Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பன்னிரண்டு

“உவமைகளைப் பயன்படுத்தாமல் . . . அவர் பேசியதே இல்லை”

“உவமைகளைப் பயன்படுத்தாமல் . . . அவர் பேசியதே இல்லை”

1-3. (அ) இயேசுவோடு பயணம் செய்கிற சீஷர்களுக்கு என்ன அரிய வாய்ப்பு கிடைக்கிறது, தாம் கற்பிக்கும் விஷயங்கள் அவர்கள் மனதைவிட்டு நீங்காமலிருக்க இயேசு என்ன உத்தியைக் கையாளுகிறார்? (ஆ) மனதைத் தூண்டும் உவமைகளை மக்கள் ஏன் எளிதில் மறப்பதில்லை?

 யாருக்குமே கிடைக்காத ஓர் அரிய வாய்ப்பு இயேசுவுடன் பயணம் செய்கிற சீஷர்களுக்குக் கிடைக்கிறது. அவர்கள் பெரிய போதகரிடமிருந்து நேரடியாகக் கற்றுக்கொள்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையில் பொதிந்துள்ள அர்த்தத்தையும் மெய்சிலிர்க்க வைக்கும் சத்தியங்களையும் அவர் விளக்குகையில் அவருடைய குரலை நேரடியாகக் கேட்கிறார்கள். இப்போது, சில காலத்திற்கு அவர் சொன்ன பொன் மொழிகளைத் தங்களுடைய மனதிலும் இதயத்திலும் அவர்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது; ஏனென்றால், அவற்றை பதிவு செய்துவைக்க இன்னும் நேரம் வரவில்லை. a இருந்தாலும், தாம் கற்பிக்கும் விஷயங்கள் அவர்களுடைய மனதைவிட்டு நீங்காமலிருக்க இயேசு ஓர் எளிய உத்தியை கையாளுகிறார். ஆம், உவமைகளைத் திறமையாகப் பயன்படுத்தி கற்பிக்கும் உத்தியைப் பயன்படுத்துகிறார்.

2 சொல்லப்போனால், மனதைத் தூண்டும் உவமைகளை மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். ஒரு புத்தகத்தின் ஆசிரியர் இவ்வாறு சொன்னார்: “[உவமைகள்] காதுகளைக் கண்களாய் மாற்றுகின்றன, கேட்கும் விஷயங்களை மனதில் கற்பனை செய்து அவற்றைக் காட்சிகளாகப் பார்க்க உதவுகின்றன.” நன்கு புரிந்துகொள்வதற்கு மனக் காட்சிகள் அற்புத கருவிகளாக இருப்பதால், புரியாத விஷயங்களைக்கூட எளிதில் கிரகித்துக்கொள்வதற்கு உவமைகள் உதவுகின்றன. அவை வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கின்றன, நம் நினைவைவிட்டு நீங்கா பாடங்களைக் கற்பிக்கின்றன.

3 உவமைகளைத் திறமையாகப் பயன்படுத்தி கற்பிப்பதில் இயேசுவுக்கு நிகர் இயேசுவே! இன்றும் அவருடைய உவமைகள் மக்களுடைய மனதில் பசுமையாக இருக்கின்றன. இந்தக் கற்பிக்கும் உத்தியை இயேசு ஏன் அடிக்கடி பயன்படுத்தினார்? அவருடைய உவமைகள் சக்தி வாய்ந்தவையாக இருந்ததற்கு என்ன காரணம்? இந்த உத்தியைப் பயன்படுத்த நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?

இயேசு ஏன் உவமைகளால் கற்பித்தார்?

4, 5. இயேசு ஏன் உவமைகளைப் பயன்படுத்தினார்?

4 இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை பைபிள் தருகிறது. முதல் காரணம், தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்கு. மத்தேயு 13:34, 35 இவ்வாறு கூறுகிறது: “திரண்டு வந்திருந்த மக்களிடம் உவமைகள் மூலமாகவே இவை எல்லாவற்றையும் இயேசு சொன்னார். சொல்லப்போனால், உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர்களிடம் அவர் பேசியதே இல்லை; “நான் வாய் திறந்து உவமைகளாகவே பேசுவேன்; . . . என்று தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.” சங்கீதம் 78:2-ஐ எழுதியவரே மத்தேயு குறிப்பிடும் அந்தத் தீர்க்கதரிசி. இயேசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அந்த சங்கீதக்காரன் கடவுளுடைய தூண்டுதலால் அப்படி எழுதினார். இதிலிருந்து என்ன தெரிகிறது? உவமைகளைப் பயன்படுத்தியே மேசியா பேசுவார் என நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே யெகோவா சொல்லியிருந்தார். அப்படியானால், இந்தக் கற்பிக்கும் உத்தியை யெகோவா உயர்வாய் கருதினார் என்று தெளிவாகத் தெரிகிறது.

5 இரண்டாவது காரணம், மனம் ‘இறுகிப்போயிருந்தவர்களை,’ அதாவது சத்தியத்தை அறிந்துகொள்ள விருப்பமில்லாதவர்களை, கண்டுபிடிப்பதற்காக இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார். (மத்தேயு 13:10-15; ஏசாயா 6:9, 10) அவருடைய உவமைகள் எப்படி மக்களின் மனதிலுள்ளதை அம்பலப்படுத்தின? சில சமயம், அவர் சொன்ன உவமையின் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்வதற்கு மக்களே வந்து அவரிடம் விளக்கம் கேட்கும்படி அவர் எதிர்பார்த்தார். மனத்தாழ்மையுள்ளவர்கள் அவரிடம் வந்து விளக்கம் கேட்டார்கள், அகந்தையுள்ளவர்களோ அப்படிக் கேட்க மனமில்லாமல் இருந்தார்கள். (மத்தேயு 13:36; மாற்கு 4:34) சத்தியத்தை அறிய வேண்டுமென்ற தாகம் இருந்தவர்களுக்கு இயேசுவின் உவமைகள் சத்தியத்தை வெளிப்படுத்தின, ஆனால் கர்வம் பிடித்தவர்களுக்கு அதை மறைத்தன.

6. வேறு என்ன காரணங்களுக்காகவும் இயேசு உவமைகளைப் பயன்படுத்தினார்?

6 இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதற்கு இன்னும் பல நல்ல காரணங்கள் இருந்தன. அவை மக்களுடைய ஆர்வத்தைத் தட்டியெழுப்பின; கூர்ந்து கேட்க அவர்களைத் தூண்டின. உவமைகள் மக்களின் மனதில் சொல் ஓவியங்களாக உருவெடுத்தன; எனவே மக்களால் அவற்றை எளிதில் புரிந்துகொள்ள முடிந்தது. ஆரம்பத்தில் பார்த்தபடி, இயேசுவின் உவமைகள் அவர் சொன்ன விஷயங்களை மனதில் அப்படியே பதிய வைத்துக்கொள்ள உதவின. அணி நடைகளை இயேசு தாராளமாகப் பயன்படுத்தினார் என்பதற்கு மத்தேயு 5:3–7:27-ல் பதிவாகியுள்ள மலைப் பிரசங்கம் தலைசிறந்த உதாரணம். இதில் 50-க்கும் அதிகமான அணி நடைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. இதைப் புரிந்துகொள்ள இப்படி யோசித்து பாருங்கள்: இந்தப் பிரசங்கத்தை 20 நிமிடங்களில் சத்தமாக வாசித்துவிடலாம். அப்படியென்றால், சுமார் 20 விநாடிக்கு ஒருமுறை சராசரியாக ஒரு அணி நடையை இயேசு பயன்படுத்தினார்! சொற்களை வைத்தே மனதில் காட்சிகளை அமைப்பதன் முக்கியத்துவத்தை இயேசு அறிந்திருந்தார் என்று தெளிவாகத் தெரிகிறது.

7. இயேசுவைப் போல் நாம் ஏன் உவமைகளைப் பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்?

7 இயேசுவைப் பின்பற்றுகிற நாமும் அவருடைய கற்பிக்கும் உத்தியைப் பயன்படுத்த விரும்புகிறோம், அவரைப் போலவே உவமைகளைப் பயன்படுத்தி கற்பிப்பதும் அதில் அடங்கும். உணவுக்கு மசாலா பொருட்கள் சுவை ஊட்டுவது போல் சிறந்த உவமைகள் நம்முடைய போதனைக்கு சுவாரஸ்யம் ஊட்டுகின்றன. நன்கு சிந்தித்து சொல்லப்படும் உவமைகள் முக்கியமான சத்தியங்களை எளிதில் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. இயேசுவின் உவமைகள் வலிமைமிக்கவையாக இருந்ததற்கு சில காரணங்களை இப்போது கூர்ந்து ஆராயலாம். அப்போதுதான் இந்தக் கற்பிக்கும் உத்தியை நாம் எப்படிச் சிறந்த விதத்தில் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

எளிய ஒப்புமைகளைப் பயன்படுத்துங்கள்

கடவுள் நம்மை கவனித்துக்கொள்கிறார் என்பதை விளக்க இயேசு எப்படிப் பறவைகளையும் பூக்களையும் உதாரணமாகப் பயன்படுத்தினார்?

8, 9. (அ) இயேசு எளிய ஒப்புமைகளைப் பயன்படுத்தியதற்கு சில உதாரணங்கள் தருக. (ஆ) அவை ஏன் அந்தளவு வலிமை வாய்ந்தவையாக இருந்தன?

8 கற்பிக்கையில் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒப்புமைகளை இயேசு பயன்படுத்தினார், அதுவும் ஒருசில வார்த்தைகளிலேயே சொன்னார். என்றாலும், அந்த எளிய வார்த்தைகள் மக்களின் மனதில் தத்ரூபமான காட்சிகளை உருவாக்கின, முக்கியமான சத்தியங்களைத் தெளிவாகப் புரியவைத்தன. உதாரணத்திற்கு, அன்றாட தேவைகளை நினைத்துக் கவலைப்பட வேண்டாம் என்பதை தம் சீஷர்களுக்கு வலியுறுத்த ‘வானத்துப் பறவைகளையும்’ ‘காட்டுப் பூக்களையும்’ எடுத்துக்காட்டாக சொன்னார். பறவைகள் விதைப்பதும் இல்லை அறுவடை செய்வதும் இல்லை, அதேபோல் காட்டுப் பூக்கள் நூல் நூற்பதும் இல்லை நெய்வதும் இல்லை. இருந்தாலும், கடவுள் அவற்றைக் கவனித்துக்கொள்கிறார். அவர் சொல்ல வந்த குறிப்பை நம்மால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது, அதாவது பறவைகளையும் பூக்களையுமே கடவுள் கவனித்துக்கொள்கிறார் என்றால், தம்முடைய ‘அரசாங்கத்துக்கு . . . முதலிடம் கொடுக்கிறவர்களை’ கவனிக்காமல் விட்டுவிடுவாரா, என்ன?—மத்தேயு 6:26, 28-33.

9 உருவக அணியையும் இயேசு ஏராளமாகப் பயன்படுத்தினார். அவை இன்னும் வலிமைவாய்ந்த ஒப்புமைகள். உருவகம் என்பது ஒன்றை மற்றொன்றாக சொல்வதாகும். அதாவது, உவமையைப் பொருளாகவும் பொருளை உவமையாகவும் கூறுவதாகும். இந்த விஷயத்திலும் அவர் எளிமையான ஒப்புமைகளையே பயன்படுத்தினார். ஒரு சமயம் தம் சீஷர்களிடம், “நீங்கள் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள்” என்று சொன்னார். இந்த உருவக அணியிலுள்ள குறிப்பை சீஷர்கள் நிச்சயம் புரிந்திருப்பார்கள். ஆம், சொல்லிலும் செயலிலும் சத்தியம் எனும் ஒளியைப் பிரகாசிக்கச் செய்யவும் முடியும், மற்றவர்கள் கடவுளை மகிமைப்படுத்த உதவி செய்யவும் முடியும் என்பதைப் புரிந்திருப்பார்கள். (மத்தேயு 5:14-16) இயேசு பயன்படுத்திய மற்ற உருவக அணிகள்: “நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்,” “நான் திராட்சைக் கொடி, நீங்கள் கிளைகள்.” (மத்தேயு 5:13; யோவான் 15:5) இதுபோன்ற அணி நடைகள் எளிமையாக இருந்தாலும் அவற்றுக்கு வலிமை அதிகம்.

10. கற்பிக்கையில் நீங்கள் எப்படி உவமைகளைப் பயன்படுத்தலாம் என்பதற்குச் சில உதாரணங்களைக் கொடுங்கள்?

10 நீங்கள் கற்பிக்கையில் எப்படி உவமைகளைப் பயன்படுத்தலாம்? புரிந்துகொள்வதற்கு கஷ்டமான, நீண்ட உவமைகளைச் சொல்ல வேண்டியதில்லை. மாறாக, எளிமையான ஒப்புமைகளைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். உதாரணத்திற்கு, உயிர்த்தெழுதலைப் பற்றி பேசுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இறந்தவர்களை மீண்டும் உயிருக்குக் கொண்டுவருவது யெகோவாவுக்கு ஒன்றும் பெரிய விஷயமல்ல என்பதை விளக்க ஓர் உவமையைப் பயன்படுத்த நீங்கள் விரும்பலாம். என்ன ஒப்புமை உங்கள் நினைவுக்கு வருகிறது? மரணத்தைத் தூக்கத்திற்கு பைபிள் ஒப்பிடுகிறது. அதனால் நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “தூங்கிக்கொண்டு இருப்பவர்களை எப்படி நம்மால் சுலபமாக எழுப்ப முடியுமோ அப்படியே கடவுளாலும் இறந்தவர்களைச் சுலபமாக எழுப்ப முடியும்.” (யோவான் 11:11-14) பிள்ளைகள் நல்லபடியாக வளர அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் தேவை என்பதை ஓர் உவமையுடன் விளக்க நீங்கள் நினைக்கலாம். என்ன உதாரணத்தைப் பயன்படுத்தலாம்? “பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள் போல” இருக்கிறார்கள் என்ற ஒப்புமையை பைபிள் பயன்படுத்துகிறது. (சங்கீதம் 128:3) எனவே நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “ஒரு மரம் செழித்தோங்க சூரிய ஒளியும் தண்ணீரும் அவசியமாய் இருப்பதுபோல் பிள்ளைகள் செழித்தோங்க அன்பும் அரவணைப்பும் அவசியம்.” நீங்கள் பயன்படுத்தும் ஒப்புமை எந்தளவு எளிமையாக இருக்கிறதோ அந்தளவு அதைப் புரிந்துகொள்வதும் சுலபமாக இருக்கும்.

தினசரி வாழ்க்கையிலிருந்து உவமைகள்

11. கலிலேயாவில் வளர்ந்து வந்தபோது பார்த்த காரியங்களை இயேசு தம்முடைய உவமைகளில் பயன்படுத்தினார் என்பதற்கு உதாரணங்கள் தருக.

11 மக்களின் தினசரி வாழ்வோடு பின்னிப்பிணைந்த விஷயங்களை உவமைகளாகப் பயன்படுத்துவதில் இயேசு நிபுணராக விளங்கினார். கலிலேயாவில் வளர்ந்து வந்த சமயத்தில் அவர் கண்ணால் கண்ட சம்பவங்களையே உவமைகளாகப் பயன்படுத்தினார். அவருடைய சிறு பிராயத்தைச் சற்று கற்பனை செய்து பாருங்கள். அவருடைய அம்மா மாவு அரைப்பதை... அதைப் புளிக்க வைப்பதை... விளக்கேற்றுவதை... வீடு கூட்டுவதை... எத்தனை முறை பார்த்திருப்பார்? (மத்தேயு 13:33; 24:41; லூக்கா 15:8) கலிலேயாக் கடலில் மீனவர்கள் தங்கள் வலைகளை வீசுவதை எத்தனை முறை கவனித்திருப்பார்? (மத்தேயு 13:47) சந்தை வெளியில் பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதை எத்தனை முறை கண்டிருப்பார்? (மத்தேயு 11:16) இயேசு தம்முடைய உவமைகளில் பயன்படுத்திய வேறு சில காரியங்களையும் அதற்கு முன் கண்ணாரப் பார்த்திருப்பார். உதாரணத்திற்கு, விதை விதைப்பதையும், கல்யாண விருந்தில் மக்கள் மகிழ்வதையும், வெயிலில் பயிர்கள் முற்றி நிற்பதையும் அவர் பார்த்திருப்பார்.—மத்தேயு 13:3-8; 25:1-12; மாற்கு 4:26-29.

12, 13. அன்பு காட்டிய சமாரியனைப் பற்றிய உவமையில் “எருசலேமிலிருந்து . . . எரிகோவுக்கு” செல்லும் பாதையை இயேசு பயன்படுத்தியது ஏன் குறிப்பிடத்தக்கது?

12 இயேசு உவமைகளை சொன்னபோது மக்களுக்கு நன்கு தெரிந்த விவரங்களையே குறிப்பிட்டார். உதாரணத்திற்கு, அன்பு காட்டிய சமாரியனைப் பற்றிய உவமையை சொன்னபோது இயேசு இப்படித்தான் ஆரம்பித்தார்: “ஒருவன் எருசலேமிலிருந்து கீழ்நோக்கி எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்போது, கொள்ளைக்காரர்களின் கையில் மாட்டிக்கொண்டான். அவர்கள் அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டு, அவனை அடித்து, கிட்டத்தட்ட சாகும் நிலையில் விட்டுவிட்டுப் போனார்கள்.” (லூக்கா 10:30) “எருசலேமிலிருந்து . . . எரிகோவுக்கு” போகும் சாலையைப் பற்றி இயேசு சொன்னது ஆர்வத்திற்குரியது. அவர் இந்த உவமையைச் சொன்னபோது யூதேயாவில் இருந்தார், யூதேயாவுக்குப் பக்கத்தில்தான் எருசலேம் இருந்தது; எனவே, கேட்பவர்களுக்கும் அந்தச் சாலை பரிச்சயமாக இருந்தது. தனியாக பிரயாணம் செய்கிறவர்களுக்கு அது பயங்கரமான வழி என்று அங்கிருந்த எல்லாருக்குமே தெரிந்திருந்தது. அது ஆள்நடமாட்டம் இல்லாத பாதை, நெளிவு சுழிவான பாதை. அதனால், திருடர்கள் பதுங்கியிருந்து கொள்ளையடிக்க வசதியாய் இருந்தது.

13 “எருசலேமிலிருந்து . . . எரிகோவுக்கு” சென்ற பாதையைப் பற்றி வேறு சில பரிச்சயமான தகவல்களையும் இயேசு தம் உவமையில் சேர்த்துக்கொண்டார். அந்த உவமையின்படி, முதலில் ஒரு குருவும் பின்பு ஒரு லேவியனும் அந்த வழியாகச் செல்கிறார்கள்; இரண்டு பேருமே அடிபட்டுக் கிடந்தவனக் காப்பாற்ற முன்வரவில்லை. (லூக்கா 10:31, 32) குருமார்கள் எருசலேமிலிருந்த ஆலயத்தில் சேவை செய்து வந்தார்கள், லேவியர்களோ அவர்களுக்குத் துணையாக இருந்தார்கள். அநேக குருமார்களும் லேவியர்களும் ஆலயத்தில் பணிபுரியாத சமயத்தில் எரிகோவில் தான் வசித்து வந்தார்கள்; எருசலேமிலிருந்து 23 கிலோமீட்டர் தள்ளிதான் எரிகோ இருந்தது. எனவே, அந்தச் சாலையில் அவர்களைப் பார்ப்பது சகஜமாக இருந்தது. அந்த சமாரியன் “எருசலேமிலிருந்து” மேல்நோக்கி அல்ல “கீழ்நோக்கி” வருவதாக இயேசு குறிப்பிடுவதைக் கவனியுங்கள். இந்த உவமையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களால் அதை நன்றாக கற்பனை செய்து பார்க்க முடிந்தது. எரிகோவைவிட எருசலேம் உயரத்தில் இருந்ததால், “எருசலேமிலிருந்து” பயணம் செய்யும் ஒருவர் ‘கீழ்நோக்கியே’ பயணம் செய்ய வேண்டும். b இயேசு தம் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களை மனதில் வைத்துப் பேசினார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

14. கேட்போரை மனதில் வைத்து நாம் எப்படி உவமைகளைத் தேர்ந்தெடுக்கலாம்?

14 உவமைகளைப் பயன்படுத்தும்போது நாமும்கூட கேட்போரை மனதில் வைத்து பேசுவது அவசியம். உவமைகளைத் தேர்ந்தெடுக்கையில் கேட்போரை பாதிக்கிற என்ன விஷயங்களை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்? அவர்களுடைய வயது, கலாச்சாரம், குடும்பப் பின்னணி, வேலை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, விவசாயத்தைப் பற்றிய உவமையெல்லாம் பட்டணத்தில் இருப்பவர்களைவிட பட்டிதொட்டியில் இருப்பவர்களுக்குத்தான் சட்டென்று புரியும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை—பிள்ளைகள், வீடு, பொழுதுபோக்கு, உணவு போன்ற விஷயங்களை—நாம் உவமைகளாகப் பயன்படுத்தலாம்.

படைப்பிலிருந்து உவமைகள்

15. படைப்பைப் பற்றிய விஷயங்கள் இயேசுவுக்கு அத்துப்படி என்பதில் ஏன் ஆச்சரியமில்லை?

15 இயற்கை உலகைப் பற்றி, உதாரணத்திற்கு, தாவரங்கள், மிருகங்கள், சீதோஷ்ண நிலை போன்றவற்றைப் பற்றி இயேசுவுக்குப் பரந்த அறிவு இருந்ததை அவர் பயன்படுத்திய பல உவமைகள் பறைசாற்றுகின்றன. (மத்தேயு 16:2, 3; லூக்கா 12:24, 27) அவருக்கு எங்கிருந்து அவ்வளவு ஞானம் வந்தது? கலிலேயாவில் வளர்ந்து வந்த சமயத்தில் படைப்பை கூர்ந்து கவனிக்க அவருக்கு ஏராளமான சந்தர்ப்பங்கள் நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால், அதைவிட முக்கியமாக, அவர் ‘படைப்புகளிலேயே முதல் படைப்பாக இருக்கிறார்,’ அதோடு, யெகோவா எல்லாவற்றையும் படைத்தபோது இயேசு “கைதேர்ந்த கலைஞனாக” இருந்து யெகோவாவுக்கு உதவினார். (கொலோசெயர் 1:15, 16; நீதிமொழிகள் 8:30, 31) அப்படியிருக்க, படைப்பைப் பற்றிய விஷயங்கள் அவருக்கு அத்துப்படி என்பதில் ஆச்சரியம் உண்டா? அவருக்கு இருந்த இந்தப் பரந்த அறிவை அவர் எப்படித் திறமையாகப் பயன்படுத்தினார் என்பதை இப்போது பார்க்கலாம்.

16, 17. (அ) ஆடுகளின் குணங்களை இயேசு நன்கு அறிந்திருந்தார் என்பதை எது காட்டுகிறது? (ஆ) ஆடுகள் தங்களுடைய மேய்ப்பனின் குரலுக்குச் செவிகொடுக்கும் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.

16 இயேசு தம்மை “நல்ல மேய்ப்பன்” என்றும் தம் சீஷர்களை ‘ஆடுகள்’ என்றும் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். வளர்ப்பு ஆடுகளின் குணங்களை இயேசு நன்றாக அறிந்திருந்தார் என்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் இடையே உள்ள பந்தம் தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். மேய்ப்பனையே நம்பியிருக்கும் இந்தப் பிராணிகள் அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் அழைத்துச் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்வதை இயேசு கவனித்திருந்தார். ஆடுகள் ஏன் மேய்ப்பனை பின்தொடர்கின்றன? ஏனென்றால், ‘ஆடுகள் அவருடைய குரலைத் தெரிந்து வைத்திருக்கின்றன’ என்று இயேசு சொன்னார். (யோவான் 10:2-4, 11) உண்மையிலேயே ஆடுகளுக்கு மேய்ப்பனின் குரலை அடையாளம் காண முடியுமா?

17 ஜார்ஜ் ஏ. ஸ்மித் என்பவர் தான் நேரடியாக கவனித்த சம்பவத்தை புனித தேசத்தின் புவியியல் என்ற ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “சில சமயம் மதியவேளை யூதேயாவில் உள்ள கிணறுகளில் ஒன்றின் அருகே நாங்கள் ஓய்வெடுப்போம். அங்கு மூன்று அல்லது நான்கு மேய்ப்பர்கள் தங்களுடைய மந்தைகளோடு வருவார்கள். அப்போது, எல்லாருடைய ஆடுகளும் ஒன்றாக கலந்துவிடும்; எப்படி அந்த மேய்ப்பர்கள் தங்களுடைய ஆடுகளைப் பிரித்து அழைத்துச் செல்வார்கள் என்று நாங்கள் யோசித்தோம். ஆனால், அவை தண்ணீர் குடித்து, விளையாடி முடித்த பின்பு மேய்ப்பர்கள் ஒவ்வொருவரும் பள்ளத்தாக்கின் வெவ்வேறு திசைகளில் போய் நின்றுகொண்டு, ஒவ்வொருவரும் பிரத்தியேக குரல் கொடுப்பார்கள்; அப்போது அந்தந்த மந்தையைச் சேர்ந்த ஆடுகள் கூட்டத்திலிருந்து பிரிந்து அதனதன் மேய்ப்பனிடம் போய்ச் சேர்ந்துகொள்ளும்; மந்தைகள் எப்படி வந்தனவோ அப்படியே ஒழுங்காகப் பிரிந்து சென்றுவிடும்.” தம் குறிப்பை வலியுறுத்த இதைவிட சிறந்த உதாரணத்தை இயேசு பயன்படுத்தியிருக்க முடியாது! ஆம், அவருடைய போதனைகளை நாம் அறிந்துகொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படிந்தால்... அவருடைய வழிநடத்துதலைப் பின்பற்றினால்... ‘நல்ல மேய்ப்பனின்’ கவனிப்பின்கீழ் வருவோம்.

18. யெகோவாவின் படைப்புகளைப் பற்றிய தகவல்களை எங்கே காணலாம்?

18 படைப்பிலிருந்து நாம் எப்படி உவமைகளைப் பயன்படுத்தலாம்? விலங்குகளின் தனிச்சிறப்புமிக்க குணங்களை வைத்து எளிமையான, ஆனால் வலிமையான ஒப்புமைகளைப் பயன்படுத்தலாம். படைப்புகளைப் பற்றிய தகவல்களை நாம் எங்கிருந்து பெறலாம்? பைபிள் பல்வகை விலங்குகளைப் பற்றிய தகவல் களஞ்சியமாக இருக்கிறது; சில சமயங்களில் மிருகங்களின் குணங்களை உதாரணமாகப் பயன்படுத்துகிறது. வேகத்தில் மான்களை போலவும் சிறுத்தையைப் போலவும் இருக்கும்படி சொல்கிறது; பாம்புகளைப் போல் ஜாக்கிரதையாகவும், புறாக்களைப் போல் கள்ளம்கபடம் இல்லாமலும் இருக்கும்படி குறிப்பிடுகிறது. c (1 நாளாகமம் 12:8; ஆபகூக் 1:8; மத்தேயு 10:16) கூடுதல் உதாரணங்களுக்கு, காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளையும், jw.org-ல் இருக்கும் “யாருடைய கைவண்ணம்?” தொடரிலுள்ள கட்டுரைகளையும் வீடியோக்களையும் பார்க்கலாம். யெகோவாவின் அற்புதமான படைப்புகளிலிருந்து எப்படி எளிய ஒப்புமைகளைப் பயன்படுத்தலாம் என்பதைக் குறித்து அவற்றிலிருந்து நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ளலாம்.

தெரிந்த சம்பவங்களிலிருந்து உவமைகள்

19, 20. (அ) தவறான நம்பிக்கையைச் சுட்டிக்காட்ட இயேசு எப்படிச் சமீபத்திய சம்பவத்தைப் பயன்படுத்தினார்? (ஆ) நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் அனுபவங்களையும் பயன்படுத்தி நாம் எப்படிக் கற்பிக்கலாம்?

19 நிஜ வாழ்க்கை சம்பவங்களிலிருந்தும் சிறந்த உவமைகளைப் பயன்படுத்தலாம். தப்பு செய்தவர்களுக்கே வாழ்க்கையில் துன்பம் வரும் என்ற தவறான நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுவதற்கு இயேசு ஒருசமயம் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறினார். “சீலோவாம் பக்கத்தில் கோபுரம் இடிந்து விழுந்தபோது செத்துப்போன 18 பேர், எருசலேமில் குடியிருக்கிற மற்ற எல்லாரையும்விட பெரிய குற்றவாளிகள் என்று நினைக்கிறீர்களா?” என்றார். (லூக்கா 13:4) அந்த 18 பேரும் கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்ததால் சாகவில்லை. மாறாக, “எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத சம்பவங்கள்” நடப்பதன் காரணமாக இறந்தார்கள். (பிரசங்கி 9:11) தமது சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டியதன் மூலம் அந்தப் பொய் போதனையை இயேசு தவறென நிரூபித்தார்.

20 நிஜ வாழ்க்கை அனுபவங்களையும் சம்பவங்களையும் பயன்படுத்தி நாமும் எப்படிக் கற்பிக்கலாம்? இயேசுவின் பிரசன்னத்தைப் பற்றிய அடையாளம் நிறைவேறி வருவதைக் குறித்து நீங்கள் பேசுவதாக வைத்துக்கொள்ளுங்கள். (மத்தேயு 24:3-14) இதற்கு போர்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள் போன்ற சமீபத்திய செய்திகளைக் குறிப்பிட்டு அந்த அடையாளம் நிறைவேறுவதைப் பற்றி சொல்லலாம். அல்லது புதிய சுபாவத்தை வளர்த்துக்கொள்வதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதைக் காட்ட ஓர் அனுபவத்தைச் சொல்ல நீங்கள் விரும்பலாம். (எபேசியர் 4:20-24) இப்படிப்பட்ட அனுபவங்கள் எங்கே கிடைக்கும்? வித்தியாசப்பட்ட பின்னணியிலிருந்து வந்த சக விசுவாசிகளுடைய வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடலாம், அல்லது யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களில் வெளிவந்த ஓர் அனுபவத்தைச் சொல்லலாம். jw.org-ல் வெளிவரும் “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது” என்ற தொடரில் இந்த மாதிரி அனுபவங்களை நீங்கள் பார்க்கலாம்.

21. கடவுளுடைய வார்த்தையைத் திறமையாக போதிக்கும்போது நாம் என்ன பலன்களைப் பெறுவோம்?

21 இயேசு உண்மையிலேயே மகத்தான போதகர்! இந்தப் பகுதியில் பார்த்தபடி, ‘கற்பிப்பதும் . . . நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதும்’ அவருடைய வாழ்க்கை தொழிலாக இருந்தது. (மத்தேயு 4:23) அதுவே நம்முடைய வாழ்க்கை தொழிலாகவும் இருக்கிறது. திறமையாக போதிக்கும்போது கிடைக்கும் பலன்கள்தான் எத்தனை எத்தனை! நாம் கற்பிக்கையில் பிறருக்குக் கொடுக்கிறோம், அப்படிக் கொடுப்பதால் சந்தோஷம் அடைகிறோம். (அப்போஸ்தலர் 20:35) ஆம், நிரந்தரமான ஆசீர்வாதங்களைத் தேடித்தரும் விஷயங்களை, அதாவது யெகோவாவைப் பற்றிய சத்தியத்தை, கற்றுக்கொடுக்கிறோம் என்பதை அறியும்போது நமக்குள் பிறக்கிற உணர்வே அந்த சந்தோஷம். அதுமட்டுமல்ல, உலகிலேயே மிகப் பெரிய போதகரான இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம் என்பதை அறியும்போது திருப்தியையும் பெறுகிறோம்.

a இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையைப் பற்றி முதன்முதலில் பதிவான சுவிசேஷம் மத்தேயு சுவிசேஷம் எனத் தெரிகிறது. கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பதிவு செய்யப்பட்ட இப்புத்தகம் இயேசு இறந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பின் எழுதப்பட்டது.

b குருவும் லேவியனும் “எருசலேமிலிருந்து” வருவதாக, அதாவது ஆலயத்திலிருந்து வருவதாக, இயேசு சொன்னார். எனவே, செத்தவன் போல் கிடந்த அந்த மனிதனைத் தொட்டால், தாங்கள் தீட்டாகி ஆலய சேவையை செய்ய முடியாமல் போய்விடுமோ என்று பயந்து அவனுக்கு உதவி செய்யவில்லை என அவர்கள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.—லேவியராகமம் 21:1; எண்ணாகமம் 19:16.

c என்னென்ன விலங்குகளின் குணங்கள் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய பட்டியலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 1, பக்கங்கள் 268, 270-271-ஐ காண்க.