Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் ஏழு

‘சகித்திருந்தவரைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பாருங்கள்’

‘சகித்திருந்தவரைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பாருங்கள்’

1-3. (அ) கெத்செமனே தோட்டத்தில் இயேசு எந்தளவு வேதனைப்படுகிறார், எதற்காக? (ஆ) இயேசு காட்டிய சகிப்புத்தன்மையைக் குறித்து என்ன சொல்லலாம், என்ன கேள்விகள் எழுகின்றன?

 இயேசு தாளமுடியாத துயரத்தில் இருக்கிறார். இந்தளவு மன வேதனையையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் இதுவரை அவர் அனுபவித்ததே இல்லை. இப்போது தம் வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவர் வழக்கமாகப் போகும் கெத்செமனே தோட்டத்திற்கு அப்போஸ்தலர்களுடன் செல்கிறார்; அங்கே அவர்கள் பலமுறை கூடிவந்திருக்கிறார்கள். ஆனால், இந்த இரவில் அவருக்குக் கொஞ்சம் தனிமை தேவைப்படுகிறது. அதனால், அப்போஸ்தலர்களை விட்டுவிட்டு தோட்டத்திற்குள்ளே சென்று முழங்கால்படியிட்டு ஜெபிக்கத் தொடங்குகிறார். உருக்கமாய் ஜெபம் செய்யும்போது அவர் அந்தளவு வேதனையில் இருப்பதால் அவருடைய வியர்வை ‘இரத்தத் துளிகள்போல் தரையில் விழுகின்றன.’—லூக்கா 22:39-44.

2 இயேசு ஏன் இந்தளவு துயரத்தில் இருக்கிறார்? சீக்கிரத்தில், சித்திரவதைப்பட்டு சாகப்போவதை அவர் அறிந்திருந்தார் என்பது உண்மைதான். என்றாலும், அது மட்டுமே அவருடைய துயரத்திற்குக் காரணம் அல்ல. அதைவிட முக்கியமான விஷயங்கள் அவர் மனதை ஆக்கிரமித்திருந்தன. தகப்பனின் பெயர்மீது எந்தக் களங்கமும் வந்துவிடக்கூடாது என்பதைக் குறித்து அவர் மிகவும் கவலைப்படுகிறார்; அதேசமயம், தம்முடைய உத்தமத்தின் மீதுதான் மனிதகுலத்தின் எதிர்காலமே சார்ந்திருக்கிறது என்பதையும் அறிந்திருக்கிறார். அதனால் தாம் சகித்திருப்பது மிகவும் முக்கியம் என்பதை இயேசு உணர்ந்திருக்கிறார். ஒருவேளை அவர் உத்தமம் காக்க தவறினால் யெகோவாவின் பெயருக்கு பயங்கரமான இழுக்கு ஏற்பட்டுவிடும். ஆனால், இயேசு உத்தமம் காக்க தவறுவதில்லை. சகிப்புத்தன்மைக்கு இலக்கணமாய் திகழ்ந்த இந்த மாமனிதர் இறுதி மூச்சை விடுவதற்கு சில கணத்திற்குமுன், “முடித்துவிட்டேன்!” என்று வெற்றிக் களிப்புடன் உரக்கச் சத்தமிடுகிறார்.—யோவான் 19:30.

3 ‘சகித்துக்கொண்ட அவரை [இயேசுவை] பற்றிக் கவனமாக யோசித்துப் பார்க்கும்படி’ பைபிள் நம்மை உந்துவிக்கிறது. (எபிரெயர் 12:3) இது சம்பந்தமாக சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன: இயேசு என்னென்ன சோதனைகளைச் சகித்தார்? சகித்திருக்க எது அவருக்கு உதவியது? அவருடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்? ஆனால், இந்தக் கேள்விகளைச் சிந்திப்பதற்கு முன் சகிப்புத்தன்மை என்றால் என்ன என்பதை ஆராயலாம்.

சகிப்புத்தன்மை என்றால் என்ன?

4, 5. (அ) “சகிப்புத்தன்மை” என்றால் என்ன? (ஆ) சகிப்புத்தன்மை என்பது தப்பிக்க முடியாத சோதனையை அனுபவிப்பது அல்ல என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்?

4 அவ்வப்போது நாம் அனைவருமே ‘பலவிதமான சோதனைகளால் வேதனைப்பட வேண்டியிருக்கிறது.’ (1 பேதுரு 1:6) நாம் ஏதாவது சோதனையை எதிர்ப்படுகிறோம் என்றால், அதை நாம் சகித்திருக்கிறோம் என்று அர்த்தமா? இல்லை. “சகிப்புத்தன்மை” என்பதற்கான கிரேக்க பெயர்ச்சொல் “எந்தக் கஷ்டத்தையும் தாங்கிக் கொள்வதை அல்லது எந்தக் கஷ்டத்திலும் தளர்ந்துவிடாமல் இருப்பதை” குறிக்கிறது. பைபிள் எழுத்தாளர்கள் குறிப்பிடும் சகிப்புத்தன்மையைப் பற்றி ஓர் அறிஞர் இவ்வாறு கூறினார்: “வேறு வழியில்லாமல் அல்ல, ஆனால் உறுதியான நம்பிக்கையுடன் சோதனைகளைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பான்மை இது . . . புயலே அடித்தாலும் ஒருவரைத் தடுமாறாமல் நிற்க வைக்கும் குணம் இது. சோதனைக்குப் பின்னால் இருக்கும் பலன்மீது கண்களை ஒருமுகப்படுத்தும் பண்பு இது; அதனால், மலை போன்ற சோதனையையும் மடுவாக மாற்றிவிடுகிறது.”

5 அப்படியானால், சகித்திருப்பது என்பது வெறுமனே தப்பிக்க முடியாத சோதனையை அனுபவிப்பதைக் குறிப்பதில்லை. பைபிளின்படி பார்த்தால், சகிப்புத்தன்மை என்பது நிலைதடுமாறாமல் இருப்பதைக் குறிக்கிறது; சோதனைகள் மத்தியிலும் சரியான மனநிலையுடன்... நம்பிக்கையான கண்ணோட்டத்துடன்... இருப்பதைக் குறிக்கிறது. இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: இரண்டு பேர் ஒரேமாதிரியான சூழலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் வெவ்வேறு காரணங்களுக்காக. ஒருவர் குற்றவாளி, வேண்டாவெறுப்போடு, சோகமாய் சிறை தண்டனையைக் கழிக்கிறார். இன்னொருவர் உண்மைக் கிறிஸ்தவர், உத்தமமாய் இருந்ததற்காக சிறையில் அடைக்கப்கபட்டிருக்கிறார். இவர் நிலைதடுமாறாமல், நம்பிக்கையான மனநிலையுடன் சிறைவாசத்தை அனுபவிக்கிறார். காரணம், தன் விசுவாசத்தை நிரூபிப்பதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக இதைக் கருதுகிறார். இவர்களில் யாரை சகிப்புத்தன்மைக்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வீர்கள்? நிச்சயம் அந்தக் குற்றவாளியை அல்ல, ஆனால் சகிப்புத்தன்மை காட்டுகிற உத்தமக் கிறிஸ்தவரையே.—யாக்கோபு 1:2-4.

6. சகிப்புத்தன்மையை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

6 மீட்பு பெறுவதற்குச் சகிப்புத்தன்மை மிகவும் இன்றியமையாதது. (மத்தேயு 24:13) ஆனால், இந்தக் குணம் நமக்குப் பிறவியிலேயே வந்துவிடுவதில்லை. இதை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எப்படி? ‘உபத்திரவம் சகிப்புத்தன்மையை உண்டாக்குகிறது’ என்று ரோமர் 5:3 சொல்கிறது. நாம் உண்மையிலேயே சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், எந்தவொரு விசுவாசப் பரிட்சைக்கும் பயந்து பின்வாங்கக் கூடாது; மாறாக, அவற்றைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் எதிர்ப்படும் சோதனைகள், சிறியவையோ பெரியவையோ, அவற்றை சமாளிக்கும்போது நமக்குச் சகிப்புத்தன்மை உண்டாகிறது. ஒவ்வொரு பரிட்சையையும் நாம் வெற்றிகரமாகச் சமாளிக்கும்போது அடுத்த பரிட்சைக்குத் தயாராகிறோம். இருந்தாலும், நம் சொந்த பலத்தினால் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள முடியாது. எப்போதும் ‘கடவுள் கொடுக்கிற பலத்தில் [நாம்] சார்ந்திருக்க’ வேண்டும். (1 பேதுரு 4:11) நிலைதடுமாறாமல் இருப்பதற்கு, யெகோவா நமக்கு ஓர் அற்புதமான உதவியை, ஆம், தமது மகனின் முன்மாதிரியை, அளித்திருக்கிறார். சகிப்புத்தன்மை காட்டுவதில் சிகரமாய் விளங்கிய இயேசுவின் பதிவை இப்போது நாம் கூர்ந்து ஆராயலாம்.

இயேசு சகித்த சோதனைகள்

7, 8. பூமிக்குரிய வாழ்வின் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தபோது இயேசு எதையெல்லாம் சகித்தார்?

7 இயேசு தம் பூமிக்குரிய வாழ்வின் முடிவை நெருங்க நெருங்க பல கொடுமைகளைச் சகித்தார். அந்தக் கடைசி இரவில் அவர் ஏற்கெனவே அனுபவித்த தாங்கமுடியா மன வேதனையோடு, அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும் அவர் பட்ட அவமானத்தையும் சற்று எண்ணிப்பாருங்கள். அவருடைய சிநேகிதனே அவருக்குக் குழி பறித்துவிட்டான். அவருடைய ஆருயிர் நண்பர்களே அவரைவிட்டு ஓடிப்போனார்கள். பின்பு அவர் சட்டவிரோதமாக விசாரணை செய்யப்பட்டார், யூத மதத்தவரின் உச்ச நீதிமன்ற உறுப்பினர்கள் அவரைக் கேலி செய்தார்கள், அவர் முகத்தில் துப்பினார்கள், முஷ்டியால் குத்தினார்கள். இருந்தாலும், எல்லாவற்றையும் அமைதியுடனும் தைரியத்துடனும் கண்ணியத்துடனும் சகித்துக்கொண்டார்.—மத்தேயு 26:46-49, 56, 59-68.

8 வாழ்க்கையின் அந்தக் கடைசி சில மணிநேரங்களில் உடல் ரீதியாக இயேசு சகித்த பயங்கரமான வேதனையைச் சொல்லி மாளாது. சாட்டையால் அவர் பயங்கரமாக விளாசப்பட்டார்; “ஆழமான வெட்டுக்காயங்கள் வரி வரியாக விழுமளவுக்கு, இரத்தம் பீறிட்டு வருமளவுக்கு” அந்தச் சவுக்கடிகள் இருந்ததாக ஒரு பிரபல மருத்துவ இதழ் சொல்கிறது. “வேதனையில் துடிதுடிக்க வைத்து, அணு அணுவாகச் சாகடிப்பதற்காக” அவர் கொண்டுபோகப்பட்டார். அவரை சித்திரவதைக் கம்பத்தில் வைத்து, கைகளிலும் கால்களிலும் பெரிய பெரிய ஆணிகளை ‘நங்... நங்...’ என சுத்தியால் அடித்தபோது அவர் பட்ட மரண வேதனையைச் சற்று எண்ணிப்பாருங்கள். (யோவான் 19:1, 16-18) அந்தச் சித்திரவதைக் கம்பத்தை தூக்கி நிறுத்துகையில் அவருடைய முழு உடல் பாரமும் அந்த ஆணிகளில் தொங்கியபோது அவருக்கு உண்டான பயங்கரமான வேதனையைச் சற்று கற்பனை செய்துபாருங்கள். ஆழமான வெட்டுக்காயங்கள் நிறைந்த அவருடைய முதுகு சித்திரவதைக் கம்பத்தில் சிராய்த்தபோது ஏற்பட்ட ரண வேதனையையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் பார்த்தபடி, மனவலியால் தவித்துக்கொண்டிருந்த இயேசு இப்போது உடல் வலியையும் சகித்துக்கொண்டார்.

9. நம்முடைய “சித்திரவதைக் கம்பத்தை” சுமந்துகொண்டு இயேசுவைப் பின்பற்றுவது என்றால் என்ன?

9 கிறிஸ்துவைப் பின்பற்றுகிற நாம் எதையெல்லாம் சகிக்க வேண்டியிருக்கலாம்? “யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், . . . தன் சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வர வேண்டும்” என்று இயேசு கூறினார். (மத்தேயு 16:24) ‘சித்திரவதைக் கம்பம்’ என்ற வார்த்தை வேதனையை, அவமானத்தை, ஏன், மரணத்தையும்கூட குறிப்பதற்கு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. கிறிஸ்துவின் பாதையில் செல்வது அவ்வளவு சுலபமல்ல. நாம் கிறிஸ்துவின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதால் இவ்வுலகில் தனித்து நிற்கிறோம். நாம் இந்த உலகின் பாகமாய் இல்லாததால் அது நம்மை வெறுக்கிறது. (யோவான் 15:18-20; 1 பேதுரு 4:4) இருந்தாலும், நம்முடைய சித்திரவதைக் கம்பத்தை சுமக்க விருப்பமுள்ளவர்களாக இருக்கிறோம். ஆம், நமது வழிகாட்டியாக விளங்கும் கிறிஸ்துவைப் பின்பற்றுவதை விட்டுவிடுவதற்குப் பதிலாக துன்பப்படவும், ஏன், சாகவும்கூட தயாராய் இருக்கிறோம்.—2 தீமோத்தேயு 3:12.

10-12. (அ) சுற்றியிருந்தவர்களின் அபூரணம் இயேசுவின் சகிப்புத்தன்மைக்கு ஏன் சோதனையாக இருந்தது? (ஆ) இயேசு எதிர்ப்பட்ட சோதனைகள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள்.

10 இயேசு தமது ஊழிய காலத்தின்போது, தம்மைச் சுற்றியிருந்த ஆட்களுடைய அபூரணத்தால் வந்த சோதனைகளையும் சகித்துக்கொண்டார். பூமியையும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தையும் படைக்கையில் யெகோவா அவரை “கைதேர்ந்த கலைஞனாக” பயன்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். (நீதிமொழிகள் 8:22-31) அதனால், மனிதர்களுக்காக யெகோவா கொண்டிருந்த நோக்கத்தை இயேசு அறிந்திருந்தார்; அவர்கள் யெகோவாவின் குணங்களைப் பிரதிபலிக்க வேண்டும்... பூரண ஆரோக்கியத்துடன் வாழ்வை அனுபவிக்க வேண்டும்... என்பதே அந்த நோக்கம். (ஆதியாகமம் 1:26-28) இயேசு பூமியில் வாழ்ந்தபோது, பாவத்தின் கோர விளைவுகளை வித்தியாசமான கண்ணோட்டத்திலிருந்து பார்த்தார். அவர் தாமே ஒரு மனிதனாய் இருந்ததால் மனிதனின் உணர்ச்சிகளையும் உள்ளெண்ணங்களையும் அறிந்திருந்தார். ஆதாம்-ஏவாள் அனுபவித்த பரிபூரண நிலையிலிருந்து மனிதர்கள் வெகுதூரம் விலகிப்போயிருந்ததை நேரடியாகக் கண்டபோது இயேசுவுக்கு எந்தளவு வேதனையாக இருந்திருக்கும்! இயேசுவின் சகிப்புத்தன்மைக்கு இது ஒரு சோதனை. பாவமுள்ள இந்த மனிதர்களைத் திருத்தவே முடியாது என்று நினைத்து இயேசு மனம் நொந்துபோனாரா? அவர் எப்படி உணர்ந்தார் என்று பார்க்கலாம்.

11 யூதர்களின் அலட்சிய போக்கு இயேசுவுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதால் அவர் வாய்விட்டு அழுதார். ஆனால், அவர்களுடைய அசட்டை மனப்பான்மை இயேசுவின் பக்திவைராக்கியத்தைத் தணித்துவிட்டதா, அல்லது அவர் பிரசங்கிப்பதை நிறுத்திவிடும்படி செய்துவிட்டதா? இல்லை. “அவர் தினமும் ஆலயத்தில் கற்பித்துவந்தார்.” (லூக்கா 19:41-44, 47) ஒரு சந்தர்ப்பத்தில், சூம்பிப்போன கையுடைய ஒரு மனிதனை ஓய்வுநாளில் இயேசு குணப்படுத்துவாரா என்று பரிசேயர்கள் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கல்நெஞ்சை கண்டு இயேசு “மிகவும் துக்கப்பட்டார்.” தம்மை எதிர்த்த இந்தச் சுயநீதிமான்களை கண்டு அவர் பயந்துவிட்டாரா? இல்லவே இல்லை! அவர் தைரியமாக அந்த மனிதனைச் சுகப்படுத்தினார், அதுவும் ஜெபக்கூடத்தில் எல்லார் முன்னிலையிலும் சுகப்படுத்தினார்.—மாற்கு 3:1-5.

12 வேறொன்றும் இயேசுவுக்குச் சோதனையாக இருந்தது. அதுதான், அவருடைய நெருங்கிய சீஷர்களின் பலவீனங்கள். 3-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, முதன்மை ஸ்தானத்தை அடைய வேண்டுமென்ற ஆசை அவர்களுக்குள் எப்போதும் புகைந்து கொண்டிருந்தது. (மத்தேயு 20:20-24; லூக்கா 9:46) மனத்தாழ்மையின் அவசியத்தைக் குறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இயேசு அவர்களுக்கு அறிவுறுத்தினார். (மத்தேயு 18:1-6; 20:25-28) ஆனால், மனத்தாழ்மை காட்டுவதில் அவர்கள் மந்தமாக இருந்தார்கள். ஏன், இயேசு சாகவிருந்த கடைசி ராத்திரியிலும்கூட தங்களில் யார் பெரியவன் என்பதைக் குறித்து அவர்கள் “கடுமையான வாக்குவாதம்” செய்துகொண்டிருந்தார்கள்! (லூக்கா 22:24) ‘இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது’ என்று இயேசு நம்பிக்கை இழந்துவிட்டாரா? இல்லை. எப்போதும் அவர்களிடம் பொறுமையோடு இருந்தார், என்றாவது ஒருநாள் அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்தார். அவர்களிடம் இருந்த நல்ல குணங்களையே பார்த்தார். அவர்களுக்கு யெகோவாமீது அன்பு இருந்ததையும் அவருடைய சித்தத்தை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்ததையும் இயேசு அறிந்திருந்தார்.—லூக்கா 22:25-27.

எதிர்ப்பு நம்முடைய ஆர்வத்தைத் தணித்துவிட அனுமதிப்போமா அல்லது அதைப் பொருட்படுத்தாமல் பக்திவைராக்கியத்துடன் தொடர்ந்து பிரசங்கிப்போமா?

13. இயேசு எதிர்ப்பட்டதைப் போன்ற என்ன சோதனைகளை நாமும் எதிர்ப்படலாம்?

13 இயேசு எதிர்ப்பட்டதைப் போன்ற சோதனைகளை நாமும் எதிர்ப்படலாம். உதாரணமாக, நல்ல செய்திக்குச் செவிகொடுக்காத அல்லது எதிர்ப்புத் தெரிவிக்கிற மக்களை நாம் சந்திக்க நேரிடலாம். அவர்களுடைய பிரதிபலிப்பு நம் ஆர்வத்தைத் தணித்துவிட அனுமதிப்போமா அல்லது அதைப் பொருட்படுத்தாமல் பக்திவைராக்கியத்துடன் தொடர்ந்து பிரசங்கிப்போமா? (தீத்து 2:14) நம் கிறிஸ்தவ சகோதரர்களுடைய அபூரணம் கூட நமக்கு ஒரு சோதனையாக அமையலாம். அவர்கள் யோசிக்காமல் சொல்லும் சொல்லோ செய்யும் செயலோ நம்முடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தலாம். (நீதிமொழிகள் 12:18) சக கிறிஸ்தவர்களுடைய குறைகளைக் கண்டு, ‘இவர்களெல்லாம் மாறவே மாட்டார்கள்’ என்று நம்பிக்கை இழந்துவிடுகிறோமா அல்லது தொடர்ந்து அவர்களுடைய தவறுகளைப் பொறுத்துக்கொண்டு அவர்களிடம் உள்ள நல்ல குணங்களைப் பார்க்கிறோமா?—கொலோசெயர் 3:13.

இயேசு ஏன் சகித்திருந்தார்?

14. உறுதியாக நிற்க இயேசுவுக்கு உதவிய இரு காரணங்கள் என்ன?

14 அவமானத்தை, ஏமாற்றத்தை, துன்பத்தை சந்தித்தபோதிலும் உறுதியாக நின்று உத்தமத்தைக் காத்துக்கொள்ள இயேசுவுக்கு எது உதவியது? அவருக்கு உறுதுணையாக இருந்த இரு முக்கியமான காரணங்களை இப்போது சிந்திக்கலாம். முதலாவதாக, ‘சகிப்புத்தன்மையையும் ஆறுதலையும் தருகிற கடவுளையே’ அவர் சார்ந்திருந்தார். (ரோமர் 15:5) இரண்டாவதாக, தாம் சகித்திருப்பதால் கிடைக்கும் பலன்கள் மீது தம் கண்களை ஒருமுகப்படுத்தினார். இவற்றை ஒவ்வொன்றாக நாம் ஆராயலாம்.

15, 16. (அ) சகித்திருக்க இயேசு தம் சொந்த பலத்தைச் சார்ந்திருக்கவில்லை என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) இயேசுவுக்கு தம் தகப்பன்மீது என்ன நம்பிக்கை இருந்தது, ஏன்?

15 கடவுளுடைய பரிபூரண மகனாக இருந்தபோதிலும் சகித்திருப்பதற்கு இயேசு தம் சொந்த பலத்தின் மீது சார்ந்திருக்கவில்லை. மாறாக, தம்முடைய பரலோகத் தகப்பனையே சார்ந்திருந்தார், உதவிக்காக அவரிடம் மன்றாடினார். “[கிறிஸ்து] தன்னை மரணத்திலிருந்து காப்பாற்ற முடிந்தவரிடம் கண்ணீர்விட்டுக் கதறி, மன்றாட்டுகளையும் விண்ணப்பங்களையும் ஏறெடுத்தார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபிரெயர் 5:7) இயேசு வெறுமனே மன்றாட்டுகளை மட்டுமல்ல விண்ணப்பங்களையும் “ஏறெடுத்தார்” என்பதைக் கவனியுங்கள். ‘விண்ணப்பம்’ என்ற வார்த்தை முக்கியமாக உள்ளப்பூர்வமான, ஊக்கமான வேண்டுதலைக் குறிக்கிறது, அதாவது உதவிக்காகக் கெஞ்சுவதை குறிக்கிறது. ‘விண்ணப்பங்கள்’ என பன்மையில் இருப்பதால், இயேசு பலமுறை யெகோவாவிடம் மன்றாடியிருப்பார் என்று தெரிகிறது. சொல்லப்போனால், கெத்செமனே தோட்டத்தில் இயேசு அடிக்கடி ஜெபித்தார், உருக்கமாய் ஜெபித்தார்.—மத்தேயு 26:36-44.

16 தம்முடைய விண்ணப்பங்களுக்கு யெகோவா பதிலளிப்பார் என இயேசு ஆணித்தரமாக நம்பினார்; ஏனென்றால், தம்முடைய தகப்பன் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்பதை அறிந்திருந்தார். (சங்கீதம் 65:2) உண்மை ஊழியர்களின் ஜெபங்களுக்குத் தமது தகப்பன் செவிகொடுத்ததை பூமிக்கு வரும் முன் இந்த முதல் மகன் நேரடியாகக் கண்டார். உதாரணத்திற்கு, தானியேல் தீர்க்கதரிசியின் உள்ளப்பூர்வமான ஜெபத்திற்குப் பதிலளிக்க, அதுவும் அவர் ஜெபம் செய்து முடிப்பதற்கு முன்பே பதிலளிக்க, யெகோவா தமது தூதனை அனுப்பியதை பரலோகத்திலிருந்த மகன் கண்ணாரக் கண்டார். (தானியேல் 9:20, 21) அப்படியானால், தம்முடைய ஒரே மகன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டி, ‘கண்ணீர்விட்டுக் கதறியபோது’ தகப்பன் கேட்காமல் இருந்திருப்பாரா? யெகோவா தம்முடைய மகனின் வேண்டுதல்களுக்குச் செவிகொடுத்து, துன்பங்களைத் தாங்கிக்கொள்வதற்கான பலத்தை அளிக்க ஒரு தூதனை அனுப்பினார்.—லூக்கா 22:43.

17. சகித்திருப்பதற்கு நாம் ஏன் கடவுளையே சார்ந்திருக்க வேண்டும், எந்த விதத்தில் சார்ந்திருக்கலாம்?

17 சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தைப் பெற நாமும் கடவுளையே சார்ந்திருக்க வேண்டும். ஏனென்றால், அவரே நம்மை “பலப்படுத்துகிறவர்.” (பிலிப்பியர் 4:13) உதவிக்காக யெகோவாவிடம் மன்றாடுவதன் அவசியத்தைப் பரிபூரண மகனே உணர்ந்திருந்தார் என்றால் நாம் இன்னும் எந்தளவுக்கு உணர வேண்டும்! இயேசுவைப் போலவே நாமும் யெகோவாவிடம் அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும். (மத்தேயு 7:7) நம்மையும் ஒரு தேவதூதர் வந்து பலப்படுத்துவார் என நாம் எதிர்பார்ப்பதில்லை என்றாலும், ஒன்றைக் குறித்து நிச்சயமாய் இருக்கலாம்: ‘இரவும் பகலும் விடாமல் அவரிடம் மன்றாடி ஜெபம் செய்கிற’ உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு நம் அன்பான தகப்பன் நிச்சயம் பதிலளிப்பார். (1 தீமோத்தேயு 5:5) நமக்கு என்ன சோதனைகள் வந்தாலும் சரி—வியாதி வந்தாலும் சரி, அன்பானவரை இழந்தாலும் சரி, எதிரிகளால் துன்புறுத்தப்பட்டாலும் சரி—ஞானத்திற்காகவும் தைரியத்திற்காகவும் சகித்திருப்பதற்குத் தேவையான பலத்திற்காகவும் யெகோவாவிடம் ஊக்கமாய் ஜெபம் செய்யும்போது அவர் கண்டிப்பாக நமக்குப் பதிலளிப்பார்.—2 கொரிந்தியர் 4:7-11; யாக்கோபு 1:5.

சகித்திருக்க உதவி கேட்டு யெகோவாவிடம் ஊக்கமாய் ஜெபிக்கும்போது அவர் நிச்சயம் பதிலளிப்பார்

18. சகித்திருப்பதால் கிடைக்கும் பலன்கள்மீது இயேசு எவ்வாறு தம் கண்களை ஒருமுகப்படுத்தினார்?

18 சகித்திருக்க இயேசுவுக்கு உதவிய இரண்டாவது காரணம், சகித்திருப்பதால் கிடைக்கும் பலன்கள்மீது அவர் தம் கண்களை ஒருமுகப்படுத்தியதே. “அவர் தன் முன்னால் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக . . . மரக் கம்பத்தில் வேதனைகளைச் சகித்தார்” என்று இயேசுவைக் குறித்து பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 12:2) நம்பிக்கை, சந்தோஷம், சகிப்புத்தன்மை ஆகிய மூன்றும் எவ்வாறு ஒன்றோடொன்று சேர்ந்து செயல்படுகிறது என்பதை இயேசுவின் உதாரணம் காட்டுகிறது. சுருக்கமாகச் சொன்னால்: நம்பிக்கை சந்தோஷத்தை அளிக்கிறது, சந்தோஷம் சகிப்புத்தன்மையை அளிக்கிறது. (ரோமர் 15:13; கொலோசெயர் 1:11) இயேசுவுக்கு முன் மகத்தான எதிர்பார்ப்புகள் இருந்தன. தாம் உத்தமமாய் நடந்தால்தான் தம் தகப்பனுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த அவரால் உதவ முடியும், அதோடு மனிதகுலத்தைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்க முடியும் என்பதை இயேசு அறிந்திருந்தார். கீழ்ப்படிந்து நடக்கும் மனிதர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களை வாரி வழங்குவதற்காக அரசராக... தலைமைக் குருவாக... பொறுப்பேற்கும் நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. (மத்தேயு 20:28; எபிரெயர் 7:23-26) தமக்கு முன்னிருந்த எதிர்பார்ப்புகளின் மீதும் நம்பிக்கையின் மீதும் தம் கவனத்தை ஒருமுகப்படுத்தியதால் இயேசு அளவில்லா சந்தோஷத்தை அடைந்தார், அந்த சந்தோஷமே சகித்திருக்க அவருக்குத் தெம்பளித்தது.

19. விசுவாசப் பரிட்சைகளை எதிர்ப்படும்போது நம்பிக்கை, சந்தோஷம், சகிப்புத்தன்மை ஆகிய மூன்றும் சேர்ந்து செயல்பட நாம் என்ன செய்ய வேண்டும்?

19 நம்முடைய விஷயத்திலும் நம்பிக்கை, சந்தோஷம், சகிப்புத்தன்மை ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று சேர்ந்து செயல்பட வேண்டும். “நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். அதோடு, “உபத்திரவத்தில் சகித்திருங்கள்” என்றும் சொன்னார். (ரோமர் 12:12) தற்போது நீங்கள் ஏதாவது கடுமையான விசுவாசப் பரிட்சையை எதிர்ப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால், எதிர்காலத்தில் கிடைக்கும் பலன்கள்மீது கண்களை பதியவையுங்கள். நீங்கள் சகித்திருப்பது யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்கும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். கடவுளுடைய அரசாங்கம் அள்ளிவழங்கும் அற்புத ஆசீர்வாதங்கள்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். வரப்போகும் புதிய உலகில் நீங்கள் ஆனந்தமாக இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். பூஞ்சோலையில் நீங்கள் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களை மனத்திரையில் ஓடவிடுங்கள். யெகோவாவின் அற்புதமான வாக்குறுதிகள் நிறைவேறி வருவதை உங்கள் மனக்கண்ணில் பாருங்கள். உதாரணத்திற்கு, யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதையும், அநீதியும் அக்கிரமமும் பூமியிலிருந்து பூண்டோடு அழிக்கப்படுவதையும், வியாதியும் மரணமும் சுவடு தெரியாமல் ஒழிக்கப்படுவதையும் கற்பனை செய்து பாருங்கள். அப்போது, உங்கள் இதயத்தில் சந்தோஷ சாரல் அடிக்கும். அந்த சந்தோஷம் எப்பேர்ப்பட்ட சோதனையையும் சகித்திருக்க உங்களுக்கு பலமளிக்கும். கடவுளுடைய அரசாங்கத்தில் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களுடன் ஒப்பிடும்போது, இன்றைக்கு நாம் அனுபவிக்கும் துன்பமெல்லாம் “லேசானது, அது நொடிப்பொழுதுதான் இருக்கும்.”—2 கொரிந்தியர் 4:17.

‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்’

20, 21. சகிப்புத்தன்மை காட்டும் விஷயத்தில் யெகோவா நம்மிடம் எந்தளவு எதிர்பார்க்கிறார், நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?

20 தம்முடைய சீஷராய் இருப்பது சவாலான விஷயம், அதற்கு சகிப்புத்தன்மை தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார். (யோவான் 15:20) அவருடைய முன்மாதிரி நமக்கு உந்துகோலாக இருக்கும் என்பதை உணர்ந்து, நமக்கு வழிகாட்டியாக இருக்க இயேசு முன்வந்தார். (யோவான் 16:33) சகிப்புத்தன்மைக்கு இயேசு பரிபூரண முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்பது உண்மைதான், ஆனால் நாம் பரிபூரணத்தைவிட்டு வெகு தூரம் வழுவிச் சென்றிருக்கிறோமே. அப்படியிருக்க, யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்? அதை பேதுரு சொல்கிறார்: “கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.” (1 பேதுரு 2:21) சோதனைகளை சமாளிக்கும் விஷயத்தில், இயேசு நமக்கு ஒரு “முன்மாதிரியை” விட்டுச் சென்றார். a சகிப்புத்தன்மை காட்டுவதில் அவர் வைத்த முன்மாதிரியை ‘அடிச்சுவடுகளுக்கு’ ஒப்பிடலாம். அவருடைய அடிச்சுவடுகளை நாம் அச்சுப்பிசகாமல் அப்படியே பின்பற்ற முடியாது என்றாலும், அவற்றை “நெருக்கமாக” பின்பற்ற முடியும்.

21 அப்படியானால், நம்மால் முடிந்தவரை இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற தீர்மானமாய் இருப்போமாக. அவருடைய அடிச்சுவடுகளை நாம் எந்தளவு நெருக்கமாகப் பின்பற்றுகிறோமோ அந்தளவு “முடிவுவரை” சகித்திருக்க நாம் தயாராய் இருப்போம் என்பதை ஒருநாளும் மறவாதிருப்போமாக. அது இந்தப் பொல்லாத உலகத்தின் முடிவாக இருந்தாலும் சரி, நம் வாழ்க்கையின் முடிவாக இருந்தாலும் சரி. எது முதலில் வருமென நமக்குத் தெரியாது, ஆனால் ஒன்றுமட்டும் நமக்கு நன்றாகத் தெரியும்: நாம் சகித்திருந்தால் யெகோவா நமக்குச் சதாகாலம் பலனளிப்பார்.—மத்தேயு 24:13.

a “முன்மாதிரி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் நேர்பொருள், “பார்த்து எழுதுவதற்காக முதல் வரியில் உள்ள மாதிரி எழுத்துக்கள்.” கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்திய ஒரே எழுத்தாளர் அப்போஸ்தலன் பேதுருதான். இது, “பிள்ளைகள் எழுதப் பழகும் கையெழுத்து-மாதிரி (ஹான்ட்-ரைட்டிங்) புத்தகத்தில் உள்ள முதல் வரியை (காப்பி-ஹெட்)” குறிக்கிறது; “இந்த வரியிலுள்ள முத்து முத்தான எழுத்துக்களைப் பார்த்து தங்களால் முடிந்தளவு பிள்ளைகள் அப்படியே கீழே எழுதுவார்கள்.”