கதை 11
முதல் வானவில்
நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பேழையிலிருந்து வெளியே வந்தார்கள். அப்படி வந்ததும் நோவா முதல் வேலையாக என்ன செய்தார் தெரியுமா? கடவுளுக்கு ஒரு பலியை, அதாவது காணிக்கையைச் செலுத்தினார். கீழேயுள்ள இந்தப் படத்தில் அதை நீ பார்க்கலாம். தன்னுடைய குடும்பத்தை அந்தப் பெரிய ஜலப்பிரளயத்திலிருந்து காப்பாற்றியதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்தவே நோவா இவ்வாறு மிருகங்களைக் காணிக்கையாகச் செலுத்தினார்.
இந்தக் காணிக்கையை யெகோவா ஏற்றுக்கொண்டார் என நினைக்கிறாயா? ஆம், அவர் ஏற்றுக்கொண்டார். எனவே, ஜலப்பிரளயத்தால் மறுபடியும் இந்த உலகத்தை தாம் அழிக்கப் போவதில்லை என்று அவர் நோவாவுக்கு வாக்குக் கொடுத்தார்.
சீக்கிரத்தில் நிலத்திலிருந்து தண்ணீர் வற்றிப்போனது. நோவாவும் அவருடைய குடும்பமும் பேழைக்கு வெளியே ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்கள். அவர்களைக் கடவுள் இவ்வாறு ஆசீர்வதித்தார்: ‘நீங்கள் நிறைய பிள்ளைகளைப் பெற வேண்டும். பூமி முழுவதும் மக்களால் நிரம்பும்வரை நீங்கள் எண்ணிக்கையில் பெருக வேண்டும்.’
ஆனால் இந்தப் பெரிய ஜலப்பிரளயத்தைப் பற்றி மக்கள் பிற்பாடு கேள்விப்பட்டால், எங்கே மறுபடியும் அது வந்துவிடுமோவென்று அவர்கள் ஒருவேளை பயப்படலாம். எனவே, இந்த பூமியைத் தாம் மீண்டும் ஜலப்பிரளயத்தில் மூழ்கடிக்கப் போவதில்லை என்று கடவுள் வாக்குக் கொடுத்தார்; அதை நினைவுபடுத்தும் விதத்தில் அவர்களுக்கு ஒன்றைக் கொடுத்தார். அவர் எதைக் கொடுத்தார் என்று உனக்குத் தெரியுமா? வானவில்லைக் கொடுத்தார்.
மழை பெய்த பின் சூரியன் பிரகாசிக்கும்போதுதான் பொதுவாக வானவில் தோன்றும். வானவில்லில் பல அழகிய நிறங்கள் இருக்கும். நீ எப்பொழுதாவது வானவில்லைப் பார்த்திருக்கிறாயா? இந்தப் படத்திலுள்ள வானவில்லை உன்னால் பார்க்க முடிகிறதா?
கடவுள் சொன்னது இதுவே: ‘இனி ஒருபோதும் எல்லா மக்களையும் மிருகங்களையும் ஜலப்பிரளயத்தால் நான் அழிக்கப் போவதில்லை என வாக்குக் கொடுக்கிறேன். என் வானவில்லை மேகங்களில் வைக்கிறேன். இந்த வானவில் தோன்றும்போது நான் அதைப் பார்த்து என்னுடைய இந்த வாக்கை நினைவுகூருவேன்.’
அப்படியானால் ஒரு வானவில்லை நீ பார்க்கும்போது எது உன் நினைவுக்கு வர வேண்டும்? ஆம், ஒரு பெரிய ஜலப்பிரளயத்தால் இனி இந்த உலகத்தை அழிக்கப் போவதில்லை என்று கடவுள் கொடுத்த வாக்கு உன் நினைவுக்கு வர வேண்டும்.