Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பதினாறு

‘இயேசு . . . முடிவுவரை அவர்கள்மீது அன்பு காட்டினார்’

‘இயேசு . . . முடிவுவரை அவர்கள்மீது அன்பு காட்டினார்’

1, 2. இயேசு தம்முடைய கடைசி மாலைப்பொழுதை அப்போஸ்தலர்களுடன் எப்படிச் செலவிடுகிறார், இந்தக் கடைசி மணிநேரங்கள் அவருக்கு ஏன் முக்கியமானவை?

 எருசலேமில் ஒரு வீட்டின் மாடிக்கு வரும்படி அப்போஸ்தலர்களிடம் இயேசு சொல்கிறார். அதுவே அவர்களோடு இருக்கப் போகும் கடைசி மாலைப்பொழுது என்பதை அவர் அறிந்திருக்கிறார். தகப்பனிடம் திரும்பிச் செல்ல அவருக்கு நேரம் நெருங்கிவிட்டது. இன்னும் சில மணிநேரத்திற்குள் இயேசு கைது செய்யப்படுவார், வாழ்வில் இதுவரை எதிர்ப்படாத மாபெரும் விசுவாசப் பரிட்சையை எதிர்ப்படப்போகிறார். மரண வாசலில் இருக்கும்போதுகூட அப்போஸ்தலர்களின் தேவைகளை அவர் மறந்துவிடவில்லை.

2 தாம் பிரிந்து செல்வதைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் முன்பே இயேசு சொல்லியிருக்கிறார்; இருந்தாலும், எதிர்காலத்தில் வரப்போகும் சோதனைகளைச் சமாளிக்க இன்னும் நிறைய விஷயங்களை அவர்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே, அவர்களுக்கு முக்கியமான பாடங்களைக் கற்பிக்க எஞ்சியிருக்கும் இந்தப் பொன்னான நேரத்தைச் செலவழிக்கிறார்; அவர் கற்பிக்கும் அந்தப் பாடங்கள் கடைசிவரை உண்மையுடன் நிலைத்திருக்க அவர்களுக்குக் கைகொடுக்கும். இதுவரை அவர்களிடம் சொன்ன வார்த்தைகளைவிட இந்தச் சமயத்தில் அவர் சொல்கிற வார்த்தைகள் மிகவும் கனிவானவை, உருக்கமானவை. சரி, இயேசு ஏன் தம்மைவிட தம் அப்போஸ்தலர்களைப் பற்றி அதிகமாய் கவலைப்படுகிறார்? அவர்களுடன் செலவிடப்போகும் இந்தக் கடைசி மணித்துளிகள் அவருக்கு ஏன் பொன்னானவையாக இருக்கின்றன? ஒரே வார்த்தையில் சொன்னால், அன்புதான்! அவர்கள்மீது அவர் ரொம்பவே அன்பு வைத்திருந்தார்.

3. சீஷர்கள்மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்த இயேசு அந்தக் கடைசி இரவுவரை காத்திருக்கவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?

3 அந்தக் கடைசி இரவன்று அரங்கேறிய சம்பவங்களைப் பல ஆண்டுகளுக்குப் பின்பு அப்போஸ்தலன் யோவான் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பின்வருமாறு எழுதினார்: “இந்த உலகத்தைவிட்டுத் தகப்பனிடம் போவதற்கு நேரம் வந்துவிட்டதென்று பஸ்கா பண்டிகைக்கு முன்பு இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால், உலகத்திலிருந்த தன்னுடைய சீஷர்கள்மேல் அதுவரை அன்பு காட்டியது போலவே முடிவுவரை அன்பு காட்டினார்.” (யோவான் 13:1) இயேசு “தன்னுடைய சீஷர்கள்மேல்” வைத்திருந்த அன்பை வெளிப்படுத்த அந்தக் கடைசி இரவுவரை காத்திருக்கவில்லை. தம் சீஷர்கள்மீது அன்பு வைத்திருந்ததை ஊழிய காலம் முழுவதிலும் பற்பல விதங்களில் காட்டினார். அவர் என்னென்ன விதங்களில் அன்பை வெளிப்படுத்தினார் என்பதைச் சிந்திப்பது நமக்கு பிரயோஜனமாக இருக்கும். ஏனென்றால், இந்த விஷயத்தில் அவரைப் பின்பற்றும்போது நாம் அவருடைய சீஷர்கள் என நிரூபிக்கிறோம்.

பொறுமையாக இருந்தார்

4, 5. (அ) சீஷர்களிடம் இயேசு ஏன் பொறுமையாக நடந்துகொள்ள வேண்டியிருந்தது? (ஆ) கெத்செமனே தோட்டத்தில் அந்த மூன்று அப்போஸ்தலர்கள் விழிப்புடன் இருக்க தவறியபோது இயேசு எப்படி நடந்துகொண்டார்?

4 அன்பும் பொறுமையும் மலரும் மணமும் போன்றது. ‘அன்பு பொறுமை உள்ளது’ என்று 1 கொரிந்தியர் 13:4 சொல்கிறது. நமக்கு பொறுமை இருந்தால் நாம் மற்றவர்கள் செய்வதைப் பொறுத்துக்கொள்வோம். தமது சீஷர்களிடம் பழகியபோது இயேசுவுக்குப் பொறுமை தேவைப்பட்டதா? நிச்சயமாக! 3-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதில் அப்போஸ்தலர்கள் மந்தமாய் இருந்தார்கள். தங்களில் யார் பெரியவர் என்று அடிக்கடி தர்க்கம் செய்தார்கள். அப்போது, இயேசு என்ன செய்தார்? கோபப்பட்டு அவர்களைத் திட்டினாரா? அவர்கள்மீது மனக்கசப்படைந்தாரா? இல்லை, அவர்களுக்குப் பொறுமையாகவே எடுத்துச் சொன்னார். ஏன், தாம் சாகப்போகும் அந்தக் கடைசி இரவன்று இந்த விஷயத்தைக் குறித்து அவர்கள் மத்தியில் ‘கடும் வாக்குவாதம்’ எழுந்தபோதும் பொறுமையாகவே எடுத்துச் சொன்னார்!—லூக்கா 22:24-30; மத்தேயு 20:20-28; மாற்கு 9:33-37.

5 அதற்குப்பின், தம் 11 அப்போஸ்தலர்களுடன் இயேசு கெத்செமனே தோட்டத்திற்குச் சென்றபோது, மீண்டும் அவருடைய பொறுமைக்கு சோதனை வந்தது. எட்டு அப்போஸ்தலர்களை விட்டுவிட்டு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை மட்டும் அழைத்துக்கொண்டு தோட்டத்திற்குள்ளே இயேசு சென்றார். “உயிர் போகுமளவுக்கு நான் துக்கத்தில் தவிக்கிறேன். நீங்கள் இங்கேயே இருந்து, என்னோடு விழித்திருங்கள்” என்று இயேசு அவர்களிடம் சொன்னார். பின்பு, சற்று தூரம் தள்ளிச் சென்று உருக்கமாக ஜெபம் செய்ய தொடங்கினார். நீண்ட நேரம் ஜெபம் செய்துவிட்டு அந்த மூன்று அப்போஸ்தலர்களிடம் திரும்பி வந்தார். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்தச் சமயத்தில், அதுவும் தங்கள் எஜமானருக்குப் பயங்கரமான சோதனை காத்திருந்த சமயத்தில், அவர்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்! விழிப்புடன் இல்லாததற்காக இயேசு அவர்கள்மீது எரிந்துவிழுந்தாரா? இல்லை, பொறுமையாக அவர்களுக்கு ஊக்கமூட்டினார். அவர்களுடைய மனவேதனையையும் பலவீனத்தையும் அவர் புரிந்துகொண்டதை அவருடைய கரிசனையுள்ள வார்த்தைகள் காட்டின. a “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்று அவர்களிடம் சொன்னார். அந்தக் கடைசி இரவு முழுவதும் இயேசு அவர்களிடம் பொறுமையாகவே நடந்துகொண்டார். ஒருமுறை அல்ல மூன்று முறை அவர்கள் தூங்குவதைப் பார்த்தபோதிலும் பொறுமையாகவே நடந்துகொண்டார்.—மத்தேயு 26:36-46.

6. மற்றவர்களுடன் நடந்துகொள்ளும் முறையில் நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்?

6 இயேசு தம் அப்போஸ்தலர்கள்மீது நம்பிக்கை இழந்துவிடவில்லை என்பது நமக்கு ஆறுதலாய் இருக்கிறது. காலப்போக்கில் அவருடைய பொறுமைக்கு பலன் கிடைத்தது. மனத்தாழ்மையுடனும் விழிப்புடனும் இருப்பதன் முக்கியத்துவத்தை இந்த அப்போஸ்தலர்கள் பின்னர் கற்றுக்கொண்டார்கள். (1 பேதுரு 3:8; 4:7) மற்றவர்களுடன் நடந்துகொள்ளும் முறையில் நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்? முக்கியமாக மூப்பர்கள் பொறுமை காக்க வேண்டியிருக்கிறது. ஒரு மூப்பர் களைத்துப்போயிருக்கும் சமயத்தில் அல்லது கவலைகளில் மூழ்கிப்போயிருக்கும் சமயத்தில் சக விசுவாசிகள் தங்கள் பிரச்சினைகளை அவரிடம் கொண்டு வரலாம். சில சமயங்களில், மூப்பர்கள் கொடுக்கும் அறிவுரைகளைக் கடைப்பிடிப்பதில் அவர்கள் மந்தமாக இருக்கலாம். என்றாலும், பொறுமையுள்ள மூப்பர்கள் “சாந்தத்தோடு” அறிவுரை வழங்குவார்கள், ‘மந்தையை அவர்கள் மென்மையாக நடத்துவார்கள்.’ (2 தீமோத்தேயு 2:24, 25; அப்போஸ்தலர் 20:28, 29) பொறுமையாக இருப்பதில் பெற்றோரும் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம். ஏனென்றால், சில சமயங்களில், பிள்ளைகளுக்கு ஏதாவது புத்திமதி சொன்னால் உடனடியாகக் கீழ்ப்படியாமல் போகலாம். இருந்தாலும், நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து பிள்ளைகளைப் பயிற்றுவிக்க அன்பும் பொறுமையும் அவர்களுக்குக் கைகொடுக்கும். இப்படிப் பொறுமையாக இருக்கும்போது மிகுந்த பலன் கிடைக்கும்.—சங்கீதம் 127:3.

அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றினார்

7. எவ்விதங்களில் இயேசு தம் சீஷர்களின் சரீர மற்றும் பொருளாதார தேவைகளை நிறைவேற்றினார்?

7 சுயநலமற்ற நடத்தையில் அன்பு பளிச்சிடும். (1 யோவான் 3:17, 18) அன்பு “சுயநலமாக நடந்துகொள்ளாது” (1 கொரிந்தியர் 13:5) சீஷர்களுடைய சரீர மற்றும் பொருளாதார தேவைகளைக் கவனித்துக்கொள்ள அன்பே இயேசுவைத் தூண்டியது. அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்பே அவர்களுடைய தேவைகளை இயேசு நிறைவேற்றினார். அவர்கள் களைப்பாய் இருந்ததைப் பார்த்தபோது, “தனிமையான ஒரு இடத்துக்குப் போய், கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள்” என்று சொன்னார். (மாற்கு 6:31) அவர்கள் பசியாய் இருந்ததை உணர்ந்தபோது அவர் கேட்காமலேயே அவர்களுக்கு உணவளித்தார். அவர்களோடு சேர்ந்து அவருடைய போதனையைக் கேட்க வந்த ஆயிரக்கணக்கானோருக்கும் உணவளித்தார்.—மத்தேயு 14:19, 20; 15:35-37.

8, 9. (அ) இயேசு தம் சீஷர்களின் ஆன்மீகத் தேவைகளை உணர்ந்து அவற்றை பூர்த்தி செய்தாரென எது காட்டுகிறது? (ஆ) சித்திரவதைக் கம்பத்தில் அறையப்பட்டிருந்தபோது, இயேசு தம் தாயின் நலனில் தமக்கு மிகுந்த அக்கறை இருந்ததை எப்படிக் காட்டினார்?

8 இயேசு தம் சீஷர்களின் ஆன்மீகத் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்றினார். (மத்தேயு 4:4; 5:3) போதிக்கையில் எப்போதும் அவர்கள்மீது தனி கவனம் செலுத்தினார். மலைப் பிரசங்கத்தையும் சீஷர்களின் நன்மைக்காகவே கொடுத்தார். (மத்தேயு 5:1, 2, 13-16) உவமைகளைப் பயன்படுத்தி கற்பித்தபோது அதன் அர்த்தத்தை “சீஷர்களோடு தனியாக இருந்தபோது. . . விளக்கினார்.” (மாற்கு 4:34) கடைசி நாட்களில் தம் சீஷர்களை ஆன்மீக ரீதியில் நன்கு போஷிக்க ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமிக்கப்போவதாக இயேசு முன்னறிவித்தார். கடவுளின் சக்தியால் நியமிக்கப்பட்ட சிறுதொகுதியான அந்த அடிமை, அதாவது பூமியிலுள்ள இயேசுவின் ஆன்மீக சகோதரர்கள், கி.பி. 1919 முதல் இன்றுவரை ‘ஏற்ற வேளையில் [ஆன்மீக] உணவை’ அளித்து வருகிறார்கள்.—மத்தேயு 24:45.

9 மரணத் தறுவாயிலும், தம் அன்புக்குரியவர்களின் ஆன்மீக நலனில் இயேசு வைத்திருந்த அக்கறை நம் நெஞ்சை நெகிழவைக்கிறது. இந்தக் காட்சியை அப்படியே உங்களுடைய மனத்திரையில் ஓடவிடுங்கள். இயேசு சித்திரவதைக் கம்பத்தில் அறையப்பட்டிருக்கிறார், உயிர்போகும் வேதனையில் துடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலைமையில் மூச்சு இழுப்பதே அவருக்குப் பெரும் பாடாக இருந்திருக்கும். அப்படியானால், மூச்சு இழுப்பதற்கு ஒவ்வொரு முறையும் அவர் தம் முழு பலத்தையும் திரட்டி காலை உந்தி எம்பும்போது ஆணி அறையப்பட்ட அவருடைய பாதங்கள் கிழிந்து அவருக்கு எந்தளவு வேதனையை ஏற்படுத்தியிருக்கும். அதுமட்டுமா, சவுக்கடி வாங்கி நார் நாராய் கிழிந்திருந்த முதுகு, சித்திரவதைக் கம்பத்தில் உராய்ந்தபோது அவருக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும். பொதுவாக, நாம் பேசும்போது மூச்சை இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்கும். அப்படியானால், கடும் வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் இயேசுவுக்கு அது இன்னும் எந்தளவு சிரமமாகவும் சித்திரவதையாகவும் இருந்திருக்கும். என்றாலும், அவருடைய தாய் மரியாள்மீது அவர் மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்பதைச் சாவதற்கு சற்று முன்பு அவர் பேசிய வார்த்தைகள் காட்டுகின்றன. மரியாளையும் அவர் அருகே நின்றுகொண்டிருந்த அப்போஸ்தலன் யோவானையும் பார்த்து, அங்கு இருந்தவர்கள் கேட்கும் அளவுக்குச் சத்தமாக, “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்!” என்று தம் தாயிடம் சொன்னார். அடுத்ததாக யோவானைப் பார்த்து, “இதோ! உன் அம்மா!” என்றார். (யோவான் 19:26, 27) உத்தமமுள்ள அந்த அப்போஸ்தலன் மரியாளின் சரீர மற்றும் பொருளாதார தேவைகளை மட்டுமல்ல ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை இயேசுவுக்கு இருந்தது. b

அக்கறையுள்ள பெற்றோர் பிள்ளைகளிடம் பொறுமையாக நடந்து, அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள்

10. பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விஷயத்தில், பெற்றோர் எப்படி இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்?

10 இயேசுவின் முன்மாதிரியை பாசமுள்ள பெற்றோர் சிந்தித்துப் பார்த்து பயனடைகிறார்கள். குடும்பத்தாரை உண்மையாகவே நேசிக்கிற ஒரு தகப்பன் அவர்களுடைய பொருளாதார தேவைகளைக் கவனித்துக்கொள்வார். (1 தீமோத்தேயு 5:8) சமநிலையும் அன்பும் உள்ள குடும்பத் தலைவர்கள் அவ்வப்போது ஓய்வுக்கும் பொழுதுபோக்குக்கும் நேரம் ஒதுக்குகிறார்கள். மிக முக்கியமாக, கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் ஆன்மீகத் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். எப்படி? இவர்கள் தவறாமல் குடும்ப வழிபாடு நடத்துகிறார்கள், பிள்ளைகளுக்குச் சுவாரஸ்யமாகவும் உற்சாகமூட்டும் விதத்திலும் நடத்துகிறார்கள். (உபாகமம் 6:6, 7) ஊழியத்திற்குப் போவதும், கூட்டங்களுக்குத் தயாரிப்பதும், அதில் கலந்துகொள்வதும் கிறிஸ்தவ வழிபாட்டின் முக்கிய அம்சங்கள் என்பதைப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிலும் செயலிலும் கற்பிக்கிறார்கள்.—எபிரெயர் 10:24, 25.

மனதார மன்னித்தார்

11. மன்னிப்பது சம்பந்தமாக இயேசு தம் சீஷர்களுக்கு என்ன பாடம் புகட்டினார்?

11 அன்பின் ஒரு பரிமாணம்தான் மன்னித்தல். (கொலோசெயர் 3:13, 14) அன்பு “தீங்கை கணக்கு வைக்காது” என்று 1 கொரிந்தியர் 13:5 சொல்கிறது. மன்னிப்பது மிக மிக முக்கியம் என இயேசு பல தடவை தம் சீஷர்களுக்குக் கற்பித்தார். “ஏழு தடவை அல்ல, 77 தடவை,” அதாவது கணக்குவழக்கில்லாமல் மன்னிக்கும்படி அவர்களை ஊக்குவித்தார். (மத்தேயு 18:21, 22) தவறு செய்தவரை கண்டித்த பின் அவர் மனந்திரும்பினால் அவரை மன்னித்துவிட வேண்டுமென இயேசு கற்பித்தார். (லூக்கா 17:3, 4) இருந்தாலும், வெளிவேஷம் போட்ட பரிசேயர்களைப் போல் வெறுமனே வாயளவில் கற்பிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதன்படி வாழ்ந்தும் காட்டினார். (மத்தேயு 23:2-4) தம் நம்பிக்கைக்குரிய நண்பனே தமக்கு ஏமாற்றம் அளித்தபோது இயேசு எப்படி அவரை மனதார மன்னித்தார் என்பதை இப்போது பார்க்கலாம்.

12, 13. (அ) இயேசு கைது செய்யப்பட்ட இரவன்று பேதுரு எந்த விதத்தில் அவருக்கு ஏமாற்றம் அளித்தார்? (ஆ) மன்னிக்கும்படி இயேசு வெறுமனே உபதேசிக்கவில்லை, வாழ்க்கையில் கடைப்பிடித்தார் என எப்படிச் சொல்லலாம்?

12 இயேசுவின் நெருங்கிய நண்பனான அப்போஸ்தலன் பேதுரு நல்மனம் படைத்தவர்; ஆனால், சில சமயங்களில் துடுக்காக நடந்துகொள்வார். அவருடைய நல்ல குணங்களை இயேசு பார்த்திருந்ததால் அவருக்குச் சில விசேஷ பொறுப்புகளை அளித்தார். மற்ற அப்போஸ்தலர்கள் பார்க்காத சில அற்புதங்களை யாக்கோபு, யோவானோடு சேர்ந்து பேதுரு பார்த்தார். (மத்தேயு 17:1, 2; லூக்கா 8:49-55) நாம் ஏற்கெனவே கவனித்தபடி, கைது செய்யப்படுவதற்கு முன்பு இயேசு அந்த இரவில் கெத்செமனே தோட்டத்திற்குள் அழைத்துச் சென்ற சீஷர்களில் பேதுருவும் ஒருவர். இருந்தாலும், அதே இரவன்று இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் அவரைத் தனியே விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். பின்பு, இயேசு சட்டவிரோதமாக விசாரணை செய்யப்பட்டபோது பேதுரு தைரியமாக வெளியே நின்றுகொண்டிருந்தார். ஆனால், அவர் பயந்துபோய் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டார். ஆம், தனக்கு இயேசுவை தெரியவே தெரியாது என மூன்று முறை அப்பட்டமாகப் பொய் சொல்லிவிட்டார்! (மத்தேயு 26:69-75) அதற்கு இயேசு எப்படிப் பிரதிபலித்தார்? ஒருவேளை உங்களுடைய நெருங்கிய நண்பர் இப்படி உங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருந்தால் நீங்கள் எப்படிப் பிரதிபலித்திருப்பீர்கள்?

13 பேதுருவை மன்னிக்க இயேசு தயாராயிருந்தார். செய்த தவறை எண்ணி பேதுரு புழுவாய் துடித்துக் கொண்டிருந்ததை இயேசு அறிந்திருந்தார். மனந்திரும்பிய அந்த அப்போஸ்தலன் “மனமுடைந்து அழ ஆரம்பித்தார்.” (மாற்கு 14:72) ஒருவேளை பேதுருவுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிப்பதற்காக தாம் உயிர்த்தெழுந்த நாளில் இயேசு அவருக்குக் காட்சியளித்திருக்கலாம். (லூக்கா 24:34; 1 கொரிந்தியர் 15:5) இரண்டு மாதங்களுக்குள்ளே, பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் கூடிவந்த ஒரு பெரும் கூட்டத்தாரின் முன்னிலையில் சாட்சி கொடுக்கும் பாக்கியத்தை அளித்து பேதுருவை இயேசு கௌரவப்படுத்தினார். (அப்போஸ்தலர் 2:14-40) அப்போஸ்தலர்கள் அனைவரும் தம்மைவிட்டு ஓடிப்போனதற்காக அவர்கள்மீது இயேசு மனஸ்தாபப்படவில்லை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. மாறாக, தாம் உயிர்த்தெழுந்து வந்தபோது அவர்களை ‘என் சகோதரர்கள்’ என்றே அழைத்தார். (மத்தேயு 28:10) மன்னிக்கும்படி இயேசு வெறுமனே உபதேசிக்கவில்லை, வாழ்க்கையில் கடைப்பிடித்தார் என்பது இதிலிருந்து தெரிகிறதல்லவா?

14. நாம் ஏன் மற்றவர்களை மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும், மன்னிக்க மனமுள்ளவர்களாய் இருக்கிறோம் என எப்படிக் காட்டலாம்?

14 கிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் மற்றவர்களை மன்னிக்க கற்றுக்கொள்வது அவசியம். ஏன்? நாம் இயேசுவைப் போல் பரிபூரணர் அல்ல, அபூரணரே; நமக்கு விரோதமாக தவறு செய்பவர்களும் அபூரணர்களே. நாம் எல்லாரும் அவ்வப்போது சொல்லிலும் செயலிலும் தவறிவிடுகிறோம். (ரோமர் 3:23; யாக்கோபு 3:2) இரக்கம் காட்டுவதற்கு நியாயமான காரணம் இருக்கும்போது மன்னிக்க வேண்டும். அப்படி மன்னித்தால்தான் நம்முடைய பாவங்களை கடவுள் மன்னிப்பார். (மாற்கு 11:25) அப்படியானால், நமக்கு யாராவது தீங்கு செய்துவிட்டால் அவர்களை மன்னிக்க மனமுள்ளவர்களாய் இருக்கிறோம் என எப்படிக் காட்டலாம்? பெரும்பாலான சமயங்களில், மற்றவர்களுடைய சின்ன சின்ன தவறுகளையும் குறைபாடுகளையும் பெரிதுபடுத்தாதிருக்க அன்பு நமக்கு உதவி செய்யும். (1 பேதுரு 4:8) நம் மனதைப் புண்படுத்தியவர்கள் பேதுருவைப் போல் உண்மையிலேயே மனந்திரும்பினால், இயேசுவைப் போல் நாமும் அவரை மனதார மன்னிப்போம். அவர்கள்மீது வன்மம் கொள்ளாமல் நடந்ததை மறந்துவிடுவோம். (எபேசியர் 4:32) அப்படிச் செய்யும்போது சபை சமாதானமாக இருக்க துணைபுரிகிறோம், ஏன் நமக்கும்கூட மன அமைதியையும் மன சமாதானத்தையும் தேடிக்கொள்கிறோம்.—1 பேதுரு 3:11.

அவர்கள்மீது நம்பிக்கை வைத்தார்

15. சீஷர்களிடம் குற்றங்குறைகள் இருந்தபோதும்கூட இயேசு ஏன் அவர்கள்மீது நம்பிக்கை வைத்தார்?

15 அன்பும் நம்பிக்கையும் நகமும் சதையும் போன்றது. அன்பு “எல்லாவற்றையும் நம்பும்.” c (1 கொரிந்தியர் 13:7) தம் சீஷர்களின் குறைபாடுகளை அறிந்திருந்தபோதிலும் இயேசு அன்பினால் தூண்டப்பட்டு அவர்கள்மீது நம்பிக்கை வைத்தார். சீஷர்களுக்கு யெகோவாமீது ஆழமான அன்பு இருந்தது... அவர்கள் அவருடைய விருப்பத்தைச் செய்ய விரும்பினார்கள்... என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர்கள் தவறு செய்தபோதும் இயேசு அவர்களுடைய உள்நோக்கத்தைக்குறித்து சந்தேகப்படவில்லை. உதாரணமாக, இயேசு ராஜாவாகையில் அவருடைய வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் உட்கார தங்களுக்கு இடம் அளிக்குமாறு யாக்கோபும் யோவானும் தங்கள் தாய் மூலம் கேட்டபோது இயேசு அவர்களுடைய உத்தமத்தைச் சந்தேகப்படவும் இல்லை, அப்போஸ்தலர்களாக இருக்க அவர்களுக்குத் தகுதியில்லை என்றும் நினைக்கவில்லை.—மத்தேயு 20:20-28.

16, 17. சீஷர்களுக்கு இயேசு என்ன பொறுப்புகளை அளித்தார்?

16 சீஷர்களுக்குப் பல பொறுப்புகளை அளித்ததன் மூலம் இயேசு அவர்கள்மீது நம்பிக்கை வைத்திருந்ததை வெளிப்படுத்தினார். திரளான ஜனங்களுக்கு இரண்டு முறை இயேசு அற்புதமாய் உணவளித்தபோது, உணவைப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். (மத்தேயு 14:19; 15:36) தாம் கடைசியாய் அனுசரிக்கவிருந்த பஸ்கா பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்ய பேதுருவையும் யோவானையும் எருசலேமுக்கு இயேசு அனுப்பினார். ஆட்டுக்குட்டி... திராட்சமது... புளிப்பில்லா ரொட்டி... கசப்பான கீரை... ஆகியவற்றையும் தேவையான மற்ற பொருள்களையும் இவர்கள் எடுத்துவர வேண்டியிருந்தது. இது ஒரு சாதாரண வேலையல்ல. பஸ்காவைத் தகுந்த முறையில் கொண்டாட வேண்டுமென மோசேயின் திருச்சட்டம் குறிப்பிட்டிருந்ததால் இயேசு அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, அந்திசாய்ந்த அந்த வேளையில் தம்முடைய நினைவுநாள் அனுசரிப்பை துவங்கி வைத்தபோது அந்தத் திராட்சமதுவையும் புளிப்பில்லாத ரொட்டியையும் இயேசு முக்கியமான அடையாளச் சின்னங்களாகப் பயன்படுத்தினார்.—மத்தேயு 26:17-19; லூக்கா 22:8, 13.

17 இதைவிட முக்கியமான பொறுப்புகளையும் இயேசு தம் சீஷர்களிடம் மனமார ஒப்படைத்தார். பிரசங்கித்து சீஷராக்கும் முக்கியமான பொறுப்பை இயேசு தம் சீஷர்களிடம் ஒப்படைத்தார் என்பதை நினைவில் வையுங்கள். (மத்தேயு 28:18-20) ஆன்மீக உணவை வழங்கும் முக்கியமான பொறுப்பை, கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்ட தன்னுடைய சீஷர்களில் ஒரு சிறிய தொகுதிக்கு அளிக்கப்போவதாக இயேசு சொன்னார். (லூக்கா 12:42-44) இப்போதும், பரலோகத்திலிருந்து ஆட்சி செய்யும் இயேசு, பூமியிலுள்ள தம் சபைகளைக் கவனிக்கும் பொறுப்பை ஆன்மீகத் தகுதியுள்ள மனிதர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்; இவர்கள் சபைகளுக்கு இயேசு தந்த ‘பரிசு.’—எபேசியர் 4:8, 11, 12.

18-20. (அ) சக விசுவாசிகள்மீது நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று எப்படிக் காட்டலாம்? (ஆ) வேலைகளைப் பகிர்ந்தளிக்கும் விஷயத்தில் நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்? (இ) அடுத்த அதிகாரத்தில் எதைக் குறித்து சிந்திப்போம்?

18 மற்றவர்களுடன் பழகுகையில் நாம் எப்படி இயேசுவின் முன்மாதிரியை பின்பற்றலாம்? சக விசுவாசிகள்மீது நம்பிக்கை வைப்பது நம் அன்பின் வெளிக்காட்டாகும். அன்பு நல்லதையே பார்க்கும், தீயதை அல்ல. மற்றவர்கள் நமக்கு ஏமாற்றம் அளிப்பதை நம்மால் தவிர்க்க முடியாது, இருந்தாலும் நமக்கு அன்பு இருந்தால் அவர்களுக்குக் கெட்ட உள்நோக்கம் இருக்கிறதென சட்டென முடிவுகட்டிவிட மாட்டோம். (மத்தேயு 7:1, 2) சக விசுவாசிகளிடம் உள்ள நல்ல குணங்களையே நாம் பார்த்தால் அவர்களைப் பலப்படுத்துவோமே தவிர அவர்களை நொறுக்கிப்போட மாட்டோம்.—1 தெசலோனிக்கேயர் 5:11.

19 வேலைகளைப் பகிர்ந்தளிக்கும் விஷயத்தில் நாம் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம்? பொருத்தமான வேலைகளை, அர்த்தமுள்ள வேலைகளை மற்றவர்கள் நன்றாக செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு சபையில் பொறுப்பிலுள்ள சகோதரர்கள் அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார்கள். இப்படி செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கின்றன. சபைக்கு உதவியாக இருப்பதற்கு “முயற்சி செய்கிற” சகோதரர்களுக்கு தேவையான சிறந்த பயிற்றுவிப்பை அனுபவமுள்ள மூப்பர்கள் அளிக்கிறார்கள். (1 தீமோத்தேயு 3:1; 2 தீமோத்தேயு 2:2) இந்தப் பயிற்சி இன்றியமையாதது. அநேகரைத் தம்முடைய அமைப்பிற்குள் கூட்டிச் சேர்ப்பதில் யெகோவா தீவிரமாய் செயல்படுவதால் அவர்களையெல்லாம் கண்காணிப்பதற்கு தகுதியுள்ள ஆண்கள் பலரைப் பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது.—ஏசாயா 60:22.

20 அன்பு காட்டும் விஷயத்தில் இயேசு நமக்கு தலைசிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார். எல்லா விஷயங்களிலும் அவரைப் பின்பற்றுவது அவசியமாக இருந்தாலும் அன்பு காட்டும் விஷயத்தில் நாம் அவரைப் பின்பற்றுவது மிக முக்கியம். அடுத்த அதிகாரத்தில், அவருடைய அன்புக்கு மகத்தான அத்தாட்சியை, ஆம், அவர் நமக்காக தம் உயிரையே அர்ப்பணித்ததை, பற்றி சிந்திக்கப்போகிறோம்.

a அந்த அப்போஸ்தலர்கள் களைத்துப்போயிருந்ததால் மட்டுமே அப்படித் தூங்கவில்லை. அவர்கள் “துக்கத்தில் துவண்டுபோய்த் தூங்கிக்கொண்டிருப்பதை” இயேசு கண்டார் என இதே சம்பவத்தைக் குறித்து லூக்கா 22:45 சொல்கிறது.

b மரியாள் ஒருவேளை அந்தச் சமயத்தில் விதவையாக இருந்திருக்கலாம். அவளுடைய மற்ற பிள்ளைகள் இன்னும் இயேசுவின் சீஷர்களாய் ஆகவில்லை எனத் தெரிகிறது.—யோவான் 7:5.

c அதற்காக, அன்பு எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்பும் என்று அர்த்தமல்ல. மாறாக, அன்பு அநாவசியமாக குறை காணாது அல்லது சந்தேகப்படாது. பிறருடைய உள்நோக்கங்களை கண்மூடித்தனமாக நியாயம் தீர்க்காது, தப்புக்கணக்கும் போடாது.