அதிகாரம் ஒன்று
“என்னைப் பின்பற்றி வா”—என்ன அர்த்தத்தில்?
1, 2. இதுவரை மனிதர்களுக்குக் கிடைத்த அழைப்புகளிலேயே மாபெரும் அழைப்பு எது, என்ன கேள்வியை நம்மையே கேட்டுக்கொள்ளலாம்?
இதுவரை உங்களுக்குக் கிடைத்த அழைப்புகளிலேயே மறக்க முடியாத அழைப்பு எது? அது ஒருவேளை உங்களுடைய பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய ஒருவரின் திருமண அழைப்பாக இருந்திருக்கலாம். அல்லது, ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்குச் சேர்வதற்கான அழைப்பாக இருந்திருக்கலாம். இதுபோன்ற அழைப்புகளைப் பெற்றபோது நீங்கள் பூரித்துப்போயிருப்பீர்கள், அவற்றை பெரிய கௌரவமாகவும் எண்ணியிருப்பீர்கள். ஆனால், இவை எல்லாவற்றையும்விட மாபெரும் ஓர் அழைப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஏன், நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கிறது! அந்த அழைப்பை ஏற்றுக்கொள்கிறோமா இல்லையா என்பது நம் சொந்த தீர்மானம். என்றாலும், நாம் எடுக்கும் தீர்மானம் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அது மிக மிக முக்கியமான தீர்மானம்.
2 சரி, அது என்ன அழைப்பு? சர்வ வல்லமையுள்ள யெகோவாவின் ஒரே மகனான இயேசு கிறிஸ்துவே, “என்னைப் பின்பற்றி வா” என்ற அழைப்பை விடுக்கிறார். இதை மாற்கு 10:21-ல் காணலாம். நம் ஒவ்வொருவருக்கும் அவர் இந்த அழைப்பைக் கொடுத்திருக்கிறார்! அப்படியானால், ‘நான் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வேனா, இல்லை மறுத்துவிடுவேனா?’ என நம்மையே கேட்டுக்கொள்வது நல்லது. ஆனால் இப்பேர்ப்பட்ட ஓர் அழைப்பை யாராவது மறுப்பார்களா என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். உண்மையைச் சொன்னால், நிறைய பேர் மறுத்திருக்கிறார்கள். ஏன்?
3, 4. (அ) மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு அந்த மனிதனிடம் என்ன அம்சங்கள் இருந்தன? (ஆ) செல்வம் படைத்த அந்த இளம் தலைவனிடம் இயேசு என்ன நல்ல குணங்களைக் கண்டார்?
3 சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு இயேசுவிடமிருந்து ஒரு மனிதன் இந்த அழைப்பை நேரடியாகப் பெற்றான். அந்த மனிதனுக்குச் சமுதாயத்தில் பெரும் மதிப்புமரியாதை இருந்தது. பொதுவாக அநேகர் ஆசைப்படுகிற, ஏன், பொறாமைப்படுகிற, முக்கியமான மூன்று அம்சங்கள்—இளமை, செல்வம், அதிகாரம்—அவனிடம் இருந்தன. “வாலிபன்,” ‘பெரிய பணக்காரன்,’ “தலைவன்” என்று பைபிள் அவனை வர்ணிக்கிறது. (மத்தேயு 19:20; லூக்கா 18:18, 23) இவை எல்லாவற்றையும்விட மெச்சத்தக்க ஓர் அம்சம் அந்த மனிதனிடம் இருந்தது. மாபெரும் போதகரான இயேசுவைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்தான், அந்த விஷயங்கள் அவனுக்குப் பிடித்திருந்தன.
4 இயேசுவின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் பலர் அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கவில்லை. (யோவான் 7:48; 12:42) ஆனால், இந்தத் தலைவன் அப்படியில்லை. ‘அங்கிருந்து [இயேசு] போய்க்கொண்டிருந்தபோது அவன் ஓடிவந்து அவர் முன்னால் மண்டிபோட்டு, “நல்ல போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?”’ என்று கேட்டதாக பைபிள் சொல்கிறது. (மாற்கு 10:17) இயேசுவிடம் பேசுவதற்கு இந்த மனிதன் எவ்வளவு ஆர்வமாய் இருந்தான் என்பதைக் கவனித்தீர்களா? ஏழை எளிய மக்களைப் போலவே இந்த மனிதனும் இயேசுவைப் பார்க்க ஓடோடி வந்தான். கிறிஸ்துவுக்கு முன் பவ்வியமாக மண்டியிட்டான். அவனுக்கு மனத்தாழ்மையும் ஆன்மீக விஷயங்களில் ஆர்வப் பசியும் இருந்ததெனத் தெரிகிறது. இந்த நல்ல குணங்கள் இயேசுவின் மனதைக் கவர்ந்தன. (மத்தேயு 5:3; 18:4) ‘இயேசு அன்போடு அவனைப் பார்த்ததில்’ ஆச்சரியமே இல்லை. (மாற்கு 10:21) சரி, அந்த மனிதனுடைய கேள்விக்கு இயேசு என்ன பதில் சொன்னார்?
ஓர் அரிய அழைப்பு!
5. அந்த இளம் செல்வந்தன் கேட்ட கேள்விக்கு இயேசு எப்படிப் பதிலளித்தார், அவன் எல்லாவற்றையும் விற்றுவிட்டு ஏழையாகும்படி இயேசு சொல்லவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்? (அடிக்குறிப்பையும் காண்க.)
5 முடிவில்லாத வாழ்வைப் பெற என்ன செய்ய வேண்டும் என்ற முக்கியமான கேள்விக்குரிய பதிலை தம் தகப்பன் ஏற்கெனவே திருச்சட்டத்தில் கொடுத்திருக்கிறார் என இயேசு அவனிடம் எடுத்துக்காட்டினார். திருச்சட்டத்தில் உள்ளதையெல்லாம் தவறாமல் கடைப்பிடித்து வருவதாக அந்த இளம் மனிதனும் சொன்னான். ஆனால், ஒருவருடைய அடிமனதில் உள்ளதை அறியும் அபாரத் திறமை இயேசுவுக்கு இருந்ததால் அவனுடைய உண்மையான பிரச்சினையை அவர் புரிந்துகொண்டார். (யோவான் 2:25) ஆன்மீக ரீதியில் அவனுக்கு ஒரு குறை இருந்ததை, அதுவும் பெரிய குறை இருந்ததை, இயேசு உணர்ந்துகொண்டார். அதனால்தான், “நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியமும் இருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அது என்ன? ‘நீ போய் உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடு’ என்றார். (மாற்கு 10:21) அப்படியானால், எல்லாவற்றையும் விற்றுவிட்டு வந்தால்தான் கடவுளுக்குச் சேவை செய்ய முடியும் என்று இயேசு சொன்னாரா? இல்லை. a அவர் ஒரு முக்கியமான குறிப்பை உணர்த்தினார்.
6. இயேசு என்ன அழைப்பை விடுத்தார், அந்த இளம் செல்வந்தனின் பிரதிபலிப்பு அவனிடம் இருந்த என்ன குறையைச் சுட்டிக்காட்டியது?
6 அந்த மனிதனுக்கு அவனுடைய குறையைப் புரிய வைப்பதற்காக, “என்னைப் பின்பற்றி வா” என்ற அரிய அழைப்பை இயேசு விடுத்தார். உன்னதமான கடவுளின் மகனே நேரடியாக இந்த அழைப்பை அவனுக்குக் கொடுப்பதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்! அதோடு, தம்மைப் பின்பற்றினால் அவன் நினைத்தே பார்க்காத மாபெரும் வெகுமதியைப் பெறுவான் என்ற வாக்குறுதியையும் இயேசு அவனுக்கு அளித்தார். ஆம், “பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்” என்றார். அந்த அரிய அழைப்பை, பொன்னான வாய்ப்பை, அவன் பயன்படுத்திக் கொண்டானா? பைபிள் பதிவு சொல்கிறது: “இதைக் கேட்டதும் அவனுடைய முகம் வாடியது, அவன் துக்கத்தோடு திரும்பிப் போனான்; ஏனென்றால், அவனிடம் நிறைய சொத்துகள் இருந்தன.” (மாற்கு 10:21, 22) இயேசுவிடமிருந்து அவன் எதிர்பாராத அந்த வார்த்தைகள் அவனிடமிருந்த குறையைச் சுட்டிக்காட்டின. கிறிஸ்துவைவிட தன் ஆஸ்தியையும் அதனால் கிடைத்த அந்தஸ்தையும் அதிகாரத்தையுமே அவன் உயர்வாய்க் கருதினான், அவற்றையே உயிருக்கு உயிராய் நேசித்தான். எனவே, அவன் செய்ய வேண்டியிருந்த ‘இன்னொரு காரியம்,’ இயேசு மீதும் யெகோவா மீதும் உள்ளப்பூர்வ அன்பை, சுயதியாக அன்பை, காட்டுவதாகும். அப்படிப்பட்ட அன்பு அவனிடம் இல்லாததால்தான் இயேசு அளித்த மாபெரும் அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான்! சரி, அந்த அழைப்பு உங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்?
7. இயேசுவின் அழைப்பு நம் எல்லாருக்கும் இருக்கிறதென்று எப்படி உறுதியாகச் சொல்லலாம்?
7 அவன் ஒருவனுக்கோ ஒருசிலருக்கோ மட்டுமே இயேசு இந்த அழைப்பை விடுக்கவில்லை. ஏனென்றால், “யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் . . . தொடர்ந்து என் பின்னால் வர வேண்டும்” என்று இயேசு சொன்னார். (லூக்கா 9:23) “யாராவது” என்று அந்த வசனம் சொல்வதைக் கவனியுங்கள். யாருக்கெல்லாம் ‘விருப்பம்’ இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் இயேசுவைப் பின்பற்றலாம். நல்மனம் படைத்த அனைவரையும் கடவுள் தமது மகனிடம் ஈர்க்கிறார். (யோவான் 6:44) ஏழை எளியவர்களாக இருந்தாலும் சரி, செல்வச் சீமான்களாக இருந்தாலும் சரி, எந்த இனத்தவர்களாக இருந்தாலும் சரி, எந்தத் தேசத்தவர்களாக இருந்தாலும் சரி, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இந்தக் காலத்தில் வாழ்கிறவர்களாக இருந்தாலும் சரி, இயேசுவின் அழைப்பு எல்லாருக்கும் இருக்கிறது. எனவே, “என்னைப் பின்பற்றி வா” என்ற அழைப்பு நிச்சயமாக உங்களுக்கும் இருக்கிறது. ஆனால், நீங்கள் ஏன் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும்? அவரைப் பின்பற்றுவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
ஏன் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும்?
8. நம் அனைவருக்கும் என்ன தேவை, ஏன்?
8 நம்மைத் தலைமைதாங்கி நடத்த ஒரு சிறந்த தலைவர் நிச்சயம் தேவை. இதை அநேகர் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை. மறுக்க முடியாத இந்த உண்மையைக் கடவுளுடைய தூண்டுதலால் தீர்க்கதரிசியான எரேமியா பதிவுசெய்து வைத்தார்: “யெகோவாவே, மனுஷனுக்குத் தன் வழியைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை என்றும், தன் காலடிகளை நடத்தும் அதிகாரம் இல்லை என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்.” (எரேமியா 10:23) மனிதர்களுக்கு ஆளும் திறமையும் இல்லை, உரிமையும் இல்லை. சொல்லப்போனால், மனித வரலாற்றில் பெரும்பாலும் மோசமான தலைவர்களே ஆட்சிசெய்து வந்திருக்கிறார்கள். (பிரசங்கி 8:9) இயேசுவின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் மக்களை அடக்கி ஒடுக்கினார்கள், தவறாக வழிநடத்தினார்கள். இயேசுவோ மக்களுடைய உண்மையான நிலைமையைப் புரிந்துகொண்டார், அவர்கள் “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல்” இருப்பதை உணர்ந்துகொண்டார். (மாற்கு 6:34) இன்றும் மக்கள் அப்படிப்பட்ட நிலையில்தான் இருக்கிறார்கள். எனவே தனிநபருக்கும் சரி, ஒரு தேசத்திற்கும் சரி, நம்பிக்கைக்கும் மரியாதைக்கும் உரிய ஒரு தலைவர் தேவை. இயேசுவுக்கு அந்தத் தகுதி இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. அதற்கான காரணங்களை இப்போது சிந்திப்போம்.
9. மற்ற தலைவர்களிலிருந்து இயேசு எப்படி வித்தியாசப்படுகிறார்?
9 முதல் காரணம்: இயேசுவை யெகோவா தேவனே தேர்ந்தெடுத்தார். இன்றைக்குப் பெரும்பாலும் தலைவர்களை அபூரண மனிதர்கள்தான்—எளிதில் ஏமாந்துபோகிற, தவறான முடிவெடுக்கிற மனிதர்கள்தான்—தேர்ந்தெடுக்கிறார்கள். இயேசு மிகவும் வித்தியாசமான தலைவர். “கிறிஸ்து,” “மேசியா” என்று அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டப்பெயர்களே அதற்குச் சான்று. இந்த இரு பட்டப்பெயர்களுக்கும் “தேர்ந்தெடுக்கப்பட்டவர்” என்று அர்த்தம். இயேசு ஒரு புனித வேலைக்காக விசேஷமாய் நியமிக்கப்பட்டார், அதுவும் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த உன்னத அரசரால் நியமிக்கப்பட்டார். யெகோவா தேவன் தம் மகனைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “இதோ! இவர்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிற என்னுடைய அன்பு ஊழியர், இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன். என்னுடைய சக்தியை இவருக்குத் தருவேன்.” (மத்தேயு 12:18) நமக்கு எப்படிப்பட்ட தலைவர் வேண்டும் என்று நம்மைப் படைத்தவரைவிட வேறு யாருக்கு நன்றாகத் தெரியும்? யெகோவாவின் ஞானத்திற்கு எல்லையே இல்லை, அதனால் அவர் சிறந்த தலைவரைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று நாம் முழுமையாக நம்பலாம்.—நீதிமொழிகள் 3:5, 6.
10. மனிதர்கள் பின்பற்றுவதற்கு இயேசுவின் உதாரணமே தலைசிறந்த உதாரணம் என்று ஏன் சொல்லலாம்?
10 இரண்டாவது காரணம்: இயேசு நமக்குத் தலைசிறந்த முன்மாதிரியாக, நல்வழியில் செல்ல நம்மைத் தூண்டும் முன்மாதிரியாக விளங்குகிறார். பொதுவாக, சிறந்த தலைவருக்கு மெச்சத்தக்க குணங்கள் இருக்கும், அவரைப் பின்பற்ற மக்கள் விரும்புவார்கள். அவரும் சிறந்த முன்மாதிரியாக இருந்து, மக்களை நல்வழியில் நடக்க தூண்டுவார். ஒரு தலைவரிடம் முக்கியமாக என்ன குணங்களை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? தைரியத்தையா? ஞானத்தையா? கருணையையா? துன்பத்திலும் துவளாமல் இருக்கும் மனவுறுதியையா? இயேசுவின் மானிட வாழ்க்கை பதிவுகளை வாசிக்கும்போது அவருக்கு இப்படிப்பட்ட குணங்களும், இன்னும் அநேக நல்ல குணங்களும் இருந்ததைக் கவனிப்பீர்கள். இயேசு தமது பரலோகத் தகப்பனை அப்படியே உரித்துவைத்திருந்தார். அவரிடம் தெய்வீக குணங்கள் முழு நிறைவாய்க் குடிகொண்டிருந்தன. அவருடைய ஒவ்வொரு அசைவிலும் பரிபூரணம் பளிச்சிட்டது. எனவே, அவர் செய்த ஒவ்வொரு செயலிலும், அவர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையிலும், அவர் வெளிக்காட்டிய ஒவ்வொரு உணர்ச்சியிலும் நாம் பின்பற்றுவதற்கு எத்தனை எத்தனையோ விஷயங்கள் உள்ளன. “அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்” என்று பைபிள் சொல்கிறது.—1 பேதுரு 2:21.
11. தாம் ஒரு “நல்ல மேய்ப்பன்” என்று இயேசு எப்படி நிரூபித்தார்?
11 மூன்றாவது காரணம்: “நான்தான் நல்ல மேய்ப்பன்” என்று இயேசு சொன்னார், சொன்னபடியே வாழ்ந்தும் காட்டினார். (யோவான் 10:14) பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்களுக்கு மேய்ப்பன் என்றதும் மேய்ப்பனுடைய வாழ்க்கை அவர்கள் கண்முன் அப்படியே விரிந்திருக்கும். மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தையைக் கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொள்ள கடினமாய் உழைத்தார்கள். ஒரு “நல்ல மேய்ப்பன்” தன் மந்தையைப் பாதுகாப்பதற்காக உயிரையே பணயம் வைப்பார். உதாரணமாக, இயேசுவின் மூதாதையான தாவீது இளம் வயதில் ஒரு மேய்ப்பராக இருந்தார். கொடிய காட்டு மிருகங்கள் அவருடைய மந்தையைத் தாக்கிய சமயங்களில் அவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவற்றைக் காப்பாற்றினார். (1 சாமுவேல் 17:34-36) ஆனால், இயேசு அதைவிட ஒரு படி மேலே சென்று, தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்காக தம் உயிரையே கொடுத்தார். (யோவான் 10:15) எத்தனை தலைவர்கள் இப்படிப்பட்ட சுயதியாக மனப்பான்மையைக் காட்டியிருக்கிறார்கள்?
12, 13. (அ) எந்த அர்த்தத்தில், ஆடுகளை மேய்ப்பன் அறிந்திருக்கிறான், மேய்ப்பனை ஆடுகள் அறிந்திருக்கின்றன? (ஆ) நல்ல மேய்ப்பரான இயேசு உங்களுக்குத் தலைவராக இருக்க வேண்டுமென ஏன் விரும்புகிறீர்கள்?
12 இன்னொரு விதத்திலும் இயேசு ஒரு “நல்ல மேய்ப்பன்.” “நான் என்னுடைய ஆடுகளைத் தெரிந்து வைத்திருக்கிறேன், என்னுடைய ஆடுகளும் என்னைத் தெரிந்து வைத்திருக்கின்றன” என்று அவர் சொன்னார். (யோவான் 10:14, 15) இயேசு பயன்படுத்திய உவமையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். செம்மறியாட்டு கூட்டத்தைச் சாதாரணமாகப் பார்ப்பவருக்கு, எல்லா ஆடுகளும் ஒன்றுபோலவே தெரியும். ஆனால், ஒரு மேய்ப்பனுக்குத்தான் ஒவ்வொரு ஆட்டையும் தனித்தனியாகத் தெரியும். அதாவது, எது சினை ஆடு, அது எப்போது குட்டி போடும், எந்த ஆட்டுக்குட்டி ரொம்ப பலவீனமாக இருக்கிறது, எந்த ஆட்டுக்குட்டியை இன்னும் சுமந்துகொண்டு போக வேண்டும், எது சீக்காடு, எந்த ஆட்டுக்கு அடிபட்டிருக்கிறது என்பதெல்லாம் அவனுக்குத்தான் தெரியும். அதேபோல் ஆடுகளுக்கும் தங்கள் மேய்ப்பன் யாரென்று நன்றாகத் தெரியும். மேய்ப்பனுடைய குரலை அவை சட்டெனக் கண்டுகொள்ளும், வேறொரு மேய்ப்பனின் குரலைக் கேட்டு ஒருநாளும் ஏமாந்துபோகாது. மேய்ப்பனிடமிருந்து எச்சரிப்புக் குரல் கேட்கும்போது அவை உடனே உஷாராகி, அவனிடம் ஓடிப்போகும். அவன் எங்கு அழைத்துச் சென்றாலும், அவன் பின்னே போகும். அவனுக்கும் அவற்றை எங்கு கூட்டிச்செல்ல வேண்டும் என்று தெரியும். எங்கே பச்சைப்பசேல் என புல்வெளி இருக்கும், எங்கே சுத்தமான நீரோடை இருக்கும், எங்கே மேயவிட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்றெல்லாம் அவனுக்குத் தெரியும். மேய்ப்பன் காவல் காக்கும்போது, ஆடுகள் பாதுகாப்பாக உணரும்.—சங்கீதம் 23.
13 இப்படிப்பட்ட தலைவர் வேண்டுமென ஏங்குகிறீர்களா? நல்ல மேய்ப்பரான இயேசு தம் சீஷர்களிடம் இப்படித்தான் நடந்துகொண்டார். அவரைப் போன்ற ஒரு நல்ல மேய்ப்பர் இதுவரை இம்மண்ணில் பிறக்கவில்லை. சந்தோஷமும் திருப்தியும் நிறைந்த ஒரு வாழ்க்கை பாதையில் உங்களை இன்றும் என்றும் வழிநடத்துவதாக அவர் உறுதியளிக்கிறார்! (யோவான் 10:10, 11; வெளிப்படுத்துதல் 7:16, 17) அப்படியானால், அவரைப் பின்பற்றுவதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இயேசுவைப் பின்பற்றுவது என்றால் என்ன?
14, 15. கிறிஸ்துவின் சீஷராக இருப்பதற்கு, வெறுமனே கிறிஸ்தவன் என்று உரிமை பாராட்டுவதோ, இயேசுவை இரட்சகர் என உணர்ச்சிபொங்க சொல்லிக்கொள்வதோ ஏன் போதாது?
14 இன்றைக்குக் கோடானுகோடி மக்கள் இயேசுவின் அழைப்பை ஏற்றிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால், தங்களைக் கிறிஸ்தவர்கள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பெற்றோர் போகும் சர்ச்சில் ஞானஸ்நானம் எடுத்து, சிறு வயதுமுதல் அதில் ஓர் அங்கத்தினராக இருக்கலாம்; அல்லது இயேசுவே தங்களுடைய இரட்சகர் என உணர்ச்சிபொங்க சொல்லிக்கொள்ளலாம். ஆனால், இப்படியெல்லாம் செய்வதால் அவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாய் ஆகிவிடுவார்களா? தம்மைப் பின்பற்றும்படி அழைப்பு விடுத்தபோது இயேசு இப்படித்தான் செய்யச் சொன்னாரா? இல்லை, இயேசுவின் சீஷராவதில் அநேக விஷயங்கள் அடங்கியுள்ளன.
15 கிறிஸ்துவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்கிற கிறிஸ்தவமண்டல நாடுகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த நாடுகள் இயேசு கிறிஸ்துவின் போதனைகளைக் கடைப்பிடிக்கின்றனவா? அல்லது, மற்ற நாடுகளைப் போலவே இங்கும் பகைமை, ஒடுக்குதல், குற்றச்செயல், அநீதி ஆகியவைதான் மலிந்து கிடக்கின்றனவா?
16, 17. கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் செய்ய வேண்டிய ‘இன்னொரு காரியம்’ என்ன, கிறிஸ்துவின் உண்மைச் சீஷர்களை எது வேறுபடுத்திக் காட்டுகிறது?
16 தம் உண்மையான சீஷர்களை அவர்களுடைய வார்த்தைகளை வைத்தோ கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டுவதை வைத்தோ அல்ல, செயல்களை வைத்தே அடையாளம் கண்டுகொள்ளலாம் என்று இயேசு சொன்னார். ஒருமுறை அவர் இவ்வாறு சொன்னார்: “என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்.” (மத்தேயு 7:21) இயேசுவைத் தங்கள் கர்த்தர் என்று உரிமை பாராட்டும் அநேகர் ஏன் அவருடைய தகப்பனின் விருப்பத்தைச் செய்வதில்லை? அந்த இளம் செல்வந்தனை நினைத்துப் பாருங்கள். அவனைப் போலவே இவர்களும் செய்ய வேண்டிய ‘இன்னொரு காரியம்’ இருக்கிறது. அதாவது, இயேசு மீதும் அவரை அனுப்பியவர் மீதும் முழு மனதோடு அன்புகாட்ட வேண்டியிருக்கிறது.
17 ஆனால், கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டும் கோடானுகோடி பேர் கிறிஸ்துவை நேசிப்பதாகத்தானே சொல்கிறார்கள்? உண்மைதான். என்றாலும், இயேசுவையும் யெகோவாவையும் நேசிப்பதாக வாயளவில் சொன்னால் மட்டும் போதாது. ஏனென்றால், “ஒருவனுக்கு என்மேல் அன்பு இருந்தால், அவன் என் வார்த்தையின்படி நடப்பான்” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:23) தம்மை ஒரு மேய்ப்பனுக்கு ஒப்பிட்டுப் பேசியபோதும், “என் ஆடுகள் என்னுடைய குரலைக் கேட்கின்றன, நான் அவற்றைத் தெரிந்து வைத்திருக்கிறேன், அவை என் பின்னால் வருகின்றன” என்று அவர் கூறினார். (யோவான் 10:27) ஆம், கிறிஸ்துமீது நமக்கு அன்பு இருக்கிறது என்பதை வெறுமனே வார்த்தைகளாலோ உணர்ச்சிகளாலோ வெளிப்படுத்தினால் போதாது, செயல்களால் நிரூபிக்க வேண்டும்.
18, 19. (அ) இயேசுவைப் பற்றி நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் என்ன செய்ய நம்மைத் தூண்ட வேண்டும்? (ஆ) இப்புத்தகத்தின் நோக்கம் என்ன, நீண்ட காலமாக கிறிஸ்துவைப் பின்பற்றி வருகிறவர்களுக்கு இப்புத்தகம் எப்படி உதவும்?
18 நம்முடைய சிந்தனைகள்தான் செயல்களாக உருவெடுக்கின்றன. நாம் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்பதை அவை காட்டுகின்றன. எனவே, முதலில் நம் சிந்தனையைச் சரிசெய்துகொள்ள வேண்டும். “ஒரே உண்மையான கடவுளாகிய உங்களையும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டே இருந்தால் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 17:3) இயேசுவைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற்று, அவரைக் குறித்து ஆழமாய் தியானித்தால் நம் சிந்தனையை மாற்றியமைத்துக்கொள்ள தூண்டப்படுவோம். அப்போது, நாம் அவரை அதிகதிகமாய் நேசிப்போம், அனுதினமும் அவரைப் பின்பற்ற வேண்டுமென்ற ஆசையையும் வளர்த்துக்கொள்வோம்.
19 இந்த ஆசையை நமக்குள் வேர்விடச் செய்வதுதான் இப்புத்தகத்தின் நோக்கம். இப்புத்தகம் இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி தொகுத்து உரைப்பதில்லை; மாறாக, அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாக பின்பற்றுவது எப்படி என நமக்கு தெளிவாகக் காட்டுகிறது. b பைபிள் எனும் கண்ணாடியில் நம்மைப் பார்த்து, ‘நான் உண்மையிலேயே இயேசுவைப் பின்பற்றுகிறேனா?’ என நம்மையே கேட்டுக்கொள்ள தூண்டும் விதத்தில் இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. (யாக்கோபு 1:23-25) நீங்கள் ஒருவேளை நீண்ட காலமாகவே நல்ல மேய்ப்பனின் வழியில் நடக்கும் ஆடாக இருக்கலாம். இருந்தாலும், தொடர்ந்து முன்னேறுவதற்கு வாய்ப்பு இருப்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை எப்போதும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களையே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்” என்று பைபிள் நம்மை உந்துவிக்கிறது. (2 கொரிந்தியர் 13:5) யெகோவாவே நியமித்திருக்கும் நல்ல மேய்ப்பரான இயேசுவின் வழியில்தான் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நாம் எடுக்கும் எல்லா முயற்சியும் தகுந்ததே.
20. அடுத்த அதிகாரத்தில் எதைக் குறித்து சிந்திப்போம்?
20 இயேசு மீதும் யெகோவா மீதும் உங்களுக்கு இருக்கும் அன்பை இன்னும் ஆழமாக்க இப்புத்தகம் உங்களுக்கு உதவுவதாக. அந்த அன்பே உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்போது இந்தப் பொல்லாத உலகில்கூட நீங்கள் மிகுந்த சமாதானத்தையும் திருப்தியையும் அனுபவிப்பீர்கள்; அதோடு இப்படிப்பட்ட நல்ல மேய்ப்பரைத் தந்ததற்காக ஜீவனுள்ள நாளெல்லாம் யெகோவாவைப் புகழ்வீர்கள். ஆனால், கிறிஸ்துவைப் பற்றி படிக்கும் முன் யெகோவாவின் நோக்கத்தில் அவர் வகிக்கும் பங்கை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான், இந்தப் புத்தகத்தின் 2-ஆம் அதிகாரம் அவர் வகிக்கும் பங்கைக் குறித்து விளக்குகிறது.
a இயேசு தம்மைப் பின்பற்றிவர விரும்பிய ஒவ்வொருவரிடமும், ‘உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்றுவிடு’ என்று சொல்லவில்லை. ஒரு செல்வந்தன் கடவுளுடைய அரசாங்கத்திற்குள் நுழைவது மிகக் கடினம் என்று இயேசு சொல்லியிருந்தாலும், “கடவுளால் எல்லாமே செய்ய முடியும்” என்றும் கூறினார். (மாற்கு 10:23, 27) சொல்லப்போனால், செல்வந்தர்களில் சிலர் இயேசுவின் சீஷர்களாக ஆனார்கள். அவர்களுக்குக் கிறிஸ்தவ சபையில் தெளிவான ஆலோசனை கொடுக்கப்பட்டது, ஆனால் அவர்கள் தங்களுடைய எல்லா சொத்துகளையும் ஏழைகளுக்குத் தானம் செய்துவிட வேண்டும் என்று ஒருபோதும் சொல்லப்படவில்லை.—1 தீமோத்தேயு 6:17.
b இயேசுவின் வாழ்க்கை, ஊழியம் தொடர்பான பதிவுகளைக் காலவரிசைப்படி தெரிந்துகொள்வதற்கு, இயேசு—வழி, சத்தியம், வாழ்வு என்ற புத்தகத்தைக் காண்க. இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.