Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பதின்மூன்று

“தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன்”

“தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன்”

1, 2. இயேசுவுடன் அப்போஸ்தலர்கள் கழித்த அந்தக் கடைசி மாலைப்பொழுதைப் பற்றி யோவான் என்ன வெளிப்படுத்துகிறார்?

 முதியவர் ஒருவரின் மனதில் நினைவலைகள் சலசலக்க... மைக்கூட்டில் பேனாவைத் தொட்டெடுக்கிறார். இயேசுவின் எல்லா அப்போஸ்தலர்களும் இறந்துவிட, இவர் மட்டுமே இன்னும் உயிரோடு இருக்கிறார். அவர்தான் யோவான். அவருக்கு இப்போது கிட்டத்தட்ட 100 வயது. 60-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு மறக்க முடியாத ஒரு மாலைப்பொழுதில் நடந்த சம்பவத்தை—அவரும் சக அப்போஸ்தலர்களும் இயேசுவின் மரணத்திற்கு முன்பு அவருடன் கழித்த அந்தக் கடைசி தருணத்தை—மனதில் அசைபோடுகிறார். அன்று நடந்த சம்பவங்களை கடவுளுடைய சக்தி அவருடைய நினைவிற்குக் கொண்டுவர அவற்றையெல்லாம் அப்படியே எழுத்தில் வடிக்கிறார்.

2 தாம் சீக்கிரத்தில் கொலை செய்யப்படுவார் என்ற விஷயத்தை இயேசு அன்று இரவு தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டார். அந்த பயங்கரமான மரணத்தைச் சந்திக்கப்போவதாக இயேசு ஏன் சொன்னார் என்பதற்கான காரணத்தை யோவான் மட்டுமே நமக்கு வெளிப்படுத்துகிறார்: “தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை உலகம் தெரிந்துகொள்வதற்காக என் தகப்பனின் கட்டளைப்படியே செய்கிறேன். எழுந்திருங்கள், இங்கிருந்து போகலாம்.”—யோவான் 14:31.

3. தகப்பன்மீது அன்பு வைத்திருந்ததை இயேசு எப்படிக் காட்டினார்?

3 “தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன்” என்று இயேசு சொன்னதைக் கவனித்தீர்களா? அந்த அன்பைவிட வேறெதுவுமே அவருக்குப் பெரிதாக இருக்கவில்லை. ‘அன்பு வைத்திருக்கிறேன், அன்பு வைத்திருக்கிறேன்’ என்று அவர் வெறுமனே சொல்லிக் கொண்டிருக்கவில்லை. பார்க்கப்போனால், தகப்பன்மேல் அன்பு வைத்திருப்பதாக யோவான் 14:31-ல் மட்டுமே இயேசு இந்தளவு நேரடியாக சொல்லியிருக்கிறார். சொன்னது மட்டுமல்ல, அதன்படியே வாழ்ந்தும் காட்டினார். யெகோவாமீது அவர் வைத்திருந்த அன்பு அவருடைய வாழ்வில் அனுதினமும் வெளிப்பட்டது. இயேசுவின் தைரியம், கீழ்ப்படிதல், சகிப்புத்தன்மை ஆகிய அனைத்தும் அந்த அன்பின் வெளிக்காட்டுகளே. அவரது ஊழியத்திற்குத் தூண்டுகோலாக அமைந்ததும் அந்த அன்பே.

4, 5. எப்படிப்பட்ட அன்பைப் பற்றி பைபிள் அடிக்கடி பேசுகிறது, யெகோவாமீது இயேசு வைத்திருக்கும் அன்பைக் குறித்து என்ன சொல்லலாம்?

4 அன்பு என்றாலே, இன்று சிலருடைய நினைவுக்கு வருவது மென்மைதான். காதல் கவிதைகளும் காதல் கீதங்களும், இன்னும் சொன்னால், காதல் மயக்கமும்தான் அவர்களுடைய மனதிற்கு வருகின்றன. பைபிளும் காதலைப் பற்றி குறிப்பிடுகிறது, என்றாலும் அதை உலகப் பாணியில் சித்தரிக்காமல் கண்ணியமாகச் சித்தரிக்கிறது. (நீதிமொழிகள் 5:15-21) ஆனால், வேறொரு வகையான அன்பைப் பற்றியே பைபிள் அடிக்கடி பேசுகிறது. அந்த அன்பு மோகமோ கணநேர உணர்ச்சியோ அல்ல. அதேசமயத்தில், உணர்ச்சியற்றதும் அல்ல. அது நம் மனதிலிருந்தும் இதயத்திலிருந்தும் பிறக்கும் ஒன்று. அந்த அன்பு நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கிறது, உயர்ந்த நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது, செயல்களில் வெளிக்காட்டப்படுகிறது. அது எவ்விதத்திலும் மேற்பூச்சானது அல்ல. “அன்பு ஒருபோதும் ஒழியாது” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது.—1 கொரிந்தியர் 13:8.

5 இம்மண்ணில் வாழ்ந்த மனிதர்களிலேயே இயேசுதான் யெகோவாமீது அளவில்லா அன்பு கொண்டவர். “உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்” என்று இயேசு தாமே மேற்கோள் காட்டிய உன்னத கட்டளைக்கு இசைவாக, அவரைப் போல் வேறு யாரும் வாழவில்லை. (மாற்கு 12:30) இயேசு எப்படி இத்தகைய அன்பை வளர்த்துக்கொண்டார்? பூமியில் வாழ்ந்த காலத்தில் அந்த அன்பு தணியாதபடி எப்படிப் பார்த்துக்கொண்டார்? நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?

நெடுங்கால பந்தம், உறுதியான பந்தம்

6, 7. நீதிமொழிகள் 8:22-31 ஞானம் என்ற பண்பை அல்ல கடவுளுடைய மகனையே குறிப்பிடுகிறது என்று எப்படிச் சொல்லலாம்?

6 நீங்களும் உங்கள் நண்பரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்த அனுபவம் உண்டா? அதனால் உங்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு இன்னும் நெருக்கமானதை உணர்ந்திருக்கிறீர்களா? அந்த இனிய அனுபவம் யெகோவாவுக்கும் அவரது ஒரே மகனுக்கும் இடையில் நிலவிய அன்பைப் புரிந்துகொள்ள ஓரளவுக்குத் துணைபுரியும். இப்புத்தகத்தில் நீதிமொழிகள் 8:30-ஐ ஏற்கெனவே பலமுறை சிந்தித்திருக்கிறோம். என்றாலும், இப்போது அந்த வசனத்தை முன்னும் பின்னும் உள்ள வசனங்களோடு சிந்திக்கலாம். 22 முதல் 31 வசனங்களில், ஞானம் ஓர் ஆளாக உருவகப்படுத்தி பேசப்படுகிறது. அந்த விவரிப்பு கடவுளுடைய மகனுக்குப் பொருந்துகிறது என்று நாம் எப்படிச் சொல்லலாம்?

7 வசனம் 22-ல் ஞானம் இவ்வாறு சொல்கிறது: “யெகோவா என்னைத்தான் முதன்முதலில் உருவாக்கினார். படைப்புகளிலேயே முதல் படைப்பாக என்னைப் பல காலங்களுக்கு முன்னால் உருவாக்கினார்.” இந்த வசனம் வெறுமனே ஞானத்தைக் குறிப்பதில்லை; ஏனென்றால், அந்தப் பண்பு ‘படைக்கப்படவில்லை.’ அதற்கு ஒரு தொடக்கம் இருக்கவில்லை; காரணம், யெகோவாவுக்குத் தொடக்கமில்லை, அவர் எப்போதுமே ஞானம் பொருந்தியவராய் இருந்து வந்திருக்கிறார். (சங்கீதம் 90:2) கடவுளுடைய மகனோ “படைப்புகளிலேயே முதல் படைப்பாக” இருக்கிறார். ஆகவே அவர் படைக்கப்பட்டார், மற்ற எல்லாவற்றிற்கும் முன்னரே படைக்கப்பட்டார். (கொலோசெயர் 1:15) நீதிமொழிகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, வானமும் பூமியும் உண்டாக்கப்படுவதற்கு முன்பே மகன் இருந்தார். அந்த மகன் கடவுளுடைய வார்த்தையாக, அதாவது சார்பு பேச்சாளராக, இருப்பதால் யெகோவாவுடைய ஞானத்தின் மொத்த வடிவமாக விவரிக்கப்பட்டிருக்கிறார்.—யோவான் 1:1.

8. கடவுளுடைய மகன் இந்தப் பூமிக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார், நாம் படைப்புகளைப் பார்த்து ரசிக்கையில் எதை நினைத்துப்பார்க்க வேண்டும்?

8 கடவுளுடைய மகன் இந்தப் பூமிக்கு வருவதற்கு முன் யுகா யுகங்களாக என்ன செய்துகொண்டிருந்தார்? அவர் கடவுளுக்கு அருகே “கைதேர்ந்த கலைஞனாக” இருந்தார் என 30-வது வசனம் சொல்கிறது. அதன் அர்த்தம் என்ன? கொலோசெயர் 1:16 விளக்குகிறது: “பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, . . . ஆகிய எல்லாம் . . . அவர் மூலம்தான் படைக்கப்பட்டன. எல்லாமே அவர் வழியாகவும் அவருக்காகவும் படைக்கப்பட்டன.” படைப்பாளரான யெகோவா, கைதேர்ந்த கலைஞனான தமது மகனின் மூலம் எல்லாவற்றையும் படைத்தார். ஆம், பரலோகத்திலுள்ள தேவதூதர்கள்... பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சம்... அதிலுள்ள பூமி... அந்தப் பூமியிலுள்ள வகைவகையான செடிகொடிகள்... விலங்கினங்கள்... அதோடு, பூமிக்குரிய படைப்புகளில் மணிமகுடமாய் விளங்கும் மனிதர்கள்... என எல்லாவற்றையும் தம் மகன் மூலமாகவே படைத்தார். தகப்பனும் மகனும் சேர்ந்து செயல்பட்ட விதத்தை, ஒரு கட்டிடக் கலைஞரும் அதைக் கட்டுபவரும் சேர்ந்து செயல்படும் விதத்திற்கு ஒப்பிடலாம். கட்டுபவர், கட்டிடக் கலைஞரின் புதுமையான வடிவமைப்புகளுக்கு உயிர்கொடுத்து கட்டிடத்தை எழுப்புகிறார். நம்மைச் சுற்றியுள்ள படைப்புகளைப் பார்த்து நாம் பிரமிக்கும்போது, உண்மையில் அவற்றை வடிவமைத்த மாபெரும் சிற்பிக்கே புகழ் சேர்க்கிறோம். (சங்கீதம் 19:1) அதேசமயத்தில், படைப்பாளரும் அவரது ‘கைதேர்ந்த கலைஞனும்’ சந்தோஷத்துடன் நெடுங்காலமாய் சேர்ந்து உழைத்ததை நினைத்துப் பார்க்கவும் நாம் தூண்டப்படுகிறோம்.

9, 10. (அ) யெகோவாவுக்கும் அவரது மகனுக்கும் இடையே உள்ள பந்தத்தை எது பலப்படுத்தியது? (ஆ) பரலோகத் தகப்பனுடன் நீங்கள் கொண்டுள்ள பந்தத்தை எது பலப்படுத்தும்?

9 அபூரண மனிதர்கள் இருவர் சேர்ந்து வேலை செய்கையில் ஒருவரையொருவர் அனுசரித்துப்போவது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கிறது. ஆனால், யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் இடையே அப்படியல்ல! கோடானுகோடி ஆண்டுகள் மகன் தமது தகப்பனுடன் வேலை செய்தார்; “அவர்முன் எப்போதும் சந்தோஷமாக இருந்தேன்” என்று இயேசு சொல்வதாக பைபிள் குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 8:30) தகப்பனுடன் இருப்பது மகனுக்குப் பேரானந்தத்தைத் தந்தது, தகப்பனுக்கும் அப்படியே. அதனால்தான், காலங்கள் உருண்டோடுகையில், மகன் தம் தகப்பனின் குணங்களை அப்படியே பின்பற்றி, அவரைப் போலவே ஆனார். தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே முறிக்க முடியாத பந்தம் ஏற்பட்டதில் ஆச்சரியமே இல்லை! எனவே, இந்தப் பிரபஞ்சத்தில் அவர்களுடைய பந்தமே நெடுங்கால பந்தம், உறுதியான பந்தம் என்று சொன்னால் மிகையல்ல.

10 ஆனால், இதைத் தெரிந்துகொள்வதால் நமக்கு என்ன பயன்? யெகோவாவுடன் இப்படிப்பட்ட பந்தத்தை ஒருபோதும் வளர்த்துக்கொள்ள முடியாதென நீங்கள் நினைக்கலாம். உண்மைதான், கடவுளுடைய மகனுக்கு இருக்கும் உயர்ந்த ஸ்தானம் நம் யாருக்குமே இல்லை. என்றாலும், நமக்கு ஓர் அரிய வாய்ப்பு இருக்கிறது. இயேசு தம் தகப்பனோடு சேர்ந்து வேலை செய்ததால் அவருடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொண்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தம்முடைய “சக வேலையாட்களாக” இருக்கும் வாய்ப்பை யெகோவா நமக்கும் அன்போடு அளிக்கிறார். (1 கொரிந்தியர் 3:9) இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றி ஊழியம் செய்கையில், நாம் கடவுளுடைய சக வேலையாட்களாக இருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. ஊழியத்தில் நாம் தொடர்ந்து ஈடுபடுகையில், யெகோவாவுடன் உள்ள நம் பந்தம் மேன்மேலும் பலப்படும். இதைவிட மாபெரும் பாக்கியம் வேறு இருக்க முடியுமா?

இயேசு எப்படி யெகோவாமீது தமக்கிருந்த அன்பு தணியாமல் பார்த்துக்கொண்டார்?

11-13. (அ) அன்பை உயிருள்ள ஒன்றாய் நினைப்பது ஏன் பயனுள்ளது, யெகோவாமீது வைத்திருந்த அன்பு தணிந்துவிடாமல் இளம் இயேசு எப்படிப் பார்த்துக்கொண்டார்? (ஆ) இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவராய் இருந்தாரென எப்படிக் காட்டினார்?

11 நம் உள்ளத்தில் உள்ள அன்பை உயிருள்ள ஒன்றாய் நினைப்பது பலவிதங்களில் பயனளிக்கும். ஓர் அழகான செடி செழித்து வளர, அதைப் பேணிப் பராமரிக்க வேண்டும்; அதைச் சரிவரப் பராமரிக்காமல் அசட்டையாக விட்டுவிட்டால், அது வாடி வதங்கிவிடும். அதுபோலத்தான் அன்பும். யெகோவாமீது தமக்கிருந்த அன்பை பேணி வளர்க்காமல் இயேசு ஒருபோதும் அசட்டையாக இருந்துவிடவில்லை. பூமியிலிருந்த காலமெல்லாம் அந்த அன்பை உறுதியாகவும் செழுமையாகவும் வைத்துக்கொண்டார். எப்படி என்று பார்க்கலாம்.

12 சிறுவயதில் இயேசு ஆலயத்தில் சொன்ன வார்த்தைகளை மறுபடியும் சிந்தித்துப் பாருங்கள். கவலையோடு அவரைத் தேடி வந்த பெற்றோரிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தகப்பனுடைய வீட்டில் இருப்பேன் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று அவர் சொன்னதை நினைத்துப் பாருங்கள். (லூக்கா 2:49) சிறுபிள்ளையாய் இருந்த இயேசுவுக்கு பரலோக வாழ்க்கையைப் பற்றிய நினைவுகள் எதுவும் அப்போது இருக்கவில்லை. என்றாலும், தம் தகப்பனாகிய யெகோவாவை உயிருக்கு உயிராக நேசித்தார். அந்த அன்பை வெளிக்காட்ட அவரை வணங்க வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவேதான், பூமியில் வேறெந்த இடத்தையும்விட தகப்பனின் ஆலயம்தான் அவருக்கு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. அங்கு இருக்கவே அவர் ஏங்கினார், அங்கிருந்து வர அவருக்கு மனமே இல்லை. அதுமட்டுமல்ல, அவர் வெறுமனே பார்வையாளராக அங்கு இருக்கவில்லை. யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ளவும் தமக்குத் தெரிந்தவற்றை மற்றவர்களிடம் சொல்லவும் ஆர்வமுள்ளவராக இருந்தார். இப்படிப்பட்ட அன்பும் ஆர்வமும் அவருக்கு 12 வயதில் வரவில்லை, அந்த வயதிலேயே மறைந்துவிடவும் இல்லை.

13 பரலோகத்தில் இருந்தபோது இயேசு தம் தகப்பனிடமிருந்து நிறைய விஷயங்களை ஆர்வமாகக் கற்றிருந்தார். மேசியாவாக அவர் வகிக்கப்போகும் பங்கைப் பற்றி யெகோவா அவருக்கு விசேஷ கல்வி புகட்டியதாக ஏசாயா 50:4-6-ல் உள்ள தீர்க்கதரிசனம் வெளிப்படுத்துகிறது. மேசியாவாக அவர் அனுபவிக்கப்போகும் பாடுகளைப் பற்றி கற்பிக்கப்பட்டபோதிலும்கூட இயேசு ஆர்வமாகக் கேட்டுக் கற்றுக்கொண்டார். பிற்பாடு, அவர் பூமியில் பிறந்து வளர்ந்து ஆளான சமயத்திலும்கூட, தம் தகப்பனின் ஆலயத்திற்குச் சென்று அவரை வணங்கவும் அவரைப் பற்றி போதிக்கவும் அதே ஆர்வம் காட்டினார். அதனால்தான், ஆலயத்திற்கும் ஜெபக்கூடத்திற்கும் இயேசு தவறாமல் சென்றதாக பைபிள் குறிப்பிடுகிறது. (லூக்கா 4:16; 19:47) யெகோவாமீது நாம் வைத்திருக்கும் அன்பு வாடாமல் செழித்தோங்க வேண்டுமானால், கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தவறாமல் செல்ல வேண்டும்; ஏனென்றால், அங்குதான் நாம் யெகோவாவை வணங்குகிறோம், அவரைப் பற்றிய அறிவையும் அவர் மீதுள்ள மதிப்பையும் வளர்த்துக்கொள்கிறோம்.

“ஜெபம் செய்வதற்காகத் தனியே ஒரு மலைக்கு அவர் போனார்”

14, 15. (அ) இயேசு ஏன் தனிமையைத் தேடினார்? (ஆ) இயேசு தம் தகப்பன்மீது பாசமும் மரியாதையும் வைத்திருந்தார் என்பதை அவருடைய ஜெபங்களிலிருந்து எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

14 இயேசு தவறாமல் ஜெபம் செய்ததன் மூலமும் யெகோவாமீது வைத்திருந்த ஆழ்ந்த அன்பு தணியாமல் பார்த்துக்கொண்டார். அவர் எல்லாரோடும் நன்கு பேசிப் பழகியபோதிலும், சில சமயங்களில் தனிமையை விரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, “அவர் ஜெபம் செய்வதற்காக அடிக்கடி தனிமையான இடங்களுக்குப் போனார்” என்று லூக்கா 5:16 சொல்கிறது. அதுபோல், “கூட்டத்தாரை அனுப்பிய பின்பு, ஜெபம் செய்வதற்காகத் தனியே ஒரு மலைக்கு அவர் போனார். பொழுது சாய்ந்தபோது அவர் அங்கே தனியாக இருந்தார்” என்று மத்தேயு 14:23 குறிப்பிடுகிறது. இப்படிப் பல சந்தர்ப்பங்களில் இயேசு தனிமையைத் தேடிச் சென்றது ஒதுங்கி வாழ விரும்பியதாலோ மற்றவர்களோடு சேர்ந்திருப்பது அவருக்குப் பிடிக்காததாலோ அல்ல. ஆனால் யெகோவாவுடன் தனிமையில் நேரம் செலவிட்டு, அவருடன் மனந்திறந்து பேசிக்கொண்டிருக்க விரும்பியதாலேயே அப்படிச் செய்தார்.

15 இயேசு ஜெபம் செய்தபோது, சிலசமயங்களில் “அபா, தகப்பனே” என்று சொன்னார். (மாற்கு 14:36) இயேசுவின் காலத்தில் “அபா” என்பது “அப்பாவை” அன்பாக அழைக்க பிள்ளைகள் பயன்படுத்திய வார்த்தை. அது பெரும்பாலும், ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் முதல் வார்த்தைகளில் ஒன்றாகும். என்றாலும், அது மரியாதைக்குரிய வார்த்தை. அந்த வார்த்தை தகப்பன்மீது மகனுக்கு இருந்த நெருக்கமான உறவை மட்டுமல்ல, தகப்பனாக யெகோவாவுக்கு இருந்த அதிகாரத்தை மகன் பெரிதும் மதித்ததையும் காட்டியது. பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் ஜெபங்கள் எல்லாமே தகப்பன்மீது மகனுக்கு இருந்த நெருக்கத்தை மட்டுமல்ல மரியாதையையும் எதிரொலிக்கின்றன. உதாரணத்திற்கு, இயேசு பூமியிலிருந்த கடைசி இரவின்போது செய்த உருக்கமான, நீண்ட ஜெபம் யோவான் 17-ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. அந்த ஜெபத்தை வாசிக்கையில் நாம் மனம் நெகிழ்ந்துபோகிறோம்; நாமும் அதேபோல் ஜெபிப்பது முக்கியம். அதற்காக, இயேசு சொன்ன வார்த்தைகளையே சொல்ல வேண்டும் என்றில்லை. மாறாக, நம் பரலோகத் தகப்பனிடம் அடிக்கடி மனந்திறந்து பேச வாய்ப்பு தேட வேண்டும். அப்படிச் செய்கையில் அவர் மீதுள்ள நம் அன்பு உயிருள்ளதாகவும் உறுதியுள்ளதாகவும் இருக்கும்.

16, 17. (அ) இயேசு தம் தகப்பன் மீதிருந்த அன்பை எப்படி வார்த்தைகளில் தெரிவித்தார்? (ஆ) தகப்பனின் தாராள குணத்தை இயேசு எவ்வாறு சித்தரித்தார்?

16 நாம் ஏற்கெனவே கவனித்தபடி, “தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன்” என்று இயேசு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கவில்லை. என்றாலும், தகப்பன் மீதிருந்த அன்பை அவர் பலமுறை வார்த்தைகளில் தெரிவித்தார். எப்படி? “தகப்பனே, பரலோகத்துக்கும் பூமிக்கும் எஜமானே, எல்லார் முன்னாலும் நான் உங்களைப் புகழ்கிறேன்” என்று இயேசுவே சொன்னார். (மத்தேயு 11:25) இந்தப் புத்தகத்தின் 2-ஆம் பாகத்தில் நாம் பார்த்தபடி, மக்களுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுப்பதன் மூலம் அவரைப் புகழ இயேசு விரும்பினார். உதாரணத்திற்கு, கீழ்ப்படியாத மகனை மன்னிக்கத் தயாராயிருந்த ஒரு தகப்பனுக்கு யெகோவாவை ஒப்பிட்டுப் பேசினார்; அந்தத் தகப்பன் தன்னுடைய மகன் மனந்திருந்தி வர மாட்டானா என்று ஆவலோடு காத்திருந்ததாகவும், பின்பு அவன் வருவதைத் தூரத்திலிருந்தே பார்த்து, ஓடிப்போய் அவனைக் கட்டித்தழுவியதாகவும் குறிப்பிட்டார். (லூக்கா 15:20) யெகோவாவின் அன்பையும் மன்னிக்கிற குணத்தையும் சித்தரித்துக் காட்டும் இந்த உதாரணத்தைப் படித்து நெகிழ்ந்துபோகாதவர்கள் யாருமே இல்லை.

17 இயேசு தம் தகப்பனின் தாராள குணத்தைப் பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசினார். கடவுள் தமது சக்தியை நமக்கு நிச்சயம் அளிப்பார் என்பதை அபூரண பெற்றோரின் உதாரணத்தைப் பயன்படுத்தி விளக்கினார். (லூக்கா 11:13) தகப்பன் தாராளமாக அளிக்கிற நம்பிக்கையைப் பற்றியும் இயேசு குறிப்பிட்டார். முதலாவதாக, தாம் பரலோகத்தில் தகப்பனுக்கு அருகே மறுபடியும் இருக்கப்போகும் நம்பிக்கையைப் பற்றி இயேசு ஆசை ஆசையாகப் பேசினார். (யோவான் 14:28; 17:5) அடுத்ததாக, ‘சிறுமந்தைக்கு’ யெகோவா அளித்த நம்பிக்கையைக் குறித்து, அதாவது பரலோகத்திற்குச் சென்று மேசியாவோடு சேர்ந்து ஆட்சி செய்யும் நம்பிக்கையைக் குறித்து, தம் சீஷர்களிடம் பேசினார். (லூக்கா 12:32; யோவான் 14:2) அதுமட்டுமல்ல, பூஞ்சோலையில் வாழும் நம்பிக்கையைப் பற்றி சொல்லி, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஒரு குற்றவாளிக்கு ஆறுதல் அளித்தார். (லூக்கா 23:43) இவ்வாறு, தாராள குணமுடைய தம் தகப்பனைப் பற்றி மற்றவர்களிடம் பேசியதன்மூலம் யெகோவாமீது தமக்கு இருந்த அன்பு தணியாமல் இயேசு பார்த்துக்கொண்டார். யெகோவாவைப் பற்றியும் அவரை நேசிப்போருக்கு அவர் அளிக்கும் நம்பிக்கையைப் பற்றியும் மற்றவர்களிடம் பேசும்போது அவர் மீதுள்ள தங்கள் அன்பும் விசுவாசமும் அதிகமாக பலப்படுவதாக கிறிஸ்துவின் சீஷர்களில் பெரும்பாலோர் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.

இயேசுவைப் போல் யெகோவாவை நேசிப்பீர்களா?

18. இயேசுவை நாம் பின்பற்ற வேண்டிய வழிகளிலேயே மிக முக்கியமான வழி எது, ஏன்?

18 இயேசுவை நாம் பின்பற்ற வேண்டிய வழிகளிலேயே மிக முக்கியமான வழி: யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்டுவதே. (லூக்கா 10:27) அந்த அன்பு நம் உள்ளத்தில் பொங்கி வழிந்தால் மட்டும் போதாது, நம் செயல்களிலும் பளிச்சிட வேண்டும். இயேசு தம் தகப்பன்மீது உள்ளத்தில் அன்பு கொண்டிருந்ததோடு திருப்தியடையவில்லை; அதேசமயம் ‘நான் தகப்பன்மேல் அன்பு வைத்திருக்கிறேன்’ என்று வாயளவில் சொல்வதோடும் திருப்தியடையவில்லை. மாறாக, “தகப்பன்மேல் நான் அன்பு வைத்திருக்கிறேன் என்பதை உலகம் தெரிந்துகொள்வதற்காக என் தகப்பனின் கட்டளைப்படியே செய்கிறேன்” என்று அவர் சொன்னார். (யோவான் 14:31) மனிதர்கள் சுயநல நோக்கத்தோடுதான் யெகோவாவைச் சேவிக்கிறார்கள் என்று சாத்தான் சவால் விட்டிருந்தான். (யோபு 2:4, 5) அவனுடைய அபாண்டமான பழிக்குத் தக்க பதிலடி கொடுப்பதற்காக, இயேசு தைரியமாகச் செயல்பட்டு தகப்பன்மீது தாம் கொண்டிருந்த அளவில்லா அன்பை இவ்வுலகிற்குக் காட்டினார். தம் உயிரையே தியாகம் செய்யுமளவு தம் தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார். நீங்கள் இயேசுவைப் பின்பற்றுவீர்களா? நீங்கள் யெகோவா தேவனை நெஞ்சார நேசிப்பதை இவ்வுலகிற்குக் காட்டுவீர்களா?

19, 20. (அ) என்ன முக்கியமான காரணங்களுக்காக கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு நாம் தவறாமல் செல்ல வேண்டும்? (ஆ) தனிப்பட்ட படிப்பு படிப்பது, ஆழமாக யோசிப்பது, ஜெபம் செய்வது ஆகியவற்றை நாம் எப்படிக் கருத வேண்டும்?

19 ஆன்மீக ரீதியில் நாம் ஆரோக்கியமாய் இருப்பதற்கு, யெகோவாமீது ஆழ்ந்த அன்பு வைத்திருப்பது அத்தியாவசியம். அந்த அன்பு வளர்ந்து செழித்தோங்குவதற்கு உதவியாக யெகோவா நமக்கு ஒரு வழிபாட்டு முறையை ஏற்பாடு செய்திருக்கிறார். கடவுளை வணங்குவதற்காகவே நீங்கள் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்கிறீர்கள் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். கூட்டங்களில் ஜெபம் செய்யப்படும்போது அங்கு இருப்பது, யெகோவாவைப் புகழ்ந்து பாடுவது, கூர்ந்து கவனிப்பது, வாய்ப்பு கிடைக்கும்போது பதில் சொல்வது போன்றவை அந்த வணக்கத்தின் சில அம்சங்கள். சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தவும் கூட்டங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன. (எபிரெயர் 10:24, 25) கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தவறாமல் சென்று யெகோவாவை வணங்கும்போது, அவர் மீதுள்ள உங்கள் அன்பு மேன்மேலும் பலப்படும்.

20 இதுபோலவே, தனிப்பட்ட படிப்பு படிப்பது... அதை ஆழமாக யோசிப்பது... ஜெபம் செய்வது... ஆகியவை யெகோவா மீதுள்ள அன்பில் செழித்தோங்க உங்களுக்கு உதவும். யெகோவாவுடன் தனிமையில் நேரம் செலவிட கிடைத்த வாய்ப்புகளாக இவற்றைக் கருதுங்கள். நீங்கள் பைபிளைப் படித்து ஆழமாக யோசிக்கும்போது, யெகோவா தம்முடைய சிந்தனைகளை உங்களுக்குத் தெரிவிக்கிறார். நீங்கள் ஜெபம் செய்யும்போது, அவரிடம் மனம் திறந்து பேசுகிறீர்கள். ‘அது வேண்டும், இது வேண்டும்’ என்று கடவுளிடம் கேட்பது மட்டுமே ஜெபம் அல்ல என்பதை நினைவில் வையுங்கள். யெகோவா தந்த ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி சொல்லவும், அவருடைய அற்புத செயல்களுக்காக அவரைப் புகழவும் ஜெபம் சிறந்த வாய்ப்பளிக்கிறது. (சங்கீதம் 146:1) அதோடு, சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் யெகோவாவைப் பற்றி மற்றவர்களிடம் புகழ்ந்து பேசுவதும்கூட அவருக்கு உங்கள் நன்றியைத் தெரிவிக்க... அன்பைக் காட்ட... மற்றொரு சிறந்த வழியாகும்.

21. யெகோவாமீது அன்பு காட்டுவது எந்தளவு முக்கியம், இனிவரும் அதிகாரங்களில் எதைக் குறித்து சிந்திப்போம்?

21 காலமெல்லாம் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு முக்கிய வழி, கடவுள்மீது அன்பு காட்டுவதே. ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படிந்து நடப்பதற்குத் தேவைப்பட்டதெல்லாம் அந்த அன்புதான், அவர்கள் வளர்த்துக்கொள்ளத் தவறியதும் அந்த அன்புதான். நீங்கள் எல்லாவித விசுவாசப் பரிட்சையைச் சந்திப்பதற்கும், எல்லாவித கெட்ட ஆசையைத் தவிர்ப்பதற்கும், எல்லாவித சோதனையைச் சகிப்பதற்கும் மிக முக்கியமானது அந்த அன்புதான். சொல்லப்போனால், நீங்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக இருப்பதற்கு மூலகாரணமே அந்த அன்புதான். என்றாலும், கடவுள் மீதுள்ள அன்பும் சக மனிதர் மீதுள்ள அன்பும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன. (1 யோவான் 4:20) இனிவரும் அதிகாரங்களில், இயேசு எவ்வாறு மக்களிடம் அன்பு காட்டினார் என்பதைச் சிந்திப்போம். அடுத்த அதிகாரத்தில், மக்கள் எவ்வித தயக்கமுமின்றி இயேசுவை அணுகியதற்கு என்ன காரணம் என்பதைச் சிந்திப்போம்.