Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பதினான்கு

“மக்கள் கூட்டம் கூட்டமாக அவரிடம் வந்தார்கள்”

“மக்கள் கூட்டம் கூட்டமாக அவரிடம் வந்தார்கள்”

“சின்னப் பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்”

1-3. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டுவந்த சமயத்தில் என்ன நடக்கிறது, அதிலிருந்து இயேசுவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?

 தமது பூமிக்குரிய வாழ்க்கை விரைவில் அஸ்தமிக்கப்போகிறது என்பதை இயேசு அறிந்திருக்கிறார். இன்னும் சில வாரங்களே அவருக்கு எஞ்சியிருக்கின்றன, அதற்குள் எத்தனையோ காரியங்களை அவர் செய்து முடிக்க வேண்டியிருக்கிறது! யோர்தான் நதிக்கு கிழக்கே இருந்த பெரேயா நகரத்தில் தமது அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். பின்னர், அவர்கள் தெற்கே எருசலேமை நோக்கி பயணிக்கையில் நல்ல செய்தியை அறிவித்துக்கொண்டே போகிறார்கள்; அங்குதான் இயேசு தமது கடைசி பஸ்காவை, மிக முக்கியமான பஸ்காவை, அனுசரிக்கப் போகிறார்!

2 மதத் தலைவர்கள் சிலருக்கு வலிமையான ஒரு குறிப்பை இயேசு உணர்த்திக் கொண்டிருந்தபோது, ஒரு சிறிய தடங்கல் ஏற்படுகிறது. மக்கள் எல்லாரும் தங்களுடைய பிள்ளைகளை அவரிடம் கொண்டுவருகிறார்கள். அந்தப் பிள்ளைகள் பலதரப்பட்ட வயதைச் சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள்; ஏனென்றால், 12 வயது சிறுமியைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்திய அதே வார்த்தையைத்தான் இந்தப் பதிவிலும் மாற்கு பயன்படுத்தியிருக்கிறார்; ஆனால் லூக்கா, “கைக்குழந்தைகளை” குறிக்கும் வார்த்தையை மூல மொழி பதிவில் பயன்படுத்தியிருக்கிறார். (லூக்கா 18:15; மாற்கு 5:41, 42; 10:13) பொதுவாக, பிள்ளைகள் இருக்கும் இடத்தில் கூச்சலும் குழப்பமும் இருக்கத்தான் செய்யும், அன்றைக்கும் அப்படித்தான். இயேசுவின் சீஷர்கள் அந்தப் பிள்ளைகளின் பெற்றோரை அதட்டுகிறார்கள்; பிள்ளைகளைப் பார்க்க தங்கள் எஜமானருக்கு நேரமில்லை என்று ஒருவேளை அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இயேசு என்ன செய்கிறார்?

3 அதைக் கண்டு இயேசு கோபமடைகிறார். யார் மீது? பிள்ளைகள் மீதா? பெற்றோர் மீதா? இல்லை, தம்முடைய சீஷர்கள் மீது! “சின்னப் பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்; இப்படிப்பட்டவர்களுக்கே கடவுளுடைய அரசாங்கம் சொந்தமாகும். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு சின்னப் பிள்ளையைப் போலிருந்து கடவுளுடைய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளாத எவனும் அதில் அனுமதிக்கப்படவே மாட்டான்” என்று அவர் சொல்கிறார். பின்பு, அந்தப் பிள்ளைகளை “அணைத்துக்கொண்டு” அவர்களை ஆசீர்வதிக்கிறார். (மாற்கு 10:13-16) மாற்கு பயன்படுத்திய வார்த்தைகளின்படி பார்த்தால், இயேசு அந்தப் பிள்ளைகளை அன்போடு அரவணைத்துக் கொள்கிறார். சில குழந்தைகளை இயேசு “கையில் ஏந்தி மார்போடு அணைத்துக் கொண்டதாகவும்” கூட ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழி பெயர்த்திருக்கிறார். இயேசுவுக்கு சின்னஞ்சிறுசுகள் என்றால் கொள்ளைப் பிரியம் என்று இதிலிருந்து தெரிகிறது. அதேசமயத்தில், எவரும்... எந்நேரத்திலும்... அவரை அணுகலாம் என்றும் தெரிகிறது.

4, 5. (அ) எல்லாரும் இயேசுவைத் தாராளமாக அணுக முடிந்தது என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) இந்த அதிகாரத்தில் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?

4 இயேசு கடுகடுவென்றோ சிடுசிடுவென்றோ இருந்திருந்தால், அந்தச் சின்னஞ்சிறுசுகள் அவரிடம் ஆசை ஆசையாக போயிருக்க மாட்டார்கள்; அவர்களுடைய பெற்றோரும் எந்தத் தயக்கமுமின்றி தாராளமாகப் போய் அவரைப் பார்த்திருக்க மாட்டார்கள். அன்புள்ளம் படைத்த இயேசு, குழந்தைகளைக் கடவுளுடைய கண்மணிகளாக கருதி அள்ளி அணைத்து ஆசீர்வதிப்பதைப் பார்த்து அந்தப் பெற்றோர் எவ்வளவு ஆனந்தப்பட்டிருப்பார்கள்! அவருக்கு மாபெரும் பொறுப்புகள் இருந்தபோதிலும், எல்லாராலும் அவரைத் தாராளமாக அணுக முடிந்தது.

5 வேறு யாரெல்லாம் தயக்கமில்லாமல் இயேசுவை அணுகினார்கள்? காந்தம்போல் இயேசுவிடம் மக்கள் ஈர்க்கப்பட்டதற்கு காரணம் என்ன? இவ்விஷயத்தில் இயேசுவைப் பின்பற்ற நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? இதற்கான பதிலை இப்போது பார்க்கலாம்.

யாரெல்லாம் தயக்கமில்லாமல் இயேசுவை அணுகினார்கள்?

6-8. பெரும்பாலும் இயேசுவைச் சுற்றி யார் இருந்தார்கள், பாமரர்களைப் பற்றிய அவருடைய கண்ணோட்டம் எப்படி மதத் தலைவர்களின் கண்ணோட்டத்திலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது?

6 மக்கள் கொஞ்சமும் தயங்காமல் கூட்டம் கூட்டமாக இயேசுவிடம் வந்ததைப் பற்றி சுவிசேஷப் பதிவுகளில் வாசிக்கும்போது நீங்கள் மலைத்துப்போவீர்கள். உதாரணத்திற்கு, அவரிடம் “மக்கள் கூட்டம் கூட்டமாக” வந்ததைப் பற்றி அடிக்கடி வாசிக்கிறோம். ‘கலிலேயாவிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அவருக்குப் பின்னால் போனார்கள்,’ ‘மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்தார்கள்,’ “மக்கள் கூட்டம் கூட்டமாக அவரிடம் வந்தார்கள்,” “மக்கள் கூட்டம் கூட்டமாக இயேசுவோடு பயணம் செய்துகொண்டிருந்தார்கள்” என்றெல்லாம் நாம் வாசிக்கிறோம். (மத்தேயு 4:25; 13:2; 15:30; லூக்கா 14:25) ஆம், இயேசு பெரும்பாலும் மக்கள் படைசூழவே இருந்தார்.

7 பொதுவாக, அந்த மக்கள் எல்லாரும் பாமரர்களாகவே இருந்தார்கள்; மதத் தலைவர்கள் அவர்களை “மண்ணுக்குரிய மக்கள்” என்று ஏளனமாக அழைத்தார்கள். “திருச்சட்டத்தைப் புரிந்துகொள்ளாத இந்த மக்கள் சபிக்கப்பட்டவர்கள்” என்று பரிசேயர்களும் குருமார்களும் வாய்கூசாமல் சொன்னார்கள். (யோவான் 7:49) ரபீக்களின் பிற்கால எழுத்துக்கள் இதை உறுதிசெய்கின்றன. மதத் தலைவர்கள் பலர் அந்தப் பாமர மக்களைத் தாழ்வானவர்களாகக் கருதினார்கள்; அவர்களோடு சாப்பிட மறுத்தார்கள், பழக மறுத்தார்கள், அவர்களிடமிருந்து எதையும் வாங்க மறுத்தார்கள். ஏன், வாய்மொழி சட்டத்தை அறியாத அந்த மக்களுக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்றுகூட சிலர் அடித்துச் சொன்னார்கள்! அப்படிப்பட்ட தலைவர்களிடம் உதவியோ ஆலோசனையோ கேட்க பயந்து எத்தனையோ பாமரர்கள் அவர்களைவிட்டு நிச்சயம் ஒதுங்கித்தான் போயிருப்பார்கள். ஆனால், இயேசு வித்தியாசமாக இருந்தார்!

8 பாமர மக்களோடு இயேசு சகஜமாகப் பழகினார். அவர்களோடு சாப்பிட்டார், அவர்களைக் குணப்படுத்தினார், அவர்களுக்குக் கற்பித்தார், அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார். அதேசமயத்தில் இயேசு எதார்த்தமாக சிந்தித்தார்; பெரும்பாலானோர் யெகோவாவைச் சேவிக்க முன்வர மாட்டார்கள் என்பதை அறிந்திருந்தார். (மத்தேயு 7:13, 14) இருந்தாலும், ஒவ்வொரு நபரையும் வருங்கால சீஷராகவே பாவித்தார், சரியானதைச் செய்யும் மனம் அவர்களுக்கு இருப்பதைக் கண்டார். கல்நெஞ்சம் படைத்த அந்த மதத் தலைவர்களுக்கும் இயேசுவுக்கும் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த மதத் தலைவர்களும் பரிசேயர்களும்கூட இயேசுவை அணுகினார்கள்; அவர்களில் பலர் தங்களுடைய வழிகளை மாற்றிக்கொண்டு அவரைப் பின்பற்றினார்கள். (அப்போஸ்தலர் 6:7; 15:5) செல்வந்தர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் சிலரும்கூட தயக்கமில்லாமல் இயேசுவை அணுகினார்கள்.—மாற்கு 10:17, 22.

9. பெண்கள் ஏன் இயேசுவைத் தயக்கமில்லாமல் அணுகினார்கள்?

9 பெண்களும் எந்தத் தயக்கமுமின்றி இயேசுவை அணுகினார்கள். மதத் தலைவர்கள் தங்களைக் கால் தூசியாக கருதியதை எண்ணி அந்தப் பெண்கள் உள்ளுக்குள் குமுறியிருப்பார்கள். பெண்களுக்குப் போதித்தவர்களைப் பார்த்து ரபீக்கள் பொதுவாக முகம் சுளித்தார்கள். சொல்லப்போனால், வழக்குகளில் சாட்சி சொல்ல பெண்கள் அனுமதிக்கப்படவில்லை; அவர்களுடைய சாட்சி ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைவிடக் கொடுமை, பெண்களாகப் பிறக்காததற்காக கடவுளுக்கு நன்றி சொன்னார்கள் அந்த ரபீக்கள்! ஆனால், அந்தப் பெண்கள் இயேசுவிடம் இதுபோன்ற எந்த வெறுப்பையும் துளிகூட காணவில்லை. அதனால் அவர்களில் பலர் அவரைத் தாராளமாக அணுகினார்கள், அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஆவலாய் இருந்தார்கள். உதாரணத்திற்கு, லாசருவின் சகோதரியான மரியாள் இயேசுவின் காலடியில் உட்கார்ந்து அவர் சொன்னதை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள்; அவளுடைய சகோதரி மார்த்தாளோ சமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் படப்படப்புடன் இருந்தாள். ஆகவே, முக்கியமானவற்றுக்கு முதலிடம் கொடுத்ததற்காக மரியாளை இயேசு பாராட்டினார்.—லூக்கா 10:39-42.

10. நோயாளிகளை நடத்தும் விதத்தில் இயேசு எவ்வாறு மதத் தலைவர்களிலிருந்து வித்தியாசமாக இருந்தார்?

10 நோயாளிகளும்கூட இயேசுவிடம் திரண்டு வந்தார்கள்; பொதுவாக மதத் தலைவர்கள் அவர்களை ஒதுக்கி வைத்தார்கள். சுகாதாரத்திற்காக தொழுநோயாளிகளை ஒதுக்கி வைக்க வேண்டுமென திருச்சட்டம் குறிப்பிட்டது; அதற்காக அவர்களை ஈவிரக்கமின்றி நடத்தும்படி சொல்லவில்லை. (லேவியராகமம், அதிகாரம் 13) என்றாலும் தொழுநோயாளிகள், மலத்தைப் போல் அருவருப்பானவர்கள் என்று ரபீக்களுடைய பிற்கால சட்டங்கள் குறிப்பிட்டன. மதத் தலைவர்கள் சிலர், தொழுநோயாளிகள் தங்கள் அருகே வராதிருக்க அவர்கள்மேல் கற்களையும் எறிந்தார்கள்! அந்தளவு கொடூரமாக நடத்தப்பட்டவர்களுக்கு எந்தவொரு போதகரையாவது அணுக தைரியம் வந்திருக்குமா? ஆனால், தொழுநோயாளிகள் இயேசுவைத் தயக்கமில்லாமல் அணுகினார்கள். அவர்களில் ஒருவர், “ஐயா, உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று விசுவாசத்தோடு கேட்டார். (லூக்கா 5:12) அப்போது இயேசு என்ன செய்தார் என்பதை அடுத்த அதிகாரத்தில் கவனிப்போம். ஆனால் இப்போதைக்கு, இயேசு அணுகத்தக்கவராக இருந்தார் என்பதற்கு இந்த அத்தாட்சிகளே போதும்.

11. குற்றவுணர்வினால் குமுறிக்கொண்டிருந்தவர்கள் இயேசுவை அணுக தயங்கவில்லை என்பதை எந்த உதாரணம் காட்டுகிறது, அது ஏன் முக்கியம்?

11 குற்றவுணர்வினால் புழுங்கிக் கொண்டிருந்தவர்களும் எவ்வித தயக்கமும் இல்லாமல் இயேசுவை அணுகினார்கள். உதாரணத்திற்கு, இயேசு ஒரு பரிசேயனின் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயத்தை யோசித்துப் பாருங்கள். பாவியென அறியப்பட்டிருந்த ஒரு பெண் அங்கே வந்து, இயேசுவின் கால்மாட்டில் முழங்கால்படியிட்டு, குற்றவுணர்வினால் கண்ணீர்விட்டு அழுதாள். அவளுடைய கண்ணீர் அவரது பாதங்களில் வழிந்தோடியபோது, தன்னுடைய கூந்தலினால் அதைத் துடைத்தாள். அப்படிப்பட்ட ஒரு பெண் தம் அருகே வர இயேசு அனுமதித்ததைக் கண்டு, விருந்தளித்த பரிசேயன் முகம்சுளித்தான், இயேசுவைத் தன் மனதுக்குள் கரித்துக்கொட்டினான்; ஆனால் இயேசு, அந்தப் பெண் உள்ளப்பூர்வமாக மனந்திரும்பியதற்காக அவளை அன்போடு பாராட்டி, யெகோவா நிச்சயம் மன்னிப்பார் என்று அவளுக்கு நம்பிக்கை அளித்தார். (லூக்கா 7:36-50) அப்படியென்றால், இன்றும் குற்றவுணர்வினால் குமுறிக்கொண்டிருப்பவர்கள் கடவுளிடம் மீண்டும் நெருங்கிவர தங்களுக்கு உதவக்கூடியவர்களை அணுக துளியும் தயங்கக்கூடாது; அவர்கள் அப்படித் தயங்காமல் அணுகுவது மிகவும் அவசியம். மக்கள் தயங்காமல் இயேசுவை அணுகியதற்குக் காரணம் என்ன?

இயேசுவை மக்கள் தயக்கமில்லாமல் அணுகியதற்கு என்ன காரணம்?

12. இயேசு அணுகத்தக்கவராக இருந்ததில் ஏன் ஆச்சரியம் இல்லை?

12 இயேசு தமது அன்புக்குரிய பரலோகத் தகப்பனை அச்சுப்பிசகாமல் பின்பற்றினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (யோவான் 14:9) யெகோவா ‘நம் ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்று பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. (அப்போஸ்தலர் 17:27) ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவாவை அவரது உண்மை ஊழியர்களும், அவரைப் பற்றி அறிந்து அவரைச் சேவிக்க விரும்புகிற எவரும் எப்போது வேண்டுமானாலும் அணுக முடியும். (சங்கீதம் 65:2) இதை ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்: இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகச் சக்திவாய்ந்தவராக, மிக முக்கியமானவராக இருப்பவர் அணுகத்தக்கவராகவும் இருக்கிறார்! அவரைப் போலவே இயேசுவும் மக்களை நேசிக்கிறார். இனிவரும் அதிகாரங்களில், இயேசுவின் அடிமனதில் வேர்கொண்டிருந்த அன்பைப் பற்றி சிந்திப்போம். அவருடைய அன்பு மற்றவர்களுக்குப் பளிச்சென தெரிந்ததாலேயே அவரை மக்கள் தயக்கமில்லாமல் அணுகினார்கள். அத்தகைய அன்புக்கு அடையாளமாக இயேசு வெளிக்காட்டிய பண்புகள் சிலவற்றை இப்போது ஆராயலாம்.

13. பெற்றோர்கள் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம்?

13 மக்கள்மீது இயேசு தனிப்பட்ட விதமாக அக்கறை காட்டியதை அவர்களால் நன்கு உணர முடிந்தது. இயேசு நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தபோதிலும் மக்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்ட தவறவில்லை. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, பெற்றோர் சிலர் தங்களுடைய பிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்த சமயத்தில், அவர் அதிக வேலையாக... மிக முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மும்முரமாக... இருந்தபோதிலும், அவர்களைப் போகச் சொல்லவில்லை. பெற்றோர்களுக்கு அவர் எப்பேர்ப்பட்ட சிறந்த எடுத்துக்காட்டு! இன்றைய உலகில் பிள்ளைகளை வளர்ப்பது பெரிய சவால்தான். இருந்தாலும், எந்த நேரத்திலும் அப்பா அம்மாவை அணுக முடியும் என்ற உணர்வு பிள்ளைகளுக்கு ஏற்படும் விதத்தில் பெற்றோர் நடந்துகொள்வது அவசியம். நீங்கள் ஒரு பெற்றோர் என்றால், அதிக வேலையாக இருக்கிற சமயங்களில் உங்கள் பிள்ளை உங்களிடம் பேச வரும்போது அவனோடு நேரம் செலவிட முடியாமல் போகலாம். இருந்தாலும், சீக்கிரத்தில் அவனோடு நேரம் செலவிடுவதாக நீங்கள் நம்பிக்கை அளிக்க முடியுமா? உங்கள் வார்த்தையை நீங்கள் காப்பாற்றும்போது, பொறுமையாய்க் காத்திருப்பதால் வரும் பலன்களை உங்கள் பிள்ளை கற்றுக்கொள்ளும். அதுமட்டுமல்ல, எந்தவொரு பிரச்சினையையும் கவலையையும் பற்றி காதுகொடுத்துக் கேட்க நீங்கள் தயாராய் இருக்கிறீர்கள் என்பதையும் தெரிந்துகொள்ளும்.

14-16. (அ) எப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு தமது முதல் அற்புதத்தைச் செய்தார், அது ஏன் ஒரு மாபெரும் அற்புதம்? (ஆ) கானாவில் இயேசு செய்த அற்புதம் அவரைப் பற்றி என்ன சொல்கிறது, இது பெற்றோருக்கு எவ்விதத்தில் ஒரு பாடமாக இருக்கிறது?

14 மக்களுடைய கவலையை இயேசு தம்முடைய கவலையாகக் கருதினார் என்பதை அவர்களுக்குக் காட்டினார். உதாரணத்திற்கு, இயேசு செய்த முதல் அற்புதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கலிலேயாவில் உள்ள கானா ஊரில் நடந்த ஒரு திருமண விருந்துக்கு அவர் சென்றார். அங்கு தர்மசங்கடமான ஒரு நிலைமை ஏற்பட்டது—திராட்சமது தீர்ந்துபோனது! அதைப் பற்றி இயேசுவின் தாய் மரியாள் அவரிடம் தெரிவித்தார். அப்போது இயேசு என்ன செய்தார்? அங்கிருந்த ஆறு பெரிய தண்ணீர் ஜாடிகளை நிரப்பும்படி பரிமாறுகிறவர்களிடம் சொன்னார். பின்பு, அவர்கள் அதிலிருந்து கொஞ்சம் எடுத்து விருந்து மேற்பார்வையாளரிடம் கொடுத்தார்கள். என்ன ஆச்சரியம்! தண்ணீரெல்லாம் தரமான திராட்சமதுவாக மாறியிருந்தது!! அது என்ன, மாயாஜாலமா இல்லை கண்கட்டி வித்தையா? இரண்டும் இல்லை, தண்ணீர் ‘திராட்சமதுவாக மாற்றப்பட்டிருந்தது.’ (யோவான் 2:1-11) ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்ற வேண்டுமென்ற ஆசை மனிதர்களுக்கு வெகு காலமாகவே இருந்து வந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக, பொன்மாற்றுச் சித்தர்கள் என்றழைக்கப்படுவோர் ஈயத்தைத் தங்கமாக மாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களுடைய முயற்சி கைகூடவே இல்லை; இத்தனைக்கும், ஈயமும் தங்கமும் ஒன்றுக்கொன்று ஒத்த தனிமங்கள். a தண்ணீரும் திராட்சமதுவும் எப்படி? அவற்றின் வேதியியல் அமைப்பை எடுத்துக்கொண்டால், தண்ணீர் இரண்டே தனிமங்களின் எளிய கலவை. திராட்சமதுவோ, கிட்டத்தட்ட ஓராயிரம் மூலக்கூறுகளின் கலவை! அதுவும் அவற்றில் அநேகம் சிக்கலான சேர்மங்கள்! திருமண விருந்தில் ஏற்பட்ட ஒரு சின்ன பிரச்சினைக்காக இயேசு ஏன் இப்படிப்பட்ட ஒரு மாபெரும் அற்புதத்தைச் செய்ய வேண்டும்?

15 மணமகனையும் மணமகளையும் பொறுத்தவரை, அந்தப் பிரச்சினை அற்பமான ஒன்றல்ல. பண்டைய இஸ்ரவேலில், விருந்தாளிகளை உபசரிப்பது ஒரு கடமையாகக் கருதப்பட்டது. ஆகவே, திருமண விருந்தில் திராட்சமது தீர்ந்துபோயிருந்தால் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் பெருத்த அவமானமும் தர்மசங்கடமும் ஏற்பட்டிருக்கும்; அந்த மணநாளின் மகிழ்ச்சி குலைந்துபோயிருக்கும்; காலமெல்லாம் அதை நினைத்து அவர்கள் வருந்தும்படி ஆகியிருக்கும். ஆகவே, அது அவர்களுக்குப் பெரிய பிரச்சினையாக இருந்தது, இயேசுவுக்கும் அப்படித்தான் இருந்தது. அதனால்தான் அவர் அந்த அற்புதத்தைச் செய்தார். மக்கள் தங்களுடைய கஷ்டங்களுக்குப் பரிகாரம் தேடி ஏன் அவரை அணுகினார்கள் என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா?

பிள்ளை எந்நேரமும் உங்களை அணுகலாம் என்பதையும் உண்மையிலேயே பிள்ளைமீது உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதையும் காட்டுங்கள்

16 இந்தச் சம்பவத்திலிருந்தும் பெற்றோர்கள் பயனுள்ள ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். உங்கள் பிள்ளை ஏதாவதொரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு உங்களிடம் வந்தால் என்ன செய்வீர்கள்? அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அவனையோ அவளையோ அசட்டை செய்துவிட நீங்கள் நினைக்கலாம். உங்கள் பிள்ளை சொல்வதைக் கேட்டு உங்களுக்குச் சிரிப்புகூட வரலாம். உங்களுக்குத் தலைக்கு மேல் பிரச்சினைகள் இருக்கும்போது இதெல்லாம் தூசுபோல் தோன்றலாம். ஆனால், உங்கள் பிள்ளைக்கு அது தூசு அல்ல என்பதை நினைவில் வையுங்கள்! நீங்கள் நெஞ்சார நேசிக்கிற ஜீவனுக்கு கவலை என்றால், உங்களுக்கும் கவலையாக இருக்க வேண்டாமா? உங்கள் பிள்ளையின் பிரச்சினையை உங்கள் பிரச்சினையாக நீங்கள் கருதுவதை பிள்ளை பார்க்கும்போது அது உங்களை அண்டிவர என்றைக்குமே தயங்காது.

17. சாந்த குணம் காட்டுவதில் இயேசு எவ்வாறு இலக்கணமாய்த் திகழ்ந்தார், இந்தக் குணம் எவ்வாறு பலத்திற்கு அத்தாட்சியாக இருக்கிறது?

17 மூன்றாவது அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, இயேசு சாந்தமாகவும் மனத்தாழ்மையாகவும் இருந்தார். (மத்தேயு 11:29) சாந்தம் ஓர் அருமையான குணம், உள்ளத்தில் ஒருவர் மனத்தாழ்மையாய் இருக்கிறார் என்பதற்குப் பலமான அத்தாட்சி. கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில் சாந்தமும் ஒன்று, அது தெய்வீக ஞானத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. (கலாத்தியர் 5:22, 23; யாக்கோபு 3:13) இயேசுவின் பொறுமை மிக அதிகமாய் சோதிக்கப்பட்ட சமயத்தில்கூட அவர் நிதானம் இழக்கவில்லை. அவருடைய சாந்தம் எவ்விதத்திலும் ஒரு பலவீனமாக இருக்கவில்லை. “அந்த மென்மைக்குப் பின்னால் இருப்பது இரும்பின் பலம்” என்று சாந்தத்தைப் பற்றி ஓர் அறிஞர் குறிப்பிட்டார். உண்மையில், நம் கோபத்தை அடக்கிக்கொண்டு மற்றவர்களிடம் சாந்தமாக நடந்துகொள்வதற்குப் பலம் தேவை. ஆனால், யெகோவா நம் முயற்சிகளை ஆசீர்வதிக்கையில், நம்மால் இயேசுவைப் போல் சாந்தமாக நடந்துகொள்ள முடியும்; அப்போது, மற்றவர்கள் தயங்காமல் நம்மை அணுகுவார்கள்.

18. இயேசு நியாயமாக நடந்துகொண்டார் என்பதற்கு என்ன உதாரணம் இருக்கிறது, நியாயமாய் நடந்துகொள்ளும் ஒருவரை மக்கள் தயங்காமல் அணுகுவார்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

18 இயேசு நியாயமாய் நடந்துகொண்டார். அவர் தீரு பட்டணத்தில் இருந்தபோது, ஒரு பெண் அவரிடம் உதவிகேட்டு வந்தாள்; அவளுடைய மகளை ‘பேய் பிடித்து ஆட்டியது.’ அவளுக்கு உதவ தமக்கு மனமில்லை என்பதை இயேசு மூன்று விதங்களில் தெரியப்படுத்தினார். முதலாவதாக, ஒரு வார்த்தையும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்; இரண்டாவதாக, அவளுக்கு ஏன் உதவ முடியாது என்பதற்குரிய காரணத்தைச் சொன்னார்; மூன்றாவதாக, அவள் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு ஓர் உதாரணத்தைச் சொன்னார். ஆனாலும், அவர் ஈவிரக்கமின்றி நடந்துகொண்டாரா? ஒரு மாமனிதரை எதிர்த்து கேள்வி கேட்க துணிபவர்களுக்கு ஆபத்துதான் மிஞ்சும் என்று அவளுக்கு மறைமுகமாகச் சொன்னாரா? இல்லை, ஏனென்றால், அந்தப் பெண் நம்பிக்கையோடு பேசினாள். இயேசுவிடம் உதவி கேட்டாள், அதுவும் அவளுக்கு உதவிசெய்ய அவர் விரும்பாதது போல் தோன்றியபோதும் விடாப்பிடியாகக் கெஞ்சினாள். அவளுடைய அபார விசுவாசத்தைக் கண்டு இயேசு அவளுடைய மகளைக் குணப்படுத்தினார். (மத்தேயு 15:22-28) இயேசு நியாயமாக நடந்துகொண்டது, அதாவது காதுகொடுத்துக் கேட்கவும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் வளைந்துகொடுக்கவும் மனமுள்ளவராக இருந்தது, மக்களை அவரிடம் சுண்டியிழுத்தது!

நீங்கள் எளிதில் அணுக முடிந்தவரா?

19. நாம் உண்மையிலேயே அணுகத்தக்கவர்கள் என்று எதை வைத்து சொல்ல முடியும்?

19 மக்கள் பொதுவாக தங்களை அணுகத்தக்கவர்கள் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புகிறார்கள். உதாரணத்திற்கு, அதிகாரத்தில் உள்ள சிலர், தங்கள்கீழ் வேலை பார்ப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களிடம் வந்து பேசலாம் என்றும், அவர்களுக்காக தங்கள் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். என்றாலும், பைபிள் இந்த முக்கிய எச்சரிப்பை விடுக்கிறது: “நிறைய பேர் தாங்கள் மாறாத அன்பு காட்டுவதாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், விசுவாசமாக இருப்பவனை யாரால் கண்டுபிடிக்க முடியும்?” (நீதிமொழிகள் 20:6) நம்மை எவரும் எந்நேரமும் அணுகலாமென சொல்லிக்கொள்வது எளிது, ஆனால் அன்பின் இந்த அம்சத்தை வெளிக்காட்டுவதில் நாம் உண்மையிலேயே இயேசுவைப் பின்பற்றுகிறோமா? இதற்கான பதில், நம்மைப் பற்றி நாம் எப்படி உணருகிறோம் என்பதில் அல்ல, நம்மைப் பற்றி மற்றவர்கள் எப்படி உணருகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. “நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்” என்று பவுல் சொன்னார். (பிலிப்பியர் 4:5) ஆகவே ‘மற்றவர்களுடைய பார்வையில் நான் எப்படிப்பட்டவனாய் இருக்கிறேன்? அவர்களிடம் நான் என்ன பெயரெடுத்திருக்கிறேன்?’ என்று நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்வது அவசியம்.

மூப்பர்கள் அணுகத்தக்கவர்களாக இருக்க பெருமுயற்சி செய்கிறார்கள்

20. (அ) கிறிஸ்தவ மூப்பர்கள் அணுகத்தக்கவர்களாக இருப்பது ஏன் அவசியம்? (ஆ) சபையிலுள்ள மூப்பர்களிடம் நாம் ஏன் மிதமிஞ்சி எதிர்பார்க்கக்கூடாது?

20 முக்கியமாய் கிறிஸ்தவ மூப்பர்கள் அணுகத்தக்கவர்களாக இருக்க பெருமுயற்சி எடுக்கிறார்கள். “அவர்கள் ஒவ்வொருவரும் காற்றுக்கு ஒதுங்கும் இடமாக இருப்பார்கள். புயலிலிருந்து பாதுகாக்கும் புகலிடமாக இருப்பார்கள். தண்ணீரில்லாத தேசத்தில் பாயும் நீரோடைகளாக இருப்பார்கள். சுட்டெரிக்கும் வெயிலில் நிழல் தரும் பெரிய கற்பாறையாக இருப்பார்கள்” என்று ஏசாயா 32:1, 2-ல் உள்ள வார்த்தைகளுக்கு இசைவாக நடந்துகொள்ளவே மூப்பர்கள் உள்ளப்பூர்வமாய் விரும்புகிறார்கள். ஒரு மூப்பர் எப்போதும் அணுகத்தக்கவராக இருந்தால்தான் அப்படிப்பட்ட பாதுகாப்பையும் புத்துணர்ச்சியையும் ஆறுதலையும் தர முடியும். உண்மைதான், எல்லா சமயங்களிலும் இது சுலபம் அல்ல; ஏனென்றால், இந்தக் கடினமான காலங்களில் மூப்பர்களுக்குப் பற்பல பொறுப்புகள் இருக்கின்றன. என்றாலும், யெகோவாவுடைய ஆடுகளின் தேவைகளைக் கவனிக்க முடியாதளவுக்கு அதிக வேலையாய் இருப்பதுபோல் மூப்பர்கள் ஒருபோதும் காட்டிக்கொள்வதில்லை. (1 பேதுரு 5:2) நம்பிக்கைக்குரிய அப்படிப்பட்ட சகோதரர்களிடம் மிதமிஞ்சி எதிர்பார்க்காதிருக்க சபையிலுள்ள மற்ற சகோதர சகோதரிகள் முயலுகிறார்கள்; இவ்வாறு, மனத்தாழ்மையையும் ஒத்துழைப்பையும் காட்டுகிறார்கள்.—எபிரெயர் 13:17.

21. பிள்ளைகள் தயங்காமல் தங்களை அணுகுவதற்கு பெற்றோர் எப்படி நடந்துகொள்ளலாம், அடுத்த அதிகாரத்தில் எதைக் குறித்து சிந்திப்போம்?

21 பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவிட எப்போதும் தயாராய் இருக்கிறார்கள். இது மிக மிக முக்கியம்! அப்பாவிடமோ அம்மாவிடமோ மனந்திறந்து பேசுவதே பாதுகாப்பு என்பதை பிள்ளைகள் உணர வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, கிறிஸ்தவ பெற்றோர் சாந்தமாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ள முயலுகிறார்கள்; தவறு செய்துவிட்டதாக தங்கள் பிள்ளை சொல்லும்போதோ, கெட்ட புத்தியை வெளிக்காட்டும்போதோ அவர்கள் உணர்ச்சிவசப்படுவதில்லை. பெற்றோர் பொறுமையோடு பிள்ளைகளைப் பயிற்றுவித்து, பேச்சுத்தொடர்பு தடைபடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். உண்மையில், நாம் அனைவரும் இயேசுவைப் போல் அணுகத்தக்கவராக இருக்கவே விரும்புகிறோம். அடுத்த அதிகாரத்தில், இயேசு காட்டிய கரிசனையைப் பற்றி சிந்திப்போம்; அவர் அணுகத்தக்கவராக இருந்ததற்குக் காரணமான முக்கிய குணங்களில் அதுவும் ஒன்று.

a தனிமங்களின் பட்டியலில் ஈயமும் தங்கமும் மிக அருகில் இருப்பதை வேதியியல் மாணவர்கள் அறிவார்கள். அணுவின் மையக் கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையில்தான் இரண்டும் வித்தியாசப்படுகின்றன; தங்கத்தைவிட ஈயத்தில் 3 புரோட்டான்கள் அதிகம், அவ்வளவுதான். நவீனநாளைய இயற்பியல் வல்லுநர்கள் சிறிதளவு ஈயத்தைத் தங்கமாக மாற்றியிருப்பது உண்மைதான்; ஆனால் அப்படி மாற்றுவதற்குப் பேரளவான ஆற்றல் தேவைப்படுவதால் செலவு கட்டுப்படியாவதில்லை.