அதிகாரம் பதினெட்டு
“என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா”
1-3. (அ) இயேசு தம் அப்போஸ்தலர்களை விட்டுப் பிரிந்த சூழலை விவரியுங்கள், அது ஏன் ஒரு சோகமான முடிவல்ல? (ஆ) பரலோகத்திற்குச் சென்ற பிறகு இயேசு என்ன செய்தார் என்பதை நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
பதினொரு பேர் மலையில் ஒன்றாகக் குழுமியிருக்கிறார்கள். அன்பும் ஆச்சரியமும் மேலிட, 12-வது நபரை எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர் மனித உருவில் காட்சியளிக்கிறார்; அவர்தான் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு—மீண்டும் யெகோவாவின் வலிமைமிக்க தூதர். கடைசியாக அப்போஸ்தலர்களைக் காண அவர்களை ஒலிவ மலைக்கு இயேசு வரச் சொல்லியிருந்தார்.
2 எருசலேமிலிருந்து கீதரோன் பள்ளத்தாக்கிற்கு அடுத்து அமைந்திருக்கும் மலைத்தொடரின் ஒரு பாகம்தான் ஒலிவ மலை. இந்த மலை இயேசுவின் மனதிற்குப் பழைய நினைவுகளைக் கொண்டுவருகிறது. இந்த மலைத்தொடரில்தான் பெத்தானியா பட்டணம் வீற்றிருக்கிறது, அங்குதான் லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பினார். சில வாரங்களுக்கு முன்புதான் பக்கத்திலிருக்கும் பெத்பகே பட்டணத்திலிருந்து எருசலேமுக்குள் ராஜாவாக இயேசு பவனி வந்தார். இந்த ஒலிவ மலையிலிருந்து கெத்செமனே தோட்டத்தையும் பார்க்கலாம்; இயேசு கைதாவதற்கு முன்பு வேதனைமிக்க கடைசி தருணங்களை அங்குதான் செலவிட்டார். இப்போது, இதே மலையிலிருந்து தம் ஆருயிர் நண்பர்களையும் அன்பு சீஷர்களையும் விட்டுப் பிரிந்து செல்ல தயாராகிறார். அந்தச் சமயத்தில் அன்பொழுகும் வார்த்தைகளைச் சிந்துகிறார். பின்பு, மண்ணுலகைவிட்டு விண்ணுலகிற்குச் செல்கிறார்! அப்போஸ்தலர்கள் அனைவரும் அசையாமல் அப்படியே நிற்கிறார்கள், தங்கள் அன்புக்குரிய எஜமானர் பரலோகத்திற்கு ஏறிச் செல்வதை கண் இமைக்காமல் பார்க்கிறார்கள். பின்பு, ஒரு மேகம் அவர்களுடைய பார்வையிலிருந்து அவரை மறைக்கிறது, அத்துடன் அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை.—அப்போஸ்தலர் 1:6-12.
3 இந்தக் காட்சி சந்தோஷமும் சோகமும் கலந்த ஒரு முடிவுபோல் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அப்போஸ்தலர்களுக்கு இரண்டு தேவதூதர்கள் நினைப்பூட்டுகிறபடி, இயேசுவின் கதை அத்துடன் முடிந்துவிடவில்லை. (அப்போஸ்தலர் 1:10, 11) சொல்லப்போனால், அவர் பரலோகத்திற்கு ஏறிச் செல்வது ஆரம்பம்தான். அதன்பிறகு இயேசுவுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி கடவுளுடைய வார்த்தை நமக்குச் சொல்லாமல் இல்லை. பூமியைவிட்டுச் சென்ற பின்பு இயேசு என்ன செய்தார் என்பதை நாம் தெரிந்துகொள்வது அவசியம். ஏன்? “நீ என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா” என்று பேதுருவிடம் இயேசு சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்திப் பாருங்கள். (யோவான் 21:19, 22) நாம் எல்லாருமே அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும், கொஞ்ச நாளைக்கு மட்டுமல்ல, வாழ்நாள் முழுக்க கீழ்ப்படிய வேண்டும். ஆனால், அதற்கு முன்பு, நம்முடைய எஜமானர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார், பரலோகத்தில் அவருக்கு என்ன பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
பூமியை விட்டுச்சென்ற பின் இயேசுவின் வாழ்க்கை
4. இயேசு பரலோகத்திற்குத் திரும்பிச் சென்றபின் என்ன நடக்கும் என்பதை பைபிள் எப்படி முன்னதாகவே விவரித்தது?
4 இயேசு பரலோகத்திற்குச் சென்றதையும், அவருக்குக் கிடைத்த வரவேற்பையும், அவருடைய தகப்பனுடன் மறுபடியும் இணைந்ததையும் பற்றி பைபிள் நமக்கு எதுவும் சொல்வதில்லை. இருந்தாலும், இயேசு பரலோகத்திற்குத் திரும்பிச் சென்றவுடன் என்ன நடக்கும் என்பதைக் குறித்து பைபிள் முன்னரே வெளிப்படுத்தியது. மோசேயின் காலம் தொடங்கி முதல் நூற்றாண்டுவரை, 15 நூற்றாண்டுகளுக்கும் அதிகமாக யூத மக்கள் வருடாவருடம் புனித சடங்கு நடத்தப்பட்டதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு வருடமும் பாவப் பரிகார நாளில் தலைமைக் குரு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்று ஒப்பந்தப் பெட்டிக்கு முன்பு மிருகங்களின் இரத்தத்தைத் தெளித்தார். அந்த நாளில், தலைமைக் குரு மேசியாவுக்குப் படமாக விளங்கினார். ஆனால், இயேசு பரலோகத்திற்குத் திரும்பிச் சென்ற பிறகு எக்காலத்திற்கும் ஒரே தடவையாக தம்முடைய உயிரை மீட்புவிலையாக செலுத்தினார். இவ்வாறு, அந்தப் புனித சடங்கின் நோக்கத்தை நிறைவேற்றினார், அதாவது பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற வழிசெய்தார். யெகோவாவின் மகிமை பொருந்திய சன்னிதிக்குள் வந்து, ஆம், இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் புனிதமான இடத்திற்குள் வந்து, தம்முடைய தகப்பனிடம் மீட்புவிலையின் மதிப்பை சமர்ப்பித்தார். (எபிரெயர் 9:11, 12, 24) யெகோவா அதை ஏற்றுக்கொண்டாரா?
5, 6. (அ) கிறிஸ்துவின் மீட்புவிலையை யெகோவா ஏற்றுக்கொண்டார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? (ஆ) அந்த மீட்புவிலையிலிருந்து நன்மை அடைகிறவர்கள் யார், எப்படி?
5 இயேசு பரலோகத்திற்குச் சென்று சில நாட்களுக்குள் நடந்த ஒரு சம்பவம் இதற்குப் பதிலளிக்கிறது. சுமார் 120 கிறிஸ்தவர்கள் எருசலேமில் ஒரு வீட்டின் மாடி அறையில் கூடி வந்திருந்தார்கள். திடீரென்று பலத்த காற்று வீசுவது போன்ற சத்தம் வீடு முழுவதும் எதிரொலித்தது. நெருப்பு போன்ற நாவுகள் அவர்களுடைய தலைமீது தோன்றின. அவர்கள் எல்லாரும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு, பல்வேறு மொழிகளில் பேசினார்கள். (அப்போஸ்தலர் 2:1-4) இந்தச் சம்பவம், ஆன்மீக இஸ்ரவேலர் என்று அழைக்கப்படும் புதிய தேசம்—கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவரால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும்‘ அவருடைய ‘ராஜ அதிகாரமுள்ள குருமார்களாகவும்’ இருக்கிற தேசம்—பிறந்திருப்பதைச் சுட்டிக்காட்டியது. (1 பேதுரு 2:9) கிறிஸ்துவின் மீட்புவிலையை யெகோவா தேவன் ஏற்றுக்கொண்டார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இப்படி கடவுள் தம்முடைய சக்தியை அவர்களுக்கு அருளியது மீட்புவிலையினால் கிடைத்த முதல் ஆசீர்வாதங்களில் ஒன்றாகும்.
6 அதுமுதல், கிறிஸ்துவின் மீட்புவிலை உலகெங்கும் அவரைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பலன் அளித்திருக்கிறது. நாம் கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகும் ‘சிறுமந்தையை’ சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவருடைய ஆட்சியின்கீழ் பூமியில் வாழப்போகும் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவருடைய பலியிலிருந்து நன்மை அடைவோம். (லூக்கா 12:32; யோவான் 10:16) இந்தப் பலியே நம் நம்பிக்கைக்கும் நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்த மீட்புவிலையின் மீது ‘விசுவாசம் வைக்கும்’ வரை, அதாவது இயேசுவின் அடிச்சுவடுகளை அன்றாடம் பின்பற்றும் வரை, நமக்கு சுத்தமான மனசாட்சியும் பிரகாசமான எதிர்கால நம்பிக்கையும் இருக்கும்.—யோவான் 3:16.
7. பரலோகத்திற்குச் சென்றபின் இயேசுவுக்கு என்ன அதிகாரம் கொடுக்கப்பட்டது, நீங்கள் எப்படி அவரோடு ஒத்துழைக்கலாம்?
7 பரலோகத்திற்குத் திரும்பி சென்றதுமுதல் இயேசு என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவருக்குப் பேரதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 28:18) கிறிஸ்தவ சபைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பை யெகோவா அவருக்குக் கொடுத்திருக்கிறார். அவர் அந்தப் பொறுப்பை அன்பாகவும் நியாயமாகவும் நிறைவேற்றி வருகிறார். (கொலோசெயர் 1:13) முன்னறிவிக்கப்பட்டபடி, மந்தையின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பை தகுதியுள்ள சகோதரர்களுக்கு இயேசு கொடுத்திருக்கிறார். (எபேசியர் 4:8) உதாரணமாக, பவுலை ‘மற்ற தேசத்து மக்களுக்கு ஓர் அப்போஸ்தலனாக’ நியமித்து, எட்டுத் திக்கும் சென்று பிரசங்கிக்கும்படி சொன்னார். (ரோமர் 11:13; 1 தீமோத்தேயு 2:7) ஆசியாவில் ரோம ஆதிக்கத்தின்கீழ் இருந்த பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த ஏழு சபைகளுக்கு முதல் நூற்றாண்டின் இறுதியில் இயேசு பாராட்டுகளையும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார். (வெளிப்படுத்துதல் 2–3 அதிகாரங்கள்) இயேசுவை கிறிஸ்தவ சபையின் தலைவராக நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? (எபேசியர் 5:23) தொடர்ந்து இயேசுவைப் பின்பற்ற நீங்கள் விரும்பினால், சபையில் கீழ்ப்படியும் மனப்பான்மையை, ஒத்துழைக்கும் மனப்பான்மையை வளர்க்க ஆவலாய் இருப்பீர்கள்.
8, 9. இயேசுவுக்கு 1914-ல் என்ன அதிகாரம் கொடுக்கப்பட்டது, இது நாம் எடுக்கும் தீர்மானங்கள்மீது எப்படிச் செல்வாக்கு செலுத்த வேண்டும்?
8 இயேசுவுக்கு 1914-ல் யெகோவா கூடுதல் அதிகாரம் வழங்கி, மேசியானிய அரசாங்கத்தின் ராஜாவாக அவரை நியமித்தார். இயேசு ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது “பரலோகத்தில் போர் ஆரம்பித்தது.” அதன் விளைவு? சாத்தானும் அவனுடைய பேய்களும் பூமிக்குத் தள்ளப்பட்டார்கள். அப்போதுமுதல் பூமிக்கு கேடுகாலம் ஆரம்பமானது. இன்று உலகெங்கும் தலைவிரித்தாடும் போர்களையும் குற்றச்செயல்களையும் நோய்களையும் நிலநடுக்கங்களையும் பஞ்சங்களையும் பார்க்கும்போது இயேசு இப்போது பரலோகத்தில் ஆட்சி செய்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். தற்போது சாத்தான்தான் இந்த ‘உலகத்தை ஆளுகிறான்,’ ஆனால் அவன் “கொஞ்சக் காலம்தான்” ஆளுவான். (வெளிப்படுத்துதல் 12:7-12; யோவான் 12:31; மத்தேயு 24:3-7; லூக்கா 21:11) என்றாலும், தம்முடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ள உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு இயேசு வாய்ப்பளிக்கிறார்.
9 இந்த மேசியானிய ராஜாவுக்கு நாம் ஆதரவு காட்டுவது அவசியம். ஒவ்வொரு நாளும் நாம் எடுக்கும் தீர்மானங்கள் இயேசுவின் இதயத்தை மகிழ்விக்க வேண்டுமே தவிர சீர்கெட்ட இந்த உலகை அல்ல. ‘ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும், எஜமான்களுக்கெல்லாம் எஜமானாகவும்’ இருக்கிற இயேசு மனிதகுலத்தைப் பார்க்கும்போது நீதியை நேசிக்கும் அவருடைய மனம் ஒருபக்கம் கோபத்தில் கொதித்தெழுந்தாலும் இன்னொரு பக்கம் சந்தோஷத்தில் திளைக்கிறது. (வெளிப்படுத்துதல் 19:16) ஏன்?
மேசியானிய ராஜாவின் கோபமும் சந்தோஷமும்
10. இயேசு எப்படிப்பட்ட இயல்புடையவர், எதைப் பார்த்து நம் எஜமானர் நியாயமாக கோபப்படுகிறார்?
10 தம் தகப்பனைப் போல நம் எஜமானர் இயல்பாகவே சந்தோஷமுள்ளவர். (1 தீமோத்தேயு 1:11) இயேசு குறைகாண்பவரும் அல்ல, அளவுக்குமீறி எதிர்பார்ப்பவரும் அல்ல. ஆனால், இன்று உலகில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் அவருக்கு நிச்சயம் கோபம்தான் வரும். அவருடைய பெயரைச் சொல்லி ஏமாற்றும் மத அமைப்புகள் எல்லாவற்றின் மீதும் அவர் கடும் கோபத்துடன் இருக்கிறார். அதுமட்டுமல்ல, “என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள். அந்த நாளில் நிறைய பேர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே, . . . உங்கள் பெயரில் எத்தனையோ அற்புதங்களைச் செய்தோமே’ என்று சொல்வார்கள்; ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’ என்று சொல்வேன்” என அன்றே சொன்னார்.—மத்தேயு 7:21-23.
11-13. “அற்புதங்களை” செய்யும் மக்களை இயேசு கடுமையாகக் கண்டிப்பது ஏன் சிலருக்கு வினோதமாக இருக்கலாம், இயேசு அப்படிக் கோபப்படுவதற்கு என்ன காரணம்? விளக்குங்கள்.
11 இன்றைக்கு கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அநேகருக்கு இயேசுவின் வார்த்தைகள் வினோதமாக தொனிக்கலாம். அவருடைய பெயரில் “எத்தனையோ அற்புதங்களை” செய்வதாக சொல்லும் மக்களை இயேசு ஏன் அவ்வளவு கடுமையாகக் கண்டனம் செய்கிறார்? சர்ச்சுகள் தானதர்மங்கள் அளித்திருக்கின்றன, ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கின்றன, மருத்துவமனைகளையும் பள்ளிக்கூடங்களையும் கட்டியிருக்கின்றன, இன்னும் எத்தனை எத்தனையோ நற்செயல்களைச் செய்திருக்கின்றன. அப்படியிருந்தும் அவை ஏன் இயேசுவின் கோபத்திற்கு ஆளாயின என்பதைத் தெரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைச் சிந்திப்போம்.
12 ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் வெளியூருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பிள்ளைகளை அவர்களோடு அழைத்துச் செல்ல முடியாத நிலை; அதனால், அவர்களைக் கவனித்துக்கொள்ள ஒரு பெண்ணை அமர்த்துகிறார்கள். அவளிடம் அவர்கள் சொல்லிவிட்டுப்போவதெல்லாம் இவ்வளவுதான்: “பிள்ளைங்கள நல்லா கவனிச்சிக்கோங்க, வேளாவேளைக்கு சாப்பாடு கொடுங்க, அவங்கள குளிப்பாட்டி சுத்தமா வச்சிக்கோங்க, பத்திரமா பாத்துக்கோங்க.” அந்த அப்பா அம்மா திரும்பி வந்து பார்த்தபோது அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி! சரியான சாப்பாடில்லாமல் பிள்ளைகள் மெலிந்து போயிருக்கிறார்கள், ரொம்ப அழுக்காய் இருக்கிறார்கள், நோய்வாய்ப்பட்டு பார்க்கவே பரிதாபமாக இருக்கிறார்கள். அந்தப் பிள்ளைகள் அழுகிறபோதிலும் அந்த வேலைக்காரப் பெண் காதில் போட்டுக்கொள்வதில்லை. ஏன்? அவள் ஏணியில் ஏறி நின்றுகொண்டு ஜன்னல்களைத் துடைத்துக்கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்து அந்தப் பெற்றோருக்குக் கோபம் தலைக்கேறுகிறது. அவள் ஏன் அப்படிச் செய்தாள் என்று கேட்கிறார்கள். அதற்கு அவள், “நான் எவ்வளவு வேலை செஞ்சிருக்கேன்னு பாருங்க. இந்த ஜன்னல்களைப் பாருங்க, எவ்வளவு சுத்தமா வச்சிருக்கேன்! வீட்டை ரிப்பேர் பண்ணி எவ்வளவு நல்லா வச்சிருக்கேன் பாருங்க!! இதெல்லாம் உங்களுக்காகத்தான் செஞ்சிருக்கேன்!!!” என்கிறாள். அதைக் கேட்டு அந்தப் பெற்றோர் சந்தோஷப்படுவார்களா? நிச்சயம் சந்தோஷப்பட மாட்டார்கள்! பிள்ளைகளைத்தான் பார்த்துக்கொள்ள சொன்னார்களே தவிர மற்ற வேலைகளைச் செய்யச் சொல்லவே இல்லை; சொன்னதைச் செய்யாததால் அவர்கள் நிச்சயம் கொதித்துத்தான் போவார்கள்.
13 வேலைக்கு அமர்த்தப்பட்ட அந்தப் பெண்ணைப் போல்தான் கிறிஸ்தவமண்டலமும் நடந்திருக்கிறது. மக்களுக்கு ஆன்மீக உணவு அளிக்கும்படியும், அதாவது கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தைக் கற்பிக்கும்படியும், ஆன்மீக ரீதியில் சுத்தமாய் இருக்க அவர்களுக்கு உதவும்படியும் இயேசு தம்முடைய ஊழியர்களுக்கு அறிவுரை கொடுத்துவிட்டுச் சென்றார். (யோவான் 21:15-17) ஆனால், கிறிஸ்தவமண்டலம் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிய முற்றிலும் தவறிவிட்டது. மக்களுக்கு ஆன்மீக உணவு அளிக்காமல் அவர்களைப் பட்டினி போட்டுவிட்டது, பொய் போதனைகளைக் கற்பித்து அவர்களைக் குழப்பியிருக்கிறது. அடிப்படை பைபிள் சத்தியங்களைப் பொறுத்தவரை, அவர்களை அறியாமையில் விட்டிருக்கிறது. (ஏசாயா 65:13; ஆமோஸ் 8:11) இந்த உலகத்தை முன்னேற்றுவிக்க முயற்சி எடுத்ததால் இயேசு கொடுத்த கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது என்று கிறிஸ்தவமண்டலம் சாக்குப்போக்கு சொல்ல முடியாது. சொல்லப்போனால், இந்த உலகம் சீக்கிரத்தில் இடிக்கப்படும் ஒரு வீட்டைப் போல் இருக்கிறது! சாத்தானின் உலகம் விரைவில் அழிக்கப்படும் என்று கடவுளுடைய வார்த்தை தெளிவாகக் கூறுகிறது.—1 யோவான் 2:15-17.
14. இன்று நடந்துவரும் என்ன வேலை இயேசுவைச் சந்தோஷப்படுத்துகிறது, ஏன்?
14 அதேசமயம், இயேசு இந்தப் பூமியைவிட்டுச் செல்வதற்கு முன் சீஷராக்கும்படி தம்முடைய ஊழியர்களுக்குக் கொடுத்த வேலையை இன்று லட்சக்கணக்கானோர் செய்துவருவதைப் பரலோகத்திலிருந்து பார்க்கும்போது அவர் மிகவும் சந்தோஷப்படுவார். (மத்தேயு 28:19, 20) மேசியானிய ராஜாவை சந்தோஷப்படுத்துவது எவ்வளவு பெரிய பாக்கியம்! எனவே, ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கு’ எப்போதும் உறுதுணையாக இருக்க நாம் தீர்மானமாய் இருப்போமாக. (மத்தேயு 24:45) கிறிஸ்தவமண்டல குருமாரைப் போல் இல்லாமல் கடவுளின் சக்தியால் நியமிக்கப்பட்ட சிறுதொகுதியான இயேசுவின் சகோதரர்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து பிரசங்க வேலையை வழிநடத்தி வந்திருக்கிறார்கள்; அதோடு, அவருடைய மந்தைக்குத் தவறாமல் உணவளித்து வந்திருக்கிறார்கள்.
15, 16. (அ) இன்று உலகெங்கும் மக்கள் மத்தியில் அன்பில்லாததைக் குறித்து இயேசு எப்படி உணருகிறார், அது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) கிறிஸ்தவமண்டலம் ஏன் இயேசுவின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது?
15 அன்பின் வாசமே இல்லாத இந்த உலகைப் பார்த்து நம்முடைய ராஜா கோபமாக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஓய்வுநாளில் இயேசு பலரைக் குணப்படுத்தியபோது பரிசேயர்கள் குறைகூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அவர்கள் அந்தளவு கல்நெஞ்சம் படைத்தவர்களாக, பிடிவாதம் மிக்கவர்களாக இருந்ததால், திருச்சட்டத்திற்கும் வாய்மொழி சட்டத்திற்கும் அவர்கள் கொடுத்த சொந்த விளக்கங்களை விட்டுவிட அவர்களால் முடியவில்லை. இயேசுவின் அற்புதங்கள் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை அளித்தன! இப்படிப்பட்ட அற்புதங்களால் மக்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் கிடைத்தன, அதோடு அவர்களுடைய விசுவாசமும் பலப்பட்டது. ஆனால், பரிசேயர்களுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அவர்களைப் பற்றி இயேசு எப்படி உணர்ந்தார்? “கோபத்தோடு அவர்களைப் பார்த்தார்; அவர்களுடைய இதயம் மரத்துப்போயிருந்ததை நினைத்து மிகவும் துக்கப்பட்டார்.”—மாற்கு 3:5.
16 இன்று அதைவிட மோசமான காரியங்களைப் பார்த்து இயேசு ‘மிகவும் துக்கப்படுகிறார்.’ வேதவசனங்களுக்கு முரணான பாரம்பரியங்களிலும் கோட்பாடுகளிலும் கிறிஸ்தவமண்டல தலைவர்கள் ஊறிப்போயிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுவதைப் பார்த்து அவர்கள் ஆத்திரமடைகிறார்கள். இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நல்ல செய்தியைப் பிரசங்கிக்க கடும் முயற்சி செய்யும் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக உலகின் பல பகுதிகளில் கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள் படுபயங்கரமான துன்புறுத்தல்களைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள். (யோவான் 16:2; வெளிப்படுத்துதல் 18:4, 24) அதேசமயம், போருக்குச் சென்று மற்றவர்களைக் கொலை செய்யும்படி மதத் தலைவர்கள் தங்களுடைய சீஷர்களை உந்துவிக்கிறார்கள்—இதெல்லாம் இயேசு கிறிஸ்துவைப் பிரியப்படுத்தும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
17. இயேசுவின் உண்மைச் சீஷர்கள் எப்படி அவருடைய மனதை மகிழ்விக்கிறார்கள்?
17 ஆனால், இயேசுவின் உண்மைச் சீஷர்கள் மற்றவர்கள்மீது அன்புகாட்ட கடினமாய் முயற்சி செய்கிறார்கள். இயேசுவைப் போலவே ‘எல்லா விதமான மக்களுக்கும்’ எதிர்ப்பின் மத்தியிலும் நல்ல செய்தியை அறிவிக்கிறார்கள். (1 தீமோத்தேயு 2:4) இவர்கள் ஒருவர்மீது ஒருவர் காட்டும் அன்பு ஒப்பற்றது; அதுவே அவர்களுடைய முக்கிய அடையாளச் சின்னம். (யோவான் 13:34, 35) சக கிறிஸ்தவர்களை அன்புடனும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தும்போது அவர்கள் உண்மையிலேயே இயேசுவைப் பின்பற்றுகிறார்கள், மேசியானிய ராஜாவின் மனதை மகிழ்விக்கிறார்கள்!
18. எது நம் எஜமானரின் மனதை வேதனைப்படுத்துகிறது, என்றாலும் நாம் எப்படி அவரைச் சந்தோஷப்படுத்தலாம்?
18 சீஷர்கள் சகித்திருக்க தவறும்போது, அதாவது யெகோவாமீது அவர்களுக்கு இருக்கும் அன்பு தணிந்து அவரைச் சேவிப்பதை விட்டுவிடும்போது, நம் எஜமானரின் மனம் வேதனைப்படும் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். (வெளிப்படுத்துதல் 2:4, 5) இருந்தாலும், இறுதிவரை சகித்திருப்பவர்களைப் பார்த்து இயேசு சந்தோஷப்படுகிறார். (மத்தேயு 24:13) எனவே, “என்னைத் தொடர்ந்து பின்பற்றி வா” என்ற கிறிஸ்துவின் கட்டளையை நாம் எப்போதும் மனதில் வைத்திருப்போமாக. (யோவான் 21:19) கடைசிவரை சகித்திருப்பவர்களுக்கு மேசியானிய ராஜா அருளும் ஆசீர்வாதங்கள் சிலவற்றை இப்போது சிந்திக்கலாம்.
ராஜாவின் உண்மை ஊழியர்களுக்கு மிகுந்த ஆசீர்வாதங்கள்
19, 20. (அ) இயேசுவைப் பின்பற்றும்போது என்னென்ன ஆசீர்வாதங்களை இப்போதே அனுபவிக்கலாம்? (ஆ) கிறிஸ்துவைப் பின்பற்றும்போது அவர் எப்படி நமக்கு ‘என்றென்றுமுள்ள தகப்பனாக’ இருப்பார்?
19 இப்போதே சந்தோஷமான வாழ்க்கை வாழ இயேசுவைப் பின்பற்றுவதுதான் மிகச் சிறந்த வழி. கிறிஸ்துவை நம் எஜமானராக ஏற்றுக்கொண்டால், அதாவது அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றி அவரை நம் முன்னுதாரணமாக வைத்து வாழ்ந்தால், உலக மக்கள் தேடியும் கண்டடையாத அரும்பெரும் பொக்கிஷங்களை நாம் அடைவோம். நோக்கமுள்ள, அர்த்தமுள்ள வேலை நமக்கு இருக்கும், உண்மையான அன்பினால் ஒன்றுபட்டிருக்கும் சக விசுவாசிகளோடு சேர்ந்து ஒரு குடும்பமாக வாழும் பாக்கியம் கிடைக்கும், சுத்தமான மனசாட்சியும் மன சமாதானமும் இருக்கும். சுருங்கச் சொன்னால், திருப்தியும் சந்தோஷமும் நிறைந்த ஒரு வாழ்வை அனுபவிப்போம். இதுபோக இன்னும் அநேக ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
20 பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இயேசுவை ‘என்றென்றுமுள்ள தகப்பனாக’ யெகோவா கொடுத்திருக்கிறார். ஆதாம் மனிதகுலத்தின் தகப்பனாக இருக்க தவறிவிட்டதால் அவனுக்குப் பதிலாக இயேசுதான் நமக்குத் தகப்பனாக இருக்கிறார். (ஏசாயா 9:6, 7) இயேசுவை நம் ‘என்றென்றுமுள்ள தகப்பனாக’ ஏற்றுக்கொண்டு அவர்மீது விசுவாசம் வைக்கும்போதுதான் நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும். இப்படிச் செய்வதன் மூலம் இன்னும் அதிகதிகமாய் யெகோவாவிடம் நாம் நெருங்கிச் செல்வோம். நாம் ஏற்கெனவே சிந்தித்தபடி, “அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்” என்ற தெய்வீக கட்டளைக்குக் கீழ்ப்படிவதற்கு மிகச் சிறந்த வழி, இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்ற நாம் ஒவ்வொரு நாளும் கடினமாய் முயற்சி எடுப்பதாகும்.—எபேசியர் 5:1.
21. இயேசுவைப் பின்பற்றுவோர் இருள் சூழ்ந்த இவ்வுலகில் எப்படி ஒளியைப் பிரதிபலிக்கிறார்கள்?
21 இயேசுவையும் அவருடைய தகப்பன் யெகோவாவையும் பின்பற்றுகையில் அற்புதமான ஒரு காரியத்தை நம்மால் செய்ய முடிகிறது. ஆம், பிரகாசமான ஓர் ஒளியை நம்மால் பிரதிபலிக்க முடிகிறது. இருள் சூழ்ந்த இவ்வுலகில் சாத்தானால் மோசம்போக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் அவனுடைய குணங்களைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், கிறிஸ்துவைப் பின்பற்றுகிற நாம் மிகப் பிரகாசமான ஒளியை எட்டுத் திக்கிலும் பிரதிபலிக்கிறோம். ஆம், பைபிள் சத்தியங்களைத் தெரிவிப்பதோடு கிறிஸ்தவ குணங்களையும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அன்பையும் பிரதிபலிக்கிறோம். அதேசமயத்தில் யெகோவாவிடம் நெருங்கி வருகிறோம். இதுவே மனித வாழ்வின் உன்னத லட்சியம்.
22, 23. (அ) இயேசுவை உத்தமத்தோடு பின்பற்றுவோருக்கு எதிர்காலத்தில் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? (ஆ) நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
22 மேசியானிய ராஜா மூலமாக எதிர்காலத்தில் யெகோவா நமக்கு என்னென்ன செய்யப்போகிறார் என்பதையும் யோசித்துப் பாருங்கள். விரைவில், சாத்தானுடைய பொல்லாத உலகின்மீது அந்த ராஜா போர் தொடுப்பார். வெற்றி இயேசுவுக்கே! (வெளிப்படுத்துதல் 19:11-15) அதற்குப் பிறகு, இப்பூமியின் மீது ஆயிர வருடம் கிறிஸ்து அரசாளுவார். அவருடைய பரலோக அரசாங்கம் மீட்புவிலையின் நன்மைகளை உண்மையுள்ள ஒவ்வொரு நபருக்கும் அளித்து அவர்களைப் படிப்படியாகப் பரிபூரணத்திற்கு உயர்த்தும். நீங்கள் பூரண ஆரோக்கியத்துடனும் புதுப் பொலிவுடனும் இளமை துடிப்புடனும் வலிமையுடனும் இருப்பதையும், சக மனிதர்களோடு சேர்ந்து இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுவதையும் கற்பனை செய்து பாருங்கள்! அந்த ஆயிர வருட ஆட்சியின் முடிவில் ஆட்சி உரிமையை இயேசு தம் தகப்பனிடம் ஒப்படைத்துவிடுவார். (1 கொரிந்தியர் 15:24) கிறிஸ்துவை உத்தமத்தோடு பின்பற்றிக்கொண்டே இருக்கும்போது உங்களால் கற்பனையே செய்துபார்க்க முடியாத ஓர் அற்புதமான ஆசீர்வாதம் உங்களுக்குக் கொடுக்கப்படும். ஆம், ‘கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலை’ கொடுக்கப்படும். (ரோமர் 8:21) ஆதாம் ஏவாள் தொலைத்த எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் அடைவோம். யெகோவாவின் பிள்ளைகளாகிய நாம் ஆதாமின் பாவக் கறையிலிருந்து நிரந்தர விடுதலை பெறுவோம். அப்போது, ‘மரணமே இருக்காது.’—வெளிப்படுத்துதல் 21:4.
23 முதல் அதிகாரத்தில் நாம் பார்த்த அந்த பணக்கார வாலிபனை நினைவுப்படுத்திப் பாருங்கள். “என்னைப் பின்பற்றி வா” என்ற இயேசுவின் அழைப்பை அவன் மறுத்துவிட்டான். (மாற்கு 10:17-22) அந்தத் தவறை நீங்கள் ஒருபோதும் செய்துவிடாதீர்கள்! இயேசுவின் அழைப்பை சந்தோஷமாக... உற்சாகமாக... ஏற்றுக்கொள்ளுங்கள். சகித்திருக்கவும், நல்ல மேய்ப்பனை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடமும் பின்பற்றிக்கொண்டே இருக்கவும், கடைசியில் யெகோவாவின் நோக்கங்களை அவர் நிறைவேற்றுவதை கண்ணார காணவும் தீர்மானமாய் இருங்கள்!