Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 48

விவேகமுள்ள கிபியோனியர்

விவேகமுள்ள கிபியோனியர்

இஸ்ரவேலருக்கு விரோதமாகப் போர் செய்ய கானானிலுள்ள நிறைய நகரங்கள் இப்பொழுது தயாராகின்றன. தங்களுக்கு எப்படியும் வெற்றி கிடைக்கும் என்று அந்நகரத்தார் நினைக்கிறார்கள். ஆனால் அருகிலுள்ள கிபியோன் நகரத்தார் மட்டும் அப்படி நினைப்பதில்லை. இஸ்ரவேலருக்குக் கடவுள் உதவி செய்து வருவதை அவர்கள் நம்புகிறார்கள், அதனால் கடவுளுக்கு விரோதமாகப் போர் செய்ய அவர்கள் விரும்பவில்லை. எனவே, இந்தக் கிபியோனியர் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

வெகு தூரத்திலிருந்து வந்திருப்பது போல இஸ்ரவேலரிடம் காட்டிக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கிறார்கள். அதற்காக அவர்களில் சில ஆண்கள், கந்தலான உடைகளையும் தேய்ந்துபோன செருப்புகளையும் போட்டுக் கொள்கிறார்கள். கந்தலான கோணிப் பைகளை தங்கள் கழுதைகளின்மேல் ஏற்றிக்கொண்டு, காய்ந்த ரொட்டிகள் சிலவற்றை எடுத்துக் கொள்கிறார்கள். பின்பு அவர்கள் யோசுவாவிடம் சென்று: ‘வெகு தூரத்திலுள்ள ஒரு தேசத்திலிருந்து நாங்கள் வந்திருக்கிறோம். நீங்கள் வணங்குகிற மிகப் பெரிய கடவுளான யெகோவாவைப் பற்றி கேள்விப்பட்டோம். அவர் எகிப்தில் உங்களுக்குச் செய்த எல்லாக் காரியங்களைப் பற்றியும் கேள்விப்பட்டோம். அதனால் எங்கள் தலைவர்கள் எங்களிடம் சிறிது உணவு எடுத்துக்கொண்டு உங்களிடம் சென்று: “நாங்கள் உங்களுடைய வேலைக்காரர்கள். நீங்கள் எங்களோடு போர் செய்ய மாட்டீர்களென்று வாக்குக் கொடுங்கள்” என்று சொல்லச் சொன்னார்கள். இதோ பாருங்கள், நீண்ட பயணத்தால் எங்கள் உடைகள் கிழிந்து கந்தலாகி விட்டன, எங்கள் ரொட்டியும் பழசாகிக் காய்ந்து விட்டது’ என்று சொல்கிறார்கள்.

யோசுவாவும் மற்ற தலைவர்களும் கிபியோனியர் சொல்வதை நம்பிவிடுகிறார்கள். அதனால் அவர்களோடு போர் செய்ய மாட்டோம் என்று வாக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு, அந்தக் கிபியோனியர் உண்மையில் அருகிலேயே வாழ்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது.

‘நீங்கள் ஒரு தூர தேசத்திலிருந்து வந்ததாக எங்களிடம் ஏன் சொன்னீர்கள்?’ என்று யோசுவா கேட்கிறார்.

அதற்கு அந்த கிபியோனியர்: ‘உங்கள் கடவுளாகிய யெகோவா இந்தக் கானான் தேசம் முழுவதையும் உங்களுக்கு அளிப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். அதனால் நீங்கள் எங்களைக் கொன்று போட்டு விடுவீர்களோ என்று பயந்துதான் அப்படிச் சொன்னோம்’ என்கிறார்கள். இஸ்ரவேலர் தாங்கள் கொடுத்த வாக்குப்படியே கிபியோனியரைக் கொல்லாமல் விட்டுவிடுகிறார்கள். அவர்களை வேலைக்காரர்களாக வைத்துக்கொள்கிறார்கள்.

இந்தக் கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதானம் செய்துகொண்டதால் எருசலேமின் ராஜா கோபமடைந்து, மற்ற நான்கு ராஜாக்களிடம்: ‘கிபியோனோடு போர் செய்ய நீங்கள் எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று கேட்கிறான். இந்த ஐந்து ராஜாக்களும் கிபியோனுக்கு விரோதமாக போர் செய்ய வருகிறார்கள். இஸ்ரவேலரோடு கிபியோனியர் சமாதானம் செய்ததால்தான் இந்த ராஜாக்கள் இப்பொழுது அவர்களுடன் போர் செய்ய வருகிறார்கள். கிபியோனியர் இஸ்ரவேலரோடு சமாதானம் செய்தது விவேகமான காரியமா? நாம் பார்ப்போம்.