Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் இரண்டு

‘நானே வழி, சத்தியம், வாழ்வு’

‘நானே வழி, சத்தியம், வாழ்வு’

“என்னைப் பின்பற்றி வா”

1, 2. ஏன் நம் சொந்த முயற்சியால் யெகோவாவை அணுக முடியாது, இதற்காக இயேசு கிறிஸ்து நமக்கு என்ன செய்திருக்கிறார்?

 நீங்கள் எப்போதாவது வழிமாறி போயிருக்கிறீர்களா? ஒருவேளை நண்பரையோ உறவினரையோ சந்திக்கச் சென்ற சமயத்தில் வழிதெரியாமல் திணறியது உங்கள் நினைவுக்கு வரலாம். அப்போது, பழக்கமில்லாத ஒரு ரோட்டில் நின்றுகொண்டு யாரிடமாவது வழி கேட்டிருக்கிறீர்களா? அவர் உங்கள்மீது இரக்கப்பட்டு, நீங்கள் போக வேண்டிய வழியை மட்டும் காட்டாமல், “என் பின்னாடியே வாங்க, நானே உங்களைக் கூட்டிட்டு போறேன்” என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கும்!

2 ஒரு விதத்தில், இயேசு கிறிஸ்துவும் நமக்கு இதுபோன்ற உதவியைத்தான் செய்திருக்கிறார். நம்முடைய சொந்த முயற்சியால் கடவுளை அணுக முடியாது. பரம்பரை பரம்பரையாக வந்த பாவமும் அபூரணமும் மனிதர்களிடம் ஒட்டிக்கொண்டிருப்பதால், “கடவுள் தருகிற வாழ்வு கிடைக்காதபடி [மனிதர்கள்] விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்” அதாவது வழிமாறி போயிருக்கிறார்கள். (எபேசியர் 4:17, 18) வாழ்க்கைக்கு வழிகாட்ட நமக்கு நிச்சயம் யாராவது உதவி செய்ய வேண்டும். இரக்கமுள்ள இயேசு நமக்கு வழிகாட்டியாக இருந்து அறிவுரை வழங்குவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. முதல் அதிகாரத்தில் பார்த்தபடி, “என்னைப் பின்பற்றி வா” என்ற அழைப்பையும் விடுக்கிறார். (மாற்கு 10:21) அந்த அழைப்பை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணத்தையும் சொல்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்.” (யோவான் 14:6) மகன் மூலமே பரலோகத் தகப்பனை அணுக முடியும் என்பதற்கான சில காரணங்களை இப்போது ஆராயலாம். பின்பு அந்தக் காரணங்களை மனதில் கொண்டு, இயேசு எப்படி உண்மையிலேயே “வழியும் சத்தியமும் வாழ்வுமாக” இருக்கிறார் என்பதைச் சிந்திக்கலாம்.

யெகோவாவின் நோக்கத்தில் இயேசுவின் பங்கு

3. ஏன் இயேசு மூலமாக மட்டுமே கடவுளை அணுக முடியும்?

3 இயேசு மூலமாக மட்டுமே நம்மால் கடவுளை அணுக முடியும்; ஏனென்றால், மிக முக்கியமான இந்தப் பங்கை நிறைவேற்றுவதற்கு தம்முடைய மகனுக்கே எல்லா தகுதியும் இருக்கிறது என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். a தமது நோக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு அவரைத்தான் முக்கிய நபராக கடவுள் நியமித்திருக்கிறார். (2 கொரிந்தியர் 1:20; கொலோசெயர் 1:18-20) மகன் வகிக்கும் முக்கிய பங்கைப் புரிந்துகொள்வதற்கு, சாத்தானுடன் சேர்ந்துகொண்டு முதல் மானிட ஜோடி யெகோவாவுக்கு எதிராக ஏதேன் தோட்டத்தில் கலகம் செய்ததை ஒரு கணம் நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.—ஆதியாகமம் 2:16, 17; 3:1-6.

4. ஏதேன் தோட்டத்தில் வெடித்த கலகத்தால் என்ன விவாதம் எழுந்தது, இதைத் தீர்ப்பதற்கு யெகோவா என்ன செய்ய தீர்மானித்தார்?

4 ஏதேன் தோட்டத்தில் வெடித்த கலகம் இந்த அண்டத்திலுள்ள அனைவரையும் பாதிக்கிற ஒரு விவாதத்தை எழுப்பியது: யெகோவா என்ற பெயருள்ள கடவுள் உண்மையிலேயே அவருடைய செயல்கள் எல்லாவற்றிலும் பரிசுத்தமானவரா, நல்லவரா, நீதியானவரா, அன்பானவரா? இந்த விவாதத்தைத் தீர்ப்பதற்கு ஒரு பரிபூரண மகனைப் பரலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்ப யெகோவா தீர்மானித்தார். அந்த மகன் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மாபெரும் பொறுப்பு! ஆம், யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்தவும் மனிதகுலத்தைக் காக்க மீட்புவிலையை அளிக்கவும் அவர் தன் உயிரையே கொடுக்க வேண்டியிருந்தது. அந்த மகன் இறுதி மூச்சுவரை உத்தமமாய் இருப்பதன் மூலம் சாத்தானின் கலகத்தால் உண்டான எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார். (எபிரெயர் 2:14, 15; 1 யோவான் 3:8) ஆனால், யெகோவாவுக்குப் பரலோகத்தில் கோடானுகோடி பரிபூரண மகன்கள் இருந்தார்களே. (தானியேல் 7:9, 10) மிக முக்கியமான இந்தப் பொறுப்பை நிறைவேற்ற அவர்களில் யாரைத் தேர்ந்தெடுத்தார்? தாம் நேரடியாகப் படைத்த தமது ‘ஒரே மகனை’ தேர்ந்தெடுத்தார். இவரே பின்னர் இயேசு கிறிஸ்து என்று அழைக்கப்பட்டார்.—யோவான் 3:16.

5, 6. தம் மகன்மீது நம்பிக்கை இருந்ததை யெகோவா எப்படிக் காட்டினார், எதன் அடிப்படையில் அந்த நம்பிக்கையை வைத்தார்?

5 யெகோவாவின் தெரிவைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டுமா? இல்லை! தம்முடைய “ஒரே மகன்மேல்” அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதனால்தான், எல்லாவித துன்புறுத்தலின் மத்தியிலும் தமது மகன் உத்தமமாய் இருப்பாரென அவர் பூமிக்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யெகோவா சொன்னார். (ஏசாயா 53:3-7, 10-12; அப்போஸ்தலர் 8:32-35) இப்படி அவரைப் பற்றி முன்கூட்டியே கடவுள் சொன்னதிலிருந்து என்ன தெரிகிறது? தேவதூதர்களையும் மனிதர்களையும் போலவே இந்த மகனுக்கும் சுயமாகத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருந்தது; என்றாலும், யெகோவாவுக்கு தம் மகன்மீது அளவுகடந்த நம்பிக்கை இருந்ததால்தான் அவர் உத்தமமாய் இருப்பாரென முன்னுரைத்தார். எதன் அடிப்படையில் தம் மகன்மீது அந்தளவு நம்பிக்கை வைத்தார்? சுருக்கமாகச் சொன்னால், அவர் தம் மகனைப் பற்றி துல்லியமாக அறிந்திருந்தார்; தமக்கு விருப்பமாய் நடக்க அந்த மகன் எந்தளவு ஆர்வமாய் இருக்கிறார் என்றும் அறிந்திருந்தார். (யோவான் 8:29; 14:31) மகன் தம் தகப்பனை நேசிக்கிறார், அதுபோலவே தகப்பனும் தம் மகனை நேசிக்கிறார். (யோவான் 3:35) இப்படி ஒருவரையொருவர் நேசிப்பதால் அவர்கள் மத்தியில் முறிக்க முடியாத பந்தம் உருவாகியிருக்கிறது. இதனால், பரஸ்பர ஒற்றுமையும் நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.—கொலோசெயர் 3:14.

6 மகன் வகிக்கும் முக்கிய பங்கை... தகப்பனுக்கு மகன்மீது இருக்கும் நம்பிக்கையை... அவர்கள் இருவரையும் இணைக்கும் அன்பை... பார்க்கும்போது, இயேசுவின் மூலமே கடவுளை அணுக முடியும் என்பதில் ஏதாவது ஆச்சரியம் இருக்கிறதா? என்றாலும், மகனால் மட்டுமே நம்மை தகப்பனிடம் வழிநடத்திச் செல்ல முடியும் என்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

மகனே தகப்பனை நன்கு அறிவார்

7, 8. ‘மகனைத் தவிர’ வேறு யாருக்கும் தகப்பனைக் குறித்து முழுமையாகத் தெரியாது என்று இயேசுவால் எப்படி உறுதியாகச் சொல்ல முடிந்தது?

7 யெகோவாவை அணுக நாம் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். (சங்கீதம் 15:1-5) கடவுளுடைய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவும் அவருடைய அங்கீகாரத்தைப் பெறவும் என்ன செய்ய வேண்டுமென மகனைவிட வேறு யாருக்கு நன்கு தெரியும்? “என் தகப்பன் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்; தகப்பனைத் தவிர வேறு யாருக்கும் மகனை முழுமையாகத் தெரியாது; மகனுக்கும், மகன் யாருக்கு அவரை வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தவிர வேறு யாருக்கும் தகப்பனை முழுமையாகத் தெரியாது” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 11:27) ‘மகனைத் தவிர’ வேறு யாருக்கும் தகப்பனைக் குறித்து முழுமையாகத் தெரியாது என்று இயேசு சொன்னது மிகையல்ல, மெய்யே! எப்படி என்று இப்போது பார்ப்போம்.

8 ‘படைப்புகளிலேயே முதல் படைப்பாக இருக்கிற’ மகனுக்கும் யெகோவாவுக்கும் இடையே உள்ள பந்தம் ரொம்பவே விசேஷமானது. (கொலோசெயர் 1:15) மற்ற தேவதூதர்கள் படைக்கப்படும்வரை யுகா யுகங்களாக யெகோவாவும் இயேசுவும் மட்டுமே இருந்தார்கள். அப்போது, அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே எந்தளவு நெருக்கமான பந்தம் ஏற்பட்டிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? (யோவான் 1:3; கொலோசெயர் 1:16, 17) தம் தகப்பனுக்கு அருகிலேயே இருந்து அவரை உன்னிப்பாகக் கவனித்து, அவருடைய சிந்தையை... விருப்பத்தை... நெறிமுறைகளை... வழிகளை... தெரிந்துகொள்ள மகனுக்குக் கிடைத்த அரும்பெரும் பாக்கியத்தைக் குறித்து கொஞ்சம் யோசித்து பாருங்கள். வேறு யாரையும்விட இயேசுவுக்கே தம் தகப்பனைக் குறித்து நன்கு தெரியும் என்று சொன்னால் அது மிகையல்ல. இத்தகைய நெருக்கமான பந்தம் இருந்ததால்தான் தம் தகப்பனைக் குறித்து வேறு யாரையும்விட இயேசுவால் மிகத் தெளிவாகத் தெரியப்படுத்த முடிந்தது.

9, 10. (அ) எவ்விதங்களில் இயேசு தம் தகப்பனைத் தெரியப்படுத்தினார்? (ஆ) யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?

9 யெகோவாவின் யோசனைகளை... உணர்ச்சிகளை... தம்மை வழிபடுகிறவர்களிடம் அவர் எதிர்பார்ப்பவற்றை... இயேசு துல்லியமாக அறிந்திருந்தார் என்பதை அவருடைய போதனைகள் காட்டின. b இயேசு தம் தகப்பனை அறிந்திருந்தார் என்பதை மலைக்கவைக்கும் இன்னொரு விதத்திலும் காட்டினார். அவர் சொன்னார்: “என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்.” (யோவான் 14:9) சொல்லிலும் செயலிலும் இயேசு அச்சு அசல் தம் தகப்பனைப் பிரதிபலித்தார். அதைப் பற்றியெல்லாம் நாம் பைபிளில் வாசிக்கிறோம். உதாரணத்துக்கு, போதிக்கையில் இயேசு பேசிய மனங்கவரும் சக்திவாய்ந்த வார்த்தைகள்... மக்களைக் குணப்படுத்துகையில் அவர் காட்டிய கருணை... மற்றவர்கள் கண்ணீர்விட்டு அழுவதைப் பார்த்து அவரும் கண்ணீர்விட்டு அழுதது... பற்றியெல்லாம் பைபிளில் பார்க்கிறோம். அப்படியென்றால், யெகோவாவும் அந்தச் சூழ்நிலைகளில் அப்படித்தான் நடந்திருப்பார் என்பதை நம் மனக்கண்ணில் பார்க்க முடிகிறதல்லவா? (மத்தேயு 7:28, 29; மாற்கு 1:40-42; யோவான் 11:32-36) மகனுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் தகப்பனின் வழிகளையும் விருப்பத்தையும் மிகத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. (யோவான் 5:19; 8:28; 12:49, 50) ஆகவே, நமக்கு யெகோவாவின் அங்கீகாரம் வேண்டுமென்றால் இயேசுவின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றுவது அவசியம்.—யோவான் 14:23.

10 யெகோவாவை இயேசு துல்லியமாக அறிந்திருக்கிறார், அவரை அச்சு பிசகாமல் பின்பற்றியும் வருகிறார். ஆகவே, இயேசு மூலமாக மட்டுமே எல்லாரும் தம்மை அணுக வேண்டுமென யெகோவா தீர்மானித்திருப்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இதை மனதில் வைத்து, “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்க்கலாம்.—யோவான் 14:6.

“நானே வழி”

11. (அ) ஏன் இயேசு மூலமாக மட்டுமே கடவுளோடு நல்லுறவை அனுபவிக்க முடியும்? (ஆ) இயேசுவின் விசேஷ பங்கை யோவான் 14:6-ல் உள்ள வார்த்தைகள் எப்படிச் சிறப்பித்துக் காட்டுகின்றன? (அடிக்குறிப்பைக் காண்க.)

11 இயேசு மூலமாக மட்டும்தான் யெகோவாவை அணுக முடியும் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதற்கு, முக்கியமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது சிந்திக்கலாம். இயேசுவே “வழி” என்றால், அவர் மூலமாக மட்டுமே கடவுளோடு நாம் நல்லுறவை அனுபவிக்க முடியும். ஏன் அப்படி? மரணம்வரை உண்மையாய் இருந்து இயேசு தம் உயிரை மீட்புவிலையாகக் கொடுத்தார். (மத்தேயு 20:28) இந்த மீட்புவிலை மட்டும் கொடுக்கப்படவில்லை என்றால், கடவுளிடம் நெருங்கிச் செல்வதை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே பாவம் ஒரு தடுப்புச் சுவராக இருக்கிறது. யெகோவா பரிசுத்தராக இருப்பதால் பாவத்தை அவரால் சகித்துக்கொள்ள முடியாது. (ஏசாயா 6:3; 59:2) ஆனால், இயேசுவின் பலி அந்தத் தடுப்புச் சுவரை நீக்கிவிட்டது; பாவத்திற்கு ஏற்ற நிவாரணத்தை அளித்தது. (எபிரெயர் 10:12; 1 யோவான் 1:7) கிறிஸ்து மூலமாக யெகோவா செய்திருக்கும் இந்த ஏற்பாட்டை நாம் ஏற்றுக்கொண்டு அதில் விசுவாசம் வைத்தால்தான் அவருடைய தயவைப் பெற முடியும். ஆகவே, ‘கடவுளுடன் சமரசமாவதற்கு’ இதைத் தவிர வேறு வழியே இல்லை. cரோமர் 5:6-11.

12. என்னென்ன விதங்களில் இயேசு ‘வழியாக’ இருக்கிறார்?

12 ஜெபத்தில் யெகோவாவை அணுகுவதற்கு இயேசுவே ‘வழியாக’ இருக்கிறார். நம் இதயப்பூர்வமான வேண்டுதல்களை யெகோவா கேட்பார் என்ற நம்பிக்கையோடு இயேசு மூலமாக மட்டுமே நம் ஜெபங்களை ஏறெடுக்க முடியும். (1 யோவான் 5:13, 14) “நீங்கள் என் தகப்பனிடம் எதைக் கேட்டாலும், அதை அவர் என்னுடைய பெயரில் உங்களுக்குத் தருவார். . . . கேளுங்கள், அப்போது பெற்றுக்கொள்வீர்கள், நிறைவான சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள்” என்று இயேசுவே சொன்னார். (யோவான் 16:23, 24) அதனால்தான், இயேசுவின் பெயரில் யெகோவாவிடம் ஜெபம் செய்யவும் அவரை “எங்கள் தகப்பனே” என்று அழைக்கவும் நம்மால் முடிகிறது. (மத்தேயு 6:9) இயேசு இன்னொரு விதத்திலும் ‘வழியாக’ இருக்கிறார்; ஆம், அவருடைய முன்மாதிரியின் மூலமும் ‘வழியாக’ இருக்கிறார். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இயேசு தம் தகப்பனை அச்சு பிசகாமல் பின்பற்றினார். யெகோவாவுக்குப் பிரியமாக வாழ்வது எப்படி என்பதை அவருடைய முன்மாதிரியின் மூலம் காட்டினார். ஆகையால், யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு இயேசுவின் அடிச்சுவடுகளை நாம் பின்பற்றி நடக்க வேண்டும்.—1 பேதுரு 2:21.

‘நானே சத்தியம்’

13, 14. (அ) எந்த விதத்தில் இயேசு சத்தியத்தையே பேசினார்? (ஆ) தாமே ‘சத்தியம்’ என்பதை நிரூபிப்பதற்கு இயேசு என்ன செய்ய வேண்டியிருந்தது, ஏன்?

13 இயேசு தம் தகப்பன் உரைத்த தீர்க்கதரிசனங்களைப் பற்றிய சத்தியத்தையே எப்போதும் எடுத்துப் பேசினார். (யோவான் 8:40, 45, 46) அவருடைய வாயிலிருந்து வஞ்சனையான வார்த்தைகள் வந்ததே இல்லை. (1 பேதுரு 2:22) “கடவுளைப் பற்றிய சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறவர்” என்று அவருடைய எதிரிகளே ஒத்துக்கொண்டார்கள். (மாற்கு 12:13, 14) என்றாலும், ‘நானே சத்தியம்’ என்று இயேசு சொன்னபோது, தாம் பேசிய விதத்தில்... நல்ல செய்தியை சொன்ன விதத்தில்... கற்றுக்கொடுத்த விதத்தில்... சத்தியத்தைப் பற்றித் தெரியப்படுத்தியதை மட்டுமே அர்த்தப்படுத்தவில்லை, அதைவிட அதிகத்தை அர்த்தப்படுத்தினார்.

14 பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மேசியாவைப் பற்றி அல்லது கிறிஸ்துவைப் பற்றி எண்ணற்ற தீர்க்கதரிசனங்களைப் பதிவுசெய்ய பைபிள் எழுத்தாளர்களை யெகோவா தூண்டினார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தத் தீர்க்கதரிசனங்கள் இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் மரணத்தையும் பற்றிய நுட்பமான விவரங்களை அளித்தன. அதோடு, மோசேயின் திருச்சட்டமும் மேசியாவைச் சுட்டிக்காட்டும் நிழலாக அல்லது தீர்க்கதரிசன படமாக இருந்தது. (எபிரெயர் 10:1) இயேசு மரணம்வரை உண்மையுள்ளவராக இருந்து, தம்மைக் குறித்து சொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றுவாரா? அப்படி நிறைவேற்றினால்தான் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும் கடவுளென யெகோவா நிரூபிக்கப்படுவார். இந்த மாபெரும் பொறுப்பு இயேசுவின் தோள்களில் விழுந்தது. இயேசு தாம் வாழ்ந்த விதத்தில், ஆம், தம்முடைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தீர்க்கதரிசன நிழல்களை நிஜமாக்கினார். (2 கொரிந்தியர் 1:20) இவ்வாறு, தாமே ‘சத்தியம்’ என்பதை நிரூபித்தார். சொல்லப்போனால், இயேசு பூமிக்கு வந்தபோது யெகோவாவின் தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் உயிர்பெற்றன.—யோவான் 1:17; கொலோசெயர் 2:16, 17.

‘நானே வாழ்வு’

15. கடவுளுடைய மகன்மீது விசுவாசம் வைப்பது என்றால் என்ன, அது எதற்கு வழிநடத்தும்?

15 இயேசுவே ‘வாழ்வு.’ ஏனென்றால், அவர் மூலமாக மட்டுமே நம்மால் “உண்மையான வாழ்வை” பெற முடியும். (1 தீமோத்தேயு 6:19) “மகன்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்; ஆனால், மகனுக்குக் கீழ்ப்படியாதவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காது, அவன் கடவுளுடைய கடும் கோபத்துக்கே ஆளாவான்” என்று பைபிள் சொல்கிறது. (யோவான் 3:36) கடவுளுடைய மகன்மீது விசுவாசம் வைப்பது என்றால் என்ன? அவர் மூலமாக மட்டுமே நாம் வாழ்வைப் பெற முடியும் என்று உறுதியாக நம்புவதைக் குறிக்கிறது. அதோடு, நம் விசுவாசத்தை செயலில் காட்டுவதையும் குறிக்கிறது; அதாவது, இயேசுவிடமிருந்து தொடர்ந்து கற்றுக்கொள்வதையும் அவருடைய போதனைகளை... முன்மாதிரியை... பின்பற்றுவதற்கு முழுமுயற்சி எடுப்பதையும் குறிக்கிறது. (யாக்கோபு 2:26) எனவே, கடவுளுடைய மகன்மீது விசுவாசம் வைப்பது முடிவில்லா வாழ்வுக்கு வழிநடத்தும்—கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட “சிறுமந்தை” பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்வையும், ‘வேறே ஆடுகளான’ ‘திரள் கூட்டத்தார்’ பூஞ்சோலை பூமியில் பரிபூரண வாழ்வையும் பெறுவார்கள்.—லூக்கா 12:32; 23:43; வெளிப்படுத்துதல் 7:9-17; யோவான் 10:16.

16, 17. (அ) இறந்தவர்களுக்கும் இயேசு எப்படி ‘வாழ்வாக’ இருப்பார்? (ஆ) எதைக் குறித்து நாம் உறுதியாக இருக்கலாம்?

16 அப்படியென்றால், இறந்தவர்களைப் பற்றி என்ன? அவர்களுக்கும் இயேசு ‘வாழ்வாக’ இருக்கிறார். தம்முடைய நண்பர் லாசருவை இயேசு உயிர்த்தெழுப்புவதற்குச் சற்று முன்பு அவருடைய சகோதரி மார்த்தாளிடம், “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன். என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான்” என்று சொன்னார். (யோவான் 11:25) யெகோவா தம்முடைய மகனிடம் ‘மரணத்தின் சாவியையும் கல்லறையின் சாவியையும்’ கொடுத்திருக்கிறார்; அதாவது இறந்துபோனவர்களை உயிர்த்தெழுப்பும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 1:17, 18) மகிமைப்படுத்தப்பட்ட இயேசு அந்தச் சாவிகளைப் பயன்படுத்தி கல்லறையில் அடைந்து கிடக்கும் அனைவரையும் விடுதலை செய்வார்.—யோவான் 5:28, 29.

17 “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன்”—இந்த எளிய வார்த்தைகளில், தாம் பூமிக்கு வந்ததன் நோக்கத்தையும் ஊழியம் செய்ததன் நோக்கத்தையும் இயேசு சுருக்கமாகச் சொன்னார். இந்த வார்த்தைகள் நமக்கு இன்று ஆழ்ந்த அர்த்தமுடையவை. “என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு தொடர்ந்து சொன்னதைக் கவனியுங்கள். (யோவான் 14:6) இயேசுவின் இந்த வார்த்தைகள் அன்று மட்டுமல்ல இன்றும் பொருத்தமாக இருக்கின்றன. எனவே, இயேசுவைப் பின்பற்றினால் நாம் ஒருபோதும் வழிமாறி போகமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கலாம். அவரால்தான், ஆம், அவரால் மட்டும்தான் நம்மை “தகப்பனிடம்” வழிநடத்த முடியும்.

இயேசுவின் அழைப்பை ஏற்றுக்கொள்வீர்களா?

18. இயேசுவைப் பின்பற்றுவது என்றால் என்ன?

18 இயேசு முக்கியமான பங்கு வகிப்பதாலும் தகப்பனைப் பற்றி நன்கு அறிந்திருப்பதாலும் அவரைத் தாராளமாகப் பின்பற்றலாம். கடந்த அதிகாரத்தில் கவனித்தபடி, இயேசுவைப் பின்பற்றுவதாக வெறுமனே வாயளவில் சொன்னாலோ மனதளவில் உணர்ந்தாலோ மட்டும் போதாது, செயலில் நிரூபிக்க வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்றால், அவருடைய போதனைக்கும் முன்மாதிரிக்கும் இசைவாக நம் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்வதாகும். (யோவான் 13:15) இதற்கு, நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இப்புத்தகம் உதவும்.

19, 20. கிறிஸ்துவைப் பின்பற்ற நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு இப்புத்தகம் எப்படி உறுதுணையாக இருக்கும்?

19 பின்வரும் அதிகாரங்களில், இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி கூர்ந்து ஆராயப்போகிறோம். அவை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பாகத்தில், அவருடைய குணங்களையும் வழிகளையும் பற்றி நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். இரண்டாவது பாகத்தில், பிரசங்கிப்பதிலும் கற்பிப்பதிலும் அவர் காட்டிய ஆர்வத் துடிப்பை ஆராயப்போகிறோம். மூன்றாவது பாகத்தில், அவர் காட்டிய அன்பைச் சிந்திக்கப்போகிறோம். 3-ஆம் அதிகாரம் முதற்கொண்டு, “நீங்கள் இயேசுவை எப்படிப் பின்பற்றலாம்?” என்ற பெட்டி உள்ளது. அதிலுள்ள வசனங்களும் கேள்விகளும், நம்முடைய சொல்லிலும் செயலிலும் இயேசுவை எப்படிப் பின்பற்றலாம் என்பதைத் தியானித்துப் பார்க்க நமக்கு உதவும்.

20 நாம் பாவிகளாக இருப்பதால் கடவுளிடமிருந்து விலக்கப்பட்டிருப்பதாக, அதாவது வழிமாறிப் போயிருப்பதாக, உணர வேண்டியதில்லை. ஏனென்றால் யெகோவா தேவன் நமக்கு உதவி செய்திருக்கிறார். நாம் யெகோவாவுடன் நல்லுறவுக்குள் வருவதற்கான வழியைக் காட்ட அவர் தமது அருமை மகனையே பூமிக்கு அனுப்பினார். (1 யோவான் 4:9, 10) “என்னைப் பின்பற்றி வா”என்ற இயேசுவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு இசைய வாழ்வதன் மூலம் யெகோவா காட்டிய மாபெரும் அன்புக்கு நன்றியுடன் இருப்பீர்களாக.—யோவான் 1:43.

a இயேசு வகிக்கும் பங்கு அந்தளவு முக்கியமாக இருப்பதால் தீர்க்கதரிசன அர்த்தமுள்ள எண்ணற்ற பெயர்களும் பட்டப்பெயர்களும் பைபிளில் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.—“ இயேசு கிறிஸ்துவுக்குக் கொடுக்கப்பட்ட சில பட்டப்பெயர்கள்” என்ற பெட்டியைக் காண்க.

b உதாரணத்திற்கு, மத்தேயு 10:29-31; 18:12-14, 21-35; 22:36-40 ஆகிய வசனங்களில் பதிவாகியுள்ள இயேசுவின் வார்த்தைகளைக் காண்க.

c யோவான் 14:6-ல் உள்ள “நானே” என்ற பதம் (தன்னிலை சுட்டுப்பெயர்) இயேசுவின் பங்கு தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. அதாவது, அவர் ஒருவரே வழி, அவர் மூலம்தான் தகப்பனை அணுக முடியும் என்பதைக் காட்டுகிறது.