Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கதை 114

எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவு

எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவு

இங்கே நீ என்ன பார்க்கிறாய்? வெள்ளை குதிரைகள் மீது ஒரு படை வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அந்தக் குதிரைகள் எங்கிருந்து வருகின்றன என்பதைக் கவனி. இந்தக் குதிரைகள் மேகங்களின் மேல் பரலோகத்திலிருந்து பாய்ந்து வந்து கொண்டிருக்கின்றன! இவை நிஜமான குதிரைகளா?

இல்லை, இவை நிஜமான குதிரைகள் இல்லை. இது நமக்கு எப்படித் தெரியுமென்றால், குதிரைகள் மேகங்களின் மேல் ஓட முடியாதல்லவா? ஆனால் பரலோகத்தில் குதிரைகள் இருப்பதாக பைபிள் சொல்கிறது. ஏன் என்று உனக்குத் தெரியுமா?

ஏனென்றால் பூமியில் ஒரு காலத்தில் போர் செய்வதற்கு குதிரைகள் ஏராளமாய் உபயோகப்படுத்தப்பட்டன. ஆகவே பரலோகத்திலிருந்து ஆட்கள் குதிரைகள் மீது வருவது போல பைபிள் சொல்வது பூமியிலுள்ள ஜனங்களுடன் கடவுள் ஒரு போர் செய்ய வேண்டியிருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான். அந்தப் போரின் பெயர் என்னவென்று தெரியுமா? அது அர்மகெதோன். அந்தப் போர் பூமியில் எல்லாக் கெட்ட காரியங்களையும் அழிப்பதற்கே தொடுக்கப்படுகிறது.

அந்த அர்மகெதோன் போரில் தலைமை வகிக்கப் போகிறவர் இயேசுவே. யெகோவா தம்முடைய அரசாங்கத்திற்கு ராஜாவாக இயேசுவையே தேர்ந்தெடுத்தார் என்பது உனக்கு நினைவிருக்கலாம். அதனால்தான் இயேசுவின் தலையில் ராஜ கிரீடம் இருக்கிறது. அவரிடமிருக்கிற அந்த வாள் கடவுளுடைய எதிரிகளையெல்லாம் அவர் கொன்று போடுவார் என்று காட்டுகிறது. எல்லாக் கெட்ட ஆட்களையும் கடவுள் அழிப்பார் என்பதைப் பற்றி நாம் ஆச்சரியப்பட வேண்டுமா?

கதை 10-ஐ திருப்பிப் பார். அங்கே நீ என்ன பார்க்கிறாய்? கெட்ட ஜனங்களை அழித்த அந்தப் பெரிய ஜலப்பிரளயத்தைப் பார்க்கிறாய் அல்லவா? அந்த ஜலப்பிரளயத்தை யார் வர வைத்தது? யெகோவா தேவனே. இப்போது கதை 15-ஐப் பார். அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? யெகோவா அனுப்பிய நெருப்பால் சோதோமும் கொமோராவும் அழிக்கப்படுகின்றன.

கதை 33-க்குத் திருப்பு. எகிப்தியரின் குதிரைகளுக்கும் யுத்த இரதங்களுக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று பார். தண்ணீர் திடீரென்று அவர்கள் மேல் புரண்டு மூழ்கும்படி செய்தவர் யார்? யெகோவாவே. தம்முடைய ஜனத்தைப் பாதுகாப்பதற்காக அவர் அதைச் செய்தார். கதை 76-ஐப் பார். யெகோவா, தம்முடைய ஜனமான இஸ்ரவேலரையும் அழித்தார்; ஆம், அவர்கள் கெட்ட காரியங்கள் செய்ததால் அவர்களை அழித்துப் போட்டதை அதில் நீ பார்க்கலாம்.

எனவே, பூமியில் எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் முடிவைக் கொண்டு வருவதற்காக யெகோவா தம்முடைய பரலோகப் படையை அனுப்பப் போவதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதே இல்லை. ஆனால் அதன் பிறகு நிலைமை எப்படி இருக்குமென்று கொஞ்சம் யோசித்துப் பார்! இந்தப் பக்கத்தைத் திருப்பு, நாம் அதைப் பார்க்கலாம்.