Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 37

வணக்கத்திற்காக ஒரு கூடாரம்

வணக்கத்திற்காக ஒரு கூடாரம்

இது என்ன கட்டிடம் என்று உனக்குத் தெரியுமா? இது யெகோவாவை வணங்குவதற்கான ஒரு விசேஷ கூடாரம். இது ஆசரிப்புக் கூடாரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஜனங்கள் எகிப்தை விட்டு வந்த ஒரு வருஷத்திற்குள் இதைக் கட்டி முடித்தார்கள். இதைக் கட்டுவதற்கு யார் யோசனை கொடுத்தது தெரியுமா?

யெகோவா தேவன்தான் யோசனை கொடுத்தார். மோசே சீனாய் மலையில் இருந்தபோது இதைக் கட்டுவது எப்படி என்பதை யெகோவா சொன்னார். அதை எளிதில் பிரிக்க முடிகிற விதத்தில் அவர் கட்டச் சொன்னார். அப்போதுதான் இஸ்ரவேலர் வேறொரு இடத்திற்குப் போகும்போது கூடாரத்தைத் தனித்தனியாக பிரித்தெடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்; அதோடு, போகும் இடத்தில் மீண்டும் கூடாரம் போடுவதற்கும் வசதியாக இருக்கும். இஸ்ரவேலர் அந்த வனாந்தரத்தில் இடம் விட்டு இடம் செல்லும்போது இந்தக் கூடாரத்தையும் தங்களோடு எடுத்துச் சென்றார்கள்.

கூடாரத்திலுள்ள அந்தச் சிறிய அறையின் ஒரு மூலையில் ஒரு பெட்டி, அதாவது ஒரு பேழை இருப்பது தெரிகிறதா? இது உடன்படிக்கை பெட்டி என்று அழைக்கப்படுகிறது. இதன் இரு முனையிலும்​—⁠இந்த முனையில் ஒன்றும் அந்த முனையில் ஒன்றும்​—⁠பொன்னால் செய்யப்பட்ட தூதர்கள் அல்லது கேருபீன்கள் வைக்கப்பட்டிருந்தன. கடவுள் மறுபடியும் அந்தப் பத்துக் கட்டளைகளை இரண்டு தட்டையான கற்களில் எழுதினார், ஏன்? முதலில் எழுதியதைத்தான் மோசே உடைத்து விட்டாரே. இந்தக் கற்பலகைகள் அந்த உடன்படிக்கைப் பெட்டிக்குள் வைக்கப்பட்டன. ஒரு ஜாடியில் மன்னாவும் அதற்குள் வைக்கப்பட்டது. மன்னா என்பது என்னவென்று உனக்கு நினைவிருக்கிறதா?

மோசேயின் அண்ணன் ஆரோனை பிரதான ஆசாரியனாக யெகோவா தேர்ந்தெடுக்கிறார். யெகோவாவை வணங்க அவர் ஜனங்களுக்கு உதவி செய்கிறார். அவருடைய மகன்களும் ஆசாரியர்களாக சேவை செய்கிறார்கள்.

இப்பொழுது அந்தக் கூடாரத்தின் பெரிய அறையைப் பார். அந்தச் சிறிய அறையைவிட இது இரண்டு மடங்கு பெரியதாய் இருக்கிறது. பெட்டி போல் ஒன்று தெரிகிறதே, அதைப் பார்த்தாயா, அதிலிருந்து கொஞ்சம் புகை வந்து கொண்டிருக்கிறது அல்லவா? தூபவர்க்கம் என்றழைக்கப்படுகிற வாசனைப் பொருளை ஆசாரியர்கள் எரிக்கும் பீடம்தான் இது. ஏழு விளக்குகளை உடைய ஒரு விளக்குத்தண்டும் அங்கே இருக்கிறது. இந்த அறையிலிருக்கும் இன்னொரு பொருள் மேசை. அதன் மேல் 12 ரொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் ஒரு பெரிய கலசம், அதாவது குழிவான பாத்திரம் இருக்கிறது, அதில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கிறது. கழுவுவதற்காக இந்தத் தண்ணீரை ஆசாரியர்கள் பயன்படுத்துகிறார்கள். ஒரு பெரிய பலிபீடமும் இருக்கிறது. யெகோவாவுக்குப் பலி செலுத்தப்படுகிற மிருகங்கள் இங்கே எரிக்கப்படுகின்றன. அவர்கள் முகாமிட்டிருந்த இடத்தின் நடுவில்தான் இந்த ஆசரிப்புக் கூடாரம் இருக்கிறது, அதைச் சுற்றி இஸ்ரவேலர் கூடாரங்களில் வசிக்கிறார்கள்.