Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 44

வேவுகாரர்களை ராகாப் ஒளித்து வைக்கிறாள்

வேவுகாரர்களை ராகாப் ஒளித்து வைக்கிறாள்

இந்த ஆட்கள் பிரச்சினையில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் தப்பிக்க வேண்டும், இல்லையென்றால் கொல்லப்படுவார்கள். அவர்கள் யார் தெரியுமா? அவர்கள்தான் வேவு பார்க்க வந்த இஸ்ரவேலர். அவர்களுக்கு உதவி செய்கிற அந்தப் பெண்தான் ராகாப். இங்கே இந்த எரிகோ பட்டணத்தின் மதில் மேலுள்ள ஒரு வீட்டில் அவள் வசிக்கிறாள். இந்த ஆட்கள் ஏன் பிரச்சினையில் சிக்கியிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.

இஸ்ரவேலர் யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்திற்குள் செல்ல தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன், யோசுவா இந்த இரண்டு வேவுகாரர்களை அனுப்புகிறார். அவர்களிடம்: ‘நீங்கள் போய் எரிகோ பட்டணத்தையும் அதன் நிலத்தையும் பார்வையிட்டு வாருங்கள்’ என்று சொல்லி அனுப்புகிறார்.

இந்த வேவுகாரர்கள் எரிகோவுக்கு வந்தபோது அவர்கள் ராகாபின் வீட்டுக்குச் செல்கிறார்கள். ஆனால் ‘இரண்டு இஸ்ரவேலர் நம் தேசத்தை வேவு பார்க்க இன்றிரவு உள்ளே வந்திருக்கிறார்கள்’ என்று எரிகோவின் ராஜாவிடம் யாரோ சொல்லி விடுகிறார்கள். இதைக் கேட்ட ராஜா உடனே ராகாப் வீட்டிற்கு ஆட்களை அனுப்புகிறான். அவர்கள் அவளிடம்: ‘உன் வீட்டுக்குள் இருக்கிற அந்த ஆட்களை வெளியே கொண்டுவா!’ என்று கட்டளையிடுகிறார்கள். ஆனால் ராகாப் அந்த வேவுகாரர்களைத் தன் வீட்டுக் கூரையில் ஒளித்து வைத்திருக்கிறாள். எனவே அவர்களிடம்: ‘ஆமாம், சில ஆட்கள் என் வீட்டுக்கு வந்தார்கள், ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. பட்டணத்து வாசல் மூடுவதற்கு முன், இருட்டாகி வந்த சமயம் பார்த்து அவர்கள் இங்கிருந்து போய்விட்டார்கள். சீக்கிரமாய் போனால் அவர்களைப் பிடித்துவிடலாம்!’ என்று சொல்கிறாள். அவள் சொன்னதை நம்பி அந்த வேவுகாரர்களைப் பிடிக்க அவர்கள் வேகமாக செல்கிறார்கள்.

அவர்கள் போன பின்பு, ராகாப் அவசர அவசரமாக கூரைக்குச் சென்று அந்த வேவுகாரர்களிடம்: ‘இந்தத் தேசத்தை யெகோவா உங்களுக்குக் கொடுப்பார் என்று எனக்குத் தெரியும். நீங்கள் எகிப்தை விட்டு வெளியேறியபோது அவர் செங்கடலை வறண்டு போகச் செய்தது பற்றியும், சீகோன், ஓக் என்ற ராஜாக்களை நீங்கள் கொன்று போட்டது பற்றியும் கேள்விப்பட்டோம். இப்போது நான் உங்களுக்குத் தயவு காட்டியிருக்கிறேன், அதனால் நீங்களும் எனக்குத் தயவு காட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். என் அப்பா அம்மாவையும், என் சகோதர சகோதரிகளையும் காப்பாற்றுவீர்களென்று எனக்கு வாக்குக் கொடுங்கள்’ என்று கேட்கிறாள்.

அவ்வாறே செய்வதாக அவர்களும் வாக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் ராகாப் ஒன்றைச் செய்யும்படி அவர்கள் சொல்கிறார்கள். ‘இந்தச் சிவப்பு கயிற்றை எடுத்து உன் ஜன்னலில் கட்டிவை, உன்னுடைய உறவினர் எல்லோரும் உன் வீட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள். எரிகோவைக் கைப்பற்ற நாங்கள் திரும்பி வரும்போது உன் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கயிற்றைப் பார்த்து உன் வீட்டிலுள்ள எவரையும் கொல்ல மாட்டோம்’ என்று சொல்கிறார்கள். பின்பு அவர்கள் யோசுவாவிடம் திரும்பிச் சென்றபோது, நடந்த எல்லாவற்றையும் அவரிடம் சொல்கிறார்கள்.