கதை 83
எருசலேமின் மதில்கள்
இங்கே நடக்கிற வேலைகளைப் பார். இஸ்ரவேலர் எருசலேமின் மதில்களை மும்முரமாய் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். 152 ஆண்டுகளுக்கு முன்பு நேபுகாத்நேச்சார் எருசலேமை அழித்து, அதன் மதில்களையெல்லாம் இடித்துத் தள்ளியிருந்தான், அந்த நகரத்தின் வாசல் கதவுகளையும் எரித்துப் போட்டிருந்தான். இஸ்ரவேலர் பாபிலோனிலிருந்து வந்தபோது அவர்கள் இந்த மதில்களைத் திரும்பக் கட்டவில்லை.
இத்தனை வருஷமாக மதில்கள் இல்லாத ஒரு நகரத்தில் வாழ்ந்தது இந்த ஜனங்களுக்கு எப்படி இருந்திருக்குமென்று நினைக்கிறாய்? அவர்கள் பயந்துபோய் இருந்திருப்பார்கள். ஏனென்றால் அவர்களுடைய எதிரிகள் எளிதில் உள்ளே வந்து அவர்களைத் தாக்கிவிடும் ஆபத்து இருந்தது. ஆனால் இப்போது நெகேமியா என்பவர் அந்த மதில்களைத் திரும்பக் கட்ட உதவிக்கு வந்திருக்கிறார். நெகேமியா யார் என்று உனக்குத் தெரியுமா?
மொர்தெகாயும் எஸ்தரும் வாழ்கிற சூசான் நகரத்தைச் சேர்ந்த ஓர் இஸ்ரவேலர்தான் நெகேமியா. இவர் ராஜாவின் அரண்மனையில் வேலை செய்தவர். எனவே, மொர்தெகாயிக்கும் எஸ்தர் ராணிக்கும் இவர் ஒரு நல்ல நண்பராக இருந்திருக்கலாம். ஆனால் எஸ்தருடைய கணவரான அகாஸ்வேரு ராஜாவிடம் நெகேமியா வேலை செய்ததாக பைபிள் சொல்வதில்லை. அடுத்து வந்த அர்தசஷ்டா ராஜாவிடம்தான் அவர் வேலை பார்த்தார்.
இந்த அர்தசஷ்டா யார் என்று ஞாபகமிருக்கிறதா? எருசலேமிலிருந்த யெகோவாவின் ஆலயத்தைச் சரிசெய்ய எஸ்றாவிடம் எக்கச்சக்கமான பணத்தைக் கொடுத்தனுப்பிய அந்த நல்ல ராஜாதான் அவர். ஆனால் அந்த நகரத்தின் இடிந்த மதில்களை எஸ்றா கட்டவில்லை. நெகேமியாதான் கட்டினார். எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.
ஆலயத்தைச் சரிசெய்ய எஸ்றாவுக்கு அர்தசஷ்டா பணம் கொடுத்து அனுப்பி 13 வருஷங்கள் ஆகிவிட்டன. நெகேமியா இப்போது அர்தசஷ்டா ராஜாவுக்கு தலைமை பானபாத்திரக்காரராக இருக்கிறார். அதாவது, ராஜாவுக்குத் திராட்ச ரசத்தைக் கொடுக்கும் வேலை செய்கிறார். ராஜாவுக்கு யாராவது விஷம் கலந்து கொடுத்து விடாமல் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டிய வேலை அது. ரொம்ப முக்கியமான வேலை.
ஒருநாள் நெகேமியாவின் சகோதரன் ஆனானி என்பவரும் இஸ்ரவேல் தேசத்திலிருந்து வேறு ஆட்களும் நெகேமியாவைப் பார்க்க வருகிறார்கள். இஸ்ரவேலருக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றியும், எருசலேமின் மதில்கள் இன்னும் கட்டப்படாமல் இருப்பதைப் பற்றியும் அவரிடம் சொல்கிறார்கள். இதனால் நெகேமியா ரொம்ப வருத்தப்படுகிறார். இதைப் பற்றி யெகோவாவிடம் அவர் ஜெபம் செய்கிறார்.
நெகேமியா இப்படி வருத்தமாக இருப்பதை ஒருநாள் ராஜா கவனிக்கிறார், பிறகு அவரைப் பார்த்து: ‘நீ ஏன் சோகமாய் இருக்கிறாய்?’ என்று கேட்கிறார். எருசலேம் மோசமான நிலையில் இருப்பதையும் அதன் மதில்கள் உடைந்து கிடப்பதையும் பற்றி நினைத்தே தான் கவலைப்படுவதாக நெகேமியா சொல்கிறார். அதற்கு ராஜா: ‘உனக்கு இப்போது என்ன வேண்டுமென்று சொல்?’ என்று கேட்கிறார்.
‘அந்த மதில்களை திரும்பக் கட்டுவதற்கு நான் எருசலேமுக்குப் போக வேண்டும், அதற்கு என்னை அனுமதியும்’ என்று நெகேமியா கேட்கிறார். அர்தசஷ்டா ரொம்ப அன்பானவர், அதனால் எருசலேமுக்குப் போக நெகேமியாவை அனுமதிக்கிறார். அதோடு, கட்டிட வேலைக்குத் தேவையான மரத்தை கொடுத்தனுப்பவும் ஏற்பாடு செய்கிறார். இதற்குப் பிறகு நெகேமியா சீக்கிரத்தில் எருசலேமுக்கு வருகிறார், தன்னுடைய திட்டங்களைப் பற்றி ஜனங்களிடம் சொல்கிறார். இந்த யோசனை அவர்களுக்குப் பிடித்திருப்பதால்: ‘வாருங்கள், நாம் அதைக் கட்டத் தொடங்கலாம்’ என்று சொல்கிறார்கள்.
இஸ்ரவேலர் தங்கள் நகரத்தின் மதில்களைக் கட்டுவதைப் பார்த்த எதிரிகள்: ‘நாம் போய் அவர்களைக் கொன்றுபோட்டு, அந்தக் கட்டிட வேலையை நிறுத்துவோம்’ என்கிறார்கள். நெகேமியா இதைக் கேள்விப்பட்டதும் வேலை செய்கிறவர்களுக்குப் பட்டயங்களையும் ஈட்டிகளையும் கொடுத்து, ‘எதிரிகளைக் கண்டு பயப்படாதேயுங்கள். உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம் பண்ணுங்கள்’ என்கிறார்.
அந்த ஜனங்கள் மிகவும் தைரியமாய் இருக்கிறார்கள். இரவும் பகலும் போர் ஆயுதங்களைத் தயாராக வைத்துக்கொண்டு, தொடர்ந்து கட்டிட வேலையில் ஈடுபடுகிறார்கள். அதனால் 52 நாட்களுக்குள் மதில்கள் கட்டி முடிக்கப்படுகின்றன. இப்போது ஜனங்கள் எல்லோரும் நகரத்திற்குள் பயமின்றி இருக்கலாம். நெகேமியாவும் எஸ்றாவும் கடவுளுடைய சட்டத்தை அந்த ஜனங்களுக்குக் கற்பிக்கிறார்கள், அவர்களும் சந்தோஷப்படுகிறார்கள்.
ஆனால், பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டதற்கு முன்பு இஸ்ரவேலர் எந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலை இப்போது இல்லை. அவர்களை பெர்சிய ராஜா ஆளுகிறான், அவர்கள் அவனுக்குச் சேவை செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் ஒரு புதிய ராஜாவை அனுப்புவேன் என்றும், அந்த ராஜா ஜனங்களுக்குச் சமாதானத்தைக் கொண்டு வருவார் என்றும் யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். அந்த ராஜா யார்? அவர் எப்படிப் பூமிக்குச் சமாதானத்தைக் கொண்டு வருவார்? இதைப் பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்வதற்குள் சுமார் 450 ஆண்டுகள் கடந்து விடுகின்றன. பின்பு மிக முக்கியமான ஒரு குழந்தையின் பிறப்பு சம்பவிக்கிறது. ஆனால் அது வேறொரு கதை.