Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 6

ஒரு நல்ல மகனும் ஒரு கெட்ட மகனும்

ஒரு நல்ல மகனும் ஒரு கெட்ட மகனும்

இப்போது காயீனையும் ஆபேலையும் பார். அவர்கள் இருவரும் வளர்ந்து விட்டார்கள். காயீன் விவசாயியாக இருக்கிறான். தானியங்களையும் பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்கிறான்.

ஆபேல் ஆடு மேய்ப்பவனாக இருக்கிறான். ஆட்டுக்குட்டிகளைக் கவனிப்பது அவனுக்குப் பிடித்த வேலை. அவனுடைய ஆட்டுக்குட்டிகள் பெரிய ஆடுகளாக வளர்ந்து விடுகின்றன, இதனால் அவன் சீக்கிரத்தில் ஒரு பெரிய மந்தையையே மேய்க்க ஆரம்பிக்கிறான்.

ஒருநாள் காயீனும் ஆபேலும் கடவுளுக்குக் காணிக்கை செலுத்த வருகிறார்கள். காயீன் தான் பயிர் செய்த சில உணவுப் பொருட்களை எடுத்து வருகிறான். ஆபேல் தன்னிடமிருந்த மிகச் சிறந்த ஒரு ஆட்டை எடுத்து வருகிறான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் பார்த்து யெகோவா சந்தோஷப்படுகிறார். ஆனால் காயீனையும் அவனுடைய காணிக்கையையும் பார்த்து அவர் சந்தோஷப்படவில்லை. ஏன் என்று உனக்குத் தெரியுமா?

ஆபேலின் காணிக்கை காயீனுடைய காணிக்கையைவிட மேலானதாய் இருப்பதால் அல்ல, ஆனால் ஆபேல் நல்லவனாக இருப்பதால்தான் யெகோவா சந்தோஷப்படுகிறார். அவன் யெகோவாவையும் தன்னுடைய அண்ணனையும் நேசிக்கிறான். காயீனோ கெட்டவனாக இருக்கிறான்; அவன் தன் தம்பியை நேசிக்கவில்லை.

எனவே காயீன் திருந்த வேண்டுமென்று கடவுள் அவனிடம் சொல்கிறார். ஆனால் காயீன் அதைக் கேட்கவே இல்லை. தன்னைவிட ஆபேலை கடவுள் அதிகமாக விரும்பியதால் அவனுக்குக் கோபம் கோபமாக வருகிறது. ஒருநாள் அவன் ஆபேலிடம்: ‘நாம் இருவரும் வயல் வெளிக்குப் போகலாம் வா’ என்று கூப்பிடுகிறான். அங்கே, அவர்கள் தனியாக இருக்கையில் காயீன் தன் தம்பி ஆபேலை அடித்துப் போடுகிறான். அடித்த அடியில் அவன் செத்தே போய்விடுகிறான். காயீன் தன் தம்பியைக் கொன்றது எவ்வளவு மோசமான காரியம் இல்லையா?

ஆபேல் இறந்துவிட்டாலும், அவனைக் கடவுள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். ஆபேல் நல்லவனாக இருந்தான். இப்படிப்பட்ட ஓர் ஆளை யெகோவா ஒருபோதும் மறப்பதில்லை. எனவே, ஆபேலை யெகோவா தேவன் ஒருநாள் திரும்ப உயிருக்குக் கொண்டு வருவார். அதன் பிறகு அவன் மறுபடியும் சாக வேண்டியிருக்காது. இங்கே பூமியில் என்றென்றுமாக அவன் வாழ்வான். ஆபேலைப் போன்ற ஆட்களைப் பற்றி அதிகமதிகமாக தெரிந்துகொள்வது எவ்வளவு நன்றாயிருக்கும் அல்லவா?

ஆனால் காயீனைப் போன்ற ஆட்களைப் பார்த்து கடவுள் சந்தோஷப்படுவதில்லை. எனவே, காயீன் தன் தம்பியைக் கொன்ற பிறகு கடவுள் அவனைத் தண்டித்தார். ஆம், குடும்பத்தாரைவிட்டு வேறொரு இடத்திற்குத் தூரமாகப் போகும்படி அவனை அனுப்பிவிட்டார். அவன் அப்படிப் போனபோது, தன் சகோதரிகளில் ஒருத்தியைத் தன்னோடு கூட்டிக்கொண்டுப் போனான், அவள் அவனுடைய மனைவியானாள்.

காலப்போக்கில் காயீனுக்கும் அவன் மனைவிக்கும் பிள்ளைகள் பிறந்தன. ஆதாமுக்கு பிறந்த மகன்களும் மகள்களும் கல்யாணம் செய்துகொண்டார்கள், பிறகு அவர்களும் பிள்ளைகளைப் பெற்றார்கள். சீக்கிரத்தில் பூமியிலே நிறைய ஆட்கள் பெருகினார்கள். அவர்களைப் பற்றி இப்போது நாம் தெரிந்துகொள்ளலாம்.