங்கு எப்போதும் கனத்த மழை பெய்யும். அப்படி மழை பெய்ததால் சில நிமிடங்களுக்கு முன்புதான் அந்த நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது! இப்போதோ, இஸ்ரவேலர் செங்கடலைக் கடந்தது போலவே இந்த நதியின் வறண்ட தரை வழியே நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்! இதிலிருந்த தண்ணீரெல்லாம் எங்கே போனது? நாம் பார்க்கலாம்.

யோர்தான் நதியைக் கடக்க வேண்டிய சமயம் வந்தபோது, இஸ்ரவேலர் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசுவாவிடம் யெகோவா சொல்கிறார்: ‘உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து கொண்டு ஆசாரியர்கள் உங்களுக்கு முன்பாகச் செல்ல வேண்டும். அவர்கள் தங்கள் பாதங்களை யோர்தான் நதிக்குள் வைக்கையில் அந்த நதி ஓடாமல் அப்படியே நின்றுவிடும்.’

அவர் சொன்னபடியே ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை சுமந்துகொண்டு ஜனங்களுக்கு முன்பாக போகிறார்கள். யோர்தானுக்கு வந்துசேர்ந்ததும் அந்த ஆசாரியர்கள் தண்ணீருக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். நதி ஆழமாக இருக்கிறது, தண்ணீர் மிக வேகமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுடைய பாதங்கள் தண்ணீரில் பட்டவுடனே அந்தத் தண்ணீர் அப்படியே நின்றுவிடுகிறது! இது ஓர் அற்புதம்! இந்த நதி புறப்பட்டு வரும் இடத்திலேயே அதை யெகோவா தடுத்து நிறுத்திவிட்டார். அதனால் கொஞ்ச நேரத்திலேயே நதியில் தண்ணீர் இல்லாமல் வற்றிவிடுகிறது!

உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்கிற ஆசாரியர்கள் வற்றிப்போன அந்த நதியின் நடுப்பகுதி வரை நடந்து போகிறார்கள். இந்தப் படத்தில் அவர்களை உன்னால் பார்க்க முடிகிறதா? அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருக்கையில், இஸ்ரவேலர் எல்லோரும் யோர்தான் நதியின் காய்ந்த தரை வழியாக நடந்து செல்கிறார்கள்!

அனைவரும் கடந்து போன பின்பு, பலமுள்ள 12 மனிதரிடம் இவ்வாறு சொல்லும்படி யோசுவாவுக்கு யெகோவா கட்டளையிடுகிறார்: ‘உடன்படிக்கைப் பெட்டியுடன் நின்று கொண்டிருக்கிற ஆசாரியர்களின் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கிருந்து 12 கற்களை எடுத்து வந்து, இன்றிரவு நீங்களெல்லோரும் தங்குகிற இடத்தில் குவித்து வையுங்கள். இந்தக் கற்கள் எதைக் குறிக்கின்றன என்று பிற்பாடு உங்கள் பிள்ளைகள் கேட்டால் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டி எடுத்து வரப்பட்டபோது யோர்தானின் தண்ணீர் ஓடாமல் அப்படியே நின்று விட்டதைப் பற்றி நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும். இந்த அற்புதத்தை இக்கற்கள் உங்களுக்கு நினைப்பூட்டும்!’ நதியின் தரையில் ஆசாரியர்கள் நின்றிருந்த இடத்திலும்கூட யோசுவா 12 கற்களை நிறுத்தி வைக்கிறார்.

கடைசியாக, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து கொண்டிருக்கிற ஆசாரியர்களிடம் யோசுவா இவ்வாறு சொல்கிறார்: ‘யோர்தான் நதியை விட்டு வெளியே வாருங்கள்.’ அவ்வாறு அவர்கள் வெளியே வந்தவுடன், மறுபடியும் நதி ஓடத் தொடங்குகிறது.