Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 28

குழந்தை மோசே காப்பாற்றப்பட்ட விதம்

குழந்தை மோசே காப்பாற்றப்பட்ட விதம்

இந்தச் சிறு குழந்தை அழுதுகொண்டே அந்தப் பெண்ணின் விரலைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார். இந்தக் குழந்தைதான் மோசே. அந்த அழகிய பெண் யார் என்று உனக்குத் தெரியுமா? அவள் எகிப்து நாட்டு இளவரசி, பார்வோனின் மகள்.

மோசேயின் அம்மா தன் குழந்தையை எகிப்தியர் கொன்று போடாமல் இருப்பதற்கு மூன்று மாதங்கள் வரை மறைத்து வைத்திருந்தாள். ஆனால் எப்படியும் ஒருநாள் அவர்கள் மோசேயைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதை அறிந்திருந்தாள். அதனால் தன் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக என்ன செய்தாள் தெரியுமா?

ஒரு கூடையை எடுத்து, தண்ணீர் உள்ளே கசியாதபடி அதை அமைத்தாள். பின்பு குழந்தை மோசேயை அதற்குள் வைத்து, நைல் நதியோரத்தில் உயர்ந்து வளர்ந்திருந்த புற்களுக்குள் வைத்தாள். பிறகு, மோசேயின் அக்கா மிரியாமை அங்கே ஒரு ஓரமாக நின்று என்ன நடக்கிறதென்று பார்க்கச் சொன்னாள்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பார்வோனின் மகள் குளிப்பதற்காக நைல் நதிக்கு வந்தாள். அந்த உயரமான புற்களுக்குள் இருந்த கூடை சட்டென அவள் கண்ணில் பட்டது. அவள் தன்னுடைய வேலைக்காரப் பெண்களில் ஒருத்தியைக் கூப்பிட்டு: ‘அந்தக் கூடையை இங்கே எடுத்துக்கொண்டு வா’ என்றாள். கொண்டு வரப்பட்டதும் அதைத் திறந்தாள். ஆஹா, எவ்வளவு அழகான குழந்தை அதில் இருந்தது! சின்னஞ்சிறு மோசே அழுது கொண்டிருந்தான். அந்தக் குழந்தையைப் பார்க்க இளவரசிக்கு ரொம்ப பாவமாக இருந்தது. அதனால் அதைக் கொல்ல அவள் விரும்பவில்லை.

அப்போது மிரியாம் வந்தாள். அவளை இந்தப் படத்தில் நீ பார்க்கலாம். பார்வோனின் மகளிடம் மிரியாம்: ‘இந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு இஸ்ரவேல் பெண்ணை நான் போய் அழைத்து வரட்டுமா?’ என்று கேட்டாள்.

‘சரி, அழைத்து வா’ என்று இளவரசி சொன்னாள்.

அதனால் இந்த விஷயத்தைத் தன் அம்மாவிடம் சொல்வதற்காக மிரியாம் அவசர அவசரமாக ஓடினாள். மோசேயின் அம்மா வந்ததுமே, இளவரசி அவளிடம்: ‘இந்தக் குழந்தையைக் கொண்டு போய் எனக்காகப் பால் கொடுத்து வளர்த்து வா, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்’ என்று சொன்னாள்.

இப்படியாக, மோசேயின் அம்மா தன் சொந்தப் பிள்ளையையே கவனித்துக்கொள்ள ஆரம்பித்தாள். மோசே சற்று வளர்ந்த பிறகு, பார்வோனின் மகளிடம் அவள் அழைத்துச் சென்றாள். பார்வோனின் மகள் மோசேயை தன் சொந்த மகனாக ஏற்றுக்கொண்டாள். இப்படித்தான் மோசே பார்வோனின் வீட்டில் வளர்ந்து ஆளானார்.