கதை 31
மோசேயும் ஆரோனும் பார்வோனை சந்திக்கிறார்கள்
மோசே எகிப்துக்கு வந்ததும் தன் அண்ணன் ஆரோனிடம் இந்த எல்லா அற்புதங்களையும் பற்றி சொன்னார். பின்பு மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களை இஸ்ரவேலருக்குச் செய்து காட்டினார்கள். அப்போது, யெகோவா அவர்களோடு இருந்ததை அவர்கள் எல்லோரும் நம்பினார்கள்.
பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோனைப் பார்க்கப் போனார்கள். அவனிடம்: ‘“வனாந்தரத்தில் எனக்கு ஆராதனை செய்வதற்காக என் ஜனங்களை மூன்று நாட்களுக்குப் போக விடு” என இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறார்’ என்றார்கள். ஆனால் பார்வோன்: ‘எனக்கு யெகோவா மீது நம்பிக்கை கிடையாது. நான் இஸ்ரவேலரைப் போக விடமாட்டேன்’ என்று பதிலளித்தான்.
யெகோவாவை வணங்குவதற்காக வேலையிலிருந்து விடுப்பு எடுக்க அந்த ஜனங்கள் விரும்பினார்கள், அதனால் பார்வோனுக்குப் பயங்கர கோபம் வந்தது. எனவே, அவர்களுக்கு இன்னுமதிக கஷ்டமான வேலைகளைக் கொடுத்தான். இதற்கெல்லாம் மோசேதான் காரணம் என இஸ்ரவேலர் குற்றம் சாட்டினார்கள், மோசேக்கு ரொம்பவும் வருத்தமாகிவிட்டது. ஆனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாமென்று யெகோவா கூறினார். ‘பார்வோன் என் ஜனத்தைப் போகவிடும்படி நான் செய்வேன்’ என்றும் அவர் கூறினார்.
மோசேயும் ஆரோனும் மறுபடியும் பார்வோனைப் பார்க்கப் போனார்கள். இந்தச் சமயத்தில் அவர்கள் ஓர் அற்புதத்தைச் செய்தார்கள். ஆரோன் தனது கோலைக் கீழே போட்டார், அது ஒரு பெரிய பாம்பாக மாறியது. பார்வோனுடைய ஞானிகளும் தங்கள் கோல்களைக் கீழே போட்டார்கள், அவையும் பாம்புகளாக மாறின. ஆனால், இதோ பார்! ஆரோனின் பாம்பு அந்த ஞானிகளின் பாம்புகளை விழுங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் இஸ்ரவேலரைப் பார்வோன் போக விடவில்லை.
எனவே, பார்வோனுக்கு யெகோவா ஒரு பாடம் புகட்ட நினைத்தார். அதை அவர் எப்படிச் செய்தார் தெரியுமா? எகிப்தியருக்கு 10 வாதைகளை, அதாவது பெரிய கஷ்டங்களை உண்டாக்குவதன் மூலம் அதைச் செய்தார்.
சில வாதைகள் உண்டான பின்பு, மோசேயை பார்வோன் வரவழைத்தான். அவரிடம், ‘வாதையை நிறுத்து, நான் இஸ்ரவேலரை விட்டுவிடுகிறேன்’ என்று சொன்னான். ஆனால் வாதை நின்றுபோனதும் பார்வோன் தன் மனதை மாற்றிக்கொண்டான், இஸ்ரவேலரைப் போக விடவில்லை. கடைசியாக, 10-வது வாதைக்குப் பின்பு பார்வோன் இஸ்ரவேலரைப் போக விட்டான்.
இந்த 10 வாதைகள் என்னென்ன என்று உனக்குத் தெரியுமா? இந்தப் பக்கத்தைத் திருப்பு, அவற்றைப் பற்றி நாம் படிக்கலாம்.