Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் பதினொன்று

“அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”

“அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”

1, 2. (அ) இயேசுவைப் பிடித்து வரச் சொல்லி அனுப்பப்பட்ட அதிகாரிகள் ஏன் வெறுங்கையோடு திரும்பினார்கள்? (ஆ) இயேசு பிரபல போதகராக இருந்ததற்கு காரணம் என்ன?

 பரிசேயர்களுக்கு கோபம் தலைக்கேறுகிறது. ஆலயத்தில் இயேசு தம் தகப்பனைப் பற்றி கற்பித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மத்தியில் பிரிவினை உண்டாகிறது; அநேகர் இயேசுமீது விசுவாசம் வைக்கிறார்கள், மற்றவர்களோ அவரை கைது செய்ய துடிக்கிறார்கள். மதத் தலைவர்கள் தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், இயேசுவைப் பிடித்து வரச் சொல்லி அதிகாரிகளை அனுப்புகிறார்கள். அதிகாரிகளோ வெறுங்கையோடு திரும்பி வருகிறார்கள். “ஏன் அவனைப் பிடித்துக்கொண்டு வரவில்லை?” என்று பிரதான குருமார்களும் பரிசேயர்களும் கேட்கிறார்கள். அதற்கு அதிகாரிகள், “அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை” என்று பதிலளிக்கிறார்கள். இயேசுவின் போதனையைக் கேட்டு அவர்கள் மனங்கவரப்பட்டதால் அவரைக் கைதுசெய்ய அவர்களுக்கு மனம் வரவில்லை. aயோவான் 7:45, 46.

2 இயேசுவின் போதனையைக் கேட்டு மனங்கவரப்பட்டவர்கள் இந்த அதிகாரிகள் மட்டுமல்ல. அவருடைய போதனையைக் கேட்பதற்காக மக்கள் திரண்டு வந்தார்கள். (மாற்கு 3:7, 9; 4:1; லூக்கா 5:1-3) இயேசு பிரபல போதகராக இருந்ததற்குக் காரணம் என்ன? 8-ஆம் அதிகாரத்தில் பார்த்தபடி, அவர் கற்பித்த சத்தியத்தையும் நேசித்தார், அவர் கற்பித்த மக்களையும் நேசித்தார். சிறந்த போதனா முறைகளைப் பயன்படுத்துவதிலும் இயேசு வல்லவராக விளங்கினார். அவற்றில் மூன்று முறைகளை இப்போது பார்க்கலாம், அதோடு நாம் எவ்வாறு அவற்றைக் கடைப்பிடிக்கலாம் என்பதையும் சிந்திக்கலாம்.

எளிய நடையில் கற்பித்தார்

3, 4. (அ) இயேசு ஏன் எளிய நடையில் போதித்தார்? (ஆ) அதற்கு மலைப் பிரசங்கம் எப்படி ஓர் உதாரணமாக இருக்கிறது?

3 இயேசு நினைத்திருந்தால் அவருக்கு இருந்த சொல்வளத்தை தாராளமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், மக்களால் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் அவர் ஒருபோதும் கற்பிக்கவில்லை. ஏனென்றால், அவருடைய போதனையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் அநேகர் “கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்.” (அப்போஸ்தலர் 4:13) அவர்களுடைய வரம்புகளை மனதில் வைத்து கற்பித்தார், பல விஷயங்களைச் சொல்லி அவர்களைத் திணறடிக்கவில்லை. (யோவான் 16:12) அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எளிமையானவை, அவற்றில் பொதிந்திருந்த சத்தியங்களோ ஆழமானவை.

4 உதாரணத்திற்கு, மத்தேயு 5:3–7:27-ல் பதிவாகியுள்ள மலைப் பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பிரசங்கத்தில் இயேசு கொடுத்த அறிவுரைகளில் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்திருந்தன, அவை பிரச்சினையின் ஆணிவேரையே தொட்டன. அவருடைய போதனையில் சிக்கலான கருத்துகளோ வார்த்தைகளோ இருக்கவில்லை. ஏன், சிறு குழந்தைகூட புரிந்துகொள்கிற விதத்தில் அவர் கற்பித்தார்! “அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து” மக்கள் அனைவரும் ‘அசந்துபோனதில்’ ஆச்சரியமே இல்லை! அவர்களில் ஒருவேளை விவசாயிகள்... மேய்ப்பர்கள்... மீனவர்கள்... என பலதரப்பினரும் இருந்திருக்கலாம்.—மத்தேயு 7:28.

5. இயேசு உரைத்த எளிய, ஆனால் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த கூற்றுகள் சில யாவை?

5 இயேசு கற்பித்தபோது எளிய சொற்றொடர்களை, சிறிய வாக்கியங்களை, அதேசமயத்தில் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த கூற்றுகளைப் பயன்படுத்தினார். அச்சகம் கண்டுபிடிக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே மக்களின் மனதிலும் இதயத்திலும் தம் செய்தியை அச்சாய் பதிய வைத்தார். அதற்குச் சில உதாரணங்களைக் கவனியுங்கள்: “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்.” “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை.” “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது.” “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்.” “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”  b (மத்தேயு 7:1; 9:12; 26:41; மாற்கு 12:17; அப்போஸ்தலர் 20:35) இந்தக் கூற்றுகள் சுமார் 2,000 வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்டாலும் கல்வெட்டில் பதிக்கப்பட்டவை போல் இன்றும் எல்லார் மனதிலும் பசுமையாய் இருக்கின்றன.

6, 7. (அ) எளிமையாகக் கற்பிக்க சாதாரண மொழி நடையைப் பயன்படுத்துவது ஏன் முக்கியம்? (ஆ) பைபிள் மாணாக்கருக்கு நிறைய விஷயங்களைச் சொல்லி திணறடிப்பதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?

6 நாம் எப்படி எளிய நடையில் கற்பிக்கலாம்? எல்லாருக்கும் புரிகிற சாதாரண மொழி நடையைப் பயன்படுத்துவதே அதற்கு முக்கிய வழி. பைபிளில் உள்ள அடிப்படை சத்தியங்கள் சிக்கலானவை அல்ல. நல்மனமுள்ளோருக்கும் தாழ்மையுள்ளோருக்கும் யெகோவா தமது நோக்கத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறார். (1 கொரிந்தியர் 1:26-28) எளிய வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசினால் பைபிள் சத்தியங்களைத் திறம்பட கற்பிக்க முடியும்.

எளிமையாகக் கற்பியுங்கள்

7 பைபிள் மாணாக்கருக்கு எளிமையாகக் கற்பிப்பதற்கு, எக்கச்சக்கமான விஷயங்களைச் சொல்லி அவரைத் திணறடிப்பதை நாம் தவிர்க்க வேண்டும். எனவே, பைபிள் படிப்பு நடத்துகையில், ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக விளக்க வேண்டியதில்லை; அதேசமயம் ஒவ்வொரு வாரமும் இவ்வளவு பகுதியை முடித்தே தீர வேண்டும் என்று படிப்பை படபடவென்று முடிக்க வேண்டியதுமில்லை. மாறாக, மாணாக்கரின் தேவைகள் மற்றும் திறமைகளை மனதில் வைத்து அவருக்கு ஏற்ற வேகத்தில் படிப்பை நடத்துவது சிறந்தது. கிறிஸ்துவைப் பின்பற்றவும் யெகோவாவை வணங்கவும் அந்த மாணாக்கருக்கு உதவி செய்வதே நம் லட்சியம். ஆகவே, படிக்கும் விஷயத்தை அந்த மாணாக்கர் புரிந்துகொள்வதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளலாம். அப்போதுதான் பைபிள் சத்தியம் அவருடைய இதயத்தைத் தொடும், கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்க அவரை உந்துவிக்கும்.—ரோமர் 12:2.

பொருத்தமான கேள்விகளைக் கேட்பது

8, 9. (அ) இயேசு ஏன் கேள்விகள் கேட்டார்? (ஆ) ஆலய வரி கட்டும் விஷயத்தில் பேதுருவுக்கு ஒரு குறிப்பை உணர்த்த இயேசு எப்படிக் கேள்விகளைப் பயன்படுத்தினார்?

8 கேள்விகளை இயேசு திறம்பட பயன்படுத்தினார்; ஒரு குறிப்பை நேரடியாகச் சொல்ல முடிந்த சமயத்தில்கூட அவர் கேள்விகளைப் பயன்படுத்தினார். சரி, அவர் ஏன் கேள்விகள் கேட்டார்? சில சமயங்களில், தம்மை எதிர்ப்பவர்களின் உள்நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கவும் அவர்களின் வாயை அடைக்கவும் மனதை ஊடுருவும் கேள்விகளைக் கேட்டார். (மத்தேயு 21:23-27; 22:41-46) ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சீஷர்கள் தங்களுடைய மனதில் உள்ளதை தெரியப்படுத்தவும் அவர்களுடைய சிந்திக்கும் திறனை தூண்டவும் அதைப் பயிற்றுவிக்கவும் இயேசு கேள்விகளைப் பயன்படுத்தினார். உதாரணத்திற்கு, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” “இதை நம்புகிறாயா?” போன்ற கேள்விகளைப் பயன்படுத்தினார். (மத்தேயு 18:12; யோவான் 11:26) இப்படிக் கேள்விகள் கேட்டு சீஷர்களுக்கு விஷயங்களைப் புரியவைத்தார், அவர்கள் மனதில் பதியவைத்தார். ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்.

9 இயேசு ஆலய வரி கட்டினாரா என்று வரி வசூலிப்பவர்கள் பேதுருவிடம் ஒருசமயம் கேட்டார்கள். c “ஆமாம்” என்று பேதுருவும் சட்டென சொல்லிவிட்டார். ஆனால், பேதுருவிடம் இயேசு பின்வருமாறு கேள்விகள் கேட்டு அவரை யோசிக்க வைத்தார். “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? இந்த உலகத்தில் இருக்கிற ராஜாக்கள் சுங்கவரியை அல்லது தலைவரியை யாரிடம் வசூலிக்கிறார்கள்? அவர்களுடைய மகன்களிடமா, மற்றவர்களிடமா?” “மற்றவர்களிடம்” என்று பேதுரு பதிலளித்தார். அதற்கு இயேசு, “அப்படியானால், மகன்கள் வரி கட்ட வேண்டியதில்லையே” என்றார். (மத்தேயு 17:24-27) இயேசு சொல்ல வந்த குறிப்பை பேதுரு உடனே புரிந்துகொண்டார். ஏனென்றால், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. எனவே, ஆலயத்தில் மக்கள் வழிபட்டுவந்த பரலோக அரசருடைய ஒரே மகனான இயேசு வரி செலுத்த வேண்டியதில்லை. பேதுருவுக்கு நேரடியாகப் பதில் அளிக்காமல், அவரே அந்தப் பதிலைக் கண்டுபிடிப்பதற்கும் இனிமேல் நன்கு யோசித்து பதில் சொல்வதன் அவசியத்தைப் புரிந்துகொள்வதற்கும் இயேசு பக்குவமாகக் கேள்விகளைப் பயன்படுத்தினார்.

வீட்டுக்காரரின் தேவைகளை மனதில் கொண்டு அதற்கேற்ப கேள்விகளைக் கேளுங்கள்

10. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நாம் எவ்வாறு கேள்விகளைத் திறம்பட பயன்படுத்தலாம்?

10 ஊழியத்தில் நாம் எப்படிக் கேள்விகளைத் திறம்பட பயன்படுத்தலாம்? வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் மக்களுடைய ஆர்வத்தைத் தூண்டுவதற்கு, ஒருவேளை உரையாடலை ஆரம்பிப்பதற்கு, நாம் கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு, வயதான ஒருவரைச் சந்தித்தால், “நீங்க சின்ன வயசில் இருந்ததற்கும் இன்னைக்கும் உலகம் எவ்வளவு மாறிப்போயிருக்கு என்று நினைக்கிறீங்க?” என மரியாதையுடன் கேட்கலாம். அவர் பதில் சொன்ன பிறகு, “இந்த உலக நிலைமைகளெல்லாம் மாறுவதற்கு என்ன அவசியம் என்று நினைக்கிறீங்க?” எனக் கேட்கலாம். (மத்தேயு 6:9, 10) ஒருவேளை சின்ன பிள்ளைகளை உடைய ஒரு தாயைச் சந்தித்தால், “உங்க பிள்ளை வளர்ந்து பெருசாகும்போது இந்த உலகம் எப்படி இருக்குமென்று நீங்க என்னைக்காவது யோசித்து பார்த்திருக்கீங்களா?” என்று கேட்கலாம். (சங்கீதம் 37:10, 11) ஒரு வீட்டுக்குச் செல்லும்போது அங்குள்ள சூழ்நிலையை கவனித்து பார்ப்பது வீட்டுக்காரருக்கு ஏற்ற கேள்விகளைக் கேட்க நமக்கு உதவும்.

11. பைபிள் படிப்பு நடத்துகையில் நாம் எவ்வாறு கேள்விகளை நன்கு உபயோகிக்கலாம்?

11 பைபிள் படிப்பு நடத்துகையில் நாம் எவ்வாறு கேள்விகளை நன்கு உபயோகிக்கலாம்? கேள்விகளைச் சிந்தித்து கேட்கும்போது மாணாக்கரின் மனதிலிருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். (நீதிமொழிகள் 20:5) உதாரணத்திற்கு, இன்றும் என்றும் சந்தோஷம்! d புத்தகத்தில், “கிறிஸ்தவர்கள் குடிக்கலாமா?” என்ற 43-வது பாடத்திலிருந்து படிப்பு நடத்துவதாக வைத்துக்கொள்ளுங்கள். அளவுக்கதிகமாக குடிப்பதைப் பற்றியும் குடிவெறியைப் பற்றியும் கடவுள் என்ன நினைக்கிறார் என்று அந்த பாடம் சொல்கிறது. பைபிள் சொல்லிக்கொடுப்பதை மாணாக்கர் புரிந்துகொண்டார் என்பதை அவருடைய பதிலிலிருந்து தெரிந்துகொள்ளலாம், ஆனால், கற்றுக்கொள்ளும் விஷயங்களை அவர் உண்மையிலேயே ஏற்றுக்கொள்கிறாரா என்பதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? “இது சம்பந்தமாக கடவுள் கொடுத்திருக்கும் சட்டங்கள் உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா?” என்று அவரிடம் கேட்கலாம். “இதை எப்படி உங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம்?” என்றும் கேட்கலாம். என்றாலும், மாணாக்கரிடம் சாதுரியமாக, அதேசமயம் மரியாதையாக கேள்வி கேட்பது அவசியம் என்பதை மனதில் வையுங்கள். அவரைச் சங்கடப்படுத்துகிற கேள்விகளை நாம் ஒருபோதும் கேட்க மாட்டோம்.—நீதிமொழிகள் 12:18.

நன்றாக நியாயங்காட்டிப் பேசினார்

12-14. (அ) நியாயங்காட்டிப் பேசும் திறமையை இயேசு என்னென்ன விதங்களில் பயன்படுத்தினார்? (ஆ) தாம் சாத்தானின் சக்தியால் பேய்களை ஓட்டுவதாக பரிசேயர்கள் சொன்னபோது இயேசு எப்படி வலிமையாக நியாயங்காட்டிப் பேசினார்?

12 பரிபூரணமாக சிந்திக்கும் இயேசு நியாயங்காட்டிப் பேசுவதில் திறமைசாலியாக விளங்கினார். சில சமயங்களில், தம் விரோதிகளின் குற்றச்சாட்டுகளைத் தகர்த்தெறிய வலிமைமிக்க விதத்தில் நியாயங்காட்டிப் பேசினார். அநேக சந்தர்ப்பங்களில், சீஷர்களுக்குச் சிறந்த பாடங்களைப் புகட்டுவதற்கு பக்குவமாக நியாயங்காட்டிப் பேசினார். அதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

13 பார்வையற்றவனாகவும் பேச்சிழந்தவனாகவும் இருந்த பிசாசு பிடித்த ஒரு மனிதனை இயேசு குணப்படுத்தியதைக் கண்ட பரிசேயர்கள், “பேய்களுடைய தலைவனான பெயல்செபூப் [சாத்தான்] உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்” என்று குற்றம் சாட்டினார்கள். மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி இருந்தால்தான் ஒருவனால் பேய்களை விரட்ட முடியும் என்பதை பரிசேயர்கள் அரைமனதோடு ஒத்துக்கொண்டார்கள். இருந்தாலும், சாத்தானின் வல்லமையால்தான் பேய்களை இயேசு ஓட்டினார் என்று சொன்னார்கள். இது பொய்யான குற்றச்சாட்டு மட்டுமல்ல, முரணானதும்கூட. அவர்களுடைய தவறான எண்ணத்தை வெட்டவெளிச்சமாக்குவதற்காக இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒரு ராஜ்யத்துக்குள் பிரிவினைகள் இருந்தால் அந்த ராஜ்யம் நிலைக்காது. ஒரு ஊருக்குள் அல்லது வீட்டுக்குள் பிரிவினைகள் இருந்தால் அதுவும் நிலைக்காது. அதேபோல், சாத்தானைச் சாத்தானே விரட்டினால், அவன் தனக்கு விரோதமாகவே பிரிவினைகள் உண்டாக்குகிறான் என்று அர்த்தம்; அப்படியானால், அவனுடைய ராஜ்யம் எப்படி நிலைக்கும்?” (மத்தேயு 12:22-26) இயேசு சொல்லவந்த குறிப்பு இதுதான்: “நான் சாத்தானுடைய அடியாளாக இருந்துகொண்டு சாத்தானுக்கு விரோதமாகச் செயல்பட்டால், சாத்தானே சாத்தானுக்கு எதிராக செயல்படுவது போல் இருக்கும், அதாவது அவன் தனக்கே குழி தோண்டி கொள்வது போல் இருக்கும்.” வலிமைவாய்ந்த இந்த வாதத்தை அவர்களால் எப்படி மறுக்க முடியும்?

14 இயேசுவின் வாதம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பரிசேயர்களுடைய சீஷர்களில் சிலரும் பேய்களை ஓட்டியதை இயேசு அறிந்திருந்தார், அதனால், “நான் பெயல்செபூப் உதவியால் பேய்களை விரட்டுகிறேன் என்றால், உங்களுடைய சீஷர்கள் யாருடைய உதவியால் அவற்றை விரட்டுகிறார்கள்?” என்று எளிமையான அதேசமயம் வலிமையான கேள்வியை அவர்களிடம் கேட்டார். (மத்தேயு 12:27) அவர் சொல்லவந்த குறிப்பு: “நான் சாத்தானின் வல்லமையால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால், உங்களுடைய சீஷர்களும் அதே வல்லமையால்தான் பேய்களை ஓட்டியிருக்க வேண்டும்.” அதற்கு மேல் பரிசேயர்களால் என்ன சொல்ல முடியும்? அவர்களுடைய குதர்க்கமான வாதத்தை வைத்தே அவர்களை இயேசு மடக்கினார். தங்களுடைய சீஷர்கள் சாத்தானின் வல்லமையால் பேய்களை ஓட்டியதாக அவர்கள் ஒருகாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இயேசு அவர்களிடம் நியாயங்காட்டிப் பேசிய பதிவை வாசிக்கும்போதே நம் உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகிறதல்லவா? நமக்கே இப்படியென்றால், அவர் பக்கத்தில் இருந்து அவருடைய வாதத்தை நேரடியாகக் கேட்டவர்களுக்கு இன்னும் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

15-17. இயேசு தம் தகப்பனைப் பற்றிய அருமையான சத்தியங்களைக் கற்பிக்க “இன்னும் எந்தளவு” என்று சொல்லி நியாயங்காட்டிப் பேசும் முறையைப் பயன்படுத்தியதற்கு ஓர் உதாரணம் தருக.

15 தம் தகப்பனைப் பற்றிய அருமையான சத்தியங்களை, இதயத்துக்கு இதமளிக்கும் சத்தியங்களை, மக்களுக்குப் புகட்டுவதற்கு இயேசு தர்க்கரீதியாகவும் பக்குவமுடன் நியாயங்காட்டியும் பேசினார். அதற்காக “இன்னும் எந்தளவு” என்று சொல்லி விளக்கும் முறையை அடிக்கடி பயன்படுத்தினார். இவ்வாறு அவர்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்கள்மீது அவர்கள் நம்பிக்கையை இன்னும் அதிகமாகப் பலப்படுத்தினார். எதிர்மறையான இரண்டு விஷயங்களைச் சொல்லி நியாயங்காட்டிப் பேசும்போது சொல்ல வரும் குறிப்பு மக்களின் மனதில் ஆழமாகப் பதியும். இதற்கு இரண்டு உதாரணங்களை இப்போது பார்ப்போம்.

16 ஜெபம் செய்ய கற்றுத் தரும்படி இயேசுவிடம் சீஷர்கள் கேட்டபோது, அபூரண மனித பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு “நல்ல பரிசுகளைக்” கொடுக்க ஆவலாய் இருப்பதை அவர் குறிப்பிட்டார். அதன் பின்பு, “பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, பரலோகத் தகப்பன் தன்னிடம் கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை இன்னும் எந்தளவு கொடுப்பார்!” என்று சொன்னார். (லூக்கா 11:1-13) இங்கே இரண்டு காரியங்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டி முக்கியமான ஒரு குறிப்பை இயேசு உணர்த்தினார். பாவமுள்ள மனித பெற்றோரே தங்கள் பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது நம் பரலோகத் தகப்பன், அதுவும் பரிபூரணமும் நீதியுமுள்ள தகப்பன், தம்மிடம் தாழ்மையுடன் ஜெபம் செய்கிற உண்மை ஊழியர்களுக்குத் தமது சக்தியை இன்னும் எந்தளவு அருளுவார்!

17 கவலைகளைக் குறித்து கவலைப்படாமல் இருப்பதற்கு அறிவுரை கொடுத்தபோதும் இயேசு இதேபோல் நியாயங்காட்டிப் பேசினார். “அண்டங்காக்கைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, அவற்றுக்குச் சேமிப்புக் கிடங்கும் இல்லை, களஞ்சியமும் இல்லை; ஆனாலும், கடவுள் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா? காட்டுப் பூக்கள் வளருவதைப் பாருங்கள். அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; . . . விசுவாசத்தில் குறைவுபட்டவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும் காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்கு இன்னும் எந்தளவு அதிகமாகக் கொடுப்பார்!” (லூக்கா 12:24, 27, 28) பறவைகளையும் பூக்களையுமே யெகோவா கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார் என்றால், அவரை நேசித்து வழிபடுகிற மனிதர்களை இன்னும் எந்தளவு கவனித்துக்கொள்வார்! இயேசு இப்படி நியாயங்காட்டிப் பேசியதன் மூலம் மக்களின் மனதைத் தொட்டார்.

18, 19. ‘கடவுளை நேரில் பார்த்தால்தான் நம்புவேன்’ என்று சொல்கிறவரிடம் எப்படி நியாயங்காட்டிப் பேசலாம்?

18 மக்களின் பொய் நம்பிக்கைகளைத் தகர்க்க நாம் ஊழியத்தில் தர்க்கரீதியாகப் பேசலாம். அதோடு, யெகோவாவைப் பற்றிய உண்மைகளைக் கற்பிக்க பக்குவமுடன் நியாயங்காட்டியும் பேசலாம். (அப்போஸ்தலர் 19:8; 28:23, 24) அதற்காக, மிகச் சிக்கலான முறையில் நியாயங்காட்டிப் பேச வேண்டுமா? கூடாது. எளிமையான முறையில் நியாயங்காட்டிப் பேசுவதே சிறந்தது என இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்கிறோம்.

19 உதாரணத்திற்கு, ‘கடவுளை நேரில் பார்த்தால்தான் நம்புவேன்’ என்று யாராவது சொன்னால் அவரிடம் எப்படிப் பேசலாம்? காரணகாரியம் என்ற இயற்கை நியதியின் அடிப்படையில் நியாயங்காட்டிப் பேசலாம். எந்தவொரு காரியத்திற்கும் ஏதாவதொரு காரணம் இருக்க வேண்டுமென நமக்குத் தெரியும். எனவே அவரிடம் இவ்வாறு சொல்லலாம்: “ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில் நீங்கள் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அங்கே அழகான ஒரு வீட்டை பார்க்கிறீர்கள். அந்த வீட்டில் உணவுப்பொருள்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன (காரியம்); நிச்சயம் யாரோ ஒருவர் (காரணம்) அந்த வீட்டைக் கட்டி, அலமாரிகளில் பொருள்களை நிரப்பி வைத்திருக்க வேண்டுமென்ற முடிவுக்குத்தானே வருவீர்கள்? அதேவிதமாக இயற்கையை வடிவமைத்து பூமியென்ற ‘அலமாரியில்’ ஏராளமான உணவுப்பொருள்களை (காரியம்) யாரோ ஒருவர் (காரணம்) வைத்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வருவதுதானே நியாயம்? இந்த உண்மையை பைபிள் எளிய வார்த்தையில் தெளிவாகக் குறிப்பிடுகிறது: “ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவரால் உண்டாக்கப்படுகிறது, ஆனால் எல்லாவற்றையும் உண்டாக்கியவர் கடவுளே.” (எபிரெயர் 3:4) என்றாலும், நாம் எவ்வளவுதான் நியாயங்காட்டிப் பேசினாலும் எல்லாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.—2 தெசலோனிக்கேயர் 3:2.

மனதைத் தொடும் விதத்தில் நியாயங்காட்டிப் பேசுங்கள்

20, 21. (அ) யெகோவாவின் குணங்களை, வழிகளைச் சிறப்பித்துக் காட்ட “இன்னும் எந்தளவு” என்று சொல்லி நியாயங்காட்டும் முறையை எப்படிப் பயன்படுத்தலாம்? (ஆ) அடுத்த அதிகாரத்தில் எதைப் பற்றி சிந்திப்போம்?

20 ஊழியத்திலோ சபையிலோ நாம் போதிக்கையில், யெகோவாவின் குணங்களையும் வழிகளையும் சிறப்பித்துக் காட்டுவதற்கு, “இன்னும் எந்தளவு” என்று சொல்லி நியாயங்காட்டிப் பேசும் முறையை நாமும் பயன்படுத்தலாம். எரிநரக கோட்பாடு உண்மையில் யெகோவாவுக்கு அவப்பெயரைக் கொண்டுவருகிறது என்பதைக் காட்டுவதற்கு, “அன்புள்ள எந்தத் தகப்பனாவது தன் பிள்ளையைத் தண்டிப்பதற்காக அதன் கையை நெருப்பில் காட்டுவாரா? அப்படியானால், நம்மை எரிநரகத்தில் வதைக்கும் எண்ணம் நம் அன்புள்ள பரலோகத் தகப்பனுக்கு இன்னும் எந்தளவு அருவருப்பாக இருக்கும்!” (எரேமியா 7:31) மன உளைச்சலில் தவிக்கும் சக விசுவாசியை யெகோவா உண்மையிலேயே நேசிக்கிறார் என்பதை அவருக்கு உறுதிப்படுத்த இவ்வாறு சொல்லலாம்: “சாதாரண சிட்டுக்குருவியையே யெகோவா முக்கியமாய் கருதுகிறார் என்றால், அவரை வணங்கும் ஒவ்வொரு ஊழியரையும், ஏன், உங்களையும், இன்னும் எந்தளவு அன்போடும் அக்கறையோடும் பார்த்துக்கொள்வார்!” (மத்தேயு 10:29-31) இப்படி நியாயங்காட்டிப் பேசினால் நிச்சயம் மக்களின் மனதைத் தொட முடியும்.

21 இயேசு பயன்படுத்திய மூன்று விதமான போதிக்கும் முறைகளை மட்டும்தான் இதுவரை சிந்தித்தோம். இயேசுவைக் கைதுசெய்ய வந்த அதிகாரிகள், “அந்த மனுஷர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை” என்று சொன்னபோது அவர்கள் துளிகூட மிகைப்படுத்திக் கூறவில்லை என்பது இதிலிருந்தே நமக்கு நன்றாகப் புரிகிறது அல்லவா? உவமைகளைப் பயன்படுத்தி கற்பிப்பதிலும் இயேசு தலைசிறந்து விளங்கினார். இதைக் குறித்து அடுத்த அதிகாரத்தில் சிந்திப்போம்.

a அந்த அதிகாரிகள் பிரதான குருமார்களின் தலைமையின்கீழ் நியாயசங்கத்தில் பணிபுரிந்தவர்களாய் இருந்திருக்கலாம்.

b அப்போஸ்தலர் 20:35-ல் காணப்படும் இந்தக் கூற்றை பவுல் மட்டுமே மேற்கோள் காட்டி பேசினார். இதை அவர் வாய்மொழியாக கேள்விப்பட்டிருக்கலாம் (அதாவது, இயேசு சொன்னதை நேரடியாகக் கேட்ட ஒருவரிடமிருந்தோ உயிர்த்தெழுப்பட்ட இயேசுவிடமிருந்தோ கேள்விப்பட்டிருக்கலாம்), அல்லது தெய்வீக வெளிப்பாட்டின் மூலம் கேள்விப்பட்டிருக்கலாம்.

c வருடத்திற்கு இரண்டு திராக்மாவை ஆலய வரியாக யூதர்கள் செலுத்த வேண்டியிருந்தது. இது இரண்டு நாள் கூலிக்குச் சமம். இதைக் குறித்து ஒரு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “மக்களுக்காக தினமும் செலுத்தப்பட்ட தகனபலிக்கும் மற்றெல்லா பலிகளுக்கும் ஆன செலவுகளை ஈடுகட்டுவதற்கே இந்த வரி முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது.”

d யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.