Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 8

பூமியில் இராட்சதர்கள்

பூமியில் இராட்சதர்கள்

உன் வீட்டின் உட்கூரை அளவுக்கு உயரமாக உள்ள ஒரு ஆள் உன் எதிரே வந்துகொண்டிருக்கிறான் என்றால் உனக்கு எப்படியிருக்கும்? ரொம்ப பயமாக இருக்கும் இல்லையா? ஒரு காலத்தில் நிஜமாகவே அப்படிப்பட்டவர்கள் பூமியில் இருந்தார்கள். அவர்கள்தான் இராட்சதர்கள். பரலோகத்திலிருந்து வந்த தூதர்கள் அவர்களுடைய அப்பாக்களாக இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது. ஆனால் அது எப்படி முடியும்?

கெட்ட தூதனான சாத்தான் பிரச்சினைகளை உண்டாக்குவதில் மும்முரமாக இருந்தான் என்பது நினைவிருக்கிறதா? கடவுளுடைய தூதர்களையும்கூட அவன் கெடுக்க முயன்று கொண்டிருந்தான். காலப்போக்கில் இந்தத் தூதர்களில் சிலர் சாத்தான் சொல்வதையெல்லாம் கேட்கத் தொடங்கினார்கள். பரலோகத்தில் கடவுள் தங்களுக்குக் கொடுத்திருந்த வேலையை விட்டுவிட்டு, மனித உருவில் கீழே பூமிக்கு வந்தார்கள். ஏன் என்று உனக்குத் தெரியுமா?

ஏனென்றால், கடவுளுடைய இந்தக் குமாரர்கள் பூமியிலிருந்த அழகிய பெண்களைப் பார்த்து, அவர்களோடு வாழ ஆசைப்பட்டார்கள் என்று பைபிள் சொல்கிறது. எனவே அவர்கள் பூமிக்கு வந்து அந்தப் பெண்களைக் கல்யாணம் செய்துகொண்டார்கள். ஆனால், அது தவறு என்று பைபிள் சொல்கிறது, ஏனென்றால் பரலோகத்தில் வாழ்வதற்காகத்தான் தேவதூதர்களைக் கடவுள் உண்டாக்கியிருந்தார்.

பூமிக்கு வந்திருந்த தூதர்களின் மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகள் வித்தியாசமானவர்களாக இருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் அப்படியொன்றும் வித்தியாசமானவர்களாக இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் போகப் போக அவர்கள் நெடுநெடுவென உயரமாக வளர்ந்து, பயங்கர பலவான்களாக ஆகி, கடைசியில் இராட்சதர்களாக ஆனார்கள்.

இந்த இராட்சதர்கள் கெட்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வளவு உயரமானவர்களாகவும் பலவான்களாகவும் இருந்ததால் மக்களைப் பாடாய்ப் படுத்தினார்கள். தங்களைப் போலவே எல்லோரும் கெட்ட காரியங்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள்.

அச்சமயத்தில் ஏனோக்கு உயிரோடில்லை, ஆனால் நல்லவர் ஒருவர் பூமியில் வாழ்ந்து வந்தார். அவருடைய பெயர் நோவா. தன்னிடம் கடவுள் எதைச் செய்யச் சொன்னாரோ அதையே அவர் எப்பொழுதும் செய்து வந்தார்.

ஒருநாள் நோவாவிடம் கடவுள்: ‘எல்லாக் கெட்ட ஆட்களையும் நான் அழிக்கப் போகிறேன். அதற்கான காலம் வந்துவிட்டது. ஆனால் உன்னையும், உன் குடும்பத்தையும் ஏராளமான மிருகங்களையும் காப்பாற்றப் போகிறேன்’ என்று சொன்னார். கடவுள் அதை எப்படிச் செய்தார் என்று இப்போது பார்க்கலாம்.