கதை 18
யாக்கோபு ஆரானுக்குப் போகிறார்
யாக்கோபு யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று உனக்குத் தெரிகிறதா? பல நாட்கள் பிரயாணம் செய்த பிறகு, ஒரு கிணற்றின் பக்கத்தில் அவர்களை யாக்கோபு சந்தித்தார். அவர்கள் தங்களுடைய செம்மறியாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் யாக்கோபு: ‘உங்களுக்கு எந்த ஊர்?’ என்று கேட்டார்.
‘ஆரான்’ என்று அவர்கள் சொன்னார்கள்.
‘லாபானை உங்களுக்குத் தெரியுமா?’ என்று யாக்கோபு கேட்டார்.
‘தெரியுமே, இதோ, அந்த ஆட்டு மந்தையுடன் வருகிறாளே அவள்தான் அவருடைய மகள் ராகேல்’ என்று பதிலளித்தார்கள். அங்கே தூரத்தில் ராகேல் வருவது தெரிகிறதா?
ராகேல் செம்மறியாடுகளோடு வருவதைக் கண்ட யாக்கோபு, அந்தச் செம்மறியாடுகள் தண்ணீர் குடிப்பதற்காக கிணற்றின் மீதிருந்த கல்லை புரட்டிப்போட்டார். பிறகு ராகேலை யாக்கோபு முத்தமிட்டு, தான் யார் என்பதை அவளுக்குத் தெரிவித்தார். மிகுந்த பரபரப்படைந்த அவள், வீட்டுக்குச் சென்று தன் அப்பா லாபானிடம் நடந்ததைச் சொன்னாள்.
யாக்கோபு தன்னுடன் தங்குவதில் லாபானுக்கு அதிக சந்தோஷம். அதோடு ராகேலை யாக்கோபு கல்யாணம் செய்துகொள்ள விரும்பியதைக் கேட்டபோது அவன் இன்னும் மகிழ்ச்சியடைந்தான். ஆனால், ராகேலை கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமானால் ஏழு வருஷம் தனக்காக வேலை செய்ய வேண்டுமென யாக்கோபிடம் லாபான் சொன்னான். ராகேல் மீது யாக்கோபுக்கு அந்தளவு அன்பு இருந்ததால் லாபான் கேட்டபடியே செய்தார். ஆனால் கல்யாணத்திற்கான சமயம் வந்தபோது லாபான் என்ன செய்தான் தெரியுமா?
ராகேலுக்குப் பதிலாக தன் மூத்த மகள் லேயாளை யாக்கோபுக்கு மனைவியாக கொடுத்தான். யாக்கோபு, இன்னும் ஏழு வருஷம் லாபானுக்கு வேலை செய்ய சம்மதித்தபோது ராகேலையும் அவருக்கு மனைவியாக கொடுத்தான். அப்போதெல்லாம் ஆண்கள் ஒன்றுக்கும் மேலான பெண்களை மணந்துகொள்ள கடவுள் அனுமதித்தார். ஆனால் இப்போது அப்படியல்ல, ஒரு ஆணுக்கு ஒரு மனைவி மாத்திரமே இருக்க வேண்டுமென பைபிள் சொல்கிறது.