அதிகாரம் ஆறு
‘அவர் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்’
1, 2. மகன் கீழ்ப்படிவதைப் பார்க்கும்போது அன்பான அப்பா ஏன் சந்தோஷப்படுகிறார், அவருடைய உணர்ச்சிகள் எப்படி யெகோவாவின் உணர்ச்சிகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன?
தன்னுடைய செல்ல மகன் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவதை ஜன்னல் வழியாக அப்பா பார்த்துக் கொண்டிருக்கிறார். பந்து சுவரைத் தாண்டி தெருவில் உருண்டோடுகிறது. சிறுவன் அந்தப் பந்தையே ஏக்கத்தோடு பார்க்கிறான். ‘ஓடிப்போய் அந்தப் பந்தை எடுத்துட்டு வா’ என்று அவனுடைய நண்பன் சொல்கிறான். ‘ம்ஹூம், வெளியே போகக்கூடாதுன்னு அப்பா சொல்லியிருக்கிறாங்க’ என்று அவன் சொல்கிறான். அதைக் கேட்டதும் அப்பாவின் மனம் குளிர்ந்துவிடுகிறது.
2 அவர் ஏன் அவ்வளவு சந்தோஷப்படுகிறார்? ஏனென்றால், தெருவில் தனியாகப் போகக்கூடாது என்று தன் மகனிடம் ஏற்கெனவே சொல்லியிருந்தார்; தான் கவனிப்பதை அறியாதபோதிலும் மகன் கீழ்ப்படிவதைக் கண்டு அவர் பெருமிதம் கொள்கிறார். ஏனென்றால், தன் மகன் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கிறான், அதுதான் அவனுக்குப் பாதுகாப்பு என்பதை அப்பா அறிந்திருக்கிறார். நம் பரலோக தகப்பனான யெகோவாவைப் போலவே அந்த அப்பா உணருகிறார். கடைசிவரை உத்தமமாய் இருப்பதற்கும் அவர் நமக்காக வைத்திருக்கும் அருமையான வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் நாம் அவர்மீது நம்பிக்கை வைத்து அவருக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். (நீதிமொழிகள் 3:5, 6) இதற்காக, மனித போதகர்களிலேயே தலைசிறந்த ஒருவரை நமக்காக அனுப்பினார்.
3, 4. இயேசு எப்படி “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்,” ‘பரிபூரணமாக்கப்பட்டார்’? உதாரணத்துடன் விளக்கவும்.
3 இயேசுவைக் குறித்து வியப்பூட்டும் ஒரு விஷயத்தை பைபிள் சொல்கிறது: “அவர் கடவுளுடைய மகனாக இருந்தாலும் தான் பட்ட கஷ்டங்களின் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். இப்படி அவர் பரிபூரணமாக்கப்பட்ட பின்பு, தனக்குக் கீழ்ப்படிகிற எல்லாருக்கும் நிரந்தர மீட்பு கிடைப்பதற்குக் காரணமானார்.” (எபிரெயர் 5:8, 9) இந்த மகன் யுகா யுகங்களாக பரலோகத்தில் வாழ்ந்துவந்தார். சாத்தானும் மற்ற தூதர்களும் கடவுளை எதிர்த்து கலகம் செய்து அவருக்குக் கீழ்ப்படியாமல் போனதைப் பார்த்தார், ஆனால் இந்த முதல் மகன் ஒருநாளும் அவர்களைப் போல் நடந்துகொள்ளவில்லை. “நான் அவரை எதிர்க்கவில்லை” என்ற தீர்க்கதரிசனத்தை பைபிள் அவருக்குப் பொருத்தி பேசுகிறது. (ஏசாயா 50:5) அப்படியென்றால், “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” என்ற வார்த்தைகள் பரிபூரண கீழ்ப்படிதலைக் காட்டின மகனுக்கு எப்படிப் பொருந்துகின்றன? அப்படிப்பட்ட பரிபூரண மகன் மீண்டும் எப்படி ‘பரிபூரணமாக்கப்பட்டார்’?
4 ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு படைவீரர் இரும்பு வாள் வைத்திருக்கிறார்; அது நேர்த்தியாகவும் நன்றாகவும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் அந்த வாளை இதுவரை போரில் பயன்படுத்தியதே இல்லை. இப்போது, அந்த வாளைக் கொடுத்துவிட்டு உறுதியான, வலிமையான உலோகத்தால் செய்யப்பட்ட வேறொரு வாளை வாங்குகிறார். இந்த வாள் போரில் ஏற்கெனவே நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் அப்படி வாங்கியது ஞானமான செயல், அல்லவா? அதுபோலவே, இயேசு பூமிக்கு வருவதற்கு முன் காட்டிய கீழ்ப்படிதலில் ஒரு குறையும் இல்லை. ஆனால், அவர் பூமியில் வாழ்ந்த காலத்தில் காட்டிய கீழ்ப்படிதல் முற்றிலும் வித்தியாசமானது. இப்போது அவருடைய கீழ்ப்படிதல் நன்கு சோதிக்கப்பட்டிருக்கிறது, வலிமையுள்ளதாக ஆக்கப்பட்டிருக்கிறது, பரலோகத்தில் அனுபவிக்காத சோதனைகளை எல்லாம் அவர் வெற்றிகரமாக சமாளித்ததால் அது உறுதியாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.
5. இயேசுவின் கீழ்ப்படிதல் ஏன் குறிப்பிடத்தக்கது, இந்த அதிகாரத்தில் நாம் எதைப் பற்றி சிந்திப்போம்?
5 இயேசு பூமிக்கு வந்து தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற அவருக்குக் கீழ்ப்படிதல் மிக மிக அவசியமாய் இருந்தது. நம்முடைய முதல் தகப்பனான ஆதாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியத் தவறியபோதிலும், ‘கடைசி ஆதாமான’ இயேசு சோதனையின் மத்தியிலும் கடைசிவரை கீழ்ப்படிதலைக் காட்டினார். (1 கொரிந்தியர் 15:45) ஆனால், அவர் கடமைக்காகக் கீழ்ப்படியவில்லை. முழு மனதோடும் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கீழ்ப்படிந்தார். அதேசமயம் சந்தோஷத்தோடு கீழ்ப்படிந்தார். உணவைவிட தம் தகப்பனுடைய விருப்பத்தைச் செய்வதுதான் அவருக்கு அதிமுக்கியமாக இருந்தது! (யோவான் 4:34) இயேசுவைப் போலவே கீழ்ப்படிதலைக் காட்ட நமக்கு எது உதவும்? அவர் என்ன மனநிலையோடு கீழ்ப்படிந்தார் என்பதை முதலில் பார்ப்போம். அதுபோன்ற மனநிலையை நாமும் வளர்த்துக்கொள்ள முயற்சி செய்தால் சோதனைகளை எதிர்க்கவும் கடவுளுடைய விருப்பத்தைத் தொடர்ந்து செய்யவும் உதவியாக இருக்கும். கிறிஸ்துவைப் போன்ற கீழ்ப்படிதலைக் காட்டுவதால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து பின்பு சிந்திப்போம்.
என்ன மனநிலையுடன் இயேசு கீழ்ப்படிந்தார்?
6, 7. கீழ்ப்படிதலைக் காட்ட இயேசுவை என்னவெல்லாம் உந்துவித்தது?
6 இயேசு கீழ்ப்படிதலைக் காட்டியதற்கு அவருடைய இதயத்தில் இருந்த நல்ல குணங்கள்தான் காரணம். 3-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, கிறிஸ்து மனத்தாழ்மையாக இருந்தார். கீழ்ப்படிதலைக் காட்ட ஆணவம் தடையாக இருக்கிறது, மனத்தாழ்மையோ யெகோவாவுக்கு மனதார கீழ்ப்படிய நம்மை உந்துவிக்கிறது. (யாத்திராகமம் 5:1, 2; 1 பேதுரு 5:5, 6) அதோடு, இயேசு நேசித்த விஷயங்களும் வெறுத்த விஷயங்களும்கூட கீழ்ப்படிதலைக் காட்ட அவரை உந்துவித்தன.
7 மிக முக்கியமாக, இயேசு தம் பரலோக தகப்பனான யெகோவாமீது அன்பு வைத்திருந்தார். இதைக் குறித்து 13-ஆம் அதிகாரத்தில் விலாவாரியாக பார்ப்போம். அந்த அன்பே தேவபயத்தை வளர்த்துக்கொள்ள இயேசுவை உந்துவித்தது. யெகோவாமீது அவருக்கு அளவில்லா அன்பும் எல்லையில்லா பக்தியும் இருந்ததால் யெகோவாவுக்குப் பிரியமில்லாத எந்தக் காரியத்தையும் செய்ய அவர் பயந்தார். அவருடைய ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டதற்கு ஒரு காரணம், கடவுள்மீது அவருக்கு இருந்த பயமே. (எபிரெயர் 5:7) மேசியானிய அரசராக இயேசு ஆட்சி செய்கையிலும் இந்தப் பயமே அவருடைய எல்லா நடவடிக்கைகளிலும் பளிச்சிடும்.—ஏசாயா 11:3.
8, 9. தீர்க்கதரிசனம் முன்னுரைத்தபடி, இயேசு நீதியையும் அநீதியையும் குறித்து எப்படி உணர்ந்தார், அதை எவ்விதங்களில் காட்டினார்?
8 யெகோவாவை நேசிப்பதில் அவர் வெறுக்கும் விஷயங்களை வெறுப்பதும் அடங்கும். உதாரணமாக, மேசியானிய அரசரைக் குறித்து உரைக்கப்பட்ட இந்தத் தீர்க்கதரிசனத்தை கவனியுங்கள்: “நீங்கள் நீதியை நேசித்தீர்கள், அக்கிரமத்தை வெறுத்தீர்கள். அதனால்தான், உங்கள் கடவுள் மற்ற ராஜாக்களைவிட அதிகமாக உங்களை ஆனந்தத் தைலத்தால் அபிஷேகம் செய்தார்.” (சங்கீதம் 45:7) தாவீதின் வம்சத்தில் வந்த அரசர்களே இங்கு சொல்லப்பட்டிருக்கும் ‘மற்ற ராஜாக்கள்.’ ஆனால், இயேசு அரசராக அபிஷேகம் செய்யப்படுகையில் அவர்கள் அனைவரையும்விட அதிக ஆனந்தம் அடைய அவருக்குக் காரணம் இருக்கிறது. அது என்ன? அவர்கள் எல்லாருக்கும் கிடைத்த வெகுமதியைவிட அவருக்குக் கிடைத்திருக்கும் வெகுமதி மிக மகத்தானது, அவருடைய ஆட்சி அளவிலா ஆசீர்வாதங்களை அள்ளித் தரப்போகிறது. நீதியின் மீது அவர் கொண்ட நேசத்தினாலும் அநீதியின் மீது கொண்ட வெறுப்பினாலும் தூண்டப்பட்டு கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததாலேயே அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
9 நீதியையும் அநீதியையும் குறித்து தாம் உணர்ந்த விதத்தை இயேசு எப்படி வெளிக்காட்டினார்? உதாரணத்திற்கு, ஊழியத்தில் சீஷர்கள் தம்முடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து அதனால் பலனடைந்தபோது இயேசு எப்படி உணர்ந்தார்? மிக்க மகிழ்ச்சியடைந்தார். (லூக்கா 10:1, 17, 21) அதேசமயத்தில், அன்புடன் தாம் செய்த உதவிகளை எருசலேம் மக்கள் அசட்டைச் செய்து மீண்டும் மீண்டும் கீழ்ப்படியாமல் போனபோது இயேசு எப்படி உணர்ந்தார்? அவர்களுடைய கலகத்தனத்தைக் கண்டு கண்ணீர்விட்டு அழுதார். (லூக்கா 19:41, 42) மக்களுடைய நல்நடத்தையும் சரி தீயநடத்தையும் சரி, அவருடைய மனதை வெகுவாய் பாதித்தன.
10. நல்ல செயல்களையும் தீய செயல்களையும் குறித்து நாம் எப்படி உணர வேண்டும், இதற்கு எது நமக்கு உதவும்?
10 இயேசுவின் உணர்ச்சிகளைக் குறித்து தியானித்துப் பார்க்கும்போது நாம் என்ன மனநிலையுடன் யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதைக் கண்டறியலாம். நாம் அபூரணராக இருந்தாலும், நல்ல செயல்கள்மீது ஆழ்ந்த ஆர்வத்தையும் தீய செயல்கள்மீது ஆழ்ந்த வெறுப்பையும் வளர்த்துக்கொள்ள முடியும். இந்த விஷயத்தில் யெகோவாவுக்கும் அவருடைய மகனுக்கும் இருப்பதைப் போன்ற உணர்ச்சிகளை நாமும் வளர்த்துக்கொள்ள உதவிகேட்டு யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டும். (சங்கீதம் 51:10) அதேசமயம், இதுபோன்ற உணர்ச்சிகளை மழுங்கடிக்கும் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவதை நாம் தவிர்க்க வேண்டும். பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்திலும் அதிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 13:20; பிலிப்பியர் 4:8) கிறிஸ்துவைப் போன்ற மனநிலையை நாம் வளர்த்துக்கொண்டால் வெறுமனே பெயருக்காகக் கீழ்ப்படிய மாட்டோம், சரியானதை செய்ய வேண்டுமென்ற ஆசையினால் கீழ்ப்படிவோம். தவறு செய்தால் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தினால் அதைத் தவிர்க்க மாட்டோம், அதை நாம் வெறுப்பதினால் தவிர்ப்போம்.
“அவர் பாவம் செய்யவில்லை”
11, 12. (அ) ஊழியக் கால ஆரம்பத்தில் இயேசுவுக்கு என்ன நடந்தது? (ஆ) இயேசுவுக்கு சாத்தானிடமிருந்து வந்த முதல் சோதனை என்ன, அவன் பயன்படுத்திய தந்திரம் என்ன?
11 இயேசு பாவத்தை வெறுத்தார் என்பதை ஊழியக் கால ஆரம்பத்தில் அவருக்கு வந்த சோதனைகள் காட்டுகின்றன. அவர் ஞானஸ்நானம் பெற்ற பிறகு 40 நாட்கள் இரவும் பகலும் சாப்பிடாமல் வனாந்தரத்தில் இருந்தார். அவருடைய விரதத்தின் முடிவில் சாத்தான் அவரைச் சோதிக்க வந்தான். அவன் எவ்வளவு தந்திரமாகச் சோதித்தான் என்பதைக் கவனியுங்கள்.—மத்தேயு 4:1-11.
12 முதல் சோதனையின்போது சாத்தான் அவரிடம் வந்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்றான். (மத்தேயு 4:3) நீண்ட நாள் விரதத்திற்குப் பின்பு இயேசுவுக்கு எப்படி இருந்தது? “அவருக்குப் பசியெடுத்தது” என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 4:2) மனிதனின் இயல்பான ஆசையை சாத்தான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பார்த்தான்; உடலிலிருந்த சக்தியெல்லாம் போய் அவர் பலவீனமாய் ஆகும்வரை அவன் வேண்டுமென்றே காத்திருந்தான் என்பதில் சந்தேகமில்லை. “நீ கடவுளுடைய மகனாக இருந்தால்” என அவன் ஏளனமாகச் சொன்னதையும் கவனியுங்கள். இயேசுதான் ‘படைப்புகளிலேயே முதல் படைப்பு’ என்று சாத்தானுக்கு நன்றாகத் தெரியும். (கொலோசெயர் 1:15) இருந்தாலும், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக இயேசுவை சாத்தான் தூண்டியபோது அவர் அதற்கு இடம்கொடுக்கவில்லை. தம்முடைய அதிகாரத்தைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுடைய விருப்பம் அல்ல என்பதை அவர் அறிந்திருந்தார். அதனால்தான் சாத்தான் சொன்னபடி செய்ய மறுத்தார்; இந்த விதத்தில், அடிப்படை தேவைகளுக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் தாம் யெகோவாவையே சார்ந்திருந்ததை மனத்தாழ்மையோடு காட்டினார்.—மத்தேயு 4:4.
13-15. (அ) இயேசுவுக்கு சாத்தானிடமிருந்து வந்த இரண்டாவது, மூன்றாவது சோதனை என்ன, அப்போது இயேசு என்ன செய்தார்? (ஆ) இயேசு எப்போதும் ஜாக்கிரதையாய் இருந்தார் என்று நமக்கு எப்படித் தெரியும்?
13 இரண்டாவது சோதனையின்போது இயேசுவை ஆலய மதிலின் மேல்மாடத்திற்கு சாத்தான் அழைத்துச் சென்றான். அனைவரும் பார்ப்பதற்காக அங்கிருந்து குதிக்கும்படி இயேசுவைத் தூண்டினான். அப்படிக் குதித்தால் உடனே தேவதூதர்கள் வந்து அவரைத் தாங்கிக்கொள்வார்கள் என்று கடவுளுடைய வார்த்தையை நயவஞ்சகமாக திரித்துக் கூறினான். ஆலயத்தில் கூடியிருக்கும் மக்கள் அந்த அற்புதத்தைப் பார்த்திருந்தால் இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை மறுத்திருப்பார்களா? இந்தச் சாகசத்தைக் கண்டு மக்கள் அவரை மேசியா என்று ஏற்றிருந்தால், இயேசு எத்தனையோ கஷ்டங்களையும் துன்பங்களையும் தவிர்த்திருக்கலாமே? தவிர்த்திருக்கலாம்தான், ஆனால் மேசியா மனத்தாழ்மையுடன் தமது வேலையை செய்ய வேண்டும் என்பதே யெகோவாவின் விருப்பம், இப்படிப்பட்ட சாகசங்கள் புரிந்து தம்மை மேசியாவென்று நிரூபிப்பது அவருடைய விருப்பமல்ல என்பதை இயேசு அறிந்திருந்தார். (ஏசாயா 42:1, 2) எனவே, இந்தச் சமயத்திலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போய்விடக் கூடாது என்பதில் இயேசு உறுதியாக இருந்தார். பெயருக்காகவும் புகழுக்காகவும் ஆசைப்பட்டு சாத்தானின் வலையில் அவர் சிக்கிவிடவில்லை.
14 சரி, அதிகாரத்திற்காக இயேசு ஆசைப்பட்டாரா? மூன்றாவது சோதனையின்போது, சாத்தான் உலகத்திலுள்ள எல்லா ராஜ்யங்களையும் இயேசுவுக்குக் காட்டி தன்னை ஒரேவொரு முறை வணங்கினால் அவற்றைத் தருவதாகச் சொன்னான். அவற்றையெல்லாம் இயேசு உயர்வாய் நினைத்தாரா? “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்றார். (மத்தேயு 4:10) வேறொரு கடவுளை வணங்கும்படி இயேசுவுக்கு எதைக் காட்டியும் மயக்க முடியாது. இந்த உலகத்தில் எந்த அதிகாரத்தையோ செல்வாக்கையோ காட்டி கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி அவரைச் செய்ய முடியாது.
15 சாத்தான் தன்னுடைய முயற்சியைக் கைவிட்டுவிட்டானா? இயேசுவின் கட்டளைக்கு இணங்கி அந்தச் சமயம் அவரை விட்டுச் சென்றான். என்றாலும், “வேறொரு நல்ல சந்தர்ப்பம் வரும்வரை அவரைவிட்டு விலகிப்போனான்” என்று லூக்கா சுவிசேஷம் சொல்கிறது. (லூக்கா 4:13) பார்க்கப்போனால், இயேசுவை சோதிக்க சாத்தான் கடைசிவரை சந்தர்ப்பம் தேடிக்கொண்டே இருந்தான். இயேசு ‘எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டார்’ என பைபிள் நமக்குச் சொல்கிறது. (எபிரெயர் 4:15) எனவே, இயேசு எப்போதும் ஜாக்கிரதையாய் இருந்தார்; நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
16. இன்று கடவுளுடைய ஊழியர்களை சாத்தான் எப்படிச் சோதிக்கிறான், அவனுடைய முயற்சிகளை நாம் எப்படி முறியடிக்கலாம்?
16 சாத்தான் இன்றுவரை கடவுளுடைய ஊழியர்களைச் சோதித்து வருகிறான். நாம் அபூரணராக இருப்பதால் அவனுடைய வலையில் சுலபமாக விழுந்துவிடலாம். நம்முடைய இரத்தத்தில் ஊறிப்போயிருக்கிற சுயநல ஆசையையும், அகந்தையையும், பதவி தாகத்தையும் தந்திரக்கார சாத்தான் தனக்கு சாதகமாய்ப் பயன்படுத்திக்கொள்கிறான். ஏன், பொருளாசை எனும் ஒரு கண்ணியைப் பயன்படுத்தியே இவை அனைத்துக்கும் நம்மை அவன் அடிமைப்படுத்திவிடலாம். அப்படியென்றால் அவ்வப்போது நம் உள்ளெண்ணங்களை நேர்மையுடன் ஆராய்ந்து பார்ப்பது மிக முக்கியம். 1 யோவான் 2:15-17-ல் உள்ள வசனங்களை நாம் தியானிப்பது அவசியம். அப்படிச் செய்கையில், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்வது நல்லது: உடலின் இச்சையும், சொத்து சேர்க்கும் மோகமும், மற்றவர்கள் நம்மைப் புகழ வேண்டும் என்ற ஆசையும் நம் பரலோக தகப்பன்மீது நமக்குள்ள அன்பை தணித்திருக்கிறதா? இந்த உலகம் அதன் அதிபதியான சாத்தானைப் போலவே அழிவின் பாதையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். எனவே, நம்மை பாவக் குழியில் தள்ள அவன் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் நாம் முறியடிப்போமாக! ‘பாவமே செய்யாத’ நம் தலைவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற தீர்மானமாய் இருப்போமாக.—1 பேதுரு 2:22.
‘நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’
17. தம் தகப்பனுக்குக் கீழ்ப்படிவதைக் குறித்து இயேசு எப்படி உணர்ந்தார், என்றாலும் சிலர் என்ன சொல்லலாம்?
17 கீழ்ப்படிந்து நடப்பது என்றால் பாவம் செய்யாமல் இருப்பது மட்டுமே அல்ல; கிறிஸ்து தம்முடைய தகப்பனின் ஒவ்வொரு கட்டளையையும் மனப்பூர்வமாய் நிறைவேற்றினார். ‘நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்கிறேன்’ என்று சொன்னார். (யோவான் 8:29) அதனால், அவர் அளவில்லா ஆனந்தத்தைக் கண்டார். ஆனால், கீழ்ப்படிந்து நடப்பது இயேசுவுக்கு ஒன்றும் அந்தளவு கஷ்டமாக இருந்திருக்காது என்று சிலர் சொல்லலாம். இயேசு தம் பரிபூரண தகப்பனுக்கு மட்டும்தான் கீழ்ப்படிய வேண்டியிருந்தது; நாமோ, அதிகாரத்தில் இருக்கும் அபூரண மனிதர்களுக்கே பெரும்பாலும் கீழ்ப்படிய வேண்டியிருக்கிறது என்று அவர்கள் நினைக்கலாம். உண்மையைச் சொன்னால், அதிகாரத்தில் இருந்த அபூரண மனிதர்களுக்கும் இயேசு கீழ்ப்படிந்தார்.
18. ஓர் இளைஞராக, கீழ்ப்படிதல் காட்டுவதில் இயேசு எவ்வாறு முன்மாதிரியாக இருக்கிறார்?
18 இயேசு வளர்ந்துவந்த சமயத்தில் அவருடைய அபூரண பெற்றோரான யோசேப்பு-மரியாளுடைய கட்டுப்பாட்டில் இருந்தார். மற்ற பிள்ளைகளைவிட இயேசு தம் பெற்றோர்களிடம் இருந்த குறைகளை இன்னும் தெளிவாகப் பார்த்திருப்பார். அதற்காக, குடும்பத்தில் பிள்ளைக்குக் கடவுள் கொடுத்திருந்த பங்கை மீறி, குடும்பத்தை நடத்துவது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தாரா? 12 வயது இயேசுவைக் குறித்து லூக்கா 2:51 சொல்வதைக் கவனியுங்கள். “அவர் . . . தொடர்ந்து அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தார்.” பெற்றோருக்குக் கீழ்ப்படியவும் தகுந்த மரியாதை காட்டவும் முயற்சி செய்கிற இளைஞர்களுக்கு இயேசு தலைசிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார்.—எபேசியர் 6:1, 2.
19, 20. (அ) அபூரண மனிதர்களுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் இயேசு என்ன வித்தியாசமான சவால்களை எதிர்ப்பட்டார்? (ஆ) சபையைத் தலைமைதாங்கி நடத்துபவர்களுக்கு உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?
19 அபூரண மனிதர்களுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில், இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் எதிர்ப்படாத சவால்களை இயேசு எதிர்ப்பட்டார். அவர் வாழ்ந்துவந்த வித்தியாசமான அந்தக் காலக்கட்டத்தைச் சற்று சிந்தித்து பாருங்கள். எருசலேம் ஆலயத்தையும் அதன் குருத்துவ முறையையும் கொண்ட யூத மதம் வெகு காலமாக யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது; ஆனால் அது விரைவில் நிராகரிக்கப்பட்டு அதற்குப் பதிலாக கிறிஸ்தவ சபை நிறுவப்படவிருந்தது. (மத்தேயு 23:33-38) அந்தச் சமயத்தில், கிரேக்க தத்துவத்திலிருந்து தோன்றிய பொய் போதனைகளை மதத் தலைவர்கள் அநேகர் போதித்துக்கொண்டிருந்தார்கள். ஆலயத்தில் ஊழல் தலைவிரித்தாடியதால் இயேசு அதை “கொள்ளைக்காரர்களின் குகை” என அழைத்தார். (மாற்கு 11:17) அதற்காக, ஆலயத்திற்கும் ஜெபக்கூடத்திற்கும் இயேசு போகாமல் இருந்துவிட்டாரா? இல்லை! இன்னமும் யெகோவா அவற்றைப் பயன்படுத்தி வந்ததால் அவரே தலையிட்டு மாற்றங்களைச் செய்யும்வரை இயேசு கீழ்ப்படிதலோடு ஜெபக்கூடத்திற்கும் ஆலயத்தில் நடைபெற்ற பண்டிகைகளுக்கும் சென்றுவந்தார்.—லூக்கா 4:16; யோவான் 5:1.
20 அதுபோன்ற சூழ்நிலையில் இயேசுவே கீழ்ப்படிதலைக் காட்டினார் என்றால், இன்று உண்மைக் கிறிஸ்தவர்கள் இன்னும் எந்தளவு கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டும்! சொல்லப்போனால், இன்று நாம் முற்றிலும் வித்தியாசமான காலக்கட்டத்தில்—பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முன்னுரைக்கப்பட்டபடி உண்மை வழிபாடு நிலைநாட்டப்பட்டிருக்கும் காலக்கட்டத்தில்—வாழ்ந்து வருகிறோம். பொய் மதத்திலிருந்து மீட்கப்பட்ட மக்களை கறைபடுத்த இனி ஒருபோதும் சாத்தானை அனுமதிக்கப்போவதில்லை என கடவுள் நமக்கு உறுதியளித்திருக்கிறார். (ஏசாயா 2:1, 2; 54:17) உண்மைதான், பாவத்தினாலும் அபூரணத்தினாலும் கிறிஸ்தவ சபையில் தவறுகள் நேரிடுவதை நாம் பார்க்கிறோம். ஆனால், மற்றவர்களுடைய தவறுகளைச் சாக்காக வைத்துக்கொண்டு நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகலாமா? கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போவதை நிறுத்திவிடலாமா, அல்லது மூப்பர்களைப் பற்றி குறைகூறலாமா? கூடவே கூடாது! மாறாக, சபையைத் தலைமைதாங்கி நடத்துபவர்களுக்கு நாம் உள்ளப்பூர்வமான ஆதரவு காட்டவே விரும்புகிறோம். கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் நாம் தவறாமல் சென்று, அங்குக் கொடுக்கப்படும் பைபிள் அறிவுரைகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்கவே விரும்புகிறோம்.—எபிரெயர் 10:24, 25; 13:17.
21. கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் இருக்க இயேசுவை சிலர் தூண்டியபோது அவர் என்ன செய்தார், நமக்கு என்ன மாதிரியை வைத்துவிட்டுப் போனார்?
21 யெகோவாவுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் தமக்கு யாரும் தடையாக இருக்க இயேசு அனுமதிக்கவில்லை, ஏன், தம்முடைய நெருங்கிய நண்பர்களையும் அனுமதிக்கவில்லை. உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் பேதுரு தன் எஜமானர் கஷ்டங்கள் பட்டு மரிக்க வேண்டியதில்லை என சொல்லி அவருடைய மனதை மாற்ற முயன்றார். பேதுரு நல்லெண்ணத்தோடு சொல்லியிருந்தாலும் அந்தத் தவறான ஆலோசனையை இயேசு உறுதியாக மறுத்தார். (மத்தேயு 16:21-23) கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை என்று அக்கறையுள்ள உறவினர்கள் சொல்கையில், இன்று இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் அவர்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்களைப் போல் நாமும் “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்.”—அப்போஸ்தலர் 5:29.
கிறிஸ்துவைப் போல் கீழ்ப்படிகையில் கிடைக்கும் பலன்கள்
22. இயேசு என்ன கேள்விக்குப் பதிலளித்தார், எப்படி?
22 இயேசு மரணத்தை எதிர்ப்பட்ட சமயத்தில் அவருடைய கீழ்ப்படிதலுக்கு மிகக் கடுமையான சோதனை வந்தது. வேதனைமிக்க அந்த நாளில் அவர் முழுமையாகக் “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.” அவர் தம்முடைய தகப்பனின் விருப்பத்தைச் செய்தார், தம்முடைய விருப்பத்தை அல்ல. (லூக்கா 22:42) இவ்வாறு உத்தமத்திற்கு உன்னத உதாரணமாய் திகழ்ந்தார். (1 தீமோத்தேயு 3:16) பரிபூரண மனிதன் சோதனையின் மத்தியிலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவானா என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கேட்கப்பட்ட கேள்விக்கு இயேசு பதிலளித்தார். ஆதாமும் ஏவாளும் அதற்குப் பதிலளிக்கவில்லை. ஆனால், பின்னர் இயேசு பூமிக்கு வந்தார், வாழ்ந்தார், மரித்தார், அந்த விவாதத்தைத் தீர்த்துவைத்தார். யெகோவாவின் படைப்புகளிலேயே உன்னதமானவர் இந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கடும் துன்பம் வந்தபோதிலும், ஏன், மரணமே வந்தபோதிலும் இயேசு கீழ்ப்படிந்தார்.
23-25. (அ) கீழ்ப்படிதலும் உத்தமமும் எப்படி ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கிறது? விளக்கவும். (ஆ) அடுத்த அதிகாரத்தில் நாம் எதைக் குறித்து சிந்திப்போம்?
23 நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் நம்முடைய உத்தமத்தை அல்லது உள்ளப்பூர்வமான பக்தியைக் காட்டுகிறோம். இயேசு கீழ்ப்படிதலைக் காட்டியதால் தம் உத்தமத்தைக் காத்துக்கொண்டார், முழு மனிதகுலத்திற்கும் நன்மைகளைத் தேடித்தந்தார். (ரோமர் 5:19) அதனால், இயேசுவை யெகோவா அபரிமிதமாக ஆசீர்வதித்தார். நம் எஜமானரான கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்தால் யெகோவா நம்மையும் ஆசீர்வதிப்பார். கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது ‘நிரந்தர மீட்புக்கு’ வழிவகுக்கும்.—எபிரெயர் 5:9.
24 இன்னும் சொல்லப்போனால், உத்தமமாய் இருப்பதே நமக்கு ஓர் ஆசீர்வாதம். “உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடப்பான்” என்று நீதிமொழிகள் 10:9 சொல்கிறது. உங்கள் உத்தமம் ஒரு பெரிய மாளிகை என்று சொன்னால் அதிலுள்ள ஒவ்வொரு செங்கலும் நீங்கள் ஒவ்வொரு முறை காட்டும் கீழ்ப்படிதல் எனலாம். ஒரேவொரு செங்கலைப் பார்த்தால் அது அற்பமாகத் தெரியலாம். ஆனால், ஒவ்வொரு செங்கலும் முக்கியம். அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து வைத்து கட்டும்போதுதான் பிரமாண்டமான ஒரு கட்டிடமே எழுகிறது. அதேபோல், ஒவ்வொரு நொடியும்... ஒவ்வொரு நாளும்... நாம் கீழ்ப்படிதலைக் காட்டும்போது உத்தமம் என்ற அழகிய மாளிகையை நாம் கட்டுகிறோம்.
25 காலமெல்லாம் தொடர்ந்து கீழ்ப்படிதலைக் காட்டுவதைப் பற்றி சிந்திக்கும்போது இன்னொரு முக்கியமான குணம் நம் நினைவுக்கு வருகிறது; அதுதான் சகிப்புத்தன்மை. சகிப்புத்தன்மை காட்டுவதில் இயேசு வைத்த முன்மாதிரியைக் குறித்து அடுத்த அதிகாரத்தில் பார்க்கலாம்.