Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 9

நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார்

நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார்

நோவாவுக்கு மனைவியும் மூன்று மகன்களும் இருந்தார்கள். மகன்களின் பெயர் சேம், காம், யாப்பேத். இந்த மூவரும் கல்யாணம் ஆனவர்கள். ஆகவே நோவாவின் குடும்பத்தில் மொத்தம் எட்டு பேர் இருந்தார்கள்.

இப்பொழுது ஒரு புதுமையான காரியத்தைச் செய்யும்படி நோவாவிடம் கடவுள் சொன்னார். ஆம், ஒரு பெரிய பேழையைக் கட்டச் சொன்னார். இந்தப் பேழை ஒரு கப்பலைப் போல பெரிதாக இருந்தாலும் பார்ப்பதற்கு அது ஒரு நீளமான பெட்டியைப் போலவே இருந்தது. ‘அதை மூன்று மாடி உயரத்திற்குக் கட்டு, அதில் அறைகளையும் உண்டாக்கு’ என்று கடவுள் சொன்னார். நோவா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கும், மிருகங்களுக்கும், அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கும் அந்த அறைகளைப் பயன்படுத்தச் சொன்னார்.

கடவுள் நோவாவிடம்: ‘தண்ணீர் உள்ளே புகுந்துவிடாத விதத்தில் பேழையைக் கட்டு’ என்று சொன்னார். ‘ஒரு பெரிய ஜலப்பிரளயத்தினால், அதாவது வெள்ளத்தினால் இந்த முழு உலகத்தையும் அழிக்கப் போகிறேன். பேழைக்குள் இல்லாதவர்கள் எல்லோரும் சாவார்கள்’ என்றும் சொன்னார்.

நோவாவும் அவருடைய மகன்களும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து பேழையைக் கட்டத் தொடங்கினார்கள். ஆனால் மற்ற ஆட்களுக்கு அதைப் பார்க்கப் பார்க்க ஒரே சிரிப்புதான்! கெட்ட காரியங்களையே அவர்கள் தொடர்ந்து செய்து வந்தார்கள். கடவுள் என்ன செய்யப் போகிறாரென்று நோவா அவர்களுக்குச் சொன்னபோது யாருமே அதை நம்பவில்லை.

அந்தப் பேழையைக் கட்ட ரொம்ப காலம் எடுத்தது, ஏனென்றால் அது அவ்வளவு பெரியதாக இருந்தது. கடைசியில், பல ஆண்டுகளுக்குப் பின் அது கட்டி முடிக்கப்பட்டது. இப்பொழுது மிருகங்களையெல்லாம் பேழைக்குள் கொண்டு வரும்படி நோவாவிடம் கடவுள் சொன்னார். சில வகை மிருகங்களில் ஓர் ஆணும் ஓர் பெண்ணுமாக ஒரு ஜோடியையும் மற்ற வகை மிருகங்களில் ஏழு ஏழாகவும் உள்ளே கொண்டு வரும்படி சொன்னார். வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த எல்லாப் பறவைகளையும் உள்ளே கொண்டு வரும்படி சொன்னார். கடவுள் சொன்னபடியே நோவா செய்தார்.

அதன் பிறகு நோவாவின் குடும்பத்தாரும் பேழைக்குள் சென்றார்கள். பின்பு கடவுள் கதவை மூடினார். உள்ளே அவர்கள் காத்திருந்தார்கள். நீயும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பேழைக்குள் காத்திருப்பதாக கொஞ்சம் கற்பனை செய்து பார். கடவுள் சொன்னபடி நிஜமாகவே ஜலப்பிரளயம் வருமா?