Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் நான்கு

‘இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கம்’

‘இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கம்’

“நான்தான்”

1-3. இயேசு என்ன ஆபத்தை எதிர்ப்படுகிறார், அதற்கு அவர் எப்படிப் பிரதிபலிக்கிறார்?

 கையில் வாள்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு, படை வீரர்களுடன் ஒரு பெரிய கும்பல் இயேசுவைப் பிடிக்க வந்துகொண்டிருக்கிறது. அவரை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற வெறி அவர்கள் அனைவர் மனதிலும் ஆக்கிரமித்திருப்பது போல் தெரிகிறது. இருள் கவிந்த எருசலேம் வீதிகளின் வழியாக அவர்கள் வந்து, கீதரோன் பள்ளத்தாக்கைக் கடந்துவிட்டார்கள், இப்போது ஒலிவ மலையை நோக்கி விறுவிறுவென நடந்துகொண்டிருக்கிறார்கள். அன்று பௌர்ணமி! அப்படியிருந்தும், அவர்கள் தீவட்டிகளையும் விளக்குகளையும் ஏந்திக்கொண்டு வருகிறார்கள். ஏன்? நிலவை மேகம் மறைப்பதாலா அல்லது அவர்கள் தேடிச் செல்லும் ஆள் இருளில் ஒளிந்திருப்பார் என்று நினைப்பதாலா? காரணம் எதுவாக இருந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம்: இயேசு ஒரு கோழை என்று யாராவது நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு.

2 எதிரிகள் நெருங்கி வருவதை இயேசுவால் உணர முடிகிறது. இருந்தாலும், அவர் பயந்து ஓடிப்போகவில்லை, அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய நம்பிக்கைக்குரிய நண்பனாய் இருந்த யூதாஸின் தலைமையில் அந்தச் சதிகார கும்பல் அவரை நெருங்கிவிட்டது. இப்போது யூதாஸ் தன்னுடைய முன்னாள் தலைவர் இயேசுவுக்குப் போலியாக வாழ்த்துக் கூறி முத்தமிடுகிறான், கொஞ்சமும் தயங்காமல் எதிரிகளிடம் அவரைக் காட்டிக்கொடுக்கிறான். இருந்தாலும், இயேசு நிலைகுலையாமல் உறுதியாக இருக்கிறார். அந்தக் கும்பலிடம், “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், “நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறோம்” என்கிறார்கள்.

3 ஆயுதமேந்திய அந்தப் பயங்கரமான கும்பலைப் பார்த்தால் பயத்தில் பலர் வெலவெலத்துப் போவார்கள். இயேசுவும் அப்படித்தான் பயந்துவிடுவார் என அந்தக் கூட்டத்தார் நினைத்திருக்கலாம். ஆனால், இயேசு அஞ்சி நடுங்கவுமில்லை, அங்கிருந்து ஓடிப்போகவுமில்லை, ஏதோ பொய் சொல்லி மழுப்பவுமில்லை. மாறாக, “நான்தான்” என்று தைரியமாகச் சொல்கிறார். அவர் கொஞ்சமும் பதட்டப்படாமல் இருந்ததைப் பார்த்து, அதிர்ச்சியில் அவர்கள் தடுமாறி பின்னால் விழுகிறார்கள்!—யோவான் 18:1-6; மத்தேயு 26:45-50; மாற்கு 14:41-46.

4-6. (அ) கடவுளுடைய மகன் எதற்கு ஒப்பிடப்படுகிறார், ஏன்? (ஆ) இயேசு என்ன மூன்று விதங்களில் தைரியத்தைக் காட்டினார்?

4 இயேசுவால் எப்படிப் படுபயங்கரமான ஆபத்தையும் துளிகூட பயமின்றி எதிர்கொள்ள முடிந்தது? ஒரே வார்த்தையில் சொன்னால், தைரியம்தான். ஒரு தலைவனிடம் எதிர்பார்க்கப்படும், மெச்சப்படும் குணங்களில் இதுவும் ஒன்று. தைரியத்தைக் காட்டுவதில் வேறெந்த மனிதனும் அவருக்கு ஈடாக இருந்ததில்லை, இயேசுவுக்கு நிகர் இயேசுதான்! முந்திய அதிகாரத்தில், இயேசு எந்தளவு சாந்தமும் மனத்தாழ்மையுமானவர் என்று பார்த்தோம். அதனால், அவரை “ஆட்டுக்குட்டி” என்று அழைப்பது சாலப் பொருத்தம். (யோவான் 1:29) ஆனால், அவருடைய தைரியம் அவரை முற்றிலும் வித்தியாசமானவராகச் சித்தரித்துக் காட்டுகிறது. கடவுளுடைய மகனான அவரை, ‘இதோ! யூதா கோத்திரத்துச் சிங்கம்’ என்று பைபிள் விவரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 5:5.

5 பொதுவாக, சிங்கம் தைரியத்திற்கு ஒப்பிடப்படுகிறது. ஒரு பெரிய ஆண் சிங்கத்தின் முன் நேருக்குநேர் நின்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்படிப்பட்ட அனுபவம் உங்களுக்கு இருந்திருந்தால், பாதுகாப்பான ஓர் இடத்தில் நின்றே அதைப் பார்த்திருப்பீர்கள், ஒருவேளை மிருகக்காட்சி சாலையில் ஒரு வேலிக்குப் பின்னால் நின்றே பார்த்திருப்பீர்கள். அதுவும்கூட குலைநடுங்க வைக்கும் அனுபவமே! வலிமைமிக்க இந்தக் கம்பீரமான மிருகத்தின் முகத்தை நீங்கள் பார்க்கும்போது, அதுவும் உங்களையே உற்றுப் பார்க்கிறது. அது உங்களைப் பார்த்து பயந்து ஓடுவதாக உங்களால் கற்பனைகூட செய்ய முடியாது. “விலங்குகளிலேயே மகா பலம்படைத்ததும், யாரைக் கண்டும் பயந்து ஓடாததுமான சிங்கம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 30:30) கிறிஸ்து சிங்கம் போன்ற தைரியம் உடையவர்.

6 சிங்கம் போன்ற தைரியத்தை இயேசு மூன்று விதங்களில் காட்டினார்: சத்தியத்தின் சார்பாக நின்றபோது, நியாயத்தை நிலைநாட்டியபோது, எதிர்ப்பை எதிர்கொண்டபோது. அதை இப்போது பார்ப்போம். அதோடு, நாம் எல்லாரும்—இயல்பாகவே தைரியசாலிகளாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி—இந்த விஷயத்தில் எப்படி இயேசுவைப் பின்பற்றலாம் என்றும் பார்ப்போம்.

சத்தியத்தின் சார்பாகத் தைரியமாய் நின்றார்

7-9. (அ) இயேசுவுக்கு 12 வயதாக இருந்தபோது என்ன நடந்தது, நீங்கள் அவருடைய இடத்தில் இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பீர்கள்? (ஆ) மதப் போதகர்கள் மத்தியில் இயேசு எப்படித் தைரியத்தைக் காட்டினார்?

7 ‘பொய்க்குத் தகப்பனான’ சாத்தானுடைய ஆதிக்கத்தில் இருக்கும் இவ்வுலகில், சத்தியத்தின் சார்பாக நிற்பதற்குத் தைரியம் தேவை. (யோவான் 8:44; 14:30) இயேசு அப்படி சத்தியத்தின் சார்பாக நிற்பதற்கு வளர்ந்து ஆளாகும்வரை காத்திருக்கவில்லை. ஒருமுறை அவருடைய குடும்பத்தினர் பஸ்கா பண்டிகை கொண்டாடிவிட்டு வீடு திரும்பியபோது 12 வயது இயேசு மட்டும் எருசலேமிலேயே இருந்துவிட்டார். அவரைக் காணாமல் பதறிப்போன மரியாளும் யோசேப்பும் மூன்று நாட்கள் அவரைத் தீவிரமாய்த் தேடினார்கள். கடைசியில் அவரை ஆலயத்தில் கண்டுபிடித்தார்கள். அவர் அங்கு என்ன செய்துகொண்டிருந்தார்? “போதகர்கள் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் சொல்வதைக் கவனித்துக்கொண்டும் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருந்தார்.” (லூக்கா 2:41-50) அந்தச் சூழமைவைக் கவனியுங்கள்.

8 சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறபடி, பொதுவாக மதப் பிரமுகர்கள் சிலர் பண்டிகைகள் முடிந்த பிறகு ஆலயத்தின் விசாலமான ஒரு முகப்பில் உட்கார்ந்துகொண்டு மக்களுக்குக் கற்பிப்பார்கள்; மக்கள் எல்லாரும் அவர்கள் பாதத்தருகில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கவனித்துக்கொண்டும் கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருப்பார்கள். இந்த மதப் போதகர்கள் மெத்தப் படித்தவர்கள். மோசேயின் சட்டத்தைக் கரைத்துக் குடித்தவர்கள்; கணக்கு வழக்கில்லாத, சிக்கலான மனித சட்டங்களும் பாரம்பரியங்களும் அவர்களுக்கு அத்துப்படி. அவர்கள் மத்தியில் நீங்கள் இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பீர்கள்? நடுங்கிப்போயிருப்பீர்களா? யாராக இருந்தாலும் அப்படித்தான் உணருவார்கள். ஆனால், நீங்கள் 12 வயது பிள்ளையாக இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பீர்கள்? அநேக சிறுவர்கள் கூச்ச சுபாவமுள்ளவர்கள். (எரேமியா 1:6) சிலர் எப்போதும் டீச்சர் கண்ணில் படாமல் இருக்கத்தான் பார்ப்பார்கள். எங்கே டீச்சர் தன்னை ஏதாவது செய்யும்படி அல்லது சொல்லும்படி கேட்பார்களோ, எதற்கெடுத்தாலும் தன்னையே சுட்டிக்காட்டுவார்களோ, எல்லார் முன்பும் மானத்தை வாங்கிவிடுவார்களோ, கேலிகிண்டல் செய்வார்களோ என்றெல்லாம் பயப்படலாம்.

9 ஆனால், இயேசு மெத்தப் படித்த அந்தப் போதகர்கள் மத்தியில் உட்கார்ந்து பயமில்லாமல் அவர்களையே துருவித்துருவி கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அதுமட்டுமா? “அவருடைய புத்திக்கூர்மையைப் பார்த்தும், அவர் சொன்ன பதில்களைக் கேட்டும் அங்கிருந்த எல்லாருமே பிரமித்துப்போனார்கள்” என்றும் பைபிள் சொல்கிறது. (லூக்கா 2:47) அந்தச் சமயத்தில் இயேசு என்ன பேசினார் என்று பைபிள் சொல்வதில்லை. என்றாலும், அந்த மதத் தலைவர்கள் பரப்பிய பொய் போதனைகளை இயேசு கிளிப்பிள்ளை போல் ஒப்பித்திருக்க மாட்டார் என்பது மட்டும் நிச்சயம். (1 பேதுரு 2:22) மாறாக, கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தையே பேசினார். 12 வயது பிள்ளைக்கு இவ்வளவு ஞானமா... இவ்வளவு தைரியமா... என்று அங்கிருந்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்!

கிறிஸ்தவ இளைஞர்கள் அநேகர் தங்கள் நம்பிக்கைகளைக் குறித்து மற்றவர்களிடம் தைரியமாகப் பேசுகிறார்கள்

10. இன்றுள்ள இளம் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தைரியத்தை எப்படிப் பின்பற்றுகிறார்கள்?

10 இன்று கிறிஸ்தவ இளைஞர்கள் பலர் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார்கள். இளம் இயேசுவைப் போல் அவர்கள் பரிபூரணர் அல்ல என்பது உண்மைதான். என்றாலும், சத்தியத்தின் சார்பாகப் பேச இயேசுவைப் போலவே அவர்களும் வளர்ந்து ஆளாகும்வரை காத்திருப்பதில்லை. அவர்கள் படிக்கும் பள்ளியில் அல்லது வசிக்கும் வட்டாரத்தில் மக்களிடம் சாதுரியமாகக் கேள்விகள் கேட்கிறார்கள், அவர்கள் சொல்வதை செவிகொடுத்து கேட்கிறார்கள், பின்பு மரியாதைக்குரிய விதத்தில் சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கிறார்கள். (1 பேதுரு 3:15) கிறிஸ்துவைப் பின்பற்ற தங்கள் பள்ளித் தோழர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, அண்டை அயலாருக்கு இந்த இளைஞர்கள் உதவுகிறார்கள். இவர்களுடைய தைரியத்தைக் கண்டு யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்! இப்படிப்பட்ட இளைஞர்கள் புத்துணர்ச்சியூட்டுகிற... மனதுக்கு இதமளிக்கிற... திரளான பனித்துளிகளைப் போல் இருக்கிறார்கள் என அவருடைய வார்த்தை சொல்கிறது.—சங்கீதம் 110:3.

11, 12. வளர்ந்து ஆளான பின்பும் இயேசு எவ்வாறு சத்தியத்தின் சார்பாகப் பேசினார்?

11 வளர்ந்து ஆளான பிறகும் சத்தியத்தின் சார்பாகப் பேசுவதில் இயேசு எப்போதும் தைரியத்தைக் காட்டினார். சொல்லப்போனால், பயங்கரமாய் தோன்றும் ஓர் எதிர்ப்போடுதான் அவருடைய ஊழியத்தையே ஆரம்பித்தார். அப்போது அவர் தலைமைத் தூதராக அல்ல, சாதாரண மனிதராக சாத்தானை சந்திக்க வேண்டியிருந்தது. ஆம், யெகோவாவின் எதிரிகளிலேயே சக்திவாய்ந்த, ஆபத்தான எதிரியைச் சந்திக்க வேண்டியிருந்தது. கடவுளுடைய வார்த்தையை சாத்தான் புரட்டிப் பேசியபோது இயேசு அவனை எதிர்த்து அவன் சொன்னதைப் பொய்யென நிரூபித்தார். கடைசியில், “அப்பாலே போ சாத்தானே!” என்று தைரியமாக ஆணையிட்டு அவனை விரட்டினார்.—மத்தேயு 4:2-11.

12 தம் தகப்பனுடைய வார்த்தைகளைப் புரட்டிப் பேசியதை அல்லது தவறாகப் பொருத்தியதை இயேசு தைரியமாக எதிர்த்தார்; இவ்வாறு, தம்முடைய ஊழிய காலமெல்லாம் தைரியத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இன்று போலவே அன்றும் மதச் சார்பான விஷயங்களில் பொய்யும் பித்தலாட்டமும் மலிந்து கிடந்தன. “நீங்கள் வழிவழியாகப் பின்பற்றுகிற பாரம்பரியத்தால் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்கிவிடுகிறீர்கள்” என அன்றைய மதத் தலைவர்களிடம் இயேசு சொன்னார். (மாற்கு 7:13) அப்படிப்பட்ட மனிதர்களை மக்கள் புனிதர்களாக கருதினார்கள், இயேசுவோ அவர்களைக் குருட்டு வழிகாட்டிகள் என்றும் வெளிவேஷக்காரர்கள் என்றும் தைரியமாக எல்லார் முன்னிலையிலும் கண்டனம் செய்தார். a (மத்தேயு 23:13, 16) தைரியத்திற்கு முன்னுதாரணமாய் விளங்கும் இயேசுவை இந்த விஷயத்தில் நாம் எவ்வாறு பின்பற்றலாம்?

13. இயேசுவைப் பின்பற்றும் நாம் எதை மனதில் வைக்க வேண்டும், என்றாலும் நமக்கு என்ன பாக்கியம் இருக்கிறது?

13 இயேசுவைப் போல் மற்றவர்களுடைய இருதயத்தில் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் திறமையோ அவர்களை நியாயந்தீர்ப்பதற்கான அதிகாரமோ நமக்கு இல்லை என்பதை நாம் எப்போதும் மனதில் வைக்க வேண்டும். இருந்தாலும், அவரைப் போல் சத்தியத்தின் சார்பாகத் தைரியமாய்ப் பேச முடியும். உதாரணத்திற்கு, கடவுளைப் பற்றி... அவருடைய நோக்கத்தைப் பற்றி... அவருடைய வார்த்தையைப் பற்றி... மதங்கள் கற்பிக்கும் பொய்களை அம்பலப்படுத்துவதன் மூலம் சாத்தானின் பிரச்சாரத்தினால் இருண்டு கிடக்கும் இவ்வுலகிற்கு ஆன்மீக அறிவொளியூட்டுகிறோம். (மத்தேயு 5:14; வெளிப்படுத்துதல் 12:9, 10) கடவுளோடுள்ள பந்தத்தைக் கெடுக்கிற, பீதியூட்டுகிற பொய் போதனைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்கள் விடுதலை பெற உதவுகிறோம். “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற இயேசுவின் வாக்குறுதி நிறைவேறுவதைக் காண்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!—யோவான் 8:32.

அவர் தைரியமாக நியாயத்தை நிலைநாட்டினார்

14, 15. (அ) “எது நியாயம் என்பதை” தெளிவாக்க இயேசு பயன்படுத்திய ஒரு வழி என்ன? (ஆ) சமாரியப் பெண்ணிடம் பேசியபோது இயேசு எப்படிப்பட்ட தப்பெண்ணங்களைத் தவிர்த்தார்?

14 “எது நியாயம் என்பதை” தேசங்களுக்கு மேசியா புரிய வைப்பார் என்று பைபிள் தீர்க்கதரிசனம் முன்னுரைத்தது. (மத்தேயு 12:18; ஏசாயா 42:1) இயேசு பூமியில் இருந்தபோது அதையே செய்தார். மக்களிடம் எப்போதும் பாரபட்சமில்லாமல் நியாயமாக நடந்துகொள்வதில் அவர் தைரியத்தைக் காட்டினார். உதாரணத்திற்கு, அந்தக் காலத்தில், மக்கள் மத்தியில் இனவெறியும் மதவெறியும் புரையோடிக் கிடந்தபோதிலும் வேதத்திற்கு முரணான இப்படிப்பட்ட தப்பெண்ணங்களை இயேசு அறவே ஒதுக்கித் தள்ளினார்.

15 சீகார் கிணற்றருகே ஒரு சமாரிய பெண்ணிடம் இயேசு பேசியதைக் கண்டு அவருடைய சீஷர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஏன்? அந்தக் காலத்தில், பொதுவாக சமாரியர்களை யூதர்கள் வெறுத்தார்கள். இந்த வெறுப்பு எத்தனையோ வருடங்களுக்கு முன்பிருந்தே அவர்களுக்குள் புகைந்து கொண்டிருந்தது. (எஸ்றா 4:4) அதோடு, ரபீக்கள் சிலர் பெண்களைக் கேவலமாகக் கருதினார்கள். பிற்காலத்தில் ஏட்டில் எழுதப்பட்ட ரபீக்களின் சட்டங்கள் பெண்களோடு ஆண்கள் பேசுவதைத் தடை செய்தன. கடவுளுடைய திருச்சட்டத்தைக் கற்றுக்கொள்வதற்குப் பெண்கள் தகுதியற்றவர்கள் என்ற கருத்தையும் பரப்பின. குறிப்பாக சமாரியப் பெண்கள் அசுத்தமானவர்களாகக் கருதப்பட்டார்கள். இப்படிப்பட்ட தப்பெண்ணங்களை இயேசு தைரியமாய் எதிர்த்து, அந்த சமாரியப் பெண்ணுக்கு—அதுவும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்த அந்தப் பெண்ணுக்கு—மற்றவர்கள் முன்னிலையில் போதித்தார், தாமே மேசியா என்றும்கூட அவளுக்குத் தெரியப்படுத்தினார்.—யோவான் 4:5-27.

16. தப்பெண்ணங்களைக் களைந்தெறிய கிறிஸ்தவர்களுக்கு ஏன் தைரியம் தேவை?

16 தப்பெண்ணங்களில் ஊறிப்போனவர்களோடு நீங்கள் என்றாவது பழகியிருக்கிறீர்களா? அவர்கள் வேறு இனத்தவரையோ தேசத்தவரையோ பற்றி கேலிகிண்டல் செய்யலாம், எதிர்பாலாரைப் பற்றி கேவலமாகப் பேசலாம், அல்லது வசதியிலோ அந்தஸ்திலோ குறைவுபட்டவர்களை இழிவாகப் பார்க்கலாம். கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் இப்படிப்பட்ட தப்பெண்ணங்களை ஆதரிப்பதில்லை; அப்படியே தங்கள் மனதில் தப்பெண்ணங்கள் துளிர்விட்டாலும், அதை வேரோடு பிடுங்கியெறிய முயற்சி செய்கிறார்கள். (அப்போஸ்தலர் 10:34) இதைச் செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

17. ஆலயத்தில் இயேசு என்ன நடவடிக்கை எடுத்தார், ஏன்?

17 கடவுளுடைய மக்களின் ஆன்மீகச் சுத்தத்தைக் காப்பதற்காகவும் உண்மை வழிபாட்டிற்கான ஏற்பாட்டிற்கு ஆதரவு அளிப்பதற்காகவும் போராட தைரியமே இயேசுவைத் தூண்டியது. தம்முடைய ஊழியத்தின் ஆரம்பத்தில், எருசலேம் ஆலயத்திற்குள் அவர் சென்றபோது காசு மாற்றுபவர்களும் வணிகர்களும் வியாபாரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். நியாயமாக கோபங்கொண்ட இயேசு பேராசைபிடித்த அந்த மனிதர்களை விரட்டியடித்தார், அவர்கள் விற்றுக்கொண்டிருந்த பொருள்களையெல்லாம் தூக்கி வீசினார். (யோவான் 2:13-17) தம்முடைய ஊழிய காலத்தின் முடிவிலும் இயேசு இதேபோன்ற நடவடிக்கை எடுத்தார். (மாற்கு 11:15-18) இதனால் அவர் நிறைய எதிரிகளை, அதுவும் வலிமைமிக்க எதிரிகளைச் சம்பாதித்துக்கொண்டார், இருந்தாலும் அவர் அஞ்சவில்லை. ஏன்? சிறுவயது முதல் அந்த ஆலயத்தை தம்முடைய தகப்பனின் வீடு என்று அழைத்தார், அதற்குரிய மதிப்பையும் காட்டினார். (லூக்கா 2:49) உண்மை வழிபாட்டின் தூய்மையைக் கெடுக்கும் விதத்தில் அங்கு நடந்துவந்த அநியாயமான செயல்களை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தக்க நடவடிக்கை எடுக்க அவருடைய பக்திவைராக்கியம் அவருக்குத் தைரியத்தைத் தந்தது.

18. சபையின் தூய்மையைக் காக்கும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் இன்றைக்கு எப்படித் தைரியம் காட்டலாம்?

18 இன்று கிறிஸ்துவைப் பின்பற்றுவோரும் அவரைப் போலவே கடவுளுடைய மக்களின் ஆன்மீகச் சுத்தத்தைக் காப்பதிலும் உண்மை வழிபாட்டிற்கான ஏற்பாட்டை மதிப்பதிலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். சக கிறிஸ்தவர்கள் யாராவது படுமோசமான தவறு செய்தால் அதைக் கண்டும் காணாமல் இருந்துவிடுவதில்லை, அதைப் பற்றி தைரியமாக அந்த நபரிடம் பேசுகிறார்கள் அல்லது சபை மூப்பர்களுக்குத் தெரியும்படி பார்த்துக்கொள்கிறார்கள். (1 கொரிந்தியர் 1:11) ஏனென்றால், ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டிருப்பவர்களுக்கு மூப்பர்களால் உதவ முடியும். அதோடு, யெகோவாவுடைய ஆடுகளின் ஆன்மீகச் சுத்தத்தைக் காக்க நடவடிக்கையும் எடுக்க முடியும்.—யாக்கோபு 5:14, 15.

19, 20. (அ) இயேசுவின் காலத்தில் என்னென்ன அநீதிகள் மலிந்து கிடந்தன, இயேசு என்ன அழுத்தத்தை எதிர்ப்பட்டார்? (ஆ) இயேசுவைப் பின்பற்றுவோர் ஏன் அரசியலிலும் வன்முறையிலும் இறங்குவதில்லை, அதற்காக அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வெகுமதி என்ன?

19 அப்படியானால் அன்று உலகத்தில் நடந்த எல்லா அநியாயத்தையும் ஒழிக்க இயேசு போராடினார் என்று அர்த்தமா? உண்மைதான், அன்று அநீதி மலிந்து கிடந்தது. அவருடைய தாய்நாடு அந்நியரின் ஆதிக்கத்தில் இருந்தது. ரோமர்கள் வலிமைவாய்ந்த ராணுவத்தைக் கொண்டு யூதர்களை ஒடுக்கினார்கள், எக்கச்சக்கமாக வரி தீட்டினார்கள், அவர்களுடைய மத சடங்குகளிலும் தலையிட்டார்கள். ஆகவே, இயேசுவை அரசியலில் இறங்கும்படி அநேகர் வற்புறுத்தியதில் ஆச்சரியமேதுமில்லை. (யோவான் 6:14, 15) இந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் தைரியத்தைக் காட்ட வேண்டியிருந்தது.

20 தம்முடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல என்பதை இயேசு விளக்கினார். அரசியல் சச்சரவுகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதிலேயே தம் கவனத்தை ஊன்றினார்; தம்முடைய முன்மாதிரியின் மூலம் சீஷர்களையும் அப்படிச் செய்ய பயிற்றுவித்தார். (யோவான் 17:16; 18:36) சதிகார கும்பல் அவரைக் கைது செய்ய வந்த சமயத்தில் நடுநிலை வகிப்பதைக் குறித்து ஒரு சிறந்த பாடத்தைக் கற்பித்தார். பேதுரு உணர்ச்சிவசப்பட்டு தன் வாளை வீசியதில் ஒருவனுக்குக் காயம் ஏற்பட்டுவிட்டது. அவர் செய்தது சரியென ஒருவர் நினைக்கலாம். வன்முறையைக் கையில் எடுப்பது ஒருவேளை சரியென்றால், ஒரு பழிபாவமும் அறியாத கடவுளுடைய மகன் தாக்கப்பட்ட சமயத்தில் வன்முறையை கையாண்டதுதான் சரியாக இருந்திருக்கும். ஆனால், அந்தச் சமயத்திலும் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு என்றும் மாறாத ஒரு நியதியை வகுத்து, “உன் வாளை உறையில் போடு; வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்” என்று சொன்னார். (மத்தேயு 26:51-54) அன்றும் சரி இன்றும் சரி, சமாதானம் காக்க கிறிஸ்துவின் சீஷர்களுக்குத் தைரியம் தேவை. கடவுளுடைய மக்கள் நடுநிலை வகிப்பதால், போர்... இனப் படுகொலை... கலவரம்... போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடாதவர்கள் என்ற நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறார்கள். இது, அவர்களுடைய தைரியத்திற்குக் கிடைத்திருக்கும் ஒரு மாபெரும் வெகுமதி!

அவர் தைரியமாக எதிர்ப்பை எதிர்கொண்டார்

21, 22. (அ) சோதனையிலேயே கடும் சோதனையை எதிர்ப்படுவதற்கு முன்பு இயேசு என்ன உதவியைப் பெற்றார்? (ஆ) கடைசிவரை இயேசு எப்படித் தைரியத்தைக் காட்டினார்?

21 பூமியில் கடுமையான சோதனைகளை எதிர்ப்பட வேண்டியிருக்கும் என்பதை யெகோவாவின் மகன் முன்பே அறிந்திருந்தார். (ஏசாயா 50:4-7) எதிரிகள் அவரைக் கொலை செய்ய பலமுறை முயன்றார்கள்; அதன் உச்சக்கட்டம்தான் இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளில் இயேசு எப்படித் தைரியமாக இருந்தார்? சரி, அந்தக் கலகக் கும்பல் இயேசுவைக் கைது செய்ய வருவதற்கு முன்பு அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? யெகோவாவிடம் உருக்கமாய் ஜெபம் செய்துகொண்டிருந்தார். யெகோவா என்ன செய்தார்? “அவருடைய ஜெபத்தைக் கேட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 5:7) தைரியசாலியான தம் மகனைப் பலப்படுத்த பரலோகத்திலிருந்து யெகோவா ஒரு தூதனை அனுப்பி வைத்தார்.—லூக்கா 22:42, 43.

22 பலம்பெற்ற இயேசு சற்று நேரத்திற்குப்பின், “எழுந்திருங்கள், போகலாம்” என்று அப்போஸ்தலர்களிடம் கூறினார். (மத்தேயு 26:46) அவருடைய வார்த்தையில் தெறித்த தைரியத்தைக் கவனியுங்கள். தம் நண்பர்களை விட்டுவிடும்படி அந்தச் சதிகார கும்பலிடம் சொல்வார் என்பதையும் அந்த நண்பர்கள் தம்மைவிட்டு ஓடிப்போவார்கள் என்பதையும் வாழ்க்கையில் ஒரு கடுமையான சோதனையைத் தன்னந்தனியாக எதிர்ப்பட வேண்டியிருக்கும் என்பதையும் இயேசு அறிந்திருந்தபோதிலும், “எழுந்திருங்கள், போகலாம்” என்று சொன்னார். சட்டவிரோதமான விசாரணையை, கேலிகிண்டலை, சித்திரவதையை, கடைசியில் வேதனையான மரணத்தைத் தன்னந்தனியாகச் சந்தித்தார். இந்த எல்லா சந்தர்ப்பத்திலும் அவர் தைரியத்தை இழக்கவே இல்லை.

23. துன்புறுத்தலையும் கொலை செய்யப்படும் ஆபத்தையும் சந்தித்தபோது இயேசு அசட்டையாக இருக்கவில்லை என்பதை விளக்குங்கள்.

23 ‘வருவது வரட்டும்’ என்று இயேசு அசட்டையாக இருந்தாரா? இல்லை. அசட்டைத்தனத்திற்கும் தைரியத்திற்கும் சம்பந்தமில்லை. சொல்லப்போனால், தம்மைப் பின்பற்றுவோர் கடவுளுடைய விருப்பத்தைத் தொடர்ந்து செய்வதற்காக எச்சரிக்கையாய் இருக்கும்படியும், ஆபத்தை ஞானமாகத் தவிர்க்கும்படியும் இயேசு கற்பித்தார். (மத்தேயு 4:12; 10:16) ஆனால், தம்முடைய விஷயத்தில் ஆபத்தைத் தவிர்ப்பதற்கு எந்த வழியும் இல்லை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஏனென்றால், இதில் கடவுளுடைய விருப்பம் உட்பட்டிருந்ததை அவர் அறிந்திருந்தார். உத்தமத்தைக் காத்துக்கொள்வதில் இயேசு உறுதியாக இருந்தார், அதற்கு ஒரே வழி சோதனையை எதிர்கொள்வதுதான்.

எதிர்ப்பின் மத்தியிலும் யெகோவாவின் சாட்சிகள் தைரியமாக இருந்திருக்கிறார்கள்

24. எந்தச் சோதனை வந்தாலும் அதைத் தைரியமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?

24 இயேசுவின் சீஷர்கள் தங்களது எஜமானருடைய அடிச்சுவடுகளை எப்போதும் பின்பற்றியிருக்கிறார்கள்! கேலிகிண்டலுக்கு ஆளானபோது... துன்புறுத்தப்பட்டபோது... கைது செய்யப்பட்டபோது... சிறையில் அடைக்கப்பட்டபோது... சித்திரவதைச் செய்யப்பட்டபோது... ஏன் மரணத்தைச் சந்தித்தபோதும்கூட... அவர்கள் கொஞ்சமும் அசரவில்லை, தைரியமாக இருந்திருக்கிறார்கள். அபூரண மனிதர்களுக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது? இப்படிப்பட்ட தைரியம் அவர்களுக்குத் தானாக வந்துவிடவில்லை. கடவுளிடமிருந்து இயேசு தைரியத்தைப் பெற்றதைப் போல் அவரைப் பின்பற்றுவோரும் கடவுளிடமிருந்தே தைரியத்தைப் பெறுகிறார்கள். (பிலிப்பியர் 4:13) எனவே, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நினைத்து பயப்படாதீர்கள். உத்தமத்தைக் காத்துக்கொள்வதில் உறுதியாய் இருங்கள், அப்போது உங்களுக்குத் தேவையான தைரியத்தை யெகோவா அளிப்பார். “தைரியமாயிருங்கள்! நான் இந்த உலகத்தை ஜெயித்துவிட்டேன்” என்று சொன்ன நம் தலைவரின் முன்மாதிரியிலிருந்து தொடர்ந்து பலம் பெறுங்கள்.—யோவான் 16:33.

a தீர்க்கதரிசிகள் மற்றும் முன்னோர்களின் கல்லறைகளைப் போலவே ரபீக்களின் கல்லறைகளையும் மக்கள் பூஜித்தார்கள் என சரித்திராசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.